Saturday, December 19, 2015

ஜகாட் திரைப்படமும் நானும் - பாகம் 1 & 2

நானும் 1990களில் சிறுவனாக வளர்ந்தவன் என்பதால் எனக்கும் இப்படத்தில் வரும் பல காட்சிகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஜகாட் என் வாழ்க்கையின் சில பகுதிகளை மீட்டுத் தருகிறது. எந்தக் கலப்படமும் இல்லாமல் ஷங்கரும் நானும் பல இடங்களில் ஒத்துப்போகிறோம். 1995-96களில் நான் வாழ்ந்த கம்பத்தை அப்படியே பெயர்த்தெடுத்துக் காட்சிப்பூர்வமாக்கிக் காட்டுகிறார் இயக்குனர் சஞ்சய். அவர் தேர்ந்தெடுத்த கதைக்கான களங்களும் கதாபாத்திரங்களும் காலக்கட்டத்திற்கு ஏற்ப பொருந்தி நின்று நிஜமாகத் தெரிகின்றன.
இலக்கியத்தில் கதைச்சொல்பவனுக்கும் திரையில் கதைச்சொல்பவனுக்கும் எப்பொழுதுமே தீவிரமான பங்களிப்புண்டு. எழுத்தாளன் தன் மொழியின் வழியே சொல்லிச் செல்வதை இயக்குனர் காட்சிகளின் வழி காட்டிச் செல்கிறான். சினிமாவைப் பொறுத்தவரை காட்சிகளே அதன் முதல் மொழி. அதனை மேலும் செதுக்கிக் கொடுக்க உரையாடல் துணைக்கு வருகிறது. இன்றும் உலகத் திரைப்படங்களில் வசனங்களுக்குச் சொற்பமான நேரத்தைக் கொடுத்துக் காட்சிக்கு அதிக இடம் கொடுக்கும் நல்ல சினிமாக்கள் தொடர்ந்து சமூகத்தில் தாக்கத்தை உருவாக்கிக் கொண்டுத்தான் இருக்கின்றன. அதனை நன்கறிந்தவர் சஞ்சய் என்பதால் ஜகாட் திரைப்படத்தில் பல அர்த்தப்பூர்வமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
காட்சிகளின் மொழி சினிமா
முதல் கட்டமாக ஜகாட் திரைப்படத்தின் காட்சிகளைப் பற்றி உரையாடலாம் என நினைக்கிறேன். சினிமா காட்சிகளின் நகர்ச்சி என்று சத்ய ஜித்ரே ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். காட்சிகளுக்குக் காட்சி ஓர் இடைவேளிவிட்டு செல்லப்படும்போது அதற்குள் ஒரு பார்வையாளன் தன்னைப் பொருத்திக் கொள்கிறான். அவ்வகையில் ஜகாட் காட்சிகளின் வழியாக இச்சமூகத்துடன் உரையாடுகிறது. எல்லாவற்றையும் வசனங்களின் வழி விளக்கிவிட நினைப்பது சினிமாவுக்குரிய கச்சிதம் கிடையாது. வாழ்க்கையின் சில தருணங்களைச் சொற்களின் வழி சொல்லிவிட முயல்வது அதன் தீவிரத்தைக் குறைத்துவிடும்.

வானொலியில் முன்னாள் பிரதமர் துன் மஹாதீர் மலேசியப் பொருளாதாரத்தில் சமூகங்களுக்கிடையே பேதமில்லாத ஒரு நிலை இருப்பதைப் போன்று ஒரு செய்தி ஒலிப்பரப்பாகிக் கொண்டிருக்கும். அப்பொழுது மலேசியாவின் பொருளாதாரத் திட்டங்கள் அனைத்து இந்தியர்களையும் முழுமையான ஏழ்மை நிலையிலிருந்து முன்னேற்றிக்கொண்டிருப்பதாக முன்னாள் ..கா தலைவர் .சாமிவேலு கூறியதாகச் செய்தி சொல்லப்படும். அந்தவேளையில் ஷங்கரின் அப்பா தனது காற்சட்டைக்கு நெகிழிக் கயிற்றை எடுத்துக் கட்டிக் கொண்டிருப்பார். மலேசிய அரசியலை இத்தனை கூர்மையான ஒரு காட்சியின் வழி விமர்சிக்கும் ஆற்றலையே சினிமா வழங்குகிறது. இதற்கு எந்த வசனமும் விளக்கமும் தேவையிருக்காது. ஒரு காட்சியை வெறும் காட்சியாக மட்டுமே தாண்டிவிட முடியாது என்பதற்கான ஓர் அனுபவத்தைப் படம் வழங்குகிறது.

பக்தர்கள் சிலர் பால் குடம் ஏந்திக் கொண்டும் காவடி ஏந்திக் கொண்டும் ஷங்கரின் வீட்டைக் கடக்கும்போது கேமரா கையாளப்பட்ட விதமும் சினிமாவுக்குரிய அழகியலைச் சேர்க்கிறது. ஒரு வாழ்வின் மீதான நம் தரிசனத்தையும் அதற்குரிய இடத்தையும் சினிமாவைப் பொறுத்தவரை கேமராத்தான் தீர்மானிக்கிறது. அதனை ஒளிப்பதிவாளர் செந்தில் குமரன் முனியாண்டி சிறப்பாகச் செய்திருக்கிறார். தொலைக்காட்சி பார்க்கக்கூடாது என்கிற விதிமுறை 1990களில் எல்லாம் வீடுகளிலும் இருந்திருக்கலாம் போல. என் வீட்டிலும் அப்படியொரு விதி இருந்தது. இரவில் எல்லோரும் வீட்டின் வரவேற்பறையில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்க நான் மட்டும் எனது அறையில் வீட்டுப்பாடங்கள் செய்து கொண்டிருப்பேன். அப்பொழுது பலகை வீட்டில் இருந்ததால் தொலைக்காட்சியின் சத்தம் கூர்மையாகக் கேட்கும். கதவின் இடுக்கில் தெரியும் இலேசான சந்தில் திருட்டுத்தனமாகத் தொலைக்காட்சி பார்த்து மகிழ்ந்த தருணங்களை சஞ்சய் தன் ஜகாட் படத்தில் வைத்த காட்சியின் மூலம் 1990களை மீண்டும் நினைவூட்டுகிறார்.
குறிப்பாக, அப்பா வீட்டுக்கு வந்ததும் ஷங்கர் தான் பார்த்துக் கொண்டிருந்த தொலைக்காட்சியை அடைத்தாலும் அதனைத் தொட்டுப் பார்த்து அதில் இருக்கும் சூட்டின் வழி உண்மையை அறிகிறார். அக்காட்சிகள் வாழ்க்கைப்பூர்வமானதாக இருக்கின்றது. முழுக்க நம் வாழ்க்கையை எதிரே காட்டும் யதார்த்தம் அதில் இருக்கின்றன.
காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒளியும் காலக்கட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கச்சிதமாகக் கையாளப்பட்டுள்ளது. இருப்பினும் ஒளியின் மீது மேலும் கூடுதலான கவனம் செலுத்தியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. சில காட்சிகளில் வரும் அதிக வெளிச்சம் சட்டென கதையை 2000களுக்குக் கொண்டு வர முயற்சிக்கிறது. ஷங்கரின் வீட்டினுள்ளே பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒளி அப்படியே என் வீட்டின் 1990ஆம் ஆண்டுகளை ஞாபகப்படுத்துகின்றது.
தண்டனைகளும் தோல்வியும்
நானும் அ.பாண்டியனும் ஒருமுறை நண்பர் சஞ்சய் அவர்களை விரிவான நேர்காணல் செய்திருக்கிறோம். ஆகையால், சஞ்சய் சினிமாவின் மீது வைத்திருக்கும் ஆவலும் சிந்தனையும் முற்றிலுமாகப் பலரிடமிருந்து மாறுப்பட்டதாகவே இருந்தது. குறிப்பாக, எந்தச் சாயலும் இல்லாத முழுக்க மலேசியாவைச் சார்ந்த சினிமாவைப் படைக்க வேண்டும் என அவருக்கிருந்த திட்டமே அவரின் மீது ஈடுபாடு அதிகமாகியது. தமிழ்நாட்டு இலக்கியத்தைப் போல போலித்தம் செய்யாத மலேசியப் பின்புலத்துடன் இலக்கியம் படைக்கப்பட வேண்டும் என விமர்சித்துக் கொண்டிருந்த எனக்கும் சிவா பெரியண்ணன் பாண்டியன் போன்றவர்களுக்கும் அவருடைய எதிர்ப்பார்ப்புடன் ஒன்றிட முடிந்தது.
இதுவரை தமிழகத்திலிருந்து வெளிவரும் படங்களை மட்டும் பார்த்துப் பழகியவர்களுக்கு ஜகாட் பல இடங்களில் இது மலேசியவுக்கான சினிமா என்பதை அறிவித்துக் கொண்டிருப்பது புலப்படும். ஆடல் பாடல் காட்சிகளெல்லாம் இல்லாமல், மலேசியக் கதைக்களங்களுக்குள் நுழைந்து செல்கிறது.
மாற்றுச் சிந்தனை
இதில் வரும் முதன்மை கதைப்பாத்திரமான ஷங்கர் என்பவன் மாற்றுத்திறமை கொண்டவனாக இருக்கிறான். பாடத்திட்டத்திற்கு அப்பாறப்பட்டு சிந்திப்பவனாகப் படைக்கப்பட்டிருக்கிறான். 12ஆம் வாய்ப்பாட்டைத் தாண்டினால் கூட அது வயதிற்கும் பாடத்திட்டத்திற்கும் உகந்தவை அல்ல என அவன் ஆளுமையைக் கட்டுப்படுத்தும் சராசரிகளிலிருந்து அவனுக்குரிய அங்கீகாரன் கிடைக்காமல் அமைப்புக்கு வெளியே வீசப்படுகிறான்.
வழக்கமாக, வாய்ப்பாடு தெரியாவிட்டால் தண்டிப்பது ஆசிரியர் தொடங்கி பிரத்தியேக ஆசிரியர் வரை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள், தலையில் புத்தகத்தைக் கவிழ்த்து நிற்க வைப்பது, வெய்யிலில் முட்டிகாலிட வைப்பது, காதைப் பிடித்துத் திருகுவது போன்ற பல தண்டனைகளை நானும் பெற்றுள்ளேன். கம்போங் ராஜா நவி வாத்தியாரிடம் பிரத்தியேக வகுப்பு படித்த காலத்தில் நான் தண்டனைகள் பெறுவதற்காகவே என் அப்பா மாதம் 20 ரிங்கிட் அவருக்குச் செலுத்தினார். வாய்ப்பாடு களைந்து அங்கொன்றுமாய் இங்கொன்றுமாய் கார்ட்டூன் பொம்மைகளைப் போல எனக்குள் சிக்காமல் தாவும். அதனுடன் ஓடியோடியே எப்படியோ யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் கணிதப்பாடத்தில் ஏ பெற்றேன். ஆனால், இன்றளவும் எனக்கு வாய்ப்பாடு என்றால் பிடிக்காது. அக்கல்வி என்னைத் திருப்திப்படுத்தவே இல்லை. எனக்குள் இருக்கும் என்னை அடையாளம் காட்டவே இல்லை. ஜகாட் திரையில் வரும் ஷங்கரும் தன்னை அடையாளம் காண முடியாமலேயே கல்விக் கொள்கைக்கு முன் தோல்வியைத் தழுவுகிறான்.
அவனுடைய விசித்திரமான மாற்று முயற்சிகளை அங்கீகரிக்கக் கல்வி உலகம் தயாராக இல்லை என்பதாலேயே அவனுடைய உலகம் சுருங்கிவிடுகிறது. அவனுடைய அப்பா ஒரு பக்கமும், ஆசிரியர்கள் ஒரு பக்கமும் அவனை ஊதி ஊதி உப்பச் செய்கிறார்கள். யாரும் எதிர்ப்பாராத நேரத்தில் அவன் வெடிக்கின்றான். அதுவரை ஊதி ஊதி பெருக்க வைக்கப்பட்ட ஷங்கர் என்கிற அழகான வர்ணத்திலான பலூன் வெடித்துச் சிதறுகிறது. இந்த நாடு வேண்டாமென்று ஒதுக்கியிருந்த கிரிமினல் உலகத்தில் வெடித்து விழுகிறான். சஞ்சய் தவறாமல் தன்னுடைய விமர்சனத்தைக் கல்வியின் மீதும் வைக்கிறார். இந்த நாட்டில் உருவாகியிருக்கும் பல குற்றவாளிகளின் வேர்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் விழுமியங்களின் வீழ்ச்சிகளிலிருந்து ஓர் ஒற்றைக் குரலை உருவியெடுக்கிறார் சஞ்சய். அது துப்பாக்கி சத்தமாக வெடிக்கிறது.
- தொடரும்
கே.பாலமுருகன்

No comments: