Pages

Sunday, July 19, 2015

இன்று நேற்று நாளை: திரைப்படம் ஒரு பார்வை

காலம் என்பதன் அர்த்தம் என்ன? அது ஒரு ஜடப்பொருள் இல்லை. அசையவில்லை. தெரியவில்லை. ஆனால், அளக்க முடிகிறது. வினாடி, நிமிடம், நேரம், வருடம், மாதம், நூற்றாண்டு என காலத்தை அளக்க மட்டும் முடிகிறது. காலத்தின் அளவையை எது ஆதாரப்படுத்துகிறது? என்கிற அடுத்த கேள்விக்குப் பதில் நாம்தான். நம் முன்னோர்கள்தான். நம் கண் முன்னே கொஞ்சம் கொஞ்சமாக தோல் சுருங்கி, உருவம் மாறி, உடல் தளர்ந்து மூப்பெய்தி இறந்துபோகும் நம் வீட்டுப் பெரியவர்கள்தான் காலத்தின் அளவையை உறுதிப்படுத்துபவர்கள். காலம் என்கிற ஒன்று மாயை இல்லை என்பதனை அவர்களின் மூப்பெய்தலே நிறுபித்துக் கொண்டிருக்கிறது. ஒரு செடி மரமாவதில் காலம் ஒளிந்திருக்கிறது. ஒரு மரம் முதிர்ந்து சாய்வதில் ஒரு காலம் நிரூபணம் ஆகின்றது. ஒரேயொரு மாயம் என்னவென்றால் பிறப்பதற்கும் இறப்பதற்கும் மட்டும் சரியான காலத்தை நிர்ணயிக்க முடியாது. அது நடந்து முடிந்த பிறகே நேரம் கணிக்கப்படுகிறது. ஆகவே, பிறத்தலும் இறத்தலும்விட வாழ்தலே மிக முக்கியம். பிறந்ததற்காக வாழ்ந்து சாவதைவிட, இறந்த பிறகும் நம் வாழ்தலை உலகம் நினைவுக்கூறும் வகையில் வாழ்ந்து சாக வேண்டும் என்பதையே காலம் ஒவ்வொரு கணமும் நமக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறது.

அப்படிப்பட்ட காலம் குறித்த விவாதங்கள் தமிழ் சினிமாவில் அதிகம் நடந்ததில்லை. இறந்தகாலத்தை மறத்தல், எதிர்காலத்தைக் கணிக்க முடிதல் போன்ற விசயங்களைத் தமிழ் சினிமா காட்டியிருக்கிறது. பீட்சா 2 கூட எதிர்காலத்தை ஏதாவது ஒரு கலை வடிவத்தின் மூலம் அந்த வீட்டில் தங்கியிருப்பவர்கள் விட்டு செல்கிறார்கள் என அமானுஷ்யமாகவும் சிந்திக்கும் வகையிலும் கொடுத்திருக்கும். ஒரு மனித வாழ்வின் நடந்த முடிந்தவை, நடப்பவை, நடக்கப் போகுபவை என மூன்றைப் பற்றியும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இன்று நேற்று நாளை படம் தந்திருக்கிறது. இப்படம் காலத்தை விவாதிக்கவில்லை; ஆனால், காலத்தில் நிகழ்காலமே அவசியம் என உணர்த்துகிறது.

டைம் மிஷன் என்றதும் ஏற்கனவே பார்த்துப் பழகிய ஆங்கில சினிமாக்களின் தழுவலோ காட்சிகளோ இடம்பெற்றுவிடும் என நினைத்துதான் படத்தைப் பார்க்கத் துவங்கினேன். ஆனால், இயக்குனர் ரவிகுமார்(அறிமுகம்) ஓர் அறிவியல் புனைக்கதையை அசலாக  தமிழ்ப்படுத்தி இயக்கியுள்ளார். சிக்கலான கதையைக் குழப்பமே இல்லாத திரைக்கதையின் வாயிலாக சிறுவர்கள் படத்தைப் பார்த்தாலும் புரியும் அளவிற்குத் தந்திருப்பதுதான் அவருடைய சாமர்த்தியம். அவருக்கு ஈடாக எடிட்டிங், கலை, பின்னணி இசை, நடிப்பு என அனைத்துப் பகுதிகளும் சமமாக உழைத்திருக்கின்றன.


இப்படம் மலேசியத் திரையரங்குகளில் ஓடவில்லை என நினைக்கிறேன், ஆனால் சென்னையில் படம் நல்ல வெற்றி. எங்கேயும் சோர்வளிக்காத ஒரு திரைக்கதையையும் புதுமையான ஓர் அனுபவத்தையும் நாடித்தான் மக்கள் திரையரங்கம் செல்கிறார்கள். அத்தகைய தேவையைப் புரிந்து கொண்டு இக்கதையை ஒரு திரைக்கதை குழுவே விவாதம் நடத்தி உருவாக்கியிருக்கிறது. கதை ந்மக்கு எப்பொழுதும் கிடைத்துவிடும், ஆனால் அதனைத் திரைக்குக் கொண்டு வருவதற்குத்தான் பயிற்சியும் உழைப்பும் தேவை. அதனை இயக்குனர் ரவிகுமார் மிகுந்த கவனம் செலுத்தி செய்திருக்கிறார்.


அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். குடும்பத்துடன் பார்க்க வேண்டியப் படம் எனச் சொல்லி குடும்பங்களையும் உறவுகளையும் கீழ்மைப்படுத்திக் காட்டும் தமிழ்ப்படச் சூழலில் இப்படம் உண்மையில் குடும்பத்தோடு பார்க்க வேண்டியப் படமாக இருக்கிறது. இரட்டை அர்த்தங்கள் கொண்ட பார்ப்பவர்களை முகழ் சுழிக்க வைத்து செய்யப்படும் மூன்றாம்தர நகைச்சுவைகள் இல்லை.

ஒளியைவிட வேகமாகப் பயணிக்க முடியும் என்றால் நாம் நிகழ்காலத்தைவிட்டு இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பயணிக்க முடியும் என்பதைத்தான் இந்த அறிவியல் புனைக்கதை முன்னிறுத்துகிறது. இதனையே கிரிஸ்டப்பர் நோலன் தன்னுடைய 'இண்டர்ஸ்டீல்லர்' படத்திலும் காலம் என்பதற்கும் புவி ஈர்ப்பு சக்திக்குமான தொடர்பை அறிவியல் விவாதமாகக் கொடுத்திருப்பார். இருப்பினும் அந்த அறிவியலைத் தாண்டி மனித உறவுகளின் ஆழத்தை மையப்படுத்தி படத்தை முடிப்பார்.  இன்று நேற்று நாளை படமும் மிகவும் விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் அறிவியலைத் தாண்டி தத்துவார்த்தமான ஒரு பார்வைக்குள் வந்து நிற்கிறது. இறந்தகாலத்திற்குச் சென்று அதன் சம்பவத்தில் ஏதேனும் ஒன்றை மாற்றினாலும் நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சிறிய அளவிலோ பெரிய அளவிலோ, சோகத்திலோ, மகிழ்ச்சியிலோ போய் முடிய வாய்ப்புண்டு என்பதனைச் சொல்ல விழைந்தாலும், நிகழ்காலமே நிஜம் அதில் நாம் எடுக்கும் நல்ல முடிவுகளே நம் வாழ்க்கையை வழிநடத்தவிருக்கிறது என்பதையே இயக்குனர் படத்தில் ஆழமாக விதைக்கிறார்.