Tuesday, June 24, 2008

கால்களில்லாதவர்களின் நடை


நடப்பதற்காக

ஏங்கி ஏங்கியே

நடப்பதை மறந்திருந்தோம்!


நடப்பதென்பது சிரமமானது

என்று எங்களைப்

பயமுறுத்தி வைத்திருந்தார்கள்!


நடப்பவர்களை

அதிசியத்துப் பார்த்தோம்!

மிரட்டினார்கள்!

அதட்டினார்கள்!

கால்களை உடைத்து

ஊனமாக்கினார்கள்!


நடப்பது

நடக்க நினைப்பது

நடக்க முயல்வது

என்ற பாவங்களுக்கு

தனிதனியாக தண்டனைகள்

வகுத்திருந்தார்கள்!


சங்கிலியால்

இறுகக் கட்டி

தூன்களில் சி

றை வைத்தார்கள்!


எக்கி எக்கி தவித்தோம்

உடைந்த கால்களுடன்!

தவழக்கூட வழியில்லாமல்

சிலையானோம்!


சிலர் எங்களைத்

தெய்வம் என்று போற்றினார்கள்!

தெய்வமானோம்!


அவர்களுக்கும் தெரியவில்லை

இவர்களுக்கும் தெரியவில்லை

நாங்கள் நடக்க

ஆசைபட்ட

கணங்கள் பற்றி!


கே.பாலமுருகன்

மலேசியா

Tuesday, June 17, 2008

வீடு திரும்புகிறார்கள்


சாயும்காலம் தொடங்கி

எல்லோரும்

வீடு திரும்புகிறார்கள்


வீடுகள் மதியத்திலிருந்து

வெயிலில் காய்ந்து

சோர்ந்து போயிருந்தன!


அவர்கள் வாசலை நெருங்கியதும்

வீடுகள் நிமிர்ந்து

உற்சாகம் கொள்கின்றன!


வீடு திரும்புவர்களுக்கென

ஒரு வரவேற்பு

எப்பொழுதும்

அவர்களுடைய வீடுகள்

சேகரித்து வைத்திருக்கின்றன!


வாய் பிளந்து

அவர்களை விழுங்கிக்

கொள்கின்றன!


-கே.பாலமுருகன் மலேசியா

இறந்தவர்களின் கைகள்


அந்த மங்கிய

நீர் முகப்பில்

அவர்களின் கைகள்

நெருங்கி வருகின்றன!


நீர் அலைகளில்

அவர்களின் கைகள்

விட்டுவிட்டு தவறுகின்றன!


எப்பொழுதோ ஏதோ ஒரு பொழுதில்

அவர்களின் கைகள்

உயிர் வாழ வேண்டி

நீர் முகப்பின் மேற்பரப்பில்

அசைந்து அசைந்து

எத்தனை பேர்களை

அழைத்திருக்கும்!


இன்று

அது இறந்தவர்களின்

கைகள்!

“எத்தன பேரு இங்க

உழுந்து செத்துருக்கானுங்க. . .

இந்தத் தண்ணீ அப்படியே ஆளே

உள்ளெ இழுத்துரும்”


நீர் முகப்பின்

அருகில் அமர்ந்துகொண்டு

ஆழத்தை வெறிக்கிறேன்!


மங்கிய நிலையில்

ஓர் இருளை சுமந்திருக்கிறது!


இருளுக்குள்ளிலிருந்து

எப்பொழுது வரும்

இறந்தவர்களின் கைகள்?


கே.பாலமுருகன் மலேசியா

Monday, June 16, 2008

கடைசி பேருந்து



கடைசி பேருந்திற்காக
நின்றிருந்த போது
இரவு அடர்ந்து
வளர்ந்திருந்தது!


மனித இடைவெளி
விழுந்து
நகரம் இறந்திருந்தது!


சாலையின் பிரதான
குப்பை தொட்டி
கிளர்ச்சியாளர்கள்
அப்பொழுதுதான் தொடங்குகிறார்கள்!


பேருந்தின் காத்திருப்பு
இருக்கையிலிருந்து
விழித்தெழுகிறான் ஒருரூன்!


நகர மனிதர்களின்
சலனம்
காணமல் போயிருந்தது!
விரைவு உணவுகளின்
மிச்சம் மீதியில்
கைகள் படர்ந்து மேய்ந்து கொண்டிருக்கின்றன!


ஊடுருவி ஊடுருவி
யார் யாரோ திடீரென
நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்!


கறுப்பு மனிதர்களின்
நடமாட்டம்!
பேருந்து நிற்குமிடம் மட்டும்
குறைந்த வெளிச்சத்தில். . .
ஒரு சிறுமி
சாலையைக் கடந்து
வெருங்கால்களில் இருண்டுவிட்ட
கடைவரிசைகளை நோக்கி
ஓடும்போதுதான்
கடைசி பேருந்து
வந்து சேர்ந்திருந்தது!


இரு நகர பயணிகள் மட்டும்
முன் இருக்கையின் இரும்பு கம்பியில்
தலைக்கவிழ்த்து உறங்கியிருக்க
அபார வெளிச்சம்!


கடைசி பேருந்து
கொஞ்சம் தாமதமாகவே
வந்திருக்கலாம்!


கே.பாலமுருகன்
மலேசியா

பாலைவனத்தில் பூக்களைத் தேடி



பாலைவனத்தில்
ஆகக் கடைசி
காதலன் நான் மட்டும் தான்!
வெகுத் தொலைவில்
காதலர்கள்
வீடு திரும்பிக் கொண்டிருப்பது
கானல் நீர்போல
தெரிகிறது!
இவையனைத்தும்
பிரமை! மாயை!
காதலி மீண்டும் மீண்டும்
தேற்றி அனுப்பிக் கொண்டிருக்கிறாள்
பாலைவனத்தில்
பூக்கள்
கிடைக்குமென்று!
காதலர்கள் என்றுமே
ஏமாற மாட்டார்கள்
என்று அவளுக்காக
இன்னமும்
பாலைவனத்தின் வெயிலில்
பூக்களுக்காக
நடந்து கொண்டிருக்கிறேன்!
இப்பொழுது
நானும் அவளும்
பாலைவனத்தின்
இருதுருவங்களில்!
சூன்யம் நிரம்பி
பிரக்ஞையையும்
இழந்துவிட்டேன்!
வெகு சீக்கிரத்தில்
பாலைவனப் பூக்கள்
கிடைத்துவிடும்
என்ற நம்பிக்கையில். . .