Saturday, August 28, 2010

நான் ஒருபோதும் மலேசிய இலக்கியத்தின் மலேசிய நவீன இலக்கியத்தின் வரலாற்று மாணவனாக இருக்க விரும்புவதில்லை

நேர்காணல்: இலங்கை இணைய இதழுக்காக- முதல் பாகம்
2 மே 2010

குறிப்பு: கீழ்காணும் நேர்காணலில் நான் அளித்த கருத்துகள் என்னைச் சார்ந்தவை. யாரையும் குறிப்பிட்டு சொல்லப்ப்பட்டவை அல்ல. மாற்றுக் கருத்துகள் இருந்தால் தாராளமாகத் தொடர்வுக் கொண்டு தெரிவிக்கலாம்.கேள்விகளில் சிலவற்றை இங்குப் பதிக்கவில்லை. முக்கியமான கேள்விகளும் பதில்களும் மட்டுமே தரப்படுகின்றன.

1. தமிழ் இலக்கியம் என்று விரிந்த பரப்பை முன்வைத்து பேசும்போது மலேசிய மற்றும் சிங்கப்பூர் எழுத்துக்கள் பற்றி எவரும் கவனம் கொள்வதில்லை அது ஏன் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? ஆனால் இப்போது நவீன எழுத்துக்கள் என்று பேசும்படியாக அங்கு இலக்கியம் இருக்கிறது அல்லவா?

இந்தக் கேள்விக்கான பதிலை மலேசிய தமிழ் இலக்கியத்தின் விரிந்த பரப்பின் முரண்களையும் ஆதிக்க அடையாளங்களையும் வைத்துதான் பேச வேண்டியுள்ளது. தமிழிலக்கிய பரப்பில் மலேசிய இலக்கியத்தை முன்னிறுத்துபவர்கள் மிகக் குறைவாகவே இருந்து வந்திருக்கிறார்கள். ஆரம்பக் காலக்கட்டத்தில் இறக்குமதி இலக்கியங்களில் வாசிப்பும் மறுவாசிப்பும் கொண்டவர்கள் அதை மையமாக கொண்டு புனைவதில் ஆர்வமாக இருந்தார்கள். மேலும் ஆரம்பத்தில் இணைய வசதியின்மை அல்லது இணைய பங்காற்றல் குறித்த கற்றலின்மை மலேசிய இலக்கியத்தை வலுவாக முன்னிறுத்த முடியாமல் போனது.

மேலும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மலேசிய இலக்கியத்தின் பிரதியாக வேறு நாடுகளுக்குச் சென்று இலக்கியத்தைப் பற்றி பேசியவர்களும் உரையாடிவர்களும் வணிக எழுத்தை மட்டுமே புரிந்து கொண்டவர்களாகவும் அல்லது படைப்புணர்வற்றவர்களாகவும்தான் இருந்திருக்கிரார்கள். தீவிர படைப்பாளிகள் ஒரு குறிப்பிட்ட எல்லையில் சுருங்கி எழுதிக் கொண்டும் உரையாடிக்கொண்டும் இருந்தார்கள். சில காலக்கட்டங்களுக்குப் பிறகுத்தான் அவர்கள் வெளிப்பட்டார்கள். மேலும் ஆதிக்க சக்தி படைத்தவர்களாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர்களின் அதிகாரம் வணிக நுகர்வையே மோப்பம் பிடித்துக் கொண்டிருக்கையில் எங்கனம் மலேசிய இலக்கியம் வெளிக்கொணரப்படும்?

நவீன எழுத்தில் அதிக ஆர்வம் கொண்டு வாசிப்புன் மூலமும் படைப்பின் மூலம் வளர்ந்து வருபவர்களில் கோ.புண்ணியபான், ந.பச்சைபாலன், ஏ.தேவராஜன், மஹாத்மன் போன்றவர்கள் அடங்கும். இன்னமும் சிலர் அதற்கான களத்தில் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இவர்களின் எழுத்தில் நவீன எழுத்திற்கான வீரியம் மே;லும் வலுவடைய வேண்டியிருக்கிறது. (திருப்தி அடைதல் என்பது ஒருவேளை போலி ஞானிகளுக்கு ஏற்படலாம், ஆனால் இன்னமும் என் எழுத்தின் மீதும் மலேசிய நவீன இலக்கிய எழுத்தின் மீதும் எனக்குப் போதாமை உணர்வுத்தான் எஞ்சியிருக்கின்றன)

படிமத்தைச் சாராத எழுத்துகள் வெகு சீக்கிரம் உண்மையை அடையும் என்ற கருத்தாக்கம் பின்நவீனத்தில் இருப்பதாக வாசித்ததுண்டு. அதேபோல இன்று ஒரு படைப்பாளி தனித்து நிலைக்க வேண்டுமென்றால் இயக்கங்களைச் சாராத அல்லது இலக்கியம் என்கிற நிறுவனத்தைச் சாராத படைப்பாற்றலின் வழி பயணிப்பதே சிறப்பு என நினைக்கிறேன்.

குறிப்பு: சை.பீர்முகமதுவின் மூலம் மலேசியவிற்கும் தமிழக எழுத்தாளர்களுக்கும் நல்ல நட்புரவு ஏற்பட்டதாகச் சிலர் சொல்லி கேட்டதுண்டு. அங்குச் சென்று மலேசிய இலக்கியம் குறித்து பேசுவது தொடங்கி அங்குள்ள முக்கியமான எழுத்தாளர்களை மலேசியாவிற்குள் கொண்டு வருவதுமென மிகத் துடிப்பாகச் செயலாற்றியுள்ளார் எனவும் சொல்லியிருக்கிறார்கள். எம்.ஏ. நுக்மான் மலேசியா வ்ந்திருந்தபோது, அவர் மலேசியாவின் இலக்கியத்தை அறிந்துகொண்டதில் சை.பீருக்கும் முக்கிய பங்குண்டு எனக் கூறினார். 1999 ஆம் ஆண்டில் என நினைக்கிறேன், எம்.ஏ நுக்மானின் மலேசியாவிற்கான முதல் இலக்கியப் பயணத்தை பீர்.முகமதுதான் அமைத்துக் கொடுத்தார் எனவும் மேலும் பினாங்கு கோலாலம்பூர் போன்ற இடங்களில் இலக்கிய சந்திப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார் எனும் தகவல் உண்டு. எஸ்.பொ, பிரபஞ்சன், நுக்மான், போன்ற சொற்ப எழுத்தாளர்கள் மலேசிய இலக்கியம் குறித்து அறிந்து வைத்திருந்தார்கள் என்பதும் உண்மை.


2. மலேசியாவில் நவீன இலக்கியத்தின் ஆரம்பம் எப்போது தொடங்குகிறது ? அதன் வரலாற்றை சற்று விரிவாக பேசலாமா?

மன்னிக்கவும். நான் ஒருபோதும் மலேசிய இலக்கியத்தின் அல்லது மலேசிய நவீன இலக்கியத்தின் வரலாற்று மாணவனாக இருக்க விரும்புவதில்லை. கல்வியாளர்களும் திறனாய்வாளர்களும் தொடர்ந்து பல மேடைகளில் இலக்கிய வரலாறுகளைக் கட்டுரைகளாகப் படைத்து வருகிறார்கள். அவர்களுக்கு வரலாறு இலக்கிய வெளியில் அவர்களின் இருப்பைப் பாதுகாப்பாக வைத்திருக்கப் பங்காற்றுகிறது. அதை ஒரு தகவல் போல வாசித்துவிட்டு மறைந்துவிடுகிறார்கள் அடுத்த மேடை கட்டுரை வாசிப்பு வரும்வரை. அவர்களின் இலக்கிய செயற்பாடு மிகவும் சுருங்கியவை. ஆகையால்தான் பெரும்பாலும் வரலாற்றை நினைவுக்கூர்வதில் எனக்கு எப்பொழுதும் ஒரு தயக்கம் நிலவுகிறது. வரலாறு குறித்த புரிதல் என்பது அதன் தொடர்ச்சியை மேலும் வலுவாக அதனிலிருந்து மாற்றி வேறு புதிய உணர்வுமுறையில் வரலாற்றிலிருந்து தகர்ந்த ஒரு இலக்கியப் பரப்பை அடைய செய்ய வேண்டுமே தவிர வரலாற்றையே பேசிக் கொண்டு காலத்தைக் கடத்தக்கூடாது.

இருப்பினும் உங்களுக்கு ஒரு மாற்றுப் பார்வை வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து மலேசிய நவீன இலக்கியத்தை அக்கறையுடன் அணுகுவதன் பொருட்டே எனக்குத் தெரிந்த மலேசிய நவீன இலக்கியத்தின் சில வரலாற்று தகவல்களைச் சொல்கிறேன்.

