Pages

Sunday, December 20, 2015

மலேசிய – சிங்கப்பூர் சிறுகதைகள் ஒரு வாசகப் பார்வை – தொடர் 2: சித்ரா ரமேஷின் கழிவுகள் : மலத்தில் தொய்ந்த மானுடம்

தீவிரமான விசயங்களை ஓர் எல்லைக்கு மேல் எளிமைப்படுத்த முடியாது. எல்லைக்குமேல் எளிமைப்படுத்துவது அதன் நுட்பங்களைச் சிதைப்பதாகும். கடுகாக மாற்றப்பட்ட கடல்; கடலல்ல, கடுகுதான்’ – சுந்தர ராமசாமி (செப்டம்பர் 2002)

நாம் எப்பொழுதும் வாழ்க்கைக்கு ஓர் அலாரம் கொடுத்து வைத்திருக்கிறோம். அது நம் அன்றாடங்களை ஞாபகப்படுத்திக் கொண்டே அலறிக் கொண்டிருக்கின்றன. அதில் ஏற்படும் ஒரு சிறிய கீறலும் நம்மை அதிர செய்கின்றது. சட்டென நம்மைக் கூர்ந்து கவனிக்கச் செய்கிறது. நம் வாழ்வை அலசி மதிப்பீடு செய்கிறது. காலை முதல் இரவு வரை ஒரே மாதிரி தொடங்கி ஒரே மாதிரி முடியும் எதுவுமே தீவிரம் கிடையாது. வாழ்வை ஒரு கணம் அசைத்துப் பார்க்கும் அக்கீறலே எளிமைப்படுத்த முடியாத தீவிரமாகப் பார்க்கிறேன். சாதியும், சாதி இழிவும், சாதியினால் உருவாகும் சமூக இடைவெளியும் எளிமைப்படுத்த இயலாத விசயங்களாகும். தலித் இலக்கியம் கவனத்திற்குரியதாக மாறத் துவங்கிய காலத்திலிருந்தே தலித் சமூகம் தொடர்பான பிரக்ஞை மறுக்க முடியாததாக எல்லாம் மனங்களிலும் நிலைக்கொள்ளத் துவங்கின. தலித் இலக்கியம் மூன்று வகையான முன்னெடுத்தல்களை உருவாகியுள்ளன.

1.   தலித்துகளின் மீதான இழிவுகளை உரையாடுதல்

சாதி, குலத்தொழில் எனப் பலவகைகளில் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களின் மீது மேல்வகுப்பு மனிதர்கள் உருவாக்கும் இழிவுகளைத் தமிழ் சிறுகதைகள் பல உரையாடியிருக்கின்றன. மேல்தட்டு வர்க்கத்தினர் தன் சாதி ஆதிக்கத்தை எளிய மக்களின் மீது விதித்து அதன்பால் உருவாக்கிய வன்முறைகளைப் பதிவு செய்த கதைகள் ஏராளம் தமிழில் வந்துள்ளன. அன்பாதவன் என்கிற எழுத்தாளர் தன் கதைகளில் ஆதிக்க சாதியினரின் முகங்களைக் கிழித்துக் காட்டியுள்ளார். அதுவரை மௌனமாகப் பின்பற்றப்பட்டு வந்த ஆதிக்க மனங்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்த்தது என்றே சொல்லலாம். ஆனால், இதுபோன்ற எழுத்து அதிகாரங்களை உடைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்டவர்களின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளையும் தீண்டாமை கொடுமைகளையும் மட்டுமே ஒப்புவித்தன. அப்போதைய தமிழ் சிறுகதை சூழலில் இத்தகைய கதைகள் மிகவும் நேர்மையாகக் கருதப்பட்டன. ஆனால், புனைவுத் தன்மை அத்தனை பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை என்றும் சிலர் கருத்துரைத்திருக்கின்றனர். ஆனாலும் தலி எழுத்தாளரான உஞ்சை ராசன் போன்றவர்களின் பழி, தனிக்கிராமம் போன்ற கதைகள் புனைவுலகிலும் சிந்தனை மரபிலும் பெரும் தாக்கத்தை உருவாக்கிவிட்டது என்றே சொல்லலாம்.

