Friday, December 28, 2012

இமையத்தியாகம்- அ.ரெங்கசாமி


சுபாஷ் சந்திரபோஸ் - வரலாற்றின் மறக்கப்பட்ட ஆளுமை. உலகம் முழுக்கச் சென்று இந்திய இளைஞர்களை ஒன்றினைத்து வெள்ளையர்களுக்கு எதிரான சக்திமிகுந்த இராணுவப்படையை உருவாக்கினார். காந்தி அஹிம்சை வழியில்  போராடிக்கொண்டிருந்த அதே காலக்கட்டத்தில்தான் கப்பல் மூலம் டெல்லி வரை சென்று வெள்ளையர்களைத் தாக்கினார். அவர்களின் ஆயுத வருகையைக் கடல் பாதையை ஆக்கிரமித்ததன் மூலம் தடுத்தார். ஆயுதமின்றி போரிட முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளையர் படை பலவீனமானது. இந்திய சுதந்திரம் பெறுவதற்கு முன்பும், அல்லது காந்தியினுடான சுதந்திரப் பேச்சு வார்த்தை தொடங்குவதற்கு முன்பும், வெள்ளையர் படை இந்தியாவில் இருப்பதைக் கேள்விக்குறியாக்கியவர் சுபாஷ் சந்திரபோஸ். காந்தியின் பேச்சு வார்த்தையும் அவரின் அஹிம்சை போராட்டமும்தான் இந்திய சுதந்திரத்திற்குக் காரணம் எனக் கொண்டாடப்படுகின்றது. மிக எளிமையாக பகவத் சிங்-கின் உயிர்த்தியாகம் மறக்கப்பட்டதைப் போலத்தான் இதுவும். சுபாஷ் சந்திரபோஸ் தன் ஆளுமையால் அவர்களை விரட்டியடிக்க அடித்தளம் அமைத்தார். இதைத்தான் இந்திய வரலாற்றின் பின்னணியில் மறக்கடிக்கப்பட்ட விசயமா?

Tuesday, December 25, 2012

2012 ஆம் ஆண்டின் சினிமா பார்வை - 12012 ஆம் ஆண்டில் தமிழ் படங்களின் மீதான பொது அலசல் ஒன்று செய்யலாம் என நினைக்கிறேன். இன்றும் ஒரு சில நண்பர்கள் என் சினிமா  விமர்சனத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். நான் தமிழ் சினிமாவைக் குறை கூறுபவனோ அயல் சினிமாவைப் புகழ்ந்து பேசுபவனோ இல்லை. நான் சிறுவயது முதல் 'பயங்கர சினிமா பைத்தியம்'. தொலைக்காட்சி முன் படம் பார்த்துக் கொண்டேத்தான் உறங்குவேன். என் சினிமா விமர்சன நூலிலும் நயனம் பேட்டியிலும்கூட அதைப் பற்றிச் சொல்லியிருப்பேன். ஆகையால், சினிமா என் வாழ்நாள் இரசனை. அதை ஒரு கலையாகத் தரிசிப்பவன்.

அடுத்த ஆண்டு முதல் வல்லினத்தில் 'கலை சினிமாவின் மாற்றுத் தரிசனம்' எனும் சினிமா தொடரைத் தொடங்கியுள்ளேன். சினிமா ஒரு பக்கம் தொழில்ரீதியானதாகக் கருதப்பட்டாலும் இன்னொரு பக்கம் அதன் வெளிப்பாடு குறித்தும் அரசியல் குறித்தும் எப்பொழுதுமே விமர்சிக்க/விவாதிக்க வேண்டிய சூழல் உள்ளது. விமர்சனமும் விவாதமும் மட்டுமே சினிமாவை உயர்த்த முடியும்.

Tuesday, December 18, 2012

சிறுகதை: எச்சில் குவளை

மலைகள் இணைய இதழில் பிரசுரமான என்னுடைய அன்மைய சிறுகதை: எச்சில் குவளை.

காயத்ரியின் மூத்திரப் பையைக் கழுவதும் அவள் ஆடைகளைத் துவைப்பதும் அவளுக்கு உடை உடுத்துவதும் என அவளை முழுமையாக ஆட்கொண்டிருந்தான். இல்லை, காயத்ரித்தான் அவனை ஆக்கிரமித்திருந்தாள். அவன் கண்களை நேரேதிரே பார்த்து கூண் வளைந்த அவளுடைய முதுகை மேலும் தாழ்த்தி புன்னகைப்பாள். வாய்நீர் ஒழுக சிரித்து கைத்தட்டுவாள்........ மேலும் வாசிக்க:

http://malaigal.wordpress.com/2012/12/18/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87/

Friday, December 14, 2012

சிறுகதை: மோப்பம்

நான் ரவிகுமார். கொஞ்சம் உயரமாக இருப்பேன். கண்கள் இரண்டும் குழிக்குள் பதுங்கியிருக்கும். வலிமையற்றவன் போல உடலை இயக்கத் தெரியாமல் சோர்ந்திருப்பேன். யாராவது அழைத்தால் நான் பார்க்கும்விதம் எரிச்சல் ஊட்டும்படி இருக்கும். பெரும்பாலும் அழைப்பவர்களை நான் பொருட்படுத்துவதில்லை. எனக்கு நடக்க மட்டுமே தெரியும். உடலின் மையம் கால் பாதத்திற்கு இடம்பெயர்ந்துவிட்டதைப் போல கால்களில் வெறும் அவசரம் மட்டுமே. எங்கிருந்து எங்கு நகர எத்தனை அடிகள் வைத்தால் போதும் என்ற அளவிற்கு துல்லியமாக நடப்பேன். அது கண் தெரியாதவர்களின் கணக்கு. சட்டென பொருள்கள் மறைந்து வெறும் சுவராகி போகும்போது இருளைத் தடவுவேன்.

