Tuesday, January 14, 2014

ஜில்லா - வீரம் : மசாலா தடவிய சமூகக் கருத்து



சமூகப் பிரச்சனைகளுக்குப் பின்னணியில் அரசியல், கலாச்சாரம், கல்வி, பொருளாதாரம் எனப் பல அரிய விரிவான தாக்கங்கள் உண்டு. அவையனைத்தையும் எந்த அறிவுசார் புரட்சியும் மெனக்கெடலும் இல்லாமல் ஒரு மாஸ் கதாநாயகனை வைத்துத் தீர்க்க முடியும் என மீண்டும் மீண்டும் இந்த வகை தமிழ்சினிமா நம்மிடம் அம்புலிமாமா கதைகளையே சொல்லிக்கொண்டிருக்கின்றன.

ஜில்லா - வீரம் இரண்டுமே பொங்கல் வெளியீடு. சாமர்த்தியமாக இரு படங்களுக்கும் ஒரே மதிப்பெண்ணை வழங்கித் தப்பித்துவிடும் சில அக்கறையற்ற வலைப்பதிவாளர்களும் தனித்தனியே இரு படங்களையும் உயர்த்திக் கொண்டாடும் இரசிகர்களும் இப்படங்களின் மீது நிஜமான விமர்சனங்களை வைப்பதில்லை. எல்லாம் மசாலாவையும் கலந்து தடவி கோழியைப் பொறிச்சி அதில் அம்மாவிற்கு ஒரு துண்டு , தங்கைக்கு ஒரு துண்டு, அப்பாவிற்கு ஒரு துண்டு, மிச்ச எலும்பை காதலிக்கு, எனப் பகிர்ந்தளிக்கும் வழக்கமான மசாலாத்தான் 'ஜில்லா'.

தொட்டுக்கொள்ள கொஞ்சம் சமூக அக்கறை மற்றும் சமூகப் பிரச்சனை. சமூகத்தில் நடக்கும் எல்லாம் பிரச்சனைகளையும்(அதன் தனித்தனியான அரசியல் அறியாமல்) தீர்ப்பதற்கு ஒரு மாஸ் கதாநாயகன் வேண்டும். (ஒரு சூப்பர்மேனைப் போல). 'இவன் வேற மாதிரி' படம்கூட அந்த வகையைச் சேர்ந்தது என்றாலும் பாண்டிய நாடு என்பதும் சமூகக் கதை என்றாலும் அவை இரண்டிலும் கதைக்கான கச்சிதம் இருக்கும். 



இதுவரை எந்தப் புதுமையையும் தன் கதைப்பாத்திரத்தில் முயற்சிக்காமல் ஒரு மாஸ் கதாநாயகனாகத் தன்னைக் காட்டிக்கொள்ள மெனக்கெட்டு கோடம்பக்கத்தின் கோமாளியாகவே எஞ்சி நிற்கும் விஜய் அதே மாஸ் ஹீரோவான இரஜினி அளவிற்குக்கூட இன்னும் நடிப்பில் எந்த முயற்சியும் செய்ததில்லை. விஜயிடம் நல்ல குரல்வளம் உண்டு. அதைச் சார்ந்து தன்னை வளர்த்துக்கொண்டுள்ளார். மேலும் நடனத்தில் இன்னும் விஜயின் வேகம் தொய்வடையாமல் கூடியுள்ளது. உடல் ஆரோக்கியத்தைக் கவனிப்பவர். இதுவும் ஒரு சினிமா தொழிலாளிக்கு மிக அவசியமான ஒன்று.

அடுத்தது 'வீரம்'. கடந்த வருடத்தின் இறுதியில் 'ஆரம்பம்' ஒரு நகர்ப்புறக்கதை. அடுத்த சில மாதங்களிலேயே கிராமத்துக்கதை அதுவும் முற்றிலும் வேறொரு கதைக்களம். இந்த மாற்றத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு அஜித்தைப் பாராட்டலாம். எப்பொழுதும் தமிழ் வசன உச்சரிப்பில் சொதப்பும் அஜித் இப்படத்தில் கொஞ்சம் முன்னேறியுள்ளார் என்றே தோன்றுகிறது. சினிமாவைவிட்டு பொதுவாழ்க்கையில் எந்த மேடையையும் விரும்பாதவர் அஜித் எனக் கேள்விப்பட்டுள்ளேன். பெரும்பாலும் விருது நிகழ்ச்சிகளுக்குக்கூட வருவதில்லை. மாஸ் ஹீரோக்கள் பொது ஜனத்தின் கவனத்தையும் கொண்டாட்டத்தையும் பெரிதும் விரும்புபவர்கள். தமிழ்ச்சினிமாவைப் பின்னுக்குத் தள்ளும் மாஸ் ஹீரோக்கள் வரிசையில் அஜித் இருந்தாலும் அவருடைய பொதுவாழ்க்கையில் எந்தப் பெரிய ஜோடனைகளும் இருப்பதில்லை என்றே தோன்றுகிறது. குறிப்பாக வெளுத்த முடிக்குச் சாயம் பூசாமல் தோன்றுவதற்கு மாஸ் ஹீரொக்களுக்குத் துணிச்சல் வேண்டும்.