2.   தலித்துகளின் பண்பாட்டு அடையாளங்களைப் பதிப்பது

இத்தகைய சிறுகதைகள் தமிழ் இலக்கியத்தில் தலித் மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் பண்பாட்டு அடையாளங்களையும் பதிப்பதில் கவனம் செலுத்தின. அதுவரை மேல்தட்டு வர்க்க இலக்கியவாதிகளால்கூட உரையாடப்படாத தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்வியல் அடையாளங்கள், பண்பாட்டுக் கூறுகளைப் பதிப்பதில் அதிகம் கவனம் செலுத்திய எழுத்தாளர்கள் அப்பொழுது தீவிரமாகச் செயல்பட்டார்கள்.

3.   தலித் சாதியினர் எதிர்க்கொள்ளும் இழிவுகளின் மீதிருக்கும் பொதுபுத்தியை விமர்சித்தல்

ஆதவண் தீட்சண்யா அவர்களின் லிபரல்பாலயத்து மக்கள்சிறுகதை தலித்துகளை மறுகண்டுபிடிப்பு செய்து அவர்களை மேன்மையானவர்களாக நிறுவும் முயற்சியாகும். அவருடைய மொழி அங்கதங்களைத் தாங்கிக் கொண்டு தலித்துகளை இழிவானவர்களாகப் பார்க்கும் பொதுபுத்தியைக் கிண்டலடித்துச் செல்கிறது. அவருடைய கதைகளில் புகார்களோ அல்லது புலம்பல்களோ இல்லாமல் இருப்பதே தலித் இலக்கியம் சந்திக்கும் புதிய மாற்றமாகக் கருதுகிறேன். கூறுமொழியிலும் பேசும்பொருளிலும் ஆதவண் தீட்சண்யா தலித் சிறுகதைகளில் ஓர் அழுத்தமான ஊற்றை உருவாக்குகிறார். இதுபோன்ற ஓர் அலை பிறகு 2000 ஆண்டுகளில் தலித் இலக்கியம் உள்வாங்கிக் கொண்ட மாறுதலாகப் பார்க்கிறேன்.


சித்ரா ரமேஷின் கழிவுகள்

மேற்கண்ட மூன்று கருத்து நிலையிலிருந்து அலசும்போது சித்ரா ரமேஷ் எழுதியிருக்கும் கழிவுகள் சிறுகதை ஒரு பொதுபுத்தி எட்டிப் பார்க்க முனையாத வாழ்வின் மிக சிக்கலான எல்லையிலிருந்து பொதுவெளியை அசைக்கும் குரலாகும். இதையும் நான் ஒரு தலித் சமூகத்தைப் பற்றி பேசும் கதையாகவே பார்க்கிறேன். காலம் காலமாகச் சமூக அடுக்குக்குள் இருக்கும் சாதி வேறுபாட்டினை முன்வைக்கிறார். அதே சமயம் இக்கதை இரண்டு தளங்களில் பயணிக்கிறது. சாதி அடையாளத்திலிருந்து மீளும் ராஜேந்திரனின் கதையையும், எவ்வளவு முன்னேறியும் இன்னமும் சாதி இறுக்கங்களுடன் முன்னகரும் சுப்ரமணியத்தின் கதையையும் சுமந்து கொண்டு வெளிப்படுகிறது. வாழ்வின் இரு முரண்களில் கதை நகர்ந்து செல்கிறது. மேலும் ஒரு கற்பனைவாதமும் கதையினூடாகப் பொது வாசகனின் மனத்தில் நிகழ்த்துகிறது. மலம் அள்ளி வாழும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் கல்வியின் மூலம் அதனைக் கைவிட்டு விடுதலை பெற முடியும் என்பதைப் போன்ற ஒரு தொனி கதையிலிருந்து உரக்க ஒலித்துக் கொண்டிருக்கிறது.