வேலை முடிந்ததும் ஜாலான் அம்பாங் பாசார் பூரோ கோடியில் இருக்கும் அப்பே நாசி லெமாக் கடையில் 10 நிமிடம் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு அறைக்கு உடனே சென்றுவிட வேண்டும். அதிகநேரம் நான் வெளியில் திரியும் தருணத்தை ஆபத்தாகவே உணர்கிறேன். ஒரு நிமிடத்திற்கு மேல் நான் உற்றுக்கவனிக்கும் எதன் மீதும் வெறுப்பு வந்துவிடுகிறது. உலகத்தையே வெறுத்துவிடும் அபாயம் எனக்கு அருகாமையிலே சுருண்டிருக்கும். விருவிருவென மாடியேறி அறைக்குள் புகுந்துவிடுவேன்.

Wednesday, December 12, 2012

கவிதை: உரோமங்களின் தனிமை


எப்பொழுதோ வந்துபோன
ஒரு பூனை உதிர்த்த உரோமத்தை
வெகுநேரம் கவனித்துக் கொண்டிருந்தேன்.

ஒற்றை உரோமம்.

எத்தனைமுறை பார்த்தாலும்
அது ஒற்றை உரோமமே.

மீண்டும் ஓர் இரவில்
விட்டுச் சென்ற உரோமத்தை
எடுத்துச் செல்ல வரக்கூடும்
பூனைகளின் மீது வெறுப்புக்கூடியது.

Saturday, December 1, 2012

சிறுவர் சிறுகதை :அல்ட்ராமேன் சைக்கிள்

சன்னலுக்கு அருகில் தொங்கிக் கொண்டிருந்த மரக்கிளை வெகுநேரம் கதவை உரசிக் கொண்டிருந்தது. முகிலன் மெல்ல கண்களைத் திறந்தான். சன்னல் கதவின் சிறு துளையிலிருந்து உள்ளே நுழைந்த ஒளி அவன் முகத்தில் படர்ந்தது.

தம்பி அழும் சத்தம் அவனுடைய காதைக் குடைந்தது. வெளியே வந்து சத்தம் கேட்டத் திசையை நோக்கிச் சென்றான். ஒரு கால் உடைந்த தம்பியின் சைக்கிள் முன்வாசல் கதவோரம் கிடந்தது. 

“தம்பி சைக்கிள் உடைஞ்சிருப்பா” என அம்மா கூறிவிட்டு அவனைச் சமாதானப்படுத்துவதில் மும்முரமாக ஆனார்.

Friday, November 9, 2012

சிறுவர் சிறுகதை: ஓரம் போ

பரப்பரப்பான நகரத்தின் சாலை அது. வாகனங்கள் அங்கும் இங்குமாக அலைமோதிக் கொண்டிருந்தன. ‘பீங்! பீங்!’ என வாகனங்கள் எழுப்பிய சத்தங்கள் காதைத் துளைத்தன. சாலையோரங்களில் நின்று கொண்டிருந்தவர்கள் சாலையைக் கடக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தனர்.

“சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என வேகமாக அந்த வாகன நெரிசலை உடைத்துக் கொண்டு முகிலனின் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. சாலையின் ஓரமாக முகிலன் சைக்கிளை வேகமாகச் செலுத்திக்கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் சைக்கிளின் பிடியைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் குமரன் நடுங்கியே போய்விட்டான்.

“வேகமா போவதே! பயமா இருக்கு..” எனக் கத்தினான் குமரன்.

Saturday, September 15, 2012

கே.பாலமுருகனின் சிறுவர் சிறுகதை நூல் வெளியீடு ‘தேவதைகளின் காகிதக் கப்பல்’


கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் ஏற்பாட்டில்
கே.பாலமுருகனின் சிறுவர் சிறுகதை நூல் வெளியீடு
‘தேவதைகளின் காகிதக் கப்பல்’

எழுத்தாளரும் ஆசிரியருமான கே.பாலமுருகன் அவர்களின் சிறுவர் சிறுகதை தொகுப்பான ‘தேவதைகளின் காகிதக் கப்பல்’ நூல் கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 07.10.2012(ஞாயிற்றுக்கிழமை) அன்று சுங்கைப்பட்டாணியில் மாலை வெளியீடு காணவிருக்கின்றது. மலேசியாவில் உள்ளூர் எழுத்தாளரால் எழுதப்பட்டு வெளியீடு காணும் முதல் மலேசியத்தன்மைமிக்க சிறுவர் சிறுகதை தொகுப்பு இது.

மலேசியத் தேர்வு வாரிய அதிகாரிகளின் மறுபார்வைக்குப் பிறகே 10 மாதிரி சிறுவர் சிறுகதைகள், சிறுவர் சிறுகதை எழுதுவது தொடர்பான வழிகாட்டி மற்றும் மாணவர்களுக்கான பயிற்சி எனப் பன்முகத்தன்மை வாய்ந்ததாக இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நூல் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும். கற்பனைவளம் என்பது ஒரு தலைமுறைக்குக் கிடைத்த வரமாகும். அதனை நாம் மாணவர்களிடமிருந்து பறித்துவிடக்கூடாது. கற்பனைவளமற்ற ஒரு தலைமுறை உருவாவதற்கு நாமும் கல்வி உலகமும் காரணமாக இருந்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே இந்த நூல் படைக்கப்பட்டு வெளியீடப்படுகின்றது. திரண்டு வந்து ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறோம். நிகழ்ச்சியின் விவரங்கள் பின்வருமாறு:

Thursday, August 16, 2012

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு- ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி - என்.கே.ரகுநாதன்
என்.கே.ரகுநாதன் அவர்கள் ஈழ இலக்கிய வெளியில் ஒரு நாவலாசிரியராக அறியப்பட்டவர். ‘தீண்டத்தாகதவன்’ எனும் ஈழச் சிறுகதை தொகுப்பில் அவருடைய ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ எனும் முக்கியமான நாவலிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி பிரசுரமாகியுள்ளது. அப்பகுதி ஒரு சிறுகதைக்கான தன்மையைப் பெற்றுள்ளதால் அந்தத் தொகுப்பில் இடம்பெறச் செய்துள்ளார்கள்.