திராவிடச் சிந்தனை கேரளாவிலும் ஆந்திராவிலும் எடுப்பட்டதில்லை. ஆனால், தமிநாட்டில் மட்டும் மக்கள் வெகு சுலபமாக திராவிடச் சிந்தனைகளை ஏற்றுக்கொண்டதால் கன்னடத்தைச் சேர்ந்த இரஜினியும் அஜித்தும் இங்கு மிகச் சிறந்த கதாநாயகர்களாகக் கொண்டாடப்படுகிறார்கள். கேரளா, ஆந்திரா வெகு கெட்டிக்காரத்தனமாகத் தன்மக்கள் தன் இனம் என இருக்கையில் தமிழ்நாட்டில் மட்டுமே மலையாளத்தர்களும் தெலுங்கர்களும் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அதன் விளைவே இது. ஆனால் கேரளா இன்றும் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர்க் கொடுக்கச் சாதித்து வருகிறது. இதுதான் திராவிடத்தின் வெற்றியும் அடைவும்.

அஜித் சினிமா பின்புலமுள்ள யாருடைய சிபாரிசிலும் சினிமாவிற்கு வரவில்லை. அவர் எந்த இயக்குனரின் மகனும் இல்லை. தன் சொந்த உழைப்பில் தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்தவர். அதற்காக அவரைக் கொண்டாட வேண்டும் என அல்ல. ஒரு சினிமா தொழிலாளியாக அவருடைய உழைப்பை நான் மதிக்கின்றேன். அவருடைய மேடைத்துணிச்சல், கருத்து சுதந்திரம் போன்றவைகளைப் பெரும்பாலும் அவர்களின் இரசிகர்கள் விமர்சிப்பதில்லை. பலமுறை விபத்துக்குள்ளாகியும் கார் பந்தயத்தில் தன் ஈடுபாட்டைத் தகர்த்திக்கொள்ளாதவர். 'மங்காத்தா'படத்தில் பெரிய மோட்டாரை அவருடைய பாணியிலேயே டூப் இல்லாமல் ஓட்டியிருப்பார். சினிமாவில் நல்ல உழைப்பாளி ஆனால் நல்ல படங்களைத் தருவதில்லை. இன்னும் அஜித் நிறைய உழைத்து நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும்.

இரு படங்களும் நிறைய மசாலாக்களுடன் சமூகக் கருத்தைச் சொல்ல முற்படும் படங்களே. 'வீரம்' படத்தில் மசால கொஞ்சம் கம்மி; ஆபாசா குத்து நடனமோ, தேவையில்லாத அதிகப்பட்ச சண்டைக் காட்சிகளோ அதிகம் இல்லை. 'ஜில்லா'வில் கொட்டிக்கிடக்கின்றன. 'சிறைச்சாலை' போன்ற மிக முக்கியமான படத்தில் நடித்த 'மோகன்லால்' போன்ற நல்ல நடிகர்களை வைத்து இப்படி வசனக்கூத்து அடிப்பது பலவீனமே. 'வீரம்' படத்தில் நாசரை நன்றாகப் பயன்படுத்தியுள்ளார்கள்.

ஒரு சிறுமியின் படுமோசமான விபத்தைக் காட்டுவதிலும், ஒரு அம்மாவின் கண்ணீரைக் காட்டுவதிலும், இவர்கள் எடுத்த மற்ற மசாலாத்தனங்களை வெகுஜன மக்கள் கண்டுகொள்ளாவிட்டாலும் தீவிர விமர்சகள் அதனைப் பற்றி பேசியே ஆக வேண்டும். இல்லையெனில் இரசனை மாற்றம் நிகழாது.

சமீபத்தில் சினிமாவிற்குள் வந்து நல்ல படங்களைக் கொடுக்கும் 'விஜய் சேதுபதி'யிடம் இருந்து இவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம்.

-கே.பாலமுருக

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சக நடிகரையும் உற்சாகப்படுத்தி முன்னேற வைப்பதையும் விஜய் சேதுபதி அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்...