மலம் அள்ளுபவர்கள் பற்றி தமிழ் சிறுகதைகள் கவனித்தது 1980ஆம் ஆண்டிற்குப் பிறகுத்தான் என மாற்றுவெளி இதழில் சொல்லப்படுகிறது. மராத்திய, கன்னட மொழிகளில் தலித் இலக்கியம் கவனம் பெற்ற பின்பே இந்தியாவின் மற்ற மொழிகளில் எழுத்தாளர்கள் தலித் சிந்தனையுடன் எழுதத் துவங்கினார்கள். கே.டானியலின் பஞ்சமர் நாவல் தலித் இலக்கிய வெளியில் ஒரு பெருத்த அசைவை உருவாக்கிவிட்டது என்றே சொல்லலாம். அதுவரை தீண்டத்தகாதவர்கள் என்பதைப் போல கற்பித்து வந்த தமிழ் இலக்கியம் தலித்துகளின் பக்கம் கவனத்தைச் செலுத்தத் துவங்கியதிலிருந்து தோட்டிகளின் கதைகள் தமிழ் சமூகத்தின் வாசக எல்லைக்குள் வந்து சேர்ந்தன.

அந்த வகையில் சித்ரா கழிவுகள் எனும் சிறுகதையின் வழி தலித் சமூகத்தின் வாழ்க்கையைக் காட்ட விளைகிறார். ஆனால், அவருடைய கதையில் தீண்டாமைகள் மிகவும் மேலோட்டமாகச் சொல்லப்படுகின்றன. சுப்ரமணியம் என்பவனின் மனத்தின் ஓரத்தில் சாதி திமிறிக் கொண்டிருப்பதைக் கதையோட்டத்தில் காட்டுகிறார்.

சித்ராவின் மொழி

பறவைப் பூங்கா எனும் தனது முதல் சிறுகதை தொகுதியை வெளியிட்டிருக்கும் சித்ரா ரமேஷ் அவர்கள் 1993ஆம் ஆண்டின் இறுதியில் சிங்கப்பூரில் குடியேறினார். தனது 20 வயதிலிருந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். அவருடைய முதல் சிறுகதை தேவதைகள் ஆகும். தற்போது சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் தலைவராக இருந்து பல அரிய இலக்கிய உரையாடல்கள், நிகழ்ச்சிகளைத் தொகுத்து வருகிறார். நல்ல விமர்சகராகவும் கருதப்படும் அவருடைய புனைவு மொழி மிக எளிமையாக அனைத்து தரப்பு வாசகர்களை அடையக்கூடியதாக இருக்கின்றது.

அவரின் மொழிக்குள் புகுந்து அவர் காட்டும் வாழ்க்கையை நுகர்வதில் எந்தத் தடையும் ஏற்படாது என்றே கருதுகிறேன். பறவைப் பூங்கா எனும் சிறுகதை தொகுதியில் அவரே தன்னுடைய விருப்பக் கதையாகக் கருதும்கழிவுகள்தலித் சமூகத்தைப் பற்றி எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்கும் பாணியிலான சிறுகதை கிடையாது. கீழ்மையிலிருந்து ஒரு தாழ்த்தப்பட்ட சமூகம் தன்னை உயர்த்திக் கொள்ளும் விடியலை நோக்கி எழுதப்பட்ட கதை என்பதால் அவருடைய மொழி மிகவும் இயந்து வெளிப்பட்டுள்ளது. சிலருக்குக் கதை சொல்லும் வாழ்க்கை ஒரு பக்கமும் அதைத் தாங்கி வரும் மொழி ஒரு பக்கமும் பயணிக்கும். இதனால் கதை வாசகனைச் சேர முடியாமல் தடுமாறும். ஆனால், சித்ராவின் மொழியை இரண்டு வகைகளில் உணரலாம்.

