Pages

Thursday, December 4, 2014

எது சினிமா?


சினிமா ஒரு மாபெரும் சிம்பனி இசையின் கோர்வையைப் போல. ஒவ்வொரு இசைக்கருவியும் இசைக்கத் துவங்கி அனைத்தும் ஓர் பேரோசையாக மாறி ஓர் உச்சத்தை அடையும் நிலையில் இதற்கு முன்பான நம்மை/ நம் இரசனையை உடைக்கக்கூடும். ஒரு நல்ல கதை மட்டும் நல்ல சினிமாவாகிவிடாது. அல்லது பேரரசை இயக்கச் சொல்லிவிட்டு சந்தோஷ் சிவன் அவர்கள் ஒளிப்பதிவு செய்வதன் மூலம் ஒரு நல்ல சினிமா உருவாகிவிடாது, அல்லது ஏ.ஆர் ரஹ்மான் சங்கர் படத்திற்கு இசை அமைப்பதன் மூலம் ஒரு நல்ல படம் உருவாகிவிடாது.

சினிமா என்பது எப்பொழுதுமே ஒரு கூட்டு முயற்சியே. தனியாளாக இருந்து கற்பனை செய்யக்கூடியவை அல்ல சினிமா. அது பலருடைய கனவின் ஆதாரம். இசை, ஒளிப்பதிவு, கலை, துணை இயக்கம், பின்னணி இசை, ஒப்பனை, உடை, குரல் பதிவு, திரைக்கதை, வசனம் எனப் பலதுறைகளின் விரிவாக்கமே சினிமா. இவை அனைத்தையும் உள்ளடக்கியே ஒரு சினிமா முழுமைப் பெறுகிறது.

அந்த முழுமையையும் நாம் நம் இரசனை அடிப்படையிலும் ஆய்வின் அடைப்படையிலும் விமர்சிக்க முடிகிறது. பெரும்பாலும் இரசனைகள் வேறுப்பட்டு நிற்கும். சிலருக்கு சூரிய உதயத்தைக் காட்டினால் பிடிக்கும்; சிலருக்கு சூரிய உதயத்தில் சில பறவைகளையும் சேர்த்துக் காட்டினால் பிடிக்கும். சிலருக்கு படம் இருளில் நகர்வது பிடிக்காது, சிலருக்கு படம் குறைவான வெளிச்சத்தில் போவது பிடிக்கும். ஆனால், சினிமாவில் காட்சியின் தேவைக்கேற்ப வர்ணங்களையும் வெளிச்சத்தையும் எப்படிக் கையாள்வது என ஒரு தேவையே இருக்கிறது. அதனை ஒரு விமர்சகன்/பார்வையாளன் தெரிந்து கொள்வது அவசியம். அதுவும் ஒரு கற்றலே. அதே போல ஒளிப்பதிவிலும் சில நுட்பங்கள் அடங்கியுள்ளன.