Thursday, November 12, 2009

அதிகாரத்தின் குரல்-1 - உரையாடல்-

காட்சி 1
இடம்: நேர்காணல் அறை

கதைப்பாத்திரம்: அதிகாரி, நேர்காணலுக்கு வந்திருப்பவர்.

அதிகாரி: வாங்க, உக்காருங்க. உங்க பைல்லெ கொடுத்துட்டிங்களா?

பெண்: கொடுத்துட்டேன் சார்.

அதிகாரி: உங்கள பத்தி சொல்லுங்க.

பெண்: என் பேரு. . . நான் மேனச்மேண்ட்ல டிகிரி செஞ்சன். பள்ளிக்கூடத்துல ஒரு வருசமா தற்காலிக வேலை செய்யறேன் சார்.

அதிகாரி: உங்களுக்கு எதுக்கு இந்த வேலை வேணும்?

பெண்: எனக்கு டீச்சிங் பிடிச்சிருக்கு சார். ரொம்ப நாள் கனவு.

அதிகாரி: பிறகு எதுக்கு மேனச்மேண்ட் படிச்சிங்க?

பெண்: அப்பெ வாய்ப்பு கிடைக்கல சார். எவ்வளவோ முயற்சி செஞ்சேன் கல்லூரிக்குப் போவ. கிடைக்கல சார்

அதிகாரி: நீங்கலாம் எதுக்கு டீச்சிங் வரணும், பேன்க்லதான் அவ்ள வேலை இருக்கெ, அங்க போய் செய்ய வேண்டியதுதானே?

பெண்: இல்ல சார், எப்படியாவது டீச்சிங் வந்துரனும்னுதான் இலட்சியமா இருக்கன் சார். ஆரம்பத்துல வாய்ப்பு கெடைக்கல, இருந்தாலும் இப்ப வரைக்கும் இந்த வேலைக்குத்தான் பாடுபடறேன்.

அதிகாரி: பட்டப் படிப்பு தமிழ்ல செஞ்சவங்களும், மொழியியல் துறையில தமிழ் படிச்சவங்களே நிறைய பேரு வேலை இல்லாம இருக்காங்க. உங்களுக்கெல்லாம் எப்படித் தூக்கி உடனே கொடுத்தறே முடியுங்க? அவுங்களுக்குத்தான் முன்னுரிமை.

பெண்: அப்ப எதுக்கு சார் எங்களலாம் கூப்டிங்க? இவ்ள தூரம் வந்து கஸ்டப்பட்டு தயாராகி, மனசுல கற்பனைலாம் வளர்த்துக்கிட்டு வந்து, இப்படிச் சொல்லி எங்கள ஏமாத்தையா கூப்டிங்க?

அதிகாரி: தமிழ்ல்ல உங்களுக்கு என்ன தெரியும்? அதுக்கெல்லாம் பயிற்சிப் பெற்றவங்கத்தான் வர முடியும். சும்மா பேசிக்கிட்டு இருந்தா வேலைக்கு ஆகாதுங்க. தகுதி இருக்கனும். அதான் முக்கியம். இலட்சியம்லாம் . . சொல்லிக்கிட்டு. . . .

பெண்: தகுதியா? எப்பலேந்து சார் தகுதி பார்க்க ஆரம்பிச்சிங்க? 10 வருசத்துக்கு முன்னாலெ யார் வேணும்னாலும் இந்த வேலைக்கு வரலாம் என்ற வழி இருந்துச்சி, எஸ்.பி.எம்.லே குறைவான புள்ளி எடுத்தவங்களே, வேற வழியில்லாம இந்த வேலைக்கு வந்த காலக்கட்டம் போயி, இப்பெ தகுதி இருந்தும் நினைச்ச துறையில படிக்க வாய்ப்பில்ல. இது யார் தப்பு சார்? பொழப்பு ஓட்ட இந்த வேலைக்கு நான் வரலே, இன்னமும் பிள்ளைங்க கல்விலே அக்கறை காட்டக்கூடிய மனநிலையிலத்தான் இருக்கன்.


அதிகாரி: உங்களுக்கு மேல்மட்ட நிலைமை பத்தி தெரியாதுங்க. கல்வி அடைவுநிலையை வச்சித்தான், அதுக்கான தகுதி என்னனு சொல்லப்படுது. யாரெ எங்க போடனும், எங்க அனுப்பனும்னு எங்களுக்குத் தெரியுங்க. நீங்க பாடம் நடத்தாதீங்க. நீங்க போகலாம்.

பெண்: அப்ப முடிவு சார்?

அதிகாரி: 2 வாரம் கழிச்சி சொல்லப்படும். எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசிக்கிட்டு இருக்காதீங்க, புரியுதா? யார் யார்கிட்ட எப்படி பேசனும்னு முதல்ல கத்துக்கனும், அப்பறம் இந்த வேலைக்கு வரனும்.

பெண்: எனக்கு தெரியாது சார், எங்க எப்படி வலைஞ்சி கூனி நிக்கனும்னு எனக்கு தெரியாது சார். நான் என்னோட இயல்பு போலத்தான் இருப்பன். இந்த வேலைக்காக உங்ககிட்ட பிச்சை எடுக்கச் சொல்றீங்களா?

அதிகாரி: நீங்க தயவு செஞ்சி வெளியே போயிருங்க. பிளிஸ். நாகரிகம்னா என்னானு தெரிலெ, வந்துட்டாங்க. எந்தத் துறையில படிக்க வாய்ப்புக் கிடைச்சாலும் போயிடறது, அப்பறம் வேலை இல்லாம கடசியா இங்க வந்து நிக்கறது. யேன் மேல்மட்டத்துக்கு வர்ற ஆசையே இப்படிக் காட்டிக்குறீங்க?

பெண்: ஆமாம் சார், எந்தத் துறையிலயும் இழிச்சவாயி மாதிரி படிச்சிட்டு வந்து, கடசியா எந்த வாய்ப்பும் இல்லாம சுத்தறதுதான் எங்களுக்குக் கிடைச்ச வாழ்க்க. சந்தோசம் படுங்க. எலும்பு துண்டுலெ என்னா சார் மேல்மட்டம், கீழ்மட்டம், கவ்விக்கிட்டு போவ வேண்டியதுதானே, அதுக்குக்கூட வழி இல்லாம, பெக்ட்ரிலயும் துணிக்கடையிலயும் உக்காந்துக்கிட்டு ஈ ஓட்டிக்கிட்டு இருக்கறவங்கள பாக்கனும்னா போங்க சார். . அங்க மேல்மட்டம் செஞ்ச சதியில மிச்சமாய் வந்து கிடக்கும் கீழ்மட்டத்த நீங்க பாக்கலாம் சார். உக்காந்துக்கிட்டு பேசலாம் சார், கிடைச்சி பழக்கப்பட்டவங்களுக்கு, கிடைக்காம போன பலரோடெ வழி தெரியறதுக்கு வாய்ப்பே இல்லெ.

அதிகாரி: “சார் சார் சார்” ன்னு முதல்லேந்து, வெள்ளக்காரன்கிட்ட இருந்த அடிமைத்தனதோடெ பேசறயே, உனக்கெல்லாம் எதுக்கு தமிழ் உணர்வு? பிளிஸ் யூ கேட் அவுட். .

-முடிவு-
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

6 comments:

velji said...

நல்ல சிந்தனை.சார்பின்றி எழுதியிருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.

கே.பாலமுருகன் said...

பாராட்டுக்கு மிக்க நன்றி வேல்ஜி.

manogkaran krishnan said...

நடைமுறை உண்மைகளை அழகா எடுத்து சொன்னீகள் ஐயா.வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்

கே.பாலமுருகன் said...

வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றி மனோகரன் அவர்களே. தொடர்ந்து வருக

Tamilvanan said...

அதிகார‌த்தின் குர‌ல்‍‍-1 , நாம் தின‌ம் தின‌ம் கேட்கும் குர‌ல். இவை குறைய‌ வேண்டும் என்றால் மனித‌ம் வ‌ள‌ர‌ வேண்டும்.

jo said...

வணக்கம்
தெளிவான கருத்து.வளர்க தமிழ்.தொடரட்டும் கருத்து........