Pages

Thursday, December 22, 2011

இந்தியப் பயணம்(3) – பாரதியார் தேசம்


(barathiyar house)
(நான் பயணத்தைத் வரிசைக்கிரகமாக-தொடராக எழுதவில்லை, ஆகையால் இது நான் இந்தியா சென்ற ஐந்தாவது நாள்) கழுகு மலைக்குச் சென்று வந்த மறுநாள், எட்டயப்புரம் போவதாகத் திட்டம். பாரதியார் பிறந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என ஏற்கனவே செல்மாவிடம் சொல்லியிருந்தேன். அதைப் பற்றி மறந்திருப்பினும் கோணங்கி அண்ணன் இத்தனை தூரம் வந்தாயிற்று, எட்டயப்புரம் அருகாமையில்தான் இருப்பதாகக் கூறி காலையிலேயே அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தார். காலையில் எழுந்ததும் கோணங்கி அண்ணன் வீட்டில் மேல்மாடியிலிருந்து கோவில்பட்டி இரயில் தண்டவாளத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் வீட்டு மொட்டைமாடி விசித்திரமாக இருந்தது. தாராளமான இடம். அவர் குடியிருப்பிலேயே நான்குக்கு மேற்பட்ட வீடுகள் அவர்களுக்குச் சொந்தமாக இருந்தன. கோணங்கி இருந்த வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளி அவருடைய அப்பா தனி அறையில் வசித்துக்கொண்டிருந்தார். முதல் நாள் இரவே அவரையும் சென்று சந்தித்திருந்தோம். அவரும் ஒரு வரலாற்று நாவலாசிரியர்.


(கோணங்கிக்குத் தெரிந்த நண்பர் குடும்பத்தாருடன்)
எட்டயப்புரத்திற்குப் புறப்படும் முன் லேல்மாடியில் நான் யவனிகா செல்மா மற்றும் கோணங்கியும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். நேற்றைய இரவு பேசியதன் மீள்பார்வையாக இருந்தது. யவனிகா தொடர்ந்து நான் மலேசியாவில் அந்நியமாகிவிட்டிருக்கிறேன் எனக் கூறினார். அதனால்தான் இவ்வளவு தூரம் இலக்கியத்துக்காகவும் இலக்கியவாதிகளைச் சந்திப்பதற்காகவும் தாய் பிறந்த மண்ணைப் பார்ப்பதற்காகவும் தனியாகப் பயணப்பட்டுள்ளேன் என்றும் இனி இது போன்ற பயணங்கள் என்னை மாற்றியமைக்கும் என்றும் சொல்லிக்கொண்டே இருந்தார். அந்நியமாகுதல் என்பதை முதலில் புரிந்துக்கொள்ள சிரமமாக இருந்தது. வழமையிலிருந்தும் மரபார்ந்த பின்பற்றுதல்களிலிருந்தும், அதிகாரத்திடமிருந்தும் அந்நியமாகுதல் என்பதே அவரின் அடையாளப்படுத்தலின் நீட்சியாக இருந்தது.

எட்டயப்புரம் புறப்பட அனைவரும் தயாரானோம். வெளியேறுவதற்கு முன் கோணங்கி அண்ணனின் வீட்டிற்கு வெளியே தனியொரு வீட்டில் வசிக்கும் அவருக்குத் தெரிந்த ஒரு குடும்பத்திடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். வயதான ஒரு பாட்டி, கையில் அழகான குழந்தையுடன் ஒரு அம்மா, கைலியைக் கட்டிக்கொண்டு வாசலில் அமர்ந்திருக்கும் நடுத்தர வயதை ஒத்த ஒருவர் என வீட்டில் அடுப்பு எரிந்துகொண்டிருந்தது. அவர்கள் மிகவும் அன்பாகப் பழகினர். புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.

(யவனிகா, நான், கோணங்கி)
எட்டயப்புரம். பாரதியார் பிறந்த மண். தமிழ் சாதிய சூழலில், பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர். தமிழுக்குள் முதல் நவீன சிந்தனையாளனாக மாற்றங்களை உருவாக்கியவர். உலக இலக்கிய பரிச்சயத்துடன் தமிழ் இலக்கியத்திற்குள் உரைநடையை நிறுவியவர். இன்று பாரதி குறித்து பல சர்ச்சைகளும் விவாதங்களும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவர் வாழ்ந்த காலத்தில் அவர் குறித்த எந்த அங்கீகாரங்களும் கவனங்களும் ஏற்படவில்லை. அதைப் பொருட்படுத்தாமல் இயங்கியவரும்கூட. எட்டயப்புரத்தை அடைந்ததும் தெருக்கள் வழி பயணித்தோம். கோணங்கி ஒரு தெருவைக் காண்பித்து, இங்கெல்லாம் பாரதியார் நடந்திருக்கிறார் என்றும் இதுதான் பாரதி காலத்தில் பிராமணர்கள் குடியிருந்த தெரு என்றும், பாரதியார் இங்கெல்லாம் சர்ச்சையை உண்டாக்கியுள்ளார் என்றும் கூறினார். காலம் எவ்வளவோ மாறியிருந்தாலும் அப்பகுதியை முதன் முதலாக வரலாற்றுத் தகவலுடன் தரிச்சிக்கையில் புத்துணர்ச்சிப் பெற முடிகிறது. பாரதியாரை மீண்டும் அங்குப் பார்ப்பது போன்ற பரவசம் மனதில் பரவியது.