1.   சிக்கலான வாழ்க்கையைக்கூட தன் மொழியின் வழி எளிமைப்படுத்தி கொண்டு சென்று விடுகிறார்.

2.   சிக்கலான வாழ்வைத் தன் எளிய மொழியின் வழி சொல்வதால் அதன் நுட்பங்களைக் கொஞ்சம் குறைத்துவிடுவதாகவும் சில சமயங்களில் அமைந்து விடுகிறது.

மொழியை அவர் செதுக்குவதன் பின்னணியில் அவர் எடுத்துக் கொள்ளும் வாழ்க்கையின் அடர்த்தியின் மீது எந்தப் பாதிப்பும் வராமல் இருக்கும்வரை அவருடைய மொழியைப் பாராட்டலாம். எந்த ஆர்ப்பாட்டமும் திணறலும் இல்லாமல் வெகு இயல்பாக வாசக மனங்களில் பதிகிறது.

மலத்தில் தொய்ந்த மானுடம்

என்னுடைய நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் நாவலிலும், தங்கவேலுவின் 10ஆம் எண் மலக்கூடம் எனும் சிறுகதையிலும் மலம் அள்ளுபவர்களையும் அதனையொட்டிய அவர்களின் வாழ்வையும் பதிவு செய்திருப்பேன். மலத்தைப் பற்றியெல்லாம் சிறுகதைகளில் இலக்கியத்தில் பேச வேண்டுமா என்கிற ஒரு கேள்வி மலேசியத் தமிழ்ச்சூழலில் உலாவிக் கொண்டே இருக்கிறது. நான் முன்பே சொன்னதைப் போல இலக்கியம் அனைவருக்குமானது. இந்த மண்ணில் பிறந்தவர்களின் வாழ்க்கையை, தாழ்த்தப்பட்டுவர்களின் வாழ்க்கையை, மேல்தட்டு வர்க்கத்தின் வாழ்க்கையை என அனைத்தையுமே பதிவு செய்யும் சுதந்திரம் இலக்கியத்திற்கு உண்டு. வாழ்க்கையை விவாதிக்கும் சுதந்திரம் இலக்கியத்திற்கு உண்டு. வாழ்க்கையை விசாரிக்கும் ஆற்றல் இலக்கியத்திற்கு உண்டு. மேன்மையை மட்டுமே இலக்கியம் ஒரு கற்பிதமாகப் பேச வேண்டும் என நினைப்பதே சர்வதிகாரம்தான். ஒவ்வொருநாளும் வாழ்க்கை சிக்கலாகிக் கொண்டிருக்கின்றது. அதன் சிக்கல்களிருந்து வாழ்க்கையைப் பேசும் குரலே இன்றைய இலக்கியம். அதிலிருந்து தப்பித்து ஒரு கற்பனையின் ஊடாக வாழ்க்கையைப் புனைந்து கிளர்ச்சி அடைவது இலக்கியம் அல்ல.

1960களில் தோட்டங்களில் மலத்தை அள்ளுவதற்காகவே அள்ளுர் கூட்டி எனச் சொல்லப்படுபவர்கள் வருவார்கள். அவர்களின் வேலையே மலக்கூடத்தைச் சுத்தம் செய்வதாகும். அவர்களைப் பிரதான பாத்திரமாக இதற்கு முன்புள்ள மலேசிய இலக்கியங்கள் ஏன் பேசியதில்லை என யாரும் சிந்தித்ததுண்டா? தோட்டங்களில் சுரண்டப்பட்ட தொழிலாளிகளைப் பற்றி பேசப்பட்டுள்ளது; கிராணிமார்கள் பற்றி பேசப்பட்டுள்ளது; வெட்டுமரத் தொழிலில் தொய்ந்து சிதைக்கப்பட்ட தோட்ட மக்களைப் பற்றி பேசப்பட்டுள்ளது. ஏன் மலம் அள்ளுபவர்களை இலக்கியம் கண்டுகொள்ளவில்லை? அவர்கள் அத்தனை தாழ்த்தப்பட்டவர்களா? இலக்கியம் நமக்கு உரியதாக இருக்க வேண்டும் என்றும் நம்முடைய மேன்மையான வாழ்க்கையில் உள்ள சிக்கல்களைப் பேசுவதாக இருக்க வேண்டும் என இலக்கியத்தின் மீது ஒரு பொதுமனம் கொள்ளும் சர்வதிகாரமே இதற்குக் காரணம். நம்மைக் கடந்து செல்லும் எளிய மனிதர்களைப் பற்றி யாரும் கவலைக்கொள்வதில்லை. அவர்களை உரையாட வேண்டும் எனக் கவனம் கொள்வதில்லை.