ரெஜிஸ்த்தார் எனும் அதிகார வர்க்கம்

மலேசியச் சூழலில் முன்பெல்லாம் குழந்தை பிறந்தவுடன் காவல் நிலையத்தில்தான் பதிவார்கள். பெரும்பாலான பெயர்கள் எழுத்துப்பிழைகளுடன் பதியப்படுவது வழக்கமாகும். சுப்ரமணியம் எனக்

Saturday, July 28, 2012

ஆசிரியர்களுக்கான படைப்பிலக்கியம் பட்டறை 2012- மலாக்கா


கடந்த 20ஆம் திகதி மலாக்கா மாநிலம் சென்றிருந்தேன். பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் திரு.ராஜா அவர்களின் மூலம் மலாக்கா ஆசிரியர்களுக்கு படைப்பிலக்கியம் பட்டறையை வழிநடத்த வாய்ப்புக் கிடைத்திருந்தது. காலையிலேயே 7.00மணிகெல்லாம் மலாக்கா செண்ட்ரலை வந்தடைந்திருந்தேன். அரை மணி நேரத்திற்குப் பிறகு ஆசிரியர் ராஜா பள்ளியிலிருந்து கிளம்பி என்னை அழைத்துப் போவதற்கு வந்தார்.

பள்ளி வளாகத்திலேயே குளித்துக்கொள்ளலாம் என்றதும் எனக்கு அசூசையாக இருந்தது. இருந்தபோதும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டேன். அங்கிருந்து அவருடைய பள்ளியான பத்தாங் மலாக்காவிற்குச் செல்வதற்கு ஒரு மணி நேரம் எடுத்தது. மலாக்கா காடுகளைக் கடந்து பாதை நீண்டுகொண்டே போனது. மிகவும் சிறிய பாதை. இரு வழிக்கு ரொம்பவும் நெருக்கடியாக இருந்தது. பத்தாங் மலாக்கா பற்றியும் மலாக்கா தமிழ்ப்பள்ளிகள் பற்றியும் திரு.ராஜா சொல்லிக்கொண்டே வந்தார். தமிழ் மொழி சார்ந்து இவ்வருடத்தில் அங்கு நிகழும் முதல் நிகழ்ச்சி இதுவென்று தெரிவித்தார். மற்றபடி அவர் தன் சக நண்பர்களுடன் இணைந்து தனிப்பட்ட முறையில் பல நிகழ்ச்சிகளை அங்குச் செய்து வருகிறார்.

Friday, July 27, 2012

வாலைப் பிடிப்பவர்களும் வாலாட்டிகளும்

கதை, கவிதை, கட்டுரைகள் என ஆயிரம் ஆயிரமாக எழுதித் தள்ளிய பிறகும் ஒரு தனிப்பட்ட எழுத்தாளனின் வாலைப் பிடித்துக்கொண்டு அவனைக் கொண்டாடித் திரிவதுதான் இலக்கியத்தின் மூலம் ஒருவன் ஆகக் கடைசியாகக் கற்றுக்கொள்ளும் பாடமா? அப்படியானால் வாலைப் பிடித்துக்கொண்டிருக்கும் அந்த இலக்கியவாதியின் நிலைப்பாடுத்தான் என்ன? ஒரு பிம்பத்தின் மீது மிகையான பற்று வைத்துக்கொண்டு அவனுக்காகச் சேவையாற்றுவது, பிரச்சாரம் செய்வது, அவனுக்காக விவாதிப்பது, எல்லாவற்றுக்கும் அவனை மட்டுமே பரிந்துரைப்பது என ஒரு தனி மனிதனின் அத்துனைச் சக்தியும் அறிவும் சுரண்டப்பட்டு எவனோ ஒருவனின் காலடியில் அடமானம் வைக்கப்படுகின்றன. இதைப் பலவேளைகளில் நான் உணர்ந்து அதிலிருந்து மீண்டிருக்கின்றேன்.

Saturday, July 14, 2012

பில்லா 2 – அறத்திற்கு வெளியேஅஜித் படம் என்பதால் வழக்கம்போலவே ஆங்காங்கே ஆர்பாட்டம், பாலாபிஷெகம் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். தன் சொந்த உழைப்பின் மூலம் தமிழ் சினிமாவில் ஓர் அடையாளத்தைத் தேடிக்கொண்ட நடிகர் அஜித். சினிமா துறையில் எந்தச் சிபாரிசும் இன்றி பின்னணியும் இன்றி கதாநாயகத்துவத்தை உருவாக்கிக்கொண்டவர். பில்லா படமும் அவருடைய கதாநாயகத்துவத்தை வழிப்படும் ஒரு படைப்புத்தான். கமல் எப்படித் தன் ஆற்றலை, தன் அறிவை தானே கொண்டாடிக்கொள்ள படம் எடுப்பாரோ அதே போல பில்லாவும் அஜித்தின் பிம்பத்தை உயர்த்திக் காட்டப்படும் தருணங்களாக அமைக்கப்பட்டிருக்கிறது.

