Pages

Wednesday, November 5, 2014

சிறுகதை: காண்டாமணியம் தயாரிப்பில் மூன்று உலகத்தர சினிமா

       
2007-இல் எழுதிய சிறுகதை ,  மறுபிரசுரம்:

வணக்கம். நான்தான் இயக்குனர் பாராங்மணியம், சார் இருக்காங்களா?”

ஒகே. .  உள்ள வாங்க, சார் உக்கார சொன்னாரு

   
உள்ளே நுழைந்ததும் அலுவலகத்தின் வரவேற்பறையில் மரக்கட்டையினால் தயாரிக்கப்பட்ட இருக்கைகள் இருந்தன. தயாரிப்பு நிறுவனம் என்று சொல்வதைவிட அதிகமான சவர்க்காரம், பல் துலக்கும் பிரஸ், முகக் கண்ணாடி, போன்ற பொருட்களின் விளம்பரத் தயாரிப்புகள்தான் நடந்துள்ளன. அதனால் அந்த இடத்தை குளியலறை விளம்பரக் கம்பெனி என்றுகூட சொல்லலாம். அதன் தயாரிப்பாளர் திறந்த மனப்பான்மையுடையவர். ஒரு தடவை துண்டு விளம்பரத்தை தயாரித்திருந்தார். மோடல்? அவரே நடிக்கத் தயாரானார். விளம்பரம் இப்படித்தான் இருந்தது:

காராவாடை பளபள துண்டு-விளம்பரம்

வெகுநேரம் பின்புறம் மட்டும் காட்டப்படும் ஓர் உருவம் தெரிகிறது. கால்களில் அடர்த்தியான சுருள் முடிகள் குளோசாப்பில் காட்டப்பட்டு, காமிரா மேலே ஏறுகிறது. கலர் துண்டின் முழு வடிவம் தெரிகிறது. துண்டு கட்டியிருப்பவர் இலகுவாக நடந்து குளியலறையிலிருந்து வெளியேறுகிறார். இப்பொழுது முகம் மட்டும் காமிராவில் தெரிகிறது. காமிராவில் நம் தயாரிப்பாளர் காண்டாமணி. சிரித்துக் கொண்டே சொல்கிறார், “ ஆ! ஆ! என்ன குளுமை...கதகதப்பு...  உடலில் இருக்கும் நீரை வழித்து எடுத்துவிடும்...வாங்கிப் பயன்படுத்துங்கள், காராவாடை பளபள துண்டு! துண்டு ! துண்டு!

துண்டு ஒரு வாரத்திலே கலர் மங்கிவிடும் என்பதைப் பற்றி காண்டாமணி தந்திரமாக மறைத்ததுதான் விளம்பரத்தின் வெற்றி.

2

வாங்க! வாங்க! மணியம். எப்படி இருக்கிங்க?”

நல்லாருக்கன் சார்.

நான் சொன்ன மாதிரி 3 படத்துக்கான கதைகளைத் தயார் பண்ணிட்டிங்களா? அவசரம் மணியம். காசு கையிலே இருக்கும் போதே எடுத்தறணும்... 2 படமாவது ஆஸ்காருக்குப் போகணும் மணியம். நம்ப நாட்டுலே தமிழ்ப்படங்கள் பெறும்பாலும் பேய்படங்கள் மட்டும்தான் வருது. நல்ல படங்கள் இல்லை. இந்தியா அளவுக்கு நம்பளும் படம் எடுத்து முன்னேற இதான் வாய்ப்பு

எல்லாம் கதையும் ரெடி சார்! ரெண்டு வாரமா தூக்கம் இல்லாமே கதைங்களே உங்களுக்கு ஏத்த மாதிரி ரெடி பண்ணிட்டேன் சார்

வேரி கூட். இப்படித்தான் இருக்கனும். . சரி ஒன்னு ஒன்னா சொல்லுங்க மணியம்

முதல் படம்: கார் வருது மோட்டார் போகுது

சார் இந்தப் படத்துலே மொத்த நடிகர்களே 4 பேர்தான்...ரெண்டு காதல் ஜோடிகள். படம் முழுக்க ரோட்டுலதான்

ஏன்பா ரோட்டுல?”

கடசியா அங்கத்தானே வரப் போறிங்க