“பாரதி பிறந்த வீடு’ என நீல வர்ணத்தில் ஒரு பழைய போர்ட் வாசலிலேயே மாட்டிவைக்கப்பட்டிருந்தது. வெளியேயிருந்து வீட்டைப் பார்க்கும்போது, அது உள்ளே ஓர் இருளை நோக்கி நீண்டிருந்தது. எல்லாம் இடங்களையும் சுற்றிப் பார்த்தோம். பாரதியாரின் பிறந்த இடம். அநேகமாக அங்கு முன்பு தொட்டில் இருந்திருக்கக்கூடும். இரும்பு கம்பிகளால் அவ்விடத்தைச் சுற்றி வேலி அமைத்திருந்தார்கள். மேலும் பாரதியார் வீட்டுக்கிணறு, அவருடைய அறைகள், அவர் எழுதிய கடிதங்கள்(பெரிதாக்கப்பட்டுச் சுவரில் மாட்டப்பட்டிருந்தன), குடும்பப் புகைப்படங்கள், வம்சாவழியின் வரைப்படம் என அனைத்தையும் பார்க்க நேர்ந்தது. ஏதோ ஓரளவிற்கு மட்டுமே அந்தத் தேசிய கவிஞனின் இல்லம் பராமரிக்கப்பட்டு வருவதாகத் தோன்றியது.

(நூல் வெளியீடு- என் கவிதை தொகுப்பு)
திடீரென கோணங்கி அண்ணனும் யவனிக்காவும் சேர்ந்து என் கவிதை நூலை அங்கு வைத்து வெளியீடலாம் என முடிவு செய்தனர். செல்மாவும் காரிலுள்ள என் கவிதை நூலை எடுத்து வரச்சொல்லி, கோணங்கி அண்ணன் வெளியீட கவிஞர் யவனிகா பெற்றுக்கொண்டார். (என் கவிதை நூலை நான் மலேசியாவில் இன்னமும் வெளியீடவில்லை. வெளியிடவும் திட்டம் இல்லை) எதிர்பாராவிதமாக நடந்த ஒரு நூல் வெளியீடு அது. அங்கு நூல் வெளியீட்டு மரபையெல்லாம் அவர்கள் பின்பற்றுவதில்லை. அதற்கென உருவாகியிருக்கும் சில சடங்குகளையெல்லாம் மீறி பல மாற்றுமுயற்சிகளுடன் நூல் வெளியீடுகள் நடந்துகொண்டுத்தான் இருக்கின்றன. ஒரு பக்கம் வழக்கம்போல பதிப்பகங்கள் நூல் வெளியீடுகளை ஆடம்பரமாகச் செய்துகொண்டிருக்க எங்கோ ஒரு சில இடங்களில் மிகவும் எளிமையாக வித்தியாசமான முறையில் நூல் வெளியீடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில் அஜயன்பாலா அவர்களின் நூல் ஒன்றை இப்படித்தான் இரயில் பயணத்தில் வெளியீட்டார்கள் என்றும், வெளியீட்டுக்குப் பிறகு நூல் ஒன்றை இரயிலிலிருந்து வெளியே வீசிக் கொண்டாடினார்கள் என்றும் தெரிவித்தார்கள்.

(பாரதியார் வீட்டில் நான்)
பாரதியார் இல்லத்தைப் பார்த்தது என் வாழ்நாளின் மறக்க முடியாத அனுபவமாக மாறியிருந்தது. கல்லூரியில் இருந்த காலக்கட்டத்தில் விரிவுரையாளர் தமிழ்மாறன் அவர்களின் வழியே நான் பாரதியாரைக் கண்டடைந்தேன். அதற்கு முன் பாடத்திற்காகவும் பரீட்சைக்காகவும் பாரதியார் கவிதைகளை அணுகியதுண்டு. அது ஒரு மனப்பாடம் அனுபவமாக மட்டுமே தேங்கியிருந்தது. ஆனால் தமிழ் மாறன் அவர்களின் வழி பாரதியை மறுவாசிப்பு செய்ய முடிந்தது. அதன் மூலம் பாரதிக்குள் நுழைய முடிந்தது. தொடர்ந்து பாரதியாரை வெவ்வேறு சூழலில் புரிந்துகொள்ளும் மனநிலையும் சலிப்படையாமல் எனக்குள் சேகரிக்க முடிகிறது. பாரதியார் இல்லத்தை அடுத்து இன்னொரு ஆச்சர்யமும் காத்திருந்தது. என் வாழ்வின் முதன் முதலான ஒரு திருப்புமுனை அது. ஒரு புதிய அனுபவத்தை நுகரப்போகும் ஒரு தருணம். எட்டயப்புரத்தையொட்டிருக்கும் பாரதியாரின் ‘கஞ்சாகுடி மண்டபத்தை’ நோக்கி விரைந்தோம்.

-தொடரும்- 
கே.பாலமுருகன்

some pictures of barathiyar house:
(பாரதியார் பிறந்த இடம்)

(பாரதியார் வீட்டுக்கிணறு)

No comments:

Post a Comment

கருத்து