பில்லா படத்தின் நேர்மை மிக முக்கியமான விவாதிக்க வேண்டிய விசயமாகும். எந்த இடத்திலும் ‘பில்லா’ தான் நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ நியாயப்படுத்தவில்லை.

Thursday, July 12, 2012

சிறுகதை: வீட்டைத் தொலைத்தவர்கள்


நான் மணியத்தின் மகன் சிவா

அப்பா பெயர் மணியம். அப்படிச் சொன்னால் சிலருக்கு மட்டுமே தெரியும். வழக்கமாக அவரைக் ‘கட்டை மணியம்’ என்றுத்தான் அழைப்பார்கள். வழியில் சந்தித்தத் தெரிந்தவர்களிடம் ‘கட்ட மணியத்தெ பாத்தீங்களா?” எனக் கேட்டேன். தெரியாதவர்களிடம், “ தலை சொட்டெ, இலேசா கூன் வலைஞ்சிருக்கும், கட்டையா இருப்பாரு... சொந்தமா பேசிக்கிட்டு இருப்பாரு..அவரெ எங்காவது பாத்தீங்களா?” எனக் கேட்டேன். அங்கு யாரும் யாரையும் தேடுபவர்கள் கிடையாது. அதிர்ச்சியைத் தரக்கூடிய எந்தவொரு கேள்வியையும் அவர்கள் சந்திக்கத் தயாரில்லை. அதிர்ச்சியான விசயங்கள் அவர்களின் நேரத்தில் சிலவற்றை பிடுங்கிக்கொள்ளும் என்கிற அச்சம். சாரை சாரையாகக் கடந்து போகும் வாகனங்களுக்கும் மனிதர்களுக்கும் மத்தியில் கட்டை மணியம் எங்கு இருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்?

எங்குத் தேடியும் அப்பா கிடைக்கவில்லை. வெகுநேரம் மங்கிய வெளிச்சத்துக்கு மத்தியில் நகரம் முழுக்கவும் தேடி அலைந்துவிட்டு சீன ஆப்பே கடையில் வந்து அமர்ந்துவிட்டேன். கண்ணுக்கெட்டிய தூரம்வரை வெறும் விட்டுவிட்டு மின்னும் வெளிச்சமும் இருளும்தான். சாலைகள் பாம்பு போல பளபளவென நெளிந்தன. வெள்ளை காற்சட்டை, கோடு போட்ட நீல சட்டை. அப்பா வீட்டிலிருந்து வெளியேறும்போது அணிந்திருந்த உடையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திவிட்டு வருவோர் போவோரைக் கவனித்துக்கொண்டிருந்தேன்.

Wednesday, July 4, 2012

தினக்குரல் ஞாயிறு பதிப்பில் நேர்காணல்


“படைப்பிலக்கியத்தின் குரல் கூர்மையானது”

1.   உங்களுக்குள் ஓர் இலக்கியவாதி இருப்பதை எப்போது உணர்ந்தீர்கள் பாலா?

பதில்: என்னுடைய இலக்கிய செயல்பாடு 15 வயதிருக்கும்போது நயனத்தில் பிரசுரமாகிய ஷோபியின் உண்மை கதையின் வாசகனாக இருக்கும்போதே தொடங்கிற்று எனத்தான் சொல்ல வேண்டும். வெள்ளிக்கிழமை வந்ததும் நயனம் இதழ் வாங்குவதற்காகச் சைக்கிளில் நகரத்தை நோக்கி பயணிப்பேன். ஆனால் அப்பொழுது நான் ஒரு வாசகனாக மட்டுமே இருந்தாலும்கூட கதை மீதான ஆர்வம் மிகுதியாக இருந்தது. கதைகளைத் தேடி அலைந்திருக்கிறேன். புனைவு மீதான அழுத்தமான ஈடுபாடு எனக்குள் இருக்கும் ஓர் இலக்கியவாதியை மெல்ல வளர்த்திருக்கிறது. 2004ஆம் ஆண்டில் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேர்ந்த பிறகு சிறுகதைகள் எழுதி வெற்றிப்பெற்று இலக்கிய வெளிக்குள் எனக்கொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டேன். கல்லூரியில் நடைப்பெற்ற ‘இளவேனில்’ நூல் வெளியீட்டு விழாவில் என் முதல் சிறுகதைக்கான பரிசும் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றது. என்னுடைய தமிழ் விரிவுரையாளர் திரு.ப.தமிழ்மாறன் அவர்களே எனக்குள் இருக்கும் எழுத்தாற்றளுக்கு வலு சேர்த்தவர். எனக்குள் நான் கண்டடைந்த மாற்று மனம் நிஜ உலகிற்குள்ளிருந்து புனைவை நோக்கி அப்பொழுதிலிருந்தே செயல்படத் துவங்கியது.

2.   உங்களுடைய இலக்கியப் பயணத்திற்கு தங்களின் குடும்ப சூழல் உறுதுணையாக (இப்போதும் அப்போதும்) இருந்ததா?

Friday, June 15, 2012

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு... 4 - எம்.ஜி.ஆர் கொலை வழக்கு - ஷோபா சக்தி

இன்று தமிழின் மிக முக்கியமான படைப்பாளியாக அடையாளங்காணப்பட்டு வருபவர் ஷோபா சக்தி. புனைவு எல்லைக்குள் தங்களின் தீவிரமான மறுவாசிப்பைச் செய்யும் யாவரும் ஷோபா சக்தியை மிகச் சிறந்த கதைச்சொல்லியாக உணர்கிறார்கள். இவர் எழுதிய ‘கொரில்லா ‘ மற்றும் ‘ம்’ நாவல் இரண்டுமே தமிழ் இலக்கியச் சூழலில் பெரிதும் கவனப்படுத்தப்பட்ட படைப்புகளாகும்.