சிங்கப்பூரின் பெருநகர் சூழலில் வாழ்ந்தாலும் சித்ரா ரமேஷ் தமிழ்நாட்டிலுள்ள மலம் அள்ளுபவர்கள் மற்றவர்களைப் போல உயர்ந்து வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்து தங்கள் மீதிருக்கும் சிறுமைகளிலிருந்து விடுப்படுவதாக எழுதியது அவரிடம் இருக்கும் மனித அக்கறையப் புலப்படுத்துகிறது. ஆனால், கழிவுகள் எனும் சிறுகதையின் மூலம் மலம் அள்ளுபவர்களின் உளவியலை மன உணர்வுகளை மேலும் ஆழமாகப் பேசியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். கதைக்குள் அவர்களின் மன உணர்வுகள் இராஜேந்திரனின் பாட்டியின் வழி காட்டப்பட்டிருந்தாலும் கதை நெடுக அதன் தேவை இருந்து கொண்டே வந்தது. சட்டென ஒரே பாடலில் ஏழை பணக்காரன் ஆவதையும், திடீரென தொழிலாளி முதலாளி ஆவதையும் போன்ற கொஞ்சம் சினிமாத்தனம் இருப்பதையும் மறுக்க முடியவில்லை.

சித்ராவின் இக்கதையில் மிகவும் கொஞ்சமாக உரையாடப்பட்ட மலத்தில் தொய்ந்த வாழ்க்கை, கதையின் முதன்மை பொருளாக மாறுவதில் கொஞ்சம் சிக்குகிறது. 2009ஆம் ஆண்டு தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய கந்தர்வன் சிறுகதை போட்டியில் முதல் பரிசைப் பெற்ற எச்சம் என ஒரு சிறுகதை ஞாபகத்திற்கு வருகிறது. கால்வாயில் இறங்கி மலம் அள்ளிக்கொண்டிருக்கும் தொழிலாளிகளின் உரையாடலின் வழி சொல்லப்படும் கதை. அவர்கள் மலத்தை அள்ளிக் கொண்டிருக்கும்போதே சட்டென யாரோ கழித்துவிட்ட மலம் அவர்களின் முதுகில் வந்து விழும். இன்றளவும் இதைவிட அழுத்தமாக மலம் அள்ளுபவர்களின் வாழ்க்கையைக் காட்ட முடியுமா என்ற பதற்றம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. சித்ராவின் கழிவுகள் சிறுகதை அந்தப் பதற்றத்தை வழங்கவில்லையென்றாலும் பேச எடுத்துக்கொண்ட விசயத்தின் வழி மிகவும் முக்கியமான சிறுகதையாக நிலைக்கிறது. அவர் தனது மொழியை மேலும் கூர்மையாக்குவதன் மூலம் அவர் சிறுகதையின் ஊடாகப் பேசும் மிகவும் மாறுப்பட்ட வாழ்க்கை தமிழ் இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்கும் என நம்புகிறேன்.


-    கே.பாலமுருகன்

No comments:

Post a Comment

கருத்து