Thursday, October 23, 2014

மலேசியாவின் முதல் சிறுவர் மர்மத்தொடர் நாவல் : மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்

மலேசியாவின் சிறுவர் இலக்கியம் நன்னெறிக் கதைகள், நீதிக்கதைகள், சிறுவர் பாடல்கள் என்பதோடு மட்டும் சுருங்கிவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே 'மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்' எனும் மலேசியாவின் முதல் சிறுவர் மர்ம நாவலை எழுதித் தொடக்கி வைத்திருக்கிறேன். மேற்கத்திய வாசிப்புச் சூழலில் பெரும் தாக்கத்தை உருவாக்கிய 'ஹாரி போட்டர்' நாவலைப் போல, இந்தச் சிறுவர் மர்ம நாவலும் மாணவர்கள் மத்தியில் ஒரு புதிய ஆர்வத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

2014ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் திகதி சுங்கை பட்டாணியில் என்னுடைய சிறுவர்களுக்கான மர்ம நாவல் அதிகாரப்பூர்வமாக வெளியீடுக் கண்டது. இதுவே மலேசியத் தமிழ்ச் சூழலில் சிறுவர்களுக்காக எழுதப்பட்ட முதல் மர்மத் தொடர் நாவல் ஆகும். மொத்தம் 112 பக்கங்களும் 15 ஓவியங்களும் அடங்கிய இந்த நாவல் தமிழ்க்கல்வியில் உள்ள புனைவு இலக்கிய ஆற்றலை வளர்க்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டது ஆகும்.

இந்த நாவலில் மூன்று சிறுவர்களே மையக்கதைப்பாத்திரம். அவர்களைச் சுற்றியே கதை நகர்கிறது. அனைத்துச் சமப்வங்களிலும் அவர்களே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களின் மொழியிலேயே கதையின் அனைத்துக் காட்சிகளும் வருகின்றன. எங்கேயும் பெரியவர்களுக்கான புத்திமதி சொல்லும் தொனி இல்லாமல் முழுக்க முழுக்க அவர்களின் உலகத்திற்குள் வைத்து மொழியும் கதையும் கட்டமைத்துள்ளேன். கடந்த நான்கு வருடமாகச் சிறுவர் சிறுகதைகள் எழுதி, சிறுவர் சிறுகதைப் பட்டறைகள் நடத்தி அதன் வழி பெற்ற அனுபவத்தினூடாகவே இந்தச் சிறுவர் நாவலை எழுத முடிந்தது.

ஒவ்வொரு வருடமும் மலேசியா முழுக்க பல தமிழ்ப்பள்ளிகளுக்குச் சென்று சிறுகதை பட்டறைகள் நடத்தி வருகிறேன். பெரும்பாலும் மலேசிய இந்திய மாணவர்களின் படைப்பிலக்கிய ஆற்றல் மொழி ரீதியிலும் சிந்தனை ரீதியிலும் முன்னகர வேண்டிய நிலை உள்ளதோடு பெரும்பாலும் ஆசிரியர்களின் சவாலாக இலக்கியமே இருந்து வருகின்றது. நல்ல தரமான வாக்கியங்கள் அமைக்க முடிந்த சிறுவர்களால் வர்ணனையுடன் ஒரு கதையைச் சொல்லத் தடுமாறுகின்றனர். ஆகவே, மலேசியக் கல்வி அமைச்சின் எதிர்ப்பார்ப்பின்படி மாணவர்களின் கற்பனை ஆற்றலை தமிழ்க்கல்வியின் மூலம் வளர்க்க இது போன்ற சிறுவர் மர்ம நாவலும் வாசிப்பின் தீவிரமும் உதவும் என நம்பினேன்.


என்னுடைய நண்பரும் மலேசியத் தேர்வு வாரியம் தமிழ்ப்பிரிவின் அதிகாரியுமான திரு.மூர்த்தி அவர்கள் 2010ஆம் ஆண்டில் மலேசியாவில் சிறுவர்களுக்கென அவர்களின் உலகை, அவர்களின் மனத்தை, அவர்களின் உளவியலைப் பேசும் நாவல் வரவேண்டும் அதனை நீங்கள் எழுத வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தார். அதன்படி இந்த வருடம் அந்தப் புதிய முயற்சி மலேசியாவில் சாத்தியமாகியுள்ளது. தமிழ்ப்பள்ளி மாணவர்களான சிறுவர்களை நோக்கி சிறுவர்களுக்காக எளிய நடையிலும் இலக்கிய நடையிலும் எழுதப்பட்ட இந்த நாவலை இதுவரைக்கும் சுமார் 30 தமிழ்ப்பள்ளிகள் மட்டுமே இந்தச் சிறுவர் நாவலை வாங்கியிருக்கின்றனர்.
ஆனால், மலேசியாவில் மொத்த 523 தமிழ்ப்பள்ளிகள் இருப்பதை மீண்டும் கவனப்படுத்துகிறேன்.

ஒரு சில நண்பர்கள் அவர்களால் இயன்ற எண்ணிக்கையில் நாவல்களை வாங்கி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்க முன் வந்தது ஆரோக்கியமான விசயமாகும். அவர்களுக்கு என் நன்றி. மேலும் அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்தச் சிறுவர் நாவலைக் கொண்டு சென்று மலேசியாவில் இருக்கக்கூடிய அனைத்துச் சிறுவர்களின் கையிலும் இந்த நாவல் இருக்கும்படி செய்ய சமூகத்தின் உதவு எனக்குத் தேவைப்படுகிறது.