எம்.ஜி.ஆர் கொலை வழக்கும் எம்.ஜி.ஆர்களும்

ஷோபா சக்தியின் நான்காவது சிறுகதை தொகுப்பு இது. தலைப்பைப் படித்ததும் வாசிக்க ஆர்வத்தை உருவாக்கும் வகையில் அமைந்திருந்தது. எம்.ஜி.ஆர் கொலை வழக்கு என்பது இத்தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதை. இந்தப் பகுதியே கொரில்லா நாவலின் துவக்கம். அந்த நாவலைப் படிக்கும்போதே இந்தப் பகுதி ஒரு சிறுகதைக்குரிய தன்மையில் இருந்ததை உணர்ந்திருந்தேன். இப்பொழுது இதைச் சிறுகதையாக இங்கு வாசிக்கும்போது என் ஊகம் சரியாகியிருப்பதை மீட்டுணர முடிகிறது.

Wednesday, May 30, 2012

2010க்குப் பிறகு அறிமுகமான படைப்பாளர்கள் - வாசகர்கள்சமீபத்திய மலேசிய இலக்கியச் சூழலில் நம்பிக்கை தரும் படைப்பாளிகளாகவும் வாசகர்களாகவும் ஒரு சிலர் அடையாளம்காணப்பட்டே வருகிறார்கள். மரபார்ந்த சிந்தனை அமைப்புமுறையிலிருந்து மாறுப்பட்டு சிந்திக்க இளைஞர்களின் வருகை மிக அவசியமானது. இலக்கியம் சார்ந்து தன் இயங்குத்தளத்தை விரிவுப்படுத்திக்கொள்வதோடு அதனை எந்த அதிகார சக்தியிடமும் ஒப்படைக்காமல் தனித்துவமாக செயல்படுவதும் முக்கியமானவையாகும். அதனைப் பற்றியே தொடர்ந்து முன்வைக்கவும்படுகிறது.

கவிஞர் பொன்வாசுதேவன் மூலம் எனக்கு அறிமுகமானவர் நித்தியா வீரரகு. முகநூலில் என்னுடன் கவிதைகள் தொடர்பாக உரையாடத் துவங்கினார். அதன் பின் சிவா, நவீன் என அவருடைய அறிமுகம் விசாலமடைந்ததும் வல்லினத்தைக் கண்டடைந்தார். வல்லினத்தின் மூலம் தன் இலக்கிய வாசிப்பை மேலும் கூர்மைப்படுத்திக்கொண்டவர், வல்லினத்தில் இயக்கவூட்ட சினிமா தொடர்பான தொடரையும் எழுதிக் கொண்டிருக்கிறார். அண்மையில் வல்லினம் நடத்திய சந்திப்பில் டாக்டர் சண்முகசிவா நித்தியாவின் மொழிவளத்தைப் பாராட்டியிருந்தார். நித்தியா மிக முக்கியமான கவிஞராக மீட்டெடுக்கப்படுவார் என்றே கருதுகிறேன்.

Sunday, May 27, 2012

திரை விவாதம்: கவனிக்கத்தக்க தமிழ் சினிமா: ஆண்மையும் அதிகாரமும்

தமிழ் சூழலுக்குள் மலிவான வியாபாரத்திற்குள்ளான பல விசயங்களில் சினிமாவும் முக்கியமான ஒன்றாகும். மேலும் சினிமா சார்ந்து ஒரு பெரும் முதலீட்டு களமாகச் தமிழ்நாடு ஆகிவிட்டதன் மூலம் அங்கு உருவான வெகுஜன இரசனை என்பது ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு வளரவே இல்லை என்றுத்தான் சொல்ல வேண்டும். குறிப்பாக தமிழ்நாட்டில் உருவான தயாரிப்பாளர்கள் ஒரு சங்கமாகவும் அல்லது ஒரு குடும்பப் பெரும் நிறுவனமாகவும் வளர்ந்து வெகுஜன இரசனையை விலைக்கொடுத்து வாங்கிக் கோலோட்சி நடத்தி வருகின்றனர். அவர்களால் தொடர்ந்து தருவிக்கப்படும் படம் என்பது பொதுமக்களின் இரசனையை மலிவான தளத்திலேயே வைத்து வியாபாரம் நடத்தி இலாபம் சம்பாரிக்க உதவ வேண்டும் என்பதே. அத்துடன் சினிமாவுக்கான தேடலும் பங்களிப்பும் முடிந்துவிடுகின்றன. கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுவது போல வாழ்க்கை ஒரு பண்ட மாற்று தொழில்நுட்பமாக ஆகிவிட்ட பிறகு சினிமா உட்பட அனைத்துக் கலைகளுமே இலாபத்துக்காக மட்டுமே விற்கப்படத் தொடங்கிவிட்டன.

இதையெல்லாம் மீறி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நல்ல சினிமாக்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்து கொண்டுத்தான் இருக்கின்றன. அவை சிலசமயங்களில் கவனிக்கப்படாமலும் வணிக ரீதியில் தோல்வியுற்றும் போய்விடுவதால், அதனைப் பற்றி மீண்டும் உரையாட வேண்டியிருக்கிறது. நல்ல சினிமா முயற்சிக்கு நாம் தரும் அடையாளம் அது. இங்கு நான் குறிப்பிடும் சினிமாகள் தர வரிசை அடிப்படையில் அல்ல.

1. யுத்தம் செய் – மிஷ்கின்

கடந்த வருடம் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த மிக முக்கியமான மர்மப்படம். கலை அமைதியுடன் மர்மத்தை ஒரு கருப்பொருளாக வளர்த்துக் காட்டக்கூடிய சாத்தியங்களை இரசிக்கும் வகையில் தந்த படம். சேரன் தன் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பாக இருந்தது. வழக்கமாக மிக நல்லவராக மட்டும் வந்துவிட்டுப் போகும் சேரனின் மாறுப்பட்ட நடிப்பாற்றலை இப்படத்தில் பார்க்க முடிந்தது.

இப்படத்தின் ஒளிப்பதிவு தனித்துவமான ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தது. காமிரா கதைக்குள் ஒளிந்திருக்கும் ஒரு மர்மத்தைப் பெரிதுப்படுத்தி அதனை நோக்கி நம்மை ஈர்க்கக்கூடிய வகையில்

Thursday, May 10, 2012

கவிதை: பொம்மைகளின் உரையாடல்


வட்டத்திற்குள்ளேயே சுழலும்
கரடி பொம்மையும்
கைத்தட்டினால் கூவும் பொம்மை குருவியும்
உதறினால் வெளிச்சம் கக்கும்
நெகிழி உருண்டையும்
கலர் கலர் நீர்த்துப்பாக்கிகளும்
கடைக்கு வெளியே நின்று

Tuesday, May 1, 2012

ஒளி என்பது வெளுப்பான இருட்டு - பித்தனின் உடையாத இரவுகள் (கே. பாலமுருகன் சிறுகதைகள் - ஒரு பார்வை)

இருள் என்பது குறைந்த ஒளி என்கிற பாரதியின் கூற்றை முற்றமுழுக்க மறுதலிப்பவராய் தெரிகிறார் பாலமுருகன். அவரைப் பொறுத்தவரை ஒளி என்பதேகூட வெளுப்பான இருட்டுதான் போலும். ஆமாம், அவருக்கு பூமியே ஒரு இருளுருண்டையாகத்தான் தெரிகிறது. எனவே அவரது கதையுலகமும் இருளுக்குள்தான் இயங்குகிறது. இருட்டு இருட்டு என்று இருட்டைப் பற்றியே இத்தனைக் கதைகள் எழுத முடியுமா என்கிற மலைப்பு ஒருபுறமிருக்க அதைப் பற்றி இன்னும் சொல்லிமுடிக்கவில்லை என்கிற ஒரு துயரத்தோடுதான் அவரது ஒவ்வொரு கதையும் முடிந்திருக்கிறது என்பதைத்தான் கவனப்படுத்தி சொல்லவேண்டியிருக்கிறது.

Monday, April 16, 2012

எதிர்வினை: நடிகர் சேரனின் விலை ஒரு லட்சம்?


மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில் தமிழ் நாவல் எழுதும் போட்டி-3 கோலாலம்பூரில் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகையாக பிரபல நடிகர் சேரன் அவர்கள் வந்திருந்தார். வழக்கமாக இது போன்ற இலக்கியம் மொழி சார்ந்த நிகழ்ச்சிகளுக்குத் தொடர்பே இல்லாத பிரமுகர்கள் வந்து தலைமை தாங்குவது சர்வதேச நோயாக நிறுவப்பட்டிருக்கின்றது. சிங்கப்பூரில் நடந்த உலக எழுத்தாளர் மாநாட்டின் துவக்க நிகழ்ச்சிக்கு வைரமுத்துவையும் நடிகர் சிவகுமாரையும் வரவழைத்து தங்களின் நிகழ்ச்சிக்கு ஒரு புகழ்ச்சியைத் தேடிக்கொண்ட அதே போன்ற முயற்சிகள்தான் மலேசியாவிலும் தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் போன்ற அரசாங்க சார்பற்ற பொது அமைப்புகள் நியாயமாக நடந்துகொள்ளவில்லையென்றாலும் பரவாயில்லை ஆனால், சமூகப் பிரதிநிதியாகச் செயல்படும் ஒரு பொது அமைப்பு

Monday, April 9, 2012

இழக்கப்பட்ட தேசிய சினிமா

 இதுவரை மலேசிய சினிமா அப்படி என்ன சாதித்திருக்கிறது எனக் கேட்டால் ஒட்டுமொத்த வரலாற்றையும் நீண்டு கவனிக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு விதமான பாதிப்புக்களுக்குள்ளாகிய மலேசிய சினிமா அதன் தனித்துவத்தை அடைந்திருக்கிறதா என்பதே மிக முக்கியமான கேள்வி. ஒரு நிலப்பரப்பின் சினிமாவுக்கான தனித்துவம் என்றால் எப்படியிருக்க வேண்டும் எனக்கேட்டால், அந்த மண்ணின் வாழ்க்கையை, அங்குள்ள ஆதி உணர்வை, கலாச்சார வெளியைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பதே முதன்மை பதிலாக இருக்கும்.

இதற்கு முதலில் ஓர் இயக்குநர் அந்த மண்ணைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். அடுத்ததாக அந்த மண்ணின் ஒட்டுமொத்த அரசியலின் வரலாற்றையும் கலாச்சாரத்தின் வேர்களையும் அறிந்தவராக அல்லது தேடல் உள்ளவராக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட ஒரு கலைஞனால் மட்டுமே அந்த மண்ணையும் மண் சார்ந்த வாழ்வையும் அடையாளம்காட்ட முடியும்.

Wednesday, April 4, 2012

நூல் அறிமுகம் – ஆர்.டி.எம் தொலைக்காட்சி நிகழ்ச்சி

ஆர்.டி.எம் தொலைக்காட்சியிலிருந்து ஒரு குழு என்னை நேர்காணல் செய்தது. மாதந்தோறும் ஒளிப்பரப்பாகும் “நூல் வேட்டை” நிகழ்ச்சிகாகவே அவர்கள் நாவலாசிரியரான என்னைச் சந்தித்தார்கள். ஒரு சில கேள்விகளை மட்டும் முன்வைத்து எங்களின் உரையாடல் நீண்டது. விரைவில் இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும்.உங்கள் நாவலின் உட்பொருள் என்ன?

பாலமுருகன்: இந்த நாவல் மலேசியத் தமிழர்களின் தோட்ட அவலங்களைப் பதிவு செய்யும் வகையில் எழுதப்பட்டிருந்தாலும், மையப் பிரச்சனையான வறுமையும் கடன் தொல்லையும் மட்டுமே நாவலின் ஆதாரம். பலமுறை கையாளப்பட்ட கதைக்கருவாக இருந்தாலும் நாவல் அதனை நோக்கி பெரும்வாழ்வாக விரிகிறது. ஒரு குடும்பம் கடனாலும் அதிகார வர்க்கத்தின் சுரண்டலாலும் எப்படிச் சிதைந்து போகின்றன என்பதையே நாவல் மையப்பொருளாகப் பெசுகின்றன.

Friday, March 30, 2012

சிறுகதை: மேம்பாலம்


துரை மாமா வேலை முடிந்து வீடுவரை வந்திருந்தார். கதவைத் திறந்ததும் எல்லோரும் திக் பிரமை பிடித்ததைப் போல அமர்ந்திருந்ததைப் பார்த்தார். தோளில் மாட்டியிருந்த பையை மேசையின் மீது வைத்துவிட்டு குவளையைக் கையில் எடுத்த கனம், தடார் தடார் என அதிர்வு. 

“கேக்குதா? லோரி..”

மயக்கமே வருவது போல ஆகிவிட்டது. மாமா குவளையில் நீரை நிரப்பி ஒரு மிடறில் தொண்டையை நனைத்தார். அடுத்ததாக இன்னொரு லோரி எப்பொழுது வேண்டுமென்றாலும் கடந்து போகலாம். வீடு ஓர் அதிர்வுக்காகத் தவம் கிடந்தது. அது மிகக் கொடூரமான அதிர்வு. கூரையும் சுவரும் இடிந்து சரிந்துவிடுவது போன்ற ஒரு கனநேர பயம். நெடுஞ்சாலை சிறுக சிறுக விரிந்து பாதி நிலத்தை விழுங்கிவிட்டாயிற்று. மூசாங் கம்பம் தொடங்கும் இடத்தில் உடும்புக்கார தாத்தா வீடு கட்டும்போது இதைப் பற்றியெல்லாம் யோசித்திருக்க மாட்டார். காடு பிளக்கப்பட்டு இங்கொரு நெடுஞ்சாலை வந்து வீடுகளுக்கு மேல்வரை நீளும் என முந்தைய சந்ததிகளுக்குத் தெரிந்திருக்காது.

Tuesday, March 27, 2012

மலேசிய எழுத்தாளர் சங்கமும் தேசிய நூலகமும்- புதுமை/புதிய துவக்கம்


25 மார்ச் கோலாலம்பூரிலுள்ள தேசிய நூலகத்தில் என் நாவல்’ நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ வெளியீடு கண்டது. மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் 2007ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற இரு நாவல்களையும் புத்தகமாகப் பிரசுரித்து அதனைச் சமீபத்தில் தேசிய நூலகத்தின் ஆதரவுடன் கோலாலம்பூரில் வெளியீடு செய்தது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். ஒரு புதிய துவக்கமாக நிகழ்ச்சி அரசின் ஆதரவுடன் நடந்தேறியது நல்ல முயற்சியாகும். நாவல் வெளியீட்டது மிகத் தாதமாக இருந்தாலும் நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் திட்டமிட்டு முன்னெடுத்திருக்கிறார்கள்.

நாவல் வெளியீட்டு விழாவில் எனக்கு மாலையும் பொன்னாடையும் வேண்டாம் என மறுத்திருந்தேன். ஒரு படைப்பாளியின் உணர்வுக்கும் தேவைக்கும் மதிப்பளித்து அவர்கள் என் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சியளிக்கும் செயலாகும். மேடை கலாச்சாரம்/மேடை அலங்காரங்கள் குறித்து எனக்கிருக்கும் எதிர்வினை சார்ந்தே நான் இயங்கிக்கொண்டிருக்கிறேன். ஒரு படைப்பாளிக்கு எது தேவை எது தேவை இல்லை எனத் தீர்மானிக்கும் உரிமையும் சுதந்திரமும் அவனுக்கு இருக்கின்றன. ஆக படைப்பாளியாவது இந்தச் சமூகத்தில் உரிமையுடனும் சுதந்திரடனும் செயல்பட இந்தச் சமூகம் அனுமதிக்க வேண்டும். 

இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக மாணவர்களை இந்த நாவல் வெளியீட்டு நிகழ்ச்சியுடன் இணைத்திருக்கிறார்கள். அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களான சுரேன், சத்திஸ்வரி, லோகேஸ்வரி மற்றும் சாந்தி அன்று வெளியீடு கண்ட நாவல்களைத் திறனாய்வு செய்து படைத்திருந்தார்கள். இலக்கியத்தை நோக்கி மாணவர்களை ஒரு பொது மேடையில் இணைப்பது என்பது பாராட்டத்தக்க செயல். அவர்கள் விமர்சனம் திறனாய்வு என்பதெல்லாவற்றையும் கல்விக்கூடங்களிலேயே

Saturday, March 24, 2012

நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் – நாவல் வெளியீடு

i invite all friends to my novel launching of Karikalan award winner "Nagarnthu kondirukkum vaasalgal"

event: 25th march 2012 (sunday)
          after 1pm at Perpustakaan Negara,
          Jalan Tun Razak, Kuala Lumpur

thanks, regards
K.Balamurugan
0164806241

Sunday, March 18, 2012

கழுகு: திரைப்பார்வை -பிணம் தூக்கிகள்


மலைக்கிராமம் கதைக்களம். மலை உச்சியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் பிணங்களைப் பள்ளத்தாக்கில் இறங்கி  சேகரித்து வரும் தொழில் செய்யும் நான்கு நண்பர்கள் பற்றிய கதை இது. வியக்க வைத்த கதை தேர்வு. படத்தின் துவக்கக் காட்சியில் காதல் ஜோடி மலையிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். இருவரின் குடும்பத்தார்களிடமும் பிணத்தை எடுத்து வரப் பேரம் பேசிவிட்டு நால்வரும் மூன்று நாள் மலைக்கு அடியில் 4000 மீட்டர் பயணம் செய்கிறார்கள். ஆரம்பமே படத்தின் மீது ஆர்வத்தைக் கூட்டியது. வாழ்க்கையில் விரக்தியுற்ரவர்கள், காதலில் தோல்வியுற்றவர்கள் மலை மேலேயிருந்து தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது மட்டுமே நாம் அறிந்த மிக அடிப்படையான விசயம். ஆனால் அப்படிக் கீழே விழுந்து உடல் சிதறி போயோ அல்லது தண்ணீரில் சிக்கித் தொலைந்தவர்களையோ தேடிக் கண்டுப்பிடித்து வருபவர்களின் வாழ்வை யாரும் இதுவரை கவனப்படுத்தியது கிடையாது. அந்த வகையில் இதுவொரு முக்கியமான படம்.

Monday, March 12, 2012

நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் – நாவல் வெளியீடும் நாவலின் வரலாறும்


பல வருடமாகக் காத்திருந்த நாவல் வெளியீடு இது. வருகின்ற 25 ஆம் நாள் மார்ச் மாதத்தில் கோலாலம்பூர் தேசிய நூலகத்தில் மாலை 2.00 மணிக்கு வெளியீடக் காணவிருக்கின்றது. 2007ஆம் ஆண்டு மலேசிய நாவல் எழுதும் போட்டியில் முதல் பரிசைப் பெற்று எனக்கொரு அடையாளத்தையும் கவனத்தையும் உருவாக்கிக்கொடுத்த நாவல் அது. நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள். 245 பக்கங்கள். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும், ஓம்ஸ் தியாகராஜன் குழுமம், மலேசியத் தொலைக்காட்சி ஆஸ்ட்ரோவும் இணைந்து நடத்திய 2006ஆம் ஆண்டு நாவல் போட்டியில் 30க்கும் மேற்பட்ட நாவல்களில் இந்த நாவல் சிறந்த நாவலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசு தரப்பட்டது. பரிசு என்பதையும் மீறி அது எனக்கொரு அங்கீகாரமாக அமைந்திருந்தது.தொடர்ந்து இலக்கியத்தில் இயங்குவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்திக்கொடுத்தத் தருணம் அது.

Monday, March 5, 2012

சிறுகதை- கட்டுரை (vallinam march issue)

http://www.vallinam.com.my/issue39/story.html
சிறுகதை: மேம்பாலம்: கே.பாலமுருகன்

மூசாங் கம்பம் தொடங்கும் இடத்தில் உடும்புக்கார தாத்தா வீடு கட்டும்போது இதைப் பற்றியெல்லாம் யோசித்திருக்க மாட்டார். காடு பிளக்கப்பட்டு இங்கொரு நெடுஞ்சாலை வந்து வீடுகளுக்கு மேல்வரை நீளும் என முந்தைய சந்ததிகளுக்குத் தெரிந்திருக்காது............Read more

http://www.vallinam.com.my/issue39/essay.html
இழக்கப்பட்ட தேசிய சினிமா: கே.பாலமுருகன்

இதற்கு முதலில் ஓர் இயக்குநர் அந்த மண்ணைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். அடுத்ததாக அந்த மண்ணின் ஒட்டுமொத்த அரசியலின் வரலாற்றையும் கலாச்சாரத்தின் வேர்களையும் அறிந்தவராக அல்லது தேடல் உள்ளவராக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட ஒரு கலைஞனால் மட்டுமே அந்த மண்ணையும் மண் சார்ந்த வாழ்வையும் அடையாளம்காட்ட முடியும்........Read more

Wednesday, February 29, 2012

"சினிமா எனும் கலையைக் கொன்றவர்கள்" - கே.பாலமுருகன்கேள்வி : சினிமா மீதான ஆர்வம் எப்படி வந்தது?

பதில் : நான் சிறுவயது முதல் சினிமா பார்த்துப் பழகியவன். வீட்டில் தனிமையில் இருந்த பெரும்பாலான காலங்களில் சினிமா மட்டுமே பார்த்து என் பொழுதுகளை நிரப்பியிருக்கிறேன். வெறும் பழக்கமாக இருந்த சினிமா என் வாழ்க்கையின் முக்கியமான பகுதியாகியிருந்தது. எல்லோருக்கும் அது பொழுதுபோக்காக இருக்கையில் எனக்கு மிக உயர்ந்த ஒரு கலை வடிவமாகத் தெரிய ஆரம்பித்தது. (இப்படிச் சொல்வதே கொஞ்சம் வருத்தமாகவும் நகைப்பாகவும் இருக்கிறது) சினிமா என்பதே கலைத்தானே? சமூகம் மறந்துவிட்ட ஒன்றை மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டிய கட்டாயம்.

கேள்வி : சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சமாகக் கருதப்பட என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

பதில் : சினிமாவின