மலேசிய தமிழ் இலக்கியம் என்பது ஆரம்பக்காலக்கட்டத்தில் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளைப் பேசுவதிலேயே அதிக அக்கறையை வெளிப்படுத்தின. காலனியக் காலக்கட்டத்தின் சமூகக் கட்டமைப்பில் மேல்தட்டு மனிதர்கள் சிறுமுதலாளிகளாகவும், அதிகாரத்தைப் பகிர்வதில் தரகர்களாகவும் இருந்தவர்கள் தமிழ்க்கல்வி இல்லாதவர்களாகவும் தமிழ் இலக்கிய நுகர்ச்சி இல்லாதவர்களாகவும்தான் இருந்தார்கள். ஆகவே அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்வு பிரச்சனையும் முதலாளி சமூகத்தின் விளைவால் ஏற்பட்ட குடும்பச் சிதைவைகளும்தான் வணிக மொழியில் ஒரு பிரச்சாரமாக முன்வைக்கப்பட்டது. ஒரு புதிய கவித்துவமான மொழியும் புதிய அணுகுமுறைகளும் அப்பொழுது பெறப்படவில்லை. தமிழக இலக்கியம் என்கிற பெரும்வெளியின் தாக்கத்தினால் உருவான சிறு பகுதியாகவே அப்பொழுது இலக்கியம் படைக்கப்பட்டது.

மலேசியாவில் நவீனக் காலக்கடடம் என எடுத்துக் கொண்டால், ஒரு பெரும்வெளியாக மட்டுமே இருந்த மலேசிய இலக்கியம் ஒரு நிறுவனமாகச் செயல்படத் துவங்கியக் காலக்கட்டத்தை முன்வைக்கலாம். சிறுகதை துறையை மேலும் வலுப்படுத்த 1950களில் சிறுகதை வகுப்பு தொடங்கப்பட்டது. இதன் மூலம் அப்பொழுது எழுதிக் கொண்டிருந்த பலரை ஒருங்கிணைக்க முடிந்தது. அந்தக் கதை வகுப்பின் மாணவனாக இருந்து பிறகு நவீன இலக்கியத்தின் முன்னோடியாக அடையாளப்படுத்தப்பட்டவர்தான் எம்.ஏ.இளஞ்செல்வன் ஆவார். பிறகு சிறுகதை கருத்தரங்குகள், சிறுகதை போட்டிகள் என அந்தக் களம் விரிவடையத் துவங்கியது. மாதாந்திர சிறுகதைத் தேர்வு, தமிழ் நேசன் பவுன் பரிசுத் திட்டம், சொக்சோ சிறுகதை போட்டி, பேரவைக் கதைகள், பாரதிதாசன் சிறுகதை போட்டி, வாசகர் வட்டங்கள், எழுத்தாளர் இயக்கம், தமிழ் நேசன் நாவல் போட்டிகள், மாதமொரு நாவல் திட்டம் என மலேசிய இலக்கியம் 1946க்குப் பிறகு சிறுக சிறுக ஒரு நிறுவனமயக்குதலின் மூலம் வளர்தெழுந்தது.

இது போதுமான வளர்ச்சியா எனக் கேட்டாலோ அல்லது இதன் மூலம் தீவிரமான படைப்பாளிகள் உருவானர்களா எனக் கேட்டாலோ அது வேறொரு விவாதத்திற்குள் நம்மை நுழைத்துவிடும். ஆகையால் இவையனைத்தும் மலேசிய நவீன இலக்கியத்தை மேலும் தீவிரமாக்குவதில் ஏதோ ஒருவகையில் பங்காற்றியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

எழுத்தாளர்கள் மலேசிய இலக்கிய ஒரு இயக்கமாக அல்லது நிறுவனமாக செயல்படுவதற்கு முன்பு தனது படைப்புகளின் மூலம் தனிமனித உணர்வுகளையே சமூகம் சார்ந்து எதிர்வினைகளாகவும் சீர்திருத்த கருத்தாக்கங்களாகவும் எழுதி வந்தார்கள். அடையாளங்காணல் அடையாளப்படுத்துதல் என்கிற இலக்கிய நிறுவனத்தின் முன்னெடுப்புகளுக்குப் பிறகு சமூகக் குறியீடாக மாறி வெளிப்படையாகப் பிரச்சாரத்தை எழுத்தைப் படைக்கத் துவங்கினார்கள். இருப்பினும் தனிமனித கொள்கையில் முழு ஈடுப்பாட்டுடன் சமரசங்களை நாடாமல் எழுதியவர்களும் இருக்கிறார்கள். இதையும் நவீன இலக்கியத்தின் தொடக்க மனப்பான்மை எனப் புரிந்துகொள்ளலாம். படைப்பாளி என்பவனே ஒரு இயக்கமாக தனக்கான அதிகாரங்களைத் தானே உற்பத்தி செய்துகொண்டு திருப்தியுறுவது.

3. பெண் எழுத்துச் செயற்பாட்டாளர்கள் தமது எழுத்தின் அரசியலாக அங்கு எதை முன்வைக்கிறார்கள்?

பெண் எழுத்தாளர்களின் படைப்புலகத்தினுள் இன்னமும் ஆழமான பார்வையும் விமர்சனமும் பரவலாக ஏற்படவில்லை எனறே தோன்றுகிறது. தீவிர படைப்பாளி என்று அடையாளப்படுத்தும் வகையில் யாரும் இல்லையென்றாலும் தனது படைப்பின் மூலம் வளர்ச்சியை எட்டியவர்கள் அல்லது புதிய கதை மொழியை கவிதை மொழியை அடைந்த பெண் எழுத்தாளர்கள் மலேசியாவில் சொற்பமான எண்ணிக்கையில் இருப்பதை மறுக்க இயலாது. கோலாம்லம்பூரில் இருந்து எழுதி வரும் பெண் நவீன படைப்பாளிகளின் படைப்பாற்றல் வாசிப்பின் மூலமும் குழுவாத பகிர்தல்-கலந்துரையாடல், விவாதித்தல், சிற்றிதழின் பங்காற்றல்- சிற்றிதழ் வட்டம் சார்ந்த தீவிர மனப்பான்மை போன்ற களங்களின் மூலமும் சிறுக சிறுக தீவிரமடைந்து வருவதையும் மறுக்க இயலாது. குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் தோழி, தினேசுவரி, யோகி, மணிமொழி, சிதனா, ராஜம் ரஞ்சனி, பூங்குழலி போன்றவர்களை அடையாளப்படுத்தலாம்.

ஆனாலும் இவர்களின் எழுத்துக்களம் சமூகவியலின் அறியாமையை, பிற்போக்குத்தனங்களை, ஒழுக்கநெறியின் ஒடுக்குதல்களை எதிர்க்கொள்வதும் அல்லது பால்ய வாழ்வை மீட்டுணர்தலும் என்கிற தளத்தில் இயங்கி வருவதால் அத்துனை திவீரமான கலை எழுச்சியை அடைந்ததாகச் சொல்ல முடியாது. மதவியல், அரசியல், உளவியல், தர்க்கவியல், தத்துவவியல், மானுடவியல், வரலாற்றியல் எனும் பல்வேறு தளத்தின் அனுபவங்களைப் பெறுவதும் வாசிப்பதுமென முயற்சிகளை மேற்கொண்டால் தீவிரமாகக் கவனிக்கப்படுவார்கள். மேலும் சிற்றிதழ் களம் இல்லையென்றால் இவர்களின் எழுத்திற்கு அறிமுகமும் அடையாளமும் இல்லாமல் போய்விடும் அபாயமும் உண்டு.

