Monday, April 9, 2012

இழக்கப்பட்ட தேசிய சினிமா

 இதுவரை மலேசிய சினிமா அப்படி என்ன சாதித்திருக்கிறது எனக் கேட்டால் ஒட்டுமொத்த வரலாற்றையும் நீண்டு கவனிக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு விதமான பாதிப்புக்களுக்குள்ளாகிய மலேசிய சினிமா அதன் தனித்துவத்தை அடைந்திருக்கிறதா என்பதே மிக முக்கியமான கேள்வி. ஒரு நிலப்பரப்பின் சினிமாவுக்கான தனித்துவம் என்றால் எப்படியிருக்க வேண்டும் எனக்கேட்டால், அந்த மண்ணின் வாழ்க்கையை, அங்குள்ள ஆதி உணர்வை, கலாச்சார வெளியைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பதே முதன்மை பதிலாக இருக்கும்.

இதற்கு முதலில் ஓர் இயக்குநர் அந்த மண்ணைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். அடுத்ததாக அந்த மண்ணின் ஒட்டுமொத்த அரசியலின் வரலாற்றையும் கலாச்சாரத்தின் வேர்களையும் அறிந்தவராக அல்லது தேடல் உள்ளவராக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட ஒரு கலைஞனால் மட்டுமே அந்த மண்ணையும் மண் சார்ந்த வாழ்வையும் அடையாளம்காட்ட முடியும்.