Saturday, January 26, 2013

Mama- ஆங்கிலப் படம்



மனநோய் கொண்டவர்களை எப்படி எதிர்க்கொள்வது என்பதே இச்சமூகம் இன்றளவும் கற்றுக்கொள்ளாத ஒரு விசயமாகும். உடலால் துவண்டவர்களைப் பராமரிப்பதிலேயே அதிகபட்சம் வெறுப்படையும் நம் மனோநிலை, மனம் சிதைந்தவர்களை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. ஆகையால்தான் அவர்கள், சாலையில் பித்துப் பிடித்துக் கவனிப்பாரின்றி திரிகிறார்கள். உடலுக்கு ஏற்படும் பிரச்சனையைப் போன்று ஒத்திருப்பதுதான் மனத்திற்குள் ஏற்படும் சிக்கலும்.

அப்படி மனநோய்க்கு ஆளான ஒரு பெண்ணின் கதைத்தான் ‘mama’. தேவாலையத்தால் மனநோய்க்கு ஆளான அவளுடைய குழந்தை பறிக்கப்பட்டு தனியாக வைத்து வளர்க்கபடுகிறது. தன் குழந்தையின் மீது அபிரித அன்பு கொண்ட அந்தத் தாய் குழந்தையை அங்கிருந்து தூக்கிக் கொண்டு மலை உச்சியிலிருந்து குதித்து விடுகிறாள். குழந்தை மட்டும் ஒரு கற்கிளையில் சிக்கி அங்கேயே இறந்துவிடுகிறது. அவளும் தண்ணீரில் மூழ்கி இறக்கிறாள். பல வருடங்களுக்குப் பிறகு அதே பள்ளத்தாக்கின் அருகாமையில் காருடன் மூவர் வந்து வீழ்கிறார்கள். மனைவியைக் கொன்றுவிட்டு இரு பெண் பிள்ளைகளுடனும் அங்குத் தப்பி வரும் தந்தை ஒரு பாழடைந்த வீட்டில் நுழைகிறார். அங்கு வைத்துத் தன் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்வதாகத் திட்டம். ஆனால், தன் மூத்தப் பெண் பிள்ளையைக் கொல்ல முயலும் அச்சமயத்தில்தான் அவ்வீட்டில் ஆவியாக வாழும் ‘mama’ தோன்றி அவனைக் கொன்றுவிடுகிறார்.

Monday, January 14, 2013

2012ஆம் ஆண்டின் மறக்க இயலாத நிகழ்ச்சிகள்


கடந்துபோகும் ஒவ்வொரு வருடத்தையும் அதன் இறுதி எல்லையில் இருந்துகொண்டு மீட்டுண்ர்வதென்பது எழுதி வைத்த டைரியை வெகுநாள் கழித்துப் படித்துப் பார்ப்பதை போன்ற உணர்வைக் கொடுக்கும். 2012ஆம் ஆண்டு மறக்க முடியாத பல சந்தர்ப்பங்களையும் மறக்க நினைக்கும் பல கணங்களையும் கொடுத்திருக்கின்றன.

கோப்புகளுக்குள் ஒளிந்து கிடக்கும் சில புகைப்படங்களின் வழியே கடந்தாண்டு நிகழ்வுகளை நினைவுக்கூற முடிகின்றது. அவற்றுள் சில:

அ. மலாக்கா மாநில தமிழ் ஆசிரியர்களுடன் சந்திப்பு- 16.09.2012

முகநூல் நண்பர் திரு.ராஜா அவர்களின் மூலம் தமிழ் மொழி பட்டறை நடத்த முதன்முதலாக வெளிமாநிலம் சென்ற அனுபவம் மறக்க முடியாதது. முதலில் ராஜா அவர்கள் பணிப்புரியும் பாத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளிக்குச் சென்று அங்குள்ள ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழ் மொழி பட்டறை நடத்தினேன். மாணவர்கள் ஆர்வமுடன் இருந்தார்கள். சிறப்பாகப் பங்கெடுத்த மாணவர்களுக்கு நூல்களைப் பரிசாகக் கொடுத்தேன். பிறகு மதியம் அலோர் காஜா தமிழ்ப்பள்ளிக்கு என்னை அழைத்துச் சென்றார். அனுபவமிக்க மூத்த ஆசிரியர்கள் பலர் இருந்தனர். மலாக்கா மாநிலத்தின் ஆறாம் ஆண்டு தமிழ் போதிக்கும் ஆசிரியர்கள் அங்கு அழைக்கப்பட்டிருந்தனர். சுமார் 4 மணி நேரம் பட்டறையை வழிநடத்தினேன்.

ஆ. புத்தாக்க ஆசிரியர் விருது- 25 ஜூன் 2012

மாவட்ட ரீதியில் கல்வி இலாகாவின் முதல்வர் அவர்களால் இந்தப் புத்தாக்க ஆசிரியர் விருது 2012-ஐ வழங்கப்பட்டது. 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த விருது எனக்களிக்கப்படுகிறது. எங்கள் மாவட்டத்தில் இந்தப் புத்தாக்க விருதை இரண்டு முறையும் பெற்றது நானே.

Saturday, January 12, 2013

2012 ஆம் ஆண்டின் சிறந்த கதாநாயகன் : அப்புகுட்டி



நடிகர் அப்புகுட்டி பற்றி எழுதியே ஆக வேண்டும். ஏறக்குறைய அழகர்சாமியின் குதிரை மூலம் கதாநாயக வழிப்பாட்டு உணர்வைக் கொஞ்சமாய் அசைத்துப் பார்த்திருக்கும் கதாபாத்திரம் அப்புகுட்டி. குள்ளநரிக்கூட்டம், வெண்ணிலாகபடி குழு, சுந்தரப் பாண்டியன் போன்ற படங்களில் துணைக்கதாப்பாத்திர வேடங்களில் நடித்த அப்புகுட்டி இப்பொழுது மன்னாரு என்ற படத்தில் கதாநாயகனாக மீண்டும் நடித்திருக்கிறார். 'அழகர்சாமி குதிரை' படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் பெற்று சாதித்துள்ளார். இதுவரை தமிழ் சினிமா ஹீரோ என்றால் எப்படியிருக்க வேண்டும் என்ற கற்பிதங்களை உருவாக்கி வைத்திருக்கிறதோ அதற்கு முரணான ஓர் உடலமைப்புத்தான் அப்புகுட்டியினது தோற்றமும் முகமும்.

Friday, January 11, 2013

கவிதை: ஆதாரமற்ற இரவொன்றின் கனவு


1
கனவுக்கும் நிசத்திற்கும் மத்தியில்
எத்தனை முறை திரும்புவது?
ஒவ்வொரு கணமும் ஆயிரம் கைகள்,
ஆயிரம் குரல்கள்.
தப்பித்து மீள்கையில்
பலநெடுங்காலத்தின் நோய்படுக்கை.

2
ஆதாரமற்ற இரவொன்றில்
எந்த அறிவிப்புமின்றி 
நிகழ்ந்துவிடுகிறது.

2
நிர்வாணமாய் அவிழ்ந்துகிடக்கின்றன
கடைசி நிமிடங்கள்.

Thursday, January 3, 2013

ஜெரான்துட் நினைவுகள்- மலேசிய நாடக விமர்சனம்


“பிரகாசமாக  எரிந்து பின் அழிந்துவிடும்
கணநேர தீக்குச்சி இல்லை  வாழ்க்கை”

மலேசிய இளம் இயக்குனர் செந்தில் அவர்களின்  இயக்ககத்தில் ஐந்து பாகங்களாக ‘ஜெராந்துட் நினைவுகள்’ நாடகம் படமாக்கப்பட்டுள்ளது. இதுவரை மலேசிய தமிழ் நாடக வரலாற்றில் காட்சிப்படுத்தப்படாத பல விசயங்களைச் செந்தில் கவனப்படுத்தியிருப்பதே நாடகத்தின் தனித்துவம் எனக் கருதுகிறேன். நாடகம் தொடங்கும் இடமும் முடியும் இடமும் அழுத்தமான நினைவுகளை நம்மீது விட்டுச் செல்கின்றன. எந்தப் பரப்பரப்புமின்றி தொடங்கும் நாடகம் ஐந்தாவது பாகத்தில் முடியும்போது பார்க்கப்படாத எத்தனையோ கதைகள் இந்த மண்ணில் ஜெராந்துட் சிறுநகரத்தைப் போல எங்கேங்கோ உறங்கிக் கொண்டிருப்பதை நினைவுப்படுத்துகின்றது. வாழ்க்கை ஒளித்து வைத்திருக்கும் கதைகளைத் தூண்டிவிட்டு சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு வருபவன்தான் கலைஞன். செந்தில் இந்த மண்ணில் உருவாகியிருக்கும் நல்ல கலைஞன் என்பதை ‘ஜெராந்துட் நினைவுகள்’ நிறுபிக்கின்றது.

மேலும் வாசிக்க:

 நன்றி: மலைகள் இணைய இதழ்