![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqxrwgmqCwtLq95qJFvrQM6aVrXXclH80LMcWjMyT9fLpYEyJ4BQRGDxsj_8hh8lf9xJmsuj_SW7wMrV1lNjttB5X4RKmNd2dV3WozPJdOu15QrIZQZhyphenhyphenI1ePDL8cq1PO40z_eo-DglUmg/s320/840099~Old-Men-Smiling-Sitting-on-Bench-After-Waiting-in-Line-For-Meat-Posters.jpg)
“ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்”
பழைய சைக்கிள்கடையோரமாக இந்த மாதிரியான பழைய பாடலின் வரிகளைக் கேட்கும் போது சக்கரச் சுழற்சியில் இயங்கிக் கொண்டிருந்த உடல் சட்டென்று சிறிது நேரத்திற்கு நின்றுவிடுகிறது. உள்ளம் அந்த வரிகளைக் கேட்டு என்னவோ செய்துவிடுகிறது. அந்தக் குரலில் தெரிந்த தளர்வும் தனிமையும் மன உணர்வுகளைப் பிளிவது போல் இருக்கும். நிமிர்ந்து அந்தப் பாடல் வந்த திசைகளில் பார்க்கும்போது அது யாரோ ஒரு கிழவராகத்தான் இருக்கும். முகத்தில் சோர்வும் மெலிந்த தேகமாகவும் வெயிலின் உச்சக்கட்ட கொந்தளிப்பில் அமர்ந்துகொண்டு இலேசான சிரிப்புடன் பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பார்கள்.
“ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும் தரையினிலே
உடலைவிட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா
வெளியிலேயே!”
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEji7EvsCbjBRoYi369hfPNmTXQNSV9z-tS7Zp4LvsvJIC_03VHACvFjBe-ljvXed4jYPpSYhyphenhyphen-SkSA1XaSIc6ePK1Ed1af4U0QzolGAz7c9mqV6SUQuJdW7foJ-mxlo8X8M-BgYwOrTHoN0/s280/Jewish-Old-Men.jpg)
நகரத்தில் மிகவும் நேர்த்தியான ஒரு தற்செயலில் நான் சந்திக்கும் கிழவர்கள் ஏதாவது ஒரு பழைய பாடலுடன்தான் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வில் அந்தப் பழைய பாடல்கள் ஒரு அங்கமாக இன்றளவும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
நகரம் கொடுக்கும் பயங்கரக் கனவுகளிலிருந்து விடுபட்டு அவர்களைத் தனித்து காட்டுவதே அவர்களின் இந்தப் பழைய பாடல்களின் வரிகள்தான். பெரும்பாலும் கோயிலுக்குச் செல்லும் வழியில் கோவில் மண்டபங்களின் ஓரங்களில் பாலத்தின் அருகேயுள்ள மரத்தடியில் என்று வாழ்விடமின்றி கசங்கிப் போன ஆடைகளுடன் தாடி வளர்ந்து ஒட்டிய வயிறுடன் கிடக்கும் கிழவர்கள்கூட பழைய பாடலின் வரிகளை இராகம் தப்பிப் பாடிக் கொண்டிருப்பதைக் கேட்கும்போதுதான் குற்ற உணர்வு மேலோங்குகிறது. அதற்கு மேல் அவர்களைக் கடக்க முடியாமல் இயந்திரக் கால்கள் நடுங்குகின்றன.
“இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோருக்கும் சொந்தமடா
எனது உனது என்பதெல்லாம் இடையில் மாறும் பந்தமடா”
வாய் முழுக்கச் சிரிப்பாக பசியையும் கடந்த ஒரு ஏகாந்த நிலையில் அமர்ந்து கொண்டு அந்தக் கிழவர்கள் பாடும் வரியில் பழைய நூற்றாண்டையே தூக்கி வந்து நகரத்தில் எறிவது போல இருக்கும்.
கோவில் மணடபத்தின் ஓரங்களில் அமர்ந்திருக்கும் கிழவர்கள்
அந்தக் கிழவர்களின் முகங்கள் யாவும் கடவுளின் சிந்தனையையே மறக்கடித்துவிடும். உறவுகளைத் தொலைத்த பிறகு ஏதோ ஒரு வெயில்பொழுதில்தான் அவர்கள் அங்கே வந்து என்ன செய்வதென்று தெரியாமல் நகரம் கொடுத்த வெறுமையில் பழைய பாடல்களைப் பாடத் துவங்கியிருக்க வேண்டும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUntTfvCIPpv3T5t38gLbkUtXIK1ZIaBwszp2XfasO610AJ5e8jrNbFnMQZImzMGrsFQLiVGY6ERBQj7IJcYQuXnQmS0COSnx9AWvqkS9GG_Dz-wT5wfWjNK5Ep2J0LSl0uOEheN0Awa24/s280/documentary_photography007.jpg)
நிஜ வாழ்க்கை ஏற்படுத்திய மனஅழுத்தத்தில் சுயத்தெளிவை இழந்து கடந்தகால வாழ்வின் மகிழ்ச்சிகளைச் சமாதானத்திற்காக நினைவுகூறும்போதுதான் எங்கிருந்தோ அந்தப் பழைய பாடல்களின் வரிகள் உதிர்ந்து கொள்கின்றன. மீண்டும் மீண்டும் அவர்களின் இளமைகால சாட்சியாக அந்தப் பாடல்கள் மட்டுமே மீதமிருக்கின்றன.
“உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா!
வருவதை எதிர்க்கொள்ளடா”
கர்ணன், கட்டபொம்மன், கைலாச சிவன், வைக்குண்டத்தின் பெருமாள், தமிழ்க் கடவுள் முருகர், இராகவேந்திரா, சை பாபா, என்று எல்லாரும் அவர்களின் பாடலில் எங்கோ ஓர் இடத்தில் வந்து போகிறார்கள். சமயச் சொற்பொழிவு கொடுக்கும் ஆன்மீகத் தன்முனைப்பைவிட அவர்களின் பாடல் வரிகள் உள்ளூக்குள் எதையோ தட்டி எழுப்பிவிடும்.
அந்தக் குரல்கள் உச்சரிக்கக்கூடிய சொற்கள் சோகத்தின் இசையாக வந்து உடலையும் உள்ளத்தையும் ஆக்கிரமிப்புச் செய்துவிடுகின்றது. கோவிலின் உள்ளே அமர்வதைவிட வெளியே அவர்களின் பாடல்களைக் கேட்டவாறு அவர்களுக்குத் தெரியாமல் அமர்ந்திருப்பதில்தான் மனம் ஆறுதல் கொள்கிறது.
“கெஞ்சோற்றுக் கடன் தீர்க்க- சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா!”
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyBjSIJcaBN_hDjKCCoMh2skL4UD0jqM6iu88EP-9xgMZsWIiCzFsQVNtc3BwytL7x8dxCuUDmXKkne7ItLnFQ3rTLlDQSoyQMqxZC5QITInhBR5W_8RmNeUQ6-2WMV-VFPOGp83fTTaXu/s280/WAR0450300801r.jpg)
வீட்டுப் பிரச்சனைகள் தரும் பரபரப்பை தாங்க முடியாமல் போகும் கணங்களில் அந்தக் கோவில் பக்கமாகப் போய்விட்டு வர மனம் தூண்டுகிறது. என்னைப் போல பலர் அந்தப் பாடல்களைக் கேட்பதற்காகவே அங்கு அந்த மண்டபத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருப்பார்கள். நகர இருளுக்குள்ளிருந்து அந்தக் கிழவர்களின் பழைய பாடல்கள் ஒலிக்கத் தொடங்கும்.
எப்பொழுதாவது அவர்களை நெருங்கி 5 வெள்ளியோ 2 வெள்ளியோ நீட்டும் போது, பாடலை நிறுத்தாமலே அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு மீண்டும் பாடலை உற்சாகம் நிறைந்த குரலுடன் அவர்கள் தொடரும் போது பிறவி புண்ணியம் அடைந்துவிட்டது போல இருக்கும்.
என்னைப் போல பலர் அந்தக் கிழவர்களின் பாடலைக் கேட்டு, பணம் தந்துவிட்டுப் போவார்கள்.
கிழவர்கள் தொலைத்த வாழ்க்கையைப் பற்றி யாருக்குமே அக்கறை இல்லை. நகர மனிதர்களின் இழுப்பறி வாழ்விற்கும் அவர்களின் நகரப் பிரச்சனைகளுக்கும் அந்தக் கிழவர்கள் பாடக்கூடிய பழைய பாடல்களின் வரிகள் ஏதோ ஒருவகையில் ஆதரவாகவும் கணநேர உற்சாகமாகவும் இருந்துவிடுகின்றன.
“பகவானே மௌனமேனோ?
இது யாவும் நீதிதானோ? பரிதாபம் என்னைக் கண்டு
கருணையில்லாததேனோ?”
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
(மக்கள் ஓசை நாளிதழில் தொடராக வந்த கட்டுரை- பகுதி 3)