நான் வேலைக்குச் சென்று வாங்கிய முதல் மாத சம்பளத்தில் அப்பாவிற்கு 50 ரிங்கிட் கொடுத்திருந்தேன். அதை அவர் 8 வருடங்கள் செலவு செய்யாமல் பத்திரமாகவே வைத்திருந்தார் என்பதே அவர் மரணத்திற்குப் பிறகே தெரிந்தது.
என்னுடைய அப்பா திரு.கேசவன் அவர்கள் கடந்த 20ஆம் திகதி முதல் இரண்டு நாள் அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார். அவர் உடல் சுயமாக மூச்சுவிட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. சுய நினைவே இல்லாமல் மூன்றாம் நாள் காலையில் மரணமுற்றார். மருத்துவர் என் அப்பா இறந்துவிட்டார் எனச் சொல்லி அனைத்து இயந்திரங்களையும் அகற்றிய பிறகு உள்ளே சென்று பார்த்தேன். கண்களிலிருந்து கண்ணீர் ஒழுகியிருந்தது.
சுய நினைவாக இல்லாவிட்டாலும் உயிரைவிடும் போது கடைசியாக அப்பா அழுதிருக்கிறார். உயிர் மீதும் வாழ்தலின் மீது மிகவும் விருப்பம் கொண்டவர். அவர் மட்டுமல்ல நாம் எல்லோரும் வாழ்வதற்குத்தான் விரும்புகிறோம். அழுத அவர் கண்களை அதற்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. மரணத்தைவிட வாழ வேண்டும் என நினைக்கும் மனிதனின் ஆசைக்கு முன் நிற்க கொஞ்சம் நடுக்கமாகவே இருக்கின்றது.