Saturday, December 11, 2010

சிறுகதை: சுவர் ஓவியங்களில் ஒளிந்திருக்கும் நகரம்

1. தவிப்பெனும் கடல்

நடுநிசியில் சலனமற்ற சாலை ஓய்ந்துகிடக்கிறது. அப்பொழுதுதான் நகரத்தினுள் நுழைபவர்களுக்கு யாரோ பேசிவிட்டு மௌனமானது போல தெரியும். இருளில் சொற்கள் கரைந்துகொண்டிருக்கும் உணர்வைப்பெற முடியும். மின்சாரக் கம்பத்தில் வெகுநேரம் களைத்து அமர்ந்திருந்த சிட்டுக்குருவியின் படப்படப்பு மட்டும் அதீத ஓசையாகக் கேட்டுக் கொண்டிருந்தது. நான் வீட்டிலிருந்து ஓடிவந்த முதல் நடுநிசி அது. நகரம் செத்து அநேகமாக ஒரு மணி நேரம் ஆகியிருக்கக்கூடும்.
“செவன் இலவன் எங்காது இருக்குமா?”

எதிரில் யாரும் இல்லை. கேட்டு விடவேண்டுமென்பதில் உறுதியாக இருந்ததில் எப்படிக் கேட்க வேண்டும் எனத் தொடர்ந்து பயிற்சி செய்துகொண்டே நடந்தேன். முதலில் சந்திப்பவரிடம் அதைக் கேட்டுவிட்டு கூடவே ஏதாவது சாப்பிடுவதற்குக் கொஞ்சம் பணமும் கேட்டுத்தான் ஆக
வேண்டும். நகரத்து சாலை இருளுக்குள் ஓடி மறையும்வரை எனது கண்களுக்குள் சூன்யமாக விரிந்து கிடந்தது. கண்கள் வழக்கமாக மாயையை உருவாக்கி அனுமானங்களின் மூலம் கிளர்ச்சியுறுவதில் பழகி போனதாயிற்றே. யாரோ வருகிறார்கள், வந்து விடுவார்கள், ஒரு வயதான பெண்மணி வருகிறாள் எனத் தொடர்ந்து தூரத்தைப் பற்றிய கனவை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. எங்காவது களைத்து மயங்கிவிட்டால் என்கிற உடல் குறித்த பயமும் தொடர்ந்து ஒட்டிக் கொண்டது.