Pages

Wednesday, September 30, 2009

அநங்கம் சிற்றிதழ் விமர்சனம் - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் (2008)

நவீன தமிழ் இலக்கியத்தின் மீது அக்கறை கொண்ட வாசகர்கள், படைப்பாளிகள் மலேசியாவில் நிறைய இருக்கிறார்கள். சிறுகதைகள் கவிதைகள் என்று தொடர்ந்து செயல்படும் அவர்கள் தங்களது வெளிப்பாட்டிற்காக ஒன்றிரண்டு சிற்றிதழ்களை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் புதிதாக வெளிவந்துள்ளது அநங்கம் என்ற சிற்றிதழ்.

இதன் முக்கிய நோக்கமாக மலேசியாவில் உள்ள தீவிர எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் வாசகர்களையும் ஒன்றிணைப்பது என்ற பிரகடனத்துடன் முதல் இதழ் வெளியாகி உள்ளது.

பொதுவில் சிறுபத்திரிக்கைகள் நடத்துவது பொருளாதார சிரமம் கொண்டது. அத்தோடு அதற்கான எதிர்வினைகளும் மிக குறைவாகவே இருக்கும். அதையும் தாண்டி தொடர்ந்து சிறுபத்திரிக்கைகள் உருவாவதற்கு முக்கிய காரணம் நமது அக்கறைகளே. அதற்காக நாம் கொள்ளும் கவனமும் மாற்று முயற்சிகளுமே சிற்றிதழ்களாக வெளியாகின்றன. நானும் அட்சரம் என்ற சிற்றிதழை நடத்தியிருக்கிறேன்.

கே.பாலமுருகன் இந்த சிற்றிதழின் ஆசிரியராக உள்ளார். இவரது நாவல் இந்த ஆண்டு ஆஸ்ட்ரோ நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. சிறந்த சிறுகதையாசிரியர். உற்சாகமான இளைஞர். வாசிப்பதிலும்  விவாதிப்பதிலும்  மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

முதல் இதழில் உள்ள முறிவின் நெடிக்குள் ஆண் கால்கள் என்ற கே.பாலமுருகனின் சிறுகதை சிறப்பாக வந்திருக்கிறது. குறிப்பாக கதையை அவர் கொண்டு செல்லும் விதமும் கதையின் குரலும் தனித்துவமானதாகயிருந்தது.

நவீன கவிதை குறித்த நவீனின் கட்டுரை முழுமையடையாத போதும் நல்ல வாசிப்பு அனுபவத்தை தருகிறது. பாண்டித்துரை, கவிதா மணிஜெகதீசன், ரமேஸ்டே தோழி ஆகியோரின் கவிதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. பொதுவாக சிற்றிதழ் கவிதைகள் என்றே தனித்த வகையிருக்கிறது. அந்த வகைக்குள் சரியாக பொருந்தக்கூடியவை இவை. எனக்கு இதில் எதுவும் அதிகம் வசீகரிக்கவில்லை.



அச்சு அமைப்பும் வடிவாக்கமும் நிறைய மேம்படவேண்டியுள்ளது. முதல் இதழ் என்ற அளவில் இவை பெரிதாக கவனிக்கபடாமல் போயிருக்க கூடும். ஆனால் இன்று வாசிப்பை நெருக்குமாக்குவதற்கு வடிவமைப்பு முக்கிய துணை போகிறது. அதை சரி செய்ய வேண்டியது மிக முக்கியம்.
தொடர்ந்து புதிய படைப்பிலக்கிய முயற்சிகளுடன் அநங்கம் சிறப்பாக வளரக்கூடும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது.





முதல் அநங்கம் இதழின் போது எஸ்.ராமகிருஷ்ணன் அளித்த விமர்சன பத்தி.

நன்றி : அநங்கம் இதழ் 1
கே.பாலமுருகன்

2 comments:

  1. வாழ்த்துக்கள்!!! உங்களுடைய முயற்சி வெற்றியடைய என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஐயா. அநங்கம் இதழுக்கு தங்களின் படைப்புகளையும் அனுப்பி வைய்யுங்கள். ஆதரவு கொடுங்கள்.

    ananggam@hotmail.com

    ReplyDelete

கருத்து