மூத்த பெண் படைப்பாளிகளை அணுகும்போது அவர்கள் எழுதுவதே ஒரு மிகப்பெரிய போராட்டமாக அமைந்திருந்தது. அவர்கள் அதனை உடைத்துக் கொண்டு புனைந்து கொண்டிருந்தார்கள் என்பதே உண்மை. ஆதிக்க ஆண் படைப்பாளிகளின் அடையாளங்களைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு தர்க்கம் பேசி வந்த ஆண்வழி இலக்கிய பரப்பினுள் க.பாக்கியம், பாவை, ந.மகேசுவரி, பாமா, போன்றவர்கள் தனது படைப்புகளின் வழி தொடர்ந்து செயல்பட்டு வந்தார்கள். இந்த எதார்த்தத்தை அதாவது ஆணாதிக்க கட்டமைப்புகளை தொடர் முயற்சிகளின் மூலம் (அவர்களின் படைப்புகள் தீவிரமாகக் கவனிக்கப்படவில்லையென்றாலும் பேசப்படவில்லையென்றாலும்) எதிர்கொண்டு வந்தவர்களின் இலக்கியத்தை தற்கால மதிப்பீட்டைச் சுமத்தி விமர்சிப்பது அவ்வளவு சரியானதாகத் தோன்றவில்லை. ஆனாலும் மூத்த பெண் படைப்பாளிகளின் எழுத்தில் இந்துத்துவ அடிமைத்தனமும் அதற்கு எதிரான விடுதலையும், குடும்ப அமைப்புகளின் இறையியல்த்தன்மை, மேலோட்டமான பெண் ஒழுக்குமுறைகள் குறித்த எதிர்வினைகள் இருந்திருக்கின்றன. முறையான விமர்சனப் பார்வை கிடைக்காததால் அது ஆழமாக விவாதிக்கப்படாமலேயே காலத்தைக் கடந்து வந்து சேர்ந்துவிட்டது. இப்போதைய பிரச்சனை வேறு என்பதால் அதையெல்லாம் ஒரு வரலாற்றுக் குறிப்பாகவே பார்க்கப்படுகின்றன.

-தொடரும்-
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Wednesday, August 25, 2010

இலக்கியம் எதைக் கற்பிக்கின்றது? ஜெயமோகன் மலேசிய வருகை

ஜெயமோகன் மலேசிய வருகை
சுங்கைப்பட்டாணி –கூலிம் - கோலாலம்பூர்

ஏற்பாடு: நவீன இலக்கிய சிந்தனைக்களம் கூலிம் தியான ஆசிரமம்


எழுத்தாளர் ஜெயமோகன் செப்டம்பர் 6ஆம் தொடங்கி 12ஆம் திகதி வரை மலேசியாவிற்கு வருகை புரிகிறார். கூலிம் தியான ஆசிரம் சுவாமி பிரமானந்தா அவர்களுடன் நவீன இலக்கிய சிந்தனைக்களம் இணைந்து கூலிம், சுங்கைப்பட்டாணி,  பினாங்கு போன்ற இடங்களில் இலக்கிய நிகழ்வுகளை நடத்தவிருக்கிறது. கோலாலம்பூரில் வல்லினம் குழு சார்பாக நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. விவரங்கள் பின்வருமாறு:

06.09.2010 எழுத்தும் இலக்கிய எழுத்தும்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி- பினாங்கு(துங்கு பைனுன்)
மாலை மணி 4.30க்கு


07.09.2010 இலக்கியம் எதைக் கற்பிக்கிறது?
சுங்கைப்பட்டாணி ஆசிரியர் பயிற்சி கல்லூரி
மாலை மணி 7.30க்கு


08.09.2010 “இந்திய ஞான மரபும் காந்தியும்”
காந்தி மண்டபம் பினாங்கு- மாலை மணி 7.30க்கு


09.09.2010 கீதையும் யோகமும்
கூலிம் தியான ஆசிரமம்
இரவு மணி 8.00க்கு


10.09.2010 இலக்கியமும் நவீன இலக்கியமும்
கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம்
மாலை மணி 5.00க்கு


11.09.2010 கோலாலம்பூர் இலக்கிய கலந்துரையாடல்


12.09.2010 சிறுகதை பட்டறை
காலை 9 முதல் மதியம் 1.00 வரை
மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம்- பெ.இராஜேந்திரன்


மாலை 6.00 மணிக்கு வல்லினம் –
தமிழில் எழுதப்பட்ட முக்கிய நாவல்கள்
கலை இலக்கிய விழா - ம.நவீன்

நிகழ்வுகள் தொடர்பான விவரங்களுக்கும் தொடர்பிற்கும்:

சுவாமி பிரமானந்த சரஸ்வதி
கூலிம் ஆசிரமம்

கே.பாலமுருகன் (bala_barathi@hotmail.com)
கோ.புண்ணியவான்
தமிழ் மாறன்
திருமதி.க.பாக்கியம்  கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம்
ம.நவீன் -  ( வல்லினம்)
பெ.ராஜேந்த்திரன்-மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம்

குறிப்பு: ஜெயமோகனின் வாசகர்கள் கோலாலம்பூரில் நிகழும் சிறுகதை பட்டறையிலும் வல்லினம் நடத்தும் கலை இலக்கிய விழாவிலும் ஜெயமோகன் அவர்களைச் சந்திக்கலாம். தவறாமல் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும். மேல் விவரங்களுக்கு சம்பந்தபட்ட ஏற்பட்டாளர்களைத் தொடர்புக் கொள்ளவும்.

சுங்கைப்பட்டாணி வாசகர்களும் இலக்கியவாதிகளும் இங்கு நடக்கும் 5 வகையான நிகழ்வுகளிலும் ஜெயமோகனை நேரிடையாகச் சந்தித்து பேசவும் ஆங்காங்கே நடக்கும் அவரின் உரைகளையும் கேட்கலாம். விடுமுறையில் இருக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றகங்களில் நடக்கும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கே.பாலமுருகன்
சுங்கைப்படாணி, மலேசியா

Saturday, August 14, 2010

சினிமா விமர்சனம்: தாவரங்களின் நாவும் மனித தற்கொலைகளும் - The Happening

அம்மா தினமும் காலையில் எழுந்தவுடன் வீட்டின் எதிர்புறத்தில் இரும்பு கதவில் ஊர்ந்து கிடக்கும் கொடியைப் பார்த்துக் கொண்டிருப்பார். ஒவ்வொருநாளும் அதன் அளவு நீண்டு கொண்டே இருக்கும். அதனைப் பார்த்தப்படியேதான் எங்களின் காலை பொழுதுகள் விடிந்து வெளியில் காத்திருக்கும். கொடி ஊர்வதைப் போல எங்களுக்குள் வீட்டைச் சுற்றியிருக்கும் தாவரங்கள் மீதான அன்பும் ஊர்ந்து ஊறிக் கிடக்கின்றன.

அப்பா கொண்டு வந்து சேர்த்த செடிகளில் வர்ணங்கள் எப்பொழுதும் வேறுவேறாகத்தான் தெரியும். காலையில் பார்க்கும்போது இருந்த வர்ணம் மாலையில் சூழலுக்குத் தகுத்தமாதிரி மங்கிப் போயிருக்கும். தாவரங்கள் சூரியன் மறைந்த பிறகு தற்காலிகமாக தற்கொலைச் செய்து கொள்கின்றன போல. தூரத்திலிருந்து எங்கள் வீட்டைப் பார்ப்பவர்கள் அது வீடென்பதைக் கிரகித்துக் கொள்ள கொஞ்சம் தடுமாறிவிடுவார்கள். அந்த அளவிற்குப் பூச்செடிகளும் இரும்பு கம்பிகளில் வேலிகளில் என்று ஊடுருவி பரவிய கொடிகளும் தனது இருப்பைப் பலப்படுத்தி வைத்திருந்தன.

சிறுவயதிலிருந்து தாவரங்கள் அடர்ந்த சூழலில் வாழ்ந்ததால், அந்த வாழ்தலில் கிடைத்த அனுபவத்துடன் இயற்கையின் மேலான பரிவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது. அன்மையில் பார்த்த the happening என்ற திரைப்படம் தாவரங்கள் மீதான அக்கறையையும் அன்பையும் சிறிதளவு அசைத்துப் பார்த்துவிட்டது என்றே கூறவேண்டும். வெறும் திரைப்படம்தானே என்று அவ்வளவு எளிதாக அந்தத் திரைப்படத்தில் வெளிப்பட்ட மனித மனநிலைகளை ஒதுக்கிவிட இயலவில்லை.

தாவரங்கள் மனிதர்களின் மீது ஏற்படுத்தும் வன்முறையை மிகவும் முரண்பாடான சூழலில் உலகப் பார்வையை ஈர்க்கும் வகையில் தயாரிக்கப்பட்ட படம்தான் M.Night shyamalan அவர்களின் the happening திரைப்படம். இவரின் பெரும்பாலான படங்களில் நீண்டு கிடக்கும் கதைக்கான களம் இருண்மையைச் சார்ந்ததாகவே இருக்கின்றன. சில படங்களில் மிகவும் ஆழமான குறியீடுகளை இருண்மை பாணியில் சொல்ல முயற்சித்ததால் சாமன்ய இரசிகர்களுக்குக் கதைக்கான மூலக் கரு விளங்காமலே போய்விடுகிறது. இருந்தபோதும் the happening திரைப்படம் கொண்டு வரும் செய்தி தாவரப் பிரியர்களுக்கும் இயற்கையைச் சுரண்டும் ஏகாத்திபத்திய வளர்ச்சி நிறுவனங்களுக்கும் பெரிய மிரட்டலையே ஏற்படுத்தியுள்ளது.

நாம் புறக்கணிக்க முயலும் ஒன்று நம் வளர்ச்சிக்காகக் கொன்று குவிக்கப்படும் ஒன்று இந்தப் பூமியிலிருந்து நம்மை அப்புறப்படுத்த காற்று வழி மரணமாக வருவதை மிகவும் அபூர்வமாக இந்தப் படத்தில் M.Night Shyamalan பதிவுச் செய்துள்ளார். நீயு யோர்க்கிலுள்ள சென்ரல் பார்க்(central Park) எனும் ஒரு பூங்காவில் நடமாடிக் கொண்டிருக்கும் மனிதர்களின் இருப்பு திடீரென்று இயக்கம் இழந்து சிலையாகிறது. மரத்தின் அடியிலுள்ள இருக்கையில் அமர்ந்திருக்கும் இரு பெண்களின் உரையாடல் தடைப்படுகிறது. பக்கத்தில் அமர்ந்திருக்கும் பெண் ஏதேதோ உலறுகிறாள், பிறகு சுயமிழந்து தலையிலுள்ள பின்னை உருவி கழுத்தில் சொருகிக் கொள்கிறாள். அதன் பிறகு சிலையாகிய மற்றவர்களின் மனநிலையும் அதேபோல் பாதிக்கப்பட்டு உள்ளார்ந்த நிலையில் அவர்களுக்குள் பெரிய பிரளயம் ஏற்பட்டு சொந்தமாகத் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தன்னைக் காயப்படுத்திக் கொள்ள துடிக்கிறார்கள். ஒவ்வொரு உடலாக மண்ணில் சாய்கின்றன. அடுத்து வரும் காட்சியில் உயரமான கட்டடத்திலிருந்து ஒவ்வொருவராகக் குதிக்கிறார்கள். கீழே விழுந்து சிதறும் அவர்களின் உடல்கள் திடீர் பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன.

முதலில் இது தீவிரவாதிகளால் தொடுக்கப்படும் இராசயண வெடிக்குண்டு (airbomp chemical toxin) எனக் கருதப்பட்டாலும் படத்தின் நடுப்பாகத்தில் இது தாவரங்கள் வெளிப்படுத்தும் ஒருவகையான chemical response என்று வரையறுக்கப்படுகிறது. எங்கெல்லாம் மனிதக் கூட்டங்கள் நிரம்பி வழிகின்றனவோ அங்குதான் முதலில் இந்தக் காற்று பரவி முதலில் அவர்களின் பேச்சில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது(confuse of speak) பிறகு அவர்களின் கவனம் நிலை தப்புகிறது(lost direction) இறுதியாக அவர்கள் மன ரீதியில் பலவீனப்படுத்தப்பட்டு தம்மைத் தாமே அழித்துக் கொள்கிறார்கள். சாலையில் போய்க் கொண்டிருக்கும் கார்கள் நின்று விடுகிறது. அதிலிருந்து வெளியேறும் ஒவ்வொருவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொள்வதும் கண்ணாடியில் மோதி முகத்தைச் சிதைத்துக் கொள்வதும் என தற்கொலைகள் வினோதமாக நிகழ்கின்றன.

அந்தத் தாவரங்களின் தீயக் காற்று பரவும் நகரங்கள் அடையாளம் காணப்படுவதால் ஒருசிலர் அங்கிருந்து கிளம்பி வேறு திசையை நோக்கிப் புறப்படுகிறார்கள். அந்தக் குழுவில் இந்தப் படத்தின் கதாநாயகனான mark wahlberg (அறிவியல் ஆசிரியர்) அவனுடைய மனைவியும் நண்பனின் பிள்ளையும் இடம் பெறுகிறார்கள். அந்தக் குழுவில் இவர்கள் மட்டுமே கடைசியில் உயிர் தப்பிக்கிறார்கள். முழுக் கூட்டமாக நகர்வதால் அந்த விஷக் காற்று நம்மை தாக்கிவிடுகிறது என்பதால் இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஓடுகிறார்கள். மனித நடமாட்டம் அதிகமில்லாத சூழலில் மட்டுமே தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்ற புரிதலில் ஆளுக்கொரு திசையில் மறைகிறார்கள்.

அந்தக் காற்று தாக்கிய மறுகணமே துப்பாகியால் அவர்கள் சுட்டுக் கொண்டு இறப்பதை வெறும் ஒலியினூடாகச் சில இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து தப்பிக்கும் கதாநாயகனும் அவனது காதலியும் ஒரு வயதான பெண்ணின் வீட்டில் அடைக்களம் பெறுகிறார்கள். பிந்தைய காட்சியில் அந்த வயதான பெண்ணும் தாவரங்களின் விஷக் காற்றால் பாதிக்கப்பட்டு தன் வீட்டுக் கண்ணாடிகளிலே மோதிக் கொண்டு இறப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

பின்னனியில் நீண்ட சோகத்தின் குறியீடாக ஒலிக்கும் வைலின் இசையுடன் தொடங்குகிற படம் அடுத்து வருக் காட்சிகளில், மனிதர்களைத் துரத்திக் அவர்களின் மூளையின் செயலைத்தளங்களை சேதமாக்கி மூளையின் முக்கியச் செயலாக்கமான பிறப் பாகங்களுக்கு தகவல் அனுப்புவதை தடைச்செய்வதாகக் கதை நீள்கிறது. விழிப்பு நிலை இழந்து தன்னைக் காயப்படுத்திக் கொண்டு (self damaging)மனிதர்கள் இறக்கிறார்கள்.

கதைக்கான களம் பூங்காவில் தொடங்கி பிறகு சிறு நகரத்தில் நுழைந்து சாலை வழியாகப் பயணிக்கின்றது. சிறு நகரத்தில் இருப்பவர்கள் விஷக் காற்று பாதிக்கப்படாத இடங்களை
நோக்கி ஓடுகிறார்கள். செல்லும் வழியில் மரங்களில் மனிதர்கள் தூக்கிலிட்டு சாலைகள்தோறும் தொங்கிக் கிடக்கும் காட்சி தற்கொலையின் உச்சக்கட்டத்தைக் காட்டுகிறது.

இயற்கைக்கு மனிதன் ஏற்படுத்தும் அழிவை ஒரு காலக்கட்டம்வரை ஏற்றுக் கொள்ளும் இயற்கை திடீரென்று இரசாயண பகிர்வு வழியாக மனித அழிவை ஏற்படுத்தி தம்மைப் பாதுகாத்துக் கொள்வதைப் போல படமாக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தினூடாக தாவரங்களும் செடிக் கொடிகளும் தம்முடைய எதிர்ப்பு சக்தியை இருந்த இடத்திலேயே இப்படியான இராசயண வெளிப்பாடுகள் மூலம்தான் தெரிவிக்கிறது என்பதும் சொல்லப்பட்டுள்ளது. The happening திரைப்படத்தை நிகழ்வு சார்ந்த எச்சரிக்கையாகவே அணுக முடிகிறது. இது ஒருவகை தீர்க்கத்தரிசின முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் கோட்பாடாகவும் இருக்கலாம்.

இதன் மூலம் இரண்டு மனநிலைகளை உணர முடிகிறது. ஒன்று இயற்கையின் அழிவில் நமக்கெல்லாம் பங்கு இருப்பதால் இனியும் கவனமாகச் செயல்பட வேண்டும் என்பதும் மற்றொன்று வீட்டைச் சுற்றியுள்ள தாவரங்களைப் பார்க்கும்போது அவையுடன் நட்பு பாராட்டி நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதும். எங்காவது நகர மேண்மைக்காக அழிக்கப்படும் மரங்களைப் பார்க்கும்போது அது வெறும் நிகழ்வாகத் தெரிவதில்லை. ஒருநாள் the happening நிகழும் என்பதற்கான எதிர்கால குறியீடாகத்தான் அர்த்தப்படுத்திக் கொள்ள முடிகிறது. இயற்கையின் நாவு வெகுத் தொலைவில் இல்லை.

நன்றி: யுகமாயினி 2009 இதழில் பிரசுரமானது.

ஆக்கம் : கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Monday, August 9, 2010

சிறுகதை: மூனாம் நம்பர் அறை எங்க இருக்கு?

தாத்தாவிடம் சொல்லிக்கொள்ளாமல் வந்திருக்கக்கூடாதுதான். என்ன செய்வது? பின்வாசல் கதவைச் சத்தமில்லாமல் திறந்து மூடும்போது தாத்தாவின் முகம் ஒரு பூச்சாண்டியைப் போல விரிந்து எழ, ஒரு சிறு தடுமாற்றம். எப்படியோ அவருக்குத் தெரியாமல் பள்ளிக்கு வந்தாயிற்று. 10 நிமிடம் நடந்தால் தாத்தா பள்ளியை வந்தடைந்துவிடும் அளவிற்குப் பள்ளியின் நெருக்கம் மேலும் பயமுறுத்தியது. தாத்தா இன்று காலையிலேயே குடித்திருந்தார்.

“டெய் உங்கப்பன் மவனே!” எனக் கத்திக் கொண்டே தாத்தா பள்ளியின் வாசல்வரை வந்து நின்றுவிட்டால், அன்று நான் தொலைந்துவிடுவது நிச்சயம். குறிப்பாக என் வகுப்பில் பயிலும் குமரனும் தர்மேந்திரனும் அடுத்த ஒரு வாரத்திற்கு என்னைப் பற்றி அரட்டையடிக்க கிளம்பிவிடுவார்கள்.

வழக்கமாகச் சொல்வது போல “குடிக்கார தாத்தா பெத்த மவனே” என்பார்கள். என்னை என் தாத்தா பெற்றெடுக்கவில்லை எனச் சொன்னாலும் நம்பமாட்டார்கள். தாத்தாவுடன் இருக்கும் ஒரு காரணத்திற்காக தாத்தா வெளியில் வாங்கிக் கட்டிக் கொண்டு வரும் அவப்பெயர்களில் எனக்கும் சிறிய பங்குக் கிடைத்துவிடுவது உறுதி. உயரமான தோற்றம், மெலிந்துபோன உடல், நரைத்துப் போன மயிர். தடிப்பான மீசை. ஏறக்குறைய தமிழ் சினிமாவின் வில்லன் போலத்தான் இருப்பார். அமைதியாகப் பேசுவதோ அல்லது மலாய்மொழி கலக்காமல் பேசுவதோ தாத்தாவிற்குக் கைவராது.

போட்டிக்கு வந்திருக்கும் அனைத்து மாணவர்களையும் அழைத்தார்கள். இன்னும் சிறிது நேரத்தில் இலக்கியப் போட்டிகள் துவங்கப்படவுள்ளது. கவிதை ஒப்புவிக்கும் போட்டிக்காகப் பாரதியார் கவிதை ஒன்றைத் தேர்வு செய்து பயிற்சியும் எடுத்துவிட்டு, இன்று எப்படியாவது வெற்றியடைய வேண்டும் என்கிற ஆர்வத்துடன் நின்றிருந்தேன்.

“டெ. கவிதையும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம். இன்னிக்குத்தான் சுக்குள் நாள் இல்லையே, எவன் வைக்கறான் உனக்குப் போட்டி?”
“தாத்தா. . இந்த மாதிரி போட்டிலாம் சனிக்கிழமைத்தான் வைப்பாங்க. பிளிஸ் தாத்தா. ஒரு வாட்டி போய்ட்டு வந்துர்றேன்”

“அடி. . பிஞ்சிரும். ஒழுங்க வீட்டுலெ இரு. அப்பறம் இன்னிக்கு வேற உனக்கு காசு தரனும். காசா முளைக்குது இங்க?”

தாத்தா காலையிலேயே கத்திவிட்டு மீண்டும் படுத்து தூங்கிவிட்டார். அணிந்திருந்த பள்ளிச்சீருடையுடன் கையில் வைத்திருந்த பாரதியார் கவிதையும், இன்னும் விடியாத வெளி இருளும் மங்கிக் கொண்டிருந்தது. தப்பித்தோம் பிழைத்தோம் என யாரிடமும் சொல்லாமல் ஓடி வருவது மிரட்டலாக இருந்தது. யாரோ பின்னால் துரத்திக் கொண்டு வருவது போன்ற பிரமையில் இதயம் படபடக்க பள்ளிக்கு வந்து சேர்ந்தேன்.

“கவிதை ஒப்புவித்தல், மூன்றாவது அறைக்குச் செல்லலாம்”

ஞாபகம் திரும்பியதும் நான் நின்றிருந்த மாணவர் வரிசை மெல்ல நகர்ந்தது. தூரத்தில் தாத்தா பள்ளியின் வெளிவாசல் கதவைத் திறந்துகொண்டு வருவதும் தெரிந்தது. பகீரென்றிருந்தது. கால்களும் கைகளும் நடுங்கத் துவங்கின. வரிசையிலிருந்த மாணவர்களின் பின்னால் ஒளிந்துகொண்டே படி ஏறிவிட்டேன். தாத்தா கட்டாயம் யாரிடமாவது என்னைப் பற்றி விசாரிப்பார். அல்லது ஏதாவது கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டு என்னைத் தேடி அலைவார், அல்லது தலைமை ஆசிரியரைப் பார்த்து அவமரியாதையாகப் பேசுவார். ஏதாவது ஒன்று நடந்தாலும் என்னை அவர் தரதரவென பள்ளியிலிருந்து வெளியிலுள்ள சாலைக்கு இழுத்துக் கொண்டு போவது உறுதியாகிவிடும். போட்டிக்கு வந்திருக்கும் வேறு பள்ளி மாணவர்களுக்கும் என்னைப் பற்றி தெரிந்துவிட்டால்?

மூன்றாவது மாடியை அடைந்ததும், கீழே எக்கிப் பார்த்தேன். தாத்தா கோபு வாத்தியாருடன் பேசிக் கொண்டிருந்தார், கட்டாயம் என்னைத் தேடி வருவார் என உறுதியாகிவிட்டது. கவிதை ஒப்புவிக்கும் போட்டியும் அதன் போட்டியாளர்களும் என்னைவிட்டுத் தூரமாக விலகிச் செல்வது போல ஆகிவிட்டது. எனக்குப் பிடித்ததைச் என்னால் செய்ய முடியாதா? கையில் வைத்திருந்த பாரதியார் கவிதையை ஒருமுறை உற்றுப் பார்த்தேன். அதன் சொற்கள் இடம் மாறி நகர்வது போல தோன்றியது. மீண்டும் கீழே எக்கிப் பார்த்தேன். தாத்தா படிக்கு அருகில் வந்து நின்றிருந்தார். பாக்கேட்டில் எதையோ தேடிக் கொண்டிருந்துவிட்டு மீண்டும் அருகில் யாரோ ஒருவரை அழைத்து எதையோ கேட்டுக் கொண்டிருந்தார்.

“மூனாம் நம்பர் ரூம்பூ எங்க இருக்கு?” எனத் தாத்தா கட்டாயம் கேட்டிருப்பார். அந்த நபர் கையை மேலே உயர்த்தி இந்த மூன்றாவது அறைக்கு வரும் வழியைக் காட்டியிருக்கக்கூடும். இன்னும் 5 நிமிடத்தில் தாத்தா இங்கு வந்து என்னை அடித்து இழுத்துக் கொண்டு போகும்போது, “பொய் சொல்லிட்டு வீட்டுலேந்து ஒடியாந்துட்டியா” எனச் சொல்வார். அப்பொழுது எல்லோருக்கும் தெரிந்துவிடும் நான் பொய்க்காரன் என. இங்கிருந்து ஓடிவிடலாம் எனவும் தோன்றியது. போட்டிக்கான முதல் நபரைக் கவிதையை ஒப்புவிக்க அழைத்தார்கள். நான் மூன்றாவது போட்டியாளர். ஒருவேளை தாத்தா கொஞ்சம் தாமதமாக இந்த மூன்றாவது அறையைக் கண்டுபிடிக்க நேர்ந்தாலும், எனது கவிதையை ஒப்புவித்து முடித்துவிடுவேன்.

மீண்டும் அறைக்கு வெளியே தலையை நீட்டி பார்த்தேன். மூன்றாவது மாடியின் வரந்தா கோடியில் தாத்தா ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டே வந்தார். எனக்கு வயிறு வலிப்பது போல் இருந்தது. கைகளின் நடுக்கம் அதிகரித்திருந்தது. மனதை எப்படித் திடப்படுத்துவது எனக்கூட தெரியவில்லை. கையில் வைத்திருந்த பாரதியார் கவிதை இனி பயன்படாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். அதை எடுத்து சுருட்டி பாக்கெட்டில் வைத்துவிட்டேன். தாத்தா மூன்றாவது அறையின் வாசலில் வந்து நின்றார்.

“சுகுமாறன் இருக்கானா?” கவிதை ஒப்புவிக்கும் போட்டியை நடத்திக் கொண்டிருப்பவரைப் பார்த்து தாத்தா சத்தமாகக் கேட்டார். எனக்குப் பாதி உயிர் போய்விட்டது. வீட்டிலிருந்து ஓடிவரும் போது பின்வாசல் கதவை அடைக்க மறந்தது இப்பொழுது ஞாபகத்திற்கு வந்தது.

“சுகுமாறன் யாரு?”

எழுந்து நின்றேன். தாத்தா கையைக் காட்டி வெளியில் அழைத்தார். பயத்துடன் வெளியில் போய் நின்றேன். அறையில் இருந்த எல்லோரும் என்னையும் தாத்தாவையும் பார்த்தார்கள். தாத்தா அருகில் நெருங்கி வருவதைப் பார்த்ததும் அநேகமாக இங்கு ஒரு குட்டி யுத்தம் நிகழப் போவதை எல்லோரும் வேடிக்கைப் பார்த்துச் சிரிக்கப் போகிறார்கள் எனத் தீர்மானித்துவிட்டேன். புறமுதுகைக் காட்டியவாறு திரும்பினேன். தாத்தா என் கையை இழுத்துப் பிடித்தார்.

“டெ! வந்துட்டெ சரி. . காசு வாங்கனயா? என்னத்தெ சாப்டுவெ? இந்தா பிடி 1 வெள்ளி இருக்கு. வச்சிக்க” எனக் கூறிவிட்டு தாத்தா மீண்டும் நடக்கத் துவங்கினார்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Tuesday, August 3, 2010

சினிமா விமர்சனம்: நான் என் கடவுளிடமிருந்து கற்றுக் கொண்ட முதல் சொல் தண்ணீர் - Black

எப்பொழுது நான் எனது முதல் சொல்லைக் கற்றுக் கொண்டிருப்பேன்? நான் எழுதிய முதல் எழுத்து என்னவாக இருக்கும்? யார் என் கையைப் பிடித்து எழுத வைத்திருப்பார்? நான் எனக்கான முதல் சொல்லையோ அல்லது எழுத்தையோ கற்றுக் கொண்ட பிறகு எப்படியெல்லாம் அதைக் கொண்டாடியிருப்பேன்? குறைந்தது அம்மாவிடமோ அல்லது அப்பாவிடமோ அதைச் சொல்லி மகிழ்ந்திருக்கக்கூடும்?

மிசேல் தனது 40 வருடப் போராட்டத்திற்குப் பிறகு இறுதியில் ஒரு கலைப்பிரிவில் பட்டத்தாரியாக வெற்றிப் பெறுகிறாள். பிறப்பிலேயே கண் தெரியாத காது கேளாத மிசேல் பட்டமளிப்பு விழாவில் மேடையில் பேசுவதற்கு அழைக்கப்படுகிறாள். உடல் மொழியால் அவள் அங்கிருக்கும் பட்டதாரிகளுக்குச் சொல்வதை அவளுடைய அம்மா மொழிப்பெயர்த்துக் கூறுகிறாள்.

மிசேல் எனும் அந்தப் பெண் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தைகளையும் எனக்கு முதல் சொல்லைக் கற்றுக் கொடுத்த எனது ஆசிரியர்களுக்கு நன்றியுடன் சமர்ப்பிக்கின்றேன். அந்த ஆசிரியர் என் அம்மாவாக இருக்கலாம் அல்லது என் அக்காவாக இருக்கலாம் அல்லது ஆரம்பப்பள்ளி ஆசிரியராகவும் இருக்கலாம். பெயரும் அடையாளமும் மறந்துபோன அந்த ஆசிரியர் எனக்குச் சொற்களையும் அந்தச் சொற்களின் வழி இந்த உலகத்தையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

மிசேல் வெளிச்சமான இந்த உலகத்தின் முன் தன்னுடைய 40 வருட இருளிலிருந்து எடுத்து சமர்ப்பிக்கும் வரிகள் இவைதான்:

“சின்ன வயசுலேந்து நான் எதையாவது தேடிக்கிட்டேதான் இருப்பேன். என் விரல்கள் எதையாவது தொட்டு தேடிக்கிட்டே இருக்கும். ஆனால், கடைசிலெ வெறும் இருட்டு மட்டும்தான் மிஞ்சும். ஒருநாள் என் அம்மா என்னை அந்நியமான ஒரு ஆளுகிட்ட ஒப்படைச்சாங்க. அவர் எல்லோரையும் விட வித்தியாசமானவரா இருந்தாரு. அவர் ஒரு மந்திரவாதி. பல வருட முயற்சிகளில் அவர் என்னை என்னுடைய இருட்டிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். கடவுள் என வந்துவிட்டால் எல்லோரும் குருடுதான். இங்குள்ள யாரும் கடவுளைப் பார்த்திருக்க மாட்டீங்க, அவரு பேசுவதைக் கேட்டிருக்கவும் மாட்டீங்க. ஆனால் நான் அப்படி இல்லை. நான் கடவுளைத் தொட்டுப் பார்த்தேன். அவரை உணர்ந்தேன். அவர் இருப்பதை என்னால உணர முடிந்தது. I have felt his presence. நான் அந்தக் கடவுளை “டீச்சர்” என அழைத்தேன். I call him tee. . (teacher) என்னைப் பொருத்தவரை எல்லாமே இருட்டுதான். ஆனால் என் ஆசிரியர் இருளின் புதிய அர்த்தத்தைக் கற்றுக் கொடுத்தார். கருப்பு என்பது வெறும் இருள் மட்டும் அல்ல, It is the colour of achievement. The colour of knowledge. The colour of graduation robe ”

மீசேலை அவளது வன்மையான இருளிலிருந்து காப்பற்றுவதற்கு அவளுடைய பெற்றோர்கள் தீர்மானித்துப் பல முயற்சிகளையும் செய்து பார்க்கிறார்கள். அவர்களின் இறுதி நம்பிக்கையாக அவளுக்குப் புதிய ஆசிரியராக மிசேலின் 8ஆவது வயதில் வந்து சேர்கிறார் அமித்தாப். ஏற்கனவே கண் தெரியாத காது கேளாத மாணவர்கள் பயிலும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் அவருக்குண்டு. முன்பொரு சமயம் அவருடைய அணுகுமுறையின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினாலும் அவருடைய குடிப் பழக்கத்தினாலும் அங்கிருந்து அந்தப் பள்ளிலிருந்து அமித்தாப் வெளியேற்றப்படுகிறார். இதைப் பற்றி அமிதாப் விவரிக்கும்போது, ‘என்னுடைய கண் தெரியாத காது கேளாத மாணவர்கள் நான் அவர்களிடமிருந்து நீங்கும்போது என்னை வழியனுப்பும் வகையில் வேறு திசையைப் பார்த்து கையசைத்துக் கொண்டிருந்தார்கள், ஆனால் நான் அவர்களிடமிருந்து பிரிந்து வந்தது வேறு திசை, இதைவிட கொடுமை ஒரு ஆசிரியருக்கு நேர்ந்துவிடுமா?’ என கண்ணீர் மல்க உண்மையான ஒரு ஆசிரியரின் சோகத்தை வெளிப்படுத்துகிறார். அதுவும் இத்தகையதொரு குழந்தைகள்/மாணவர்கள் எப்பொழுதும் வித்தியாசமான கடவுளின் படைப்பு எனவே அமித்தாப் அடையாளப்படுத்துகிறார்.

அமித்தாப் மிசேலை அசாதரண படைப்பாகக் கருதி அவளை அவளுடைய இருண்மையான வன்முறைமிக்க உலகிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்கு வித்தியாசமான உத்திகளைக் கையாளுகிறார். இருவருக்கும் மத்தியில் நடக்கும் போராட்டத்தைப் பார்க்கும்போது வார்த்தைகளும் வர்ணங்களுமற்ற இருளுக்கும் எல்லாம் நேர்த்திகளுமுடைய வெளிச்சத்திற்கும் நிகழும் வாழ்வு குறித்த தர்க்கம் போல புரிந்துகொள்ளக்கூடும். அவளுடைய எட்டாவது வயதில் அவள் உலகம் வெறும் இருளால் நிரம்பியிருக்கிறது. அவளிடம் பேசுவதற்கும் பிறரிடம் பகிர்ந்துகொள்வதற்கும் வெறும் ஒலியும் வன்முறையும்தான் மீந்திருக்கிறது. உணவு சாப்பிடுவது தொடங்கி, அறையில் கண்ணாடி பொருள்களைத் தூக்கி வீசி உடைப்பது முதல் எல்லாவற்றிலும் ஒரு கொடூரத்தையும் அழுகையையும்தான் சுமந்து கொண்டிருக்கிறாள் மீசேல்.

அமித்தாப் அவளுக்கு ஏதாவது ஒரு மாயம் நடக்கக்கூடும் எனவும் அந்தக் கணத்தில் அவள் அவளுடைய இருளிலிருந்து முதல் வெளிச்சத்தை அடைவாள் எனவும் மிகவும் தீர்க்கமாக நம்பிக்கை கொண்டு அவளுக்கான பயிற்சிகளைத் தொடங்குகிறார். முதலில் உணவைக் கரண்டியால் அமைதியாக நாற்காலியில் அமர்ந்து சாப்பிடுவதை அவளுக்குக் கற்றுக் கொடுக்கிறார். அவளோ மிகவும் வன்மையாகப் பிறர் சாப்பிடும் தட்டிலிருந்து உணவை அள்ளி அல்லது பறித்து அதை வாயில் அப்பிக் கொள்கிறாள். அவளுடைய நடத்தைகளை வன்மையிலிருந்து நிதானத்திற்குக் கொண்டு வர, அவளைச் சுற்றியுள்ள உலகத்தை உணர்ந்து கொள்ள, மெல்ல மெல்ல அமிதாப் பலவிதமான பயிற்றுமுறைகளைக் கையாளுகிறார்.

. மிசேலால் எந்தவித ஒலியையும் எழுப்ப இயலாததால், அவள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்வதற்காக அவளது உடலில் மணியைக் கட்டி வைத்திருப்பார்கள். அவள் எங்கிருந்தாலும் அவள் உடல் அசைவிற்கேற்ப ஒலியை எழுப்பும் மணியை வைத்து அவளின் இருப்பை அடையாளம் கண்டு கொள்வார்கள். இது அந்த வீட்டிலிருப்பவர்களின் வசதிக்காக மிசேலின் உடலில் தொங்கவிடப்பட்டுருக்கிறது. இதைப் பார்த்த அமிதாப் நீங்கள் வளர்ப்பது குழைந்தையை மிருகத்தை அல்ல என அவளை அதிலிருந்து மீட்கிறார். அந்த மணியைக் கழற்றி தூக்கி எறிந்துவிடுகிறார். அமிதாப்பின் வித்தியாசமான பயிற்சிகளைக் கண்டு அவளது பெற்றோர்கள் வெறுப்படைகிறார்கள். அமிதாப் ஒரு குடிகாரன் என்பதால் அவரது ஆளுமை சந்தேகிக்கப்படுகிறது. மிசேலை வன்மையாக கொடூரமான முறையில் எதிர்க்கொள்வதாக அவளது பெற்றோர் குற்றம் சுமத்துவதையும் பொருட்படுத்தாமல் மிசேலை அவளது அடர்ந்த இருளிலிருந்து மீட்பதற்காகப் போராடுகிறார் அமிதாப்.

மிசேலுக்கு ஆசிரியராக வந்த இரண்டாவது நாளிலேயே மிசேலின் தந்தை அமிதாப்பின் சேவையை விரும்பாமல் அவரை அங்கிருந்து மறுநாள் திரும்பிவிடும்படி கூறிவிட்டு 20 நாட்கள் வேலையாக வெளிமாநிலம் சென்று விடுகிறார். ஆனால் அமிதாப் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மிசேலின் அம்மாவைச் சமாதானம் செய்து, 20 நாளில் மிசேலின் வாழ்வில் ஏதாவது ஒரு சிறு மாற்றத்தையாவது உருவாக்குவேன் எனக் களத்தில் இறங்குகிறார் அமிதாப். ஆகையால் அவருக்கு இருக்கும் கடைசி சந்தர்ப்பம் அந்த 20 நாட்கள் மட்டுமே. முதலில் மிசேலின் தந்தையின் படிக்கும் அறையை மாற்றம் செய்து மிசேலை அங்குக் கொண்டு வருகிறார் அமிதாப். ஒரு புது இடத்திற்கு வந்திருப்பதை மிசேல் உணர வேண்டும் மேலும் தன் அம்மாவின் வாசம் படாத ஒரு வெளிக்குள் அவள் இருக்க வேண்டும் என ஏற்பாடுகளைச் செய்து அவரது பயிற்சிகளை தொடங்குகிறார்.

பார்வையற்ற குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொள்வதில் அமிதாப் வேறொரு மனவெளியைக் கொண்டுருக்கிறார். அவர்களிடமிருந்து வெளிச்சம் பிடுங்கப்பட்டுருக்கிறது. பிடுங்கப்பட்ட அந்த வெளிச்சம் சிறுக சிறுக இறந்துகொண்டிருக்கிறது என அவர் நம்புகிறார். “the light is dying”. வெளிச்சம் பறிக்கப்பட்ட அந்தக் குழந்தைகளிடம் மீண்டும் அவர்களுக்கான வெளிச்சத்தை மந்திரம் போல கொடுக்க வேண்டும் எனவும் நினைக்கிறார்.

மிசேல் இருளில் தொலைந்து போனவள், அவளுக்குச் சொற்களால் ஆன சிறகுகளை வரமாகக் கொடுப்பேன். வெளிச்சத்தை நோக்கி பறப்பதற்குக் கற்றுக் கொடுப்பேன் எனத் தீவிரமாக அவளை மீட்டெடுப்பதில் அமிதாப் காட்டும் அக்கறையும் அன்பும் கவனிப்பும் மெய்சிலிர்க்கச் செய்கிறது. அது அடர்ந்த ஓர் இருளுக்குள்ளிருந்து வெளிச்சம் என்கிற முதல் புள்ளியை இட்டு நிரப்பும் அசாத்தியமான முயற்சி எனக்கூட சொல்லலாம்.

கடவுளால் அரைகுறையாக விடப்பட்ட நான் என் ஆசிரியரால் முழுமைப் பெற்று எனக்கான வாழ்வை அடைகிறேன்” என மிசேல் தன் சுயசரிதையை எழுதும் போது குறிப்பிடுவது மிக முக்கியமான வரிகளாகும். உலகத்தில் இத்தகையதொரு இருளில் விடப்படும் குழந்தைகளுக்கென அவர்களின் உலகத்தை வர்ணங்களால் தீட்டக்கூடிய அன்பின் விரல்கள் படைக்கப்பட்டிருக்க வேண்டும். அமிதாப் போல அவர்களின் மீது அக்கறை கொண்டு ஒலியும் ஒளியும் இல்லாத அவர்களின் வெளியில் தனது முதல் வர்ணத்தை அள்ளி வீசக்கூடிய கரங்கள் வேண்டும். அப்படியொரு அருமையான கதைப்பாத்திரத்தில்தான் அமிதாப் நடித்திருக்கிறார். படம் முழுக்க காது கேளாத கண் தெரியாத மாணவர்களுக்குரிய ஆசிரியராக தனது உடல் மொழியாலும் முகப்பாவனைகளாலும் வாழ்ந்திருக்கிறார். இத்துனைப் பிரமாண்டமான ஓர் அசல் வெளிப்பாட்டை இந்திய சினிமா உலகில் வேறு யாராலும் தர இயலுமா என வியக்கும் அளவிற்கு அமிதாப்பும் ராணி முக்கர்ஜியும் படம் முழுக்க நிறைந்திருக்கிறார்கள்.

அமிதாபிற்கு இருந்த அந்த 20 நாள் முடிவடைந்து அவர் புறப்படுவதற்குத் தயாராகுகிறார். இருந்தபோதும் மிசேலினின் வெளிச்சத்தை அவளிடம் கொடுக்க வேண்டும் என்கிற பிடிமானம் அவரிடமிருந்து நீங்குவதாக இல்லை. மிசேலைத் தூக்கிக் கொண்டு போய் குளத்தில் போடுகிறார். அவளுக்கு தண்ணீர் என்றால் நடுக்கம். தண்ணீருக்குள் விழுந்த பிறகு அவள் அதை உணர்கிறாள். முதன் முதலாக தண்ணீர் மீதான பயம் நீங்கி, அதை முழுவதுமாக உணர்கிறாள். அந்தப் புள்ளியிலிருந்துதான் அவளுடைய அகம் திறந்து தனது முதல் வெளிச்சத்தை அடைகிறது.

அமிதாப் அவளுடைய கையை எடுத்து தன் உதட்டில் வைத்து “water” என உச்சரிக்கிறார். மிசேல் மீண்டும் அமிதாப்பின் கையை எடுத்து அவளது உதட்டில் வைத்து அதே போல கொஞ்சம் தெளிவில்லாமல் தண்ணீர்(water) என உச்சரிக்கிறாள். அவள் கற்றுக் கொள்ளும் முதல் சொல் “தண்ணீர்” ஆகும். அதனை அவள் கொண்டாடுகிறாள். திடல் முழுக்க ஓடி பூக்களையும் புற்களையும் தொட்டு தொட்டு அள்ளி வீசுகிறாள். இதுவரை அவள் அடைந்திருந்தாத பரவசத்தை தன்னிலையை அடைந்து அர்த்தம் கொள்கிறாள். தன்னுடனே இருந்த அந்த இருட்டும் கருப்பும் இப்பொழுது அர்த்தமுள்ளதாக மாறுகிறது. இதைத்தான் அமிதாப் விந்தை எனச் சொல்கிறார்.

இப்படியாக தொடர்ந்து அவளுடைய இருண்ட அகத்தையும் புலனையும் சொற்களாலும் முறையான பார்வையற்ற கல்வி முறையினாலும் வளர்த்தெடுக்கிறார் அமிதாப். அவள் உபயோகப்படுத்தும் பொருள்களுக்கும், அவள் தொட்டுணரும் பொருள்களுக்கும், அவளைச் சுற்றி இருக்கும் அனைத்திற்கும் பெயர் இருப்பதையும் அர்த்தம் இருப்பதையும் அவளுக்குப் புரிய வைக்கிறார். தன்னால் பார்க்க முடியாத ஒன்றின் பெயரையும் அர்த்தத்தையும் அறிந்து கொள்ளும்போது உலகம் அவளை நெருங்கி வருகிறது. அவளுடைய இருத்தல் பயன்மிக்கதாக மாற்றப்படுகிறது. இறுதியாக எல்லோரும் பயிலும் பல்கலைக்கழகத்திலேயே படிப்பதற்கு மிசேலுக்கு நேர்காணல் பரிசோதனைகளுக்குப் பிறகு வாய்ப்பு வழங்கப்படுகிறது. 40 வருட முயற்சிகளுக்குப் பிறகு பற்பல தோல்விகளைத் தழுவி சோர்வடைந்து உற்சாகம் கொண்டு மீண்டும் மீண்டும் உழைத்து கடைசியாக அவள் பட்டதாரியாக ஆகிறாள்.

ஆனாலும் அவளுடைய உலகத்தில் வெளிச்சத்தைப் பாய்ச்சுவதற்காக தனது ஆயுள் முழுவதையும் தியாகம் செய்த மிசேலின் ஆசிரியர் அமிதாப் மெல்ல மெல்ல முதுமையை அடைந்து தன் சுயநினைவுகளை இழக்கிறார். அவருடைய உலகம் எல்லாம் நினைவுகளையும் வார்த்தைகளையும் இழந்து காலியாகிறது. வெறும் வன்மையான வெளிச்சம் மட்டுமே அர்த்தமில்லாமல் தேங்கி நிற்கிறது. முன்பொரு சமயத்தில் அவளிடமிருந்து தொலைந்து போகும் அமிதாப் மீண்டும் ஓர் பூங்காவில் கண்டுப்பிடிக்கப்படுகிறார். வெறும் உடலுடன் தன்னைப் பற்றிய எந்தச் சிந்தனையும் இல்லாமல் சுற்றி இருப்பவர்களையும் அடையாளம் காண முடியாத நிலையில் மிசேல் அவரை அழைத்துக் கொண்டு போய் அவருடைய நினைவுகளை மீட்பதற்குப் பல முயற்சிகள் செய்து பார்க்கிறாள். தனக்கு இந்த உலகத்தைப் புரிய வைத்த என் ஆசிரியர் என் கடவுள் அவருடைய உலகத்தைத் தொலைத்துவிட்டு நிற்பதைக் கண்டு பெரும் வேதனை அடைகிறாள். அவரிடமிருந்து பெறப்பட்ட அந்த நேர்மையான அன்பும் அக்கறையும் அவளை இயக்கியது போல மிசேலின் அன்பும் அக்கறையும் அவரை மீட்கும் என நம்புகிறாள்.

பட்டமளிப்பு விழா முடிந்ததும் அவரைப் பார்க்க அந்தக் கருப்பு அங்கியை அணிந்துகொண்டு மிசேல் மருத்துவனைக்குப் போகிறாள். அங்கே அமிதாப் சங்கிலியால் கட்டப்பட்டிருப்பதைக் கண்டதும் அதைத் தன் பலத்தைக் கூட்டி அறுத்து எறிகிறாள். இந்த இடத்தில் தன் ஆசிரியடரிமிருந்து பெறப்பட்ட மனிதர்களை மனிதத்தன்மையுடன் பார்க்கும் தன்மை மேலோங்கி அன்பை உயர்த்திக் காட்டுகிறது. மிசேலைக் கருப்பு அங்கியில் பார்க்கும் அமிதாப்பின் கண்களிலிருந்து நீர் வழிகிறது. சன்னலைத் திறந்து வெளியே தூறிக் கொண்டிருக்கும் மழைநீரை இருவரும் தொட்டுணர்ந்து “ தண்ணீர்” என்கிறார்கள். படம் நிறைவடைகிறது. இந்தக் கடைசி காட்சிக்காக அமிதாப்பிற்கும் ராணி முக்கர்ஜிக்கும் கட்டாயம் விருதை வழங்கலாம். அத்தகையதொரு உயிர்ப்பான வெளிப்பாடு.

மேலும் படத்தில் மற்றுமொரு முக்கியமான அம்சம் ஒளிப்பதிவாகும். ரவி.கே.சந்திரன் மிசேலின் உலகத்தை அடர்ந்த இருளிலிருந்து மிதமான வெளிச்சத்தை நோக்கி நகர்வதாகக் காட்டி, படம் முழுவதையும் ஓர் அழகான பரிணாமத்திற்குள் கொண்டு வருகிறார். மழை நேரத்தில் வெளியில் பரவும் இருளும், பனி தூவும் வெளியில் அங்குமிங்குமாக ஒட்டிக் கிடக்கும் இருளும், மிசேலின் பெரிய வீட்டில் சுவரிலும் தரையிலும் அவளையொட்டி கரையும் இருளும் என இருளையும் அதனைக் கடந்த இன்னொரு வெளிச்சத்தையும் அற்புதமாகக் கையாண்டுள்ளார். அடுத்ததாக பின்னனி இசை மிசேலின் துயரத்தையும் வளர்ச்சியையும் கொண்டாட்டங்களையும் எந்த ஒப்பனையுமின்றி அசலாகப் படைப்பதற்குப் பெருங்காற்றியுள்ளது என்றே சொல்லலாம்.

அடுத்ததாக இந்தப் படத்தை இயக்கிய சஞ்சய் லீலா உண்மையிலே ஓர் அற்புதமான மனம் கொண்டவர்தான் என நினைக்கத் தோன்றுகிறது. உடல் அங்கவீனம் எனும் மட்டும் அடையாளப்படுத்தக்கூடிய இது போன்ற குழந்தைகளின் இருளையும் அந்த இருளுக்குள் அகப்பட்டுக் கிடக்கும் அவர்களின் துயரத்தையும் கருப்பொருளாகக் கொண்டு அவர்களுக்கு விடுதலையளிப்பதில் ஓர் ஆசிரியருக்கு இருக்கக்கூடிய கடைமையையும் கலை உணர்வுடன் சொல்லி படைத்துக் காட்டியிருக்கிறார். மிசேலின் இருள் அர்த்தமுள்ளவை, மிசேலின் இருள் அறிவால் ஆனவை, மிசேலின் இருள் அற்புதமானவை. 2005-ல் வெளியான இப்படம் 19க்கும் மேற்பட்ட பல இந்திய விருதுகளை வென்றுள்ளது. மேலும் இதே போல நோயால் பாதிக்கப்பட்டு தன் வாழ்வால் உழைப்பால் உயர்ந்த ஹெல்லன் கெல்லர் அவர்களின் சுயச்சரிதையான “The Story of My Life” எனும் புத்தகத்தின் பாதிப்பால் உருவானதுதான் இந்த “பிளாக்” திரைப்படம்.

“மிசேல் தன்னுடைய இருளுக்குள்ளிருந்து பேசிக் கொண்டிருக்கிறாள் அவளுடைய மொழியில், அவளுடைய உலகத்தைப் பற்றி, அவளது இசையைப் பற்றி”

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, malaysia