இந்தச் சிறுவர் மர்ம நாவலின் சிறப்பு என்ன?

இதுவரை வாசித்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆரோக்கியமான விமர்சனத்தையும் நல்ல வரவேற்பையும் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட தமிழ்ப்பள்ளிகளைத் தொடர்புக் கொண்டு கேட்டபோது அனைத்து மாணவர்களும் ஒரு நாளிலேயே ஆர்வத்துடன் இந்தச் சிறுவர் நாவலை வாசித்திருக்கின்றனர். அதோடுமட்டுமல்லாமல் ஒரு சில பெற்றோர்களும் என்னைத் தொடர்புக் கொண்டு, வாசிக்கவே விரும்பாத தன் பிள்ளைகள்கூட இந்த நாவலை ஆர்வத்துடன் வாசித்ததாகத் தெரிவித்தனர். பல மாணவர்கள் அடுத்த பாகம் எப்பொழுது வரும் என ஆவலுடன் கேட்டதாகச் சில ஆசிரியர்கள் அழைப்பேசியின் மூலம் தெரிவித்தனர்.

என் திட்டப்படி இந்தத் தொடர் சிறுவர் மர்ம நாவலுக்கு ஒரு பொதுவான தக்லைப்பாக 'மூன்று நண்பர்களின் பயணம்' என வைத்துள்ளேன். அதன் முதல் பாகம்தான் 'மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்' ஆகும். இந்த மர்ம நாவலின் இரண்டாம் பாகம் ' ஜெராய் மலையின் இரகசியமும் பாழடைந்த மாளிகையும்' எனத் திட்டமிட்டு எழுதத் துவங்கியுள்ளேன். இது அடுத்த தலைமுறை சிறுவர்களை நல்ல வாசகர்களாக உருவாக்கும். மேலும் அவர்களைப் புனைவு தளத்தை நோக்கி முன்னகர்த்தும் என ஆழமாக நம்புகின்றேன்.

சிறுவர் மர்மத் தொடரை பத்து பாகம் வரையிலும் எழுதத் திட்டமிட்டுள்ளேன். இந்த நாவல்கள் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்குவதோடு சிறந்த இலக்கிய வாசகர்களை உருவாக்கும் என்றே நம்புகிறேன். அதற்கு முதலில் தொய்வடைந்து போயிருக்கும் சிறுவர்களின் வாசிப்புப் பழக்கத்தைப் புதுப்பிக்க வேண்டும். அதற்காகவே நான் மர்மத்தை என் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்தேன். அனைத்து நாவல்களிலும் சிறுவர்கள் தொடர்பான சில சமூகப் பிரச்சனைகளும் அவர்களின் மொழியில் கையாண்டுள்ளேன்.

எனது நோக்கம் சிறுவர்களின் சிந்தனை ஆற்றலையும் கற்பனை ஆற்றலையும் வளர்ப்பதே. அதனை நோக்கியே அவர்களை வசீகரிக்க எழுதுகிறேன். என் எழுத்து நடையில் அவர்கள் வசப்படுவதை இந்த முதல் நாவல் முயற்சியின் வழி உணர்கிறேன். மேலும் நவம்பர் மாதத்தில் சில தமிழ்ப்பள்ளிகள் சிறுவர் நாவல் தொடர்பான கலந்துரையாடல் அங்கத்தை ஏற்பாடு செய்துள்ளார்கள். இளம் வாசகர்கள் கேள்விகள் கேட்கப் போவதாக ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். இது மிகவும் ஆரோக்கியமான ஒரு துவக்கமாகக் கருதுகிறேன்.

இந்தச் சிறுவர் நாவலின் மூலம் மலேசியாவின் பற்பல கதைக்களங்களையும் விசித்திரமான பகுதிகளையும் இதுவரை பேசப்படாத இடங்களையும் கவனப்படுத்த எண்ணியுள்ளேன். முதல் நாவலில் குகை, சுரங்கம், கைவிடப்பட்ட எரிந்த தொழிற்சாலை, கிராமம் என நாவல் விரிந்திருக்கின்றது. அடுத்த நாவல் ஈப்போ மலைப்பிரதேசங்களை ஊடுருவிகிறது. இப்படியாக அந்த மூன்று நண்பர்களின் வித்தியாசமான பயணமே அடுத்த வரவிருக்கும் தொடர் நாவல்கள் ஆகும்.

சிறுவர் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும்படியாகவே திட்டமிட்டு இந்த நாவல் முயற்சியை மேற்கொண்டுள்ளேன். ஆகவே, தமிழ் சூழலில் இயங்கும் படைப்பாளர்கள், நண்பர்கள், வலைத்தல அன்பர்கள்  அனைவரும் இதனைக் கவனப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஊரில் இந்தச் சிறுவர் நாவலை வெளியீட்டு அது தொடர்பான ஓர் உரையாடலுக்கும் ஏற்பாடு செய்யலாம்.

முறைப்படி காப்பிரைட் சட்டத்தின் கீழ் மலேசியத் தேசிய நூலகத்தில் பதிந்துள்ளதால் தமிழ்ப்பள்ளிகள் தங்கள் நூலகத்திற்கும் இந்தச் சிறுவர் நாவலை வாங்கலாம்.

அனைத்துத் தொடர்புகளுக்கும்: கே.பாலமுருகன், 0060164806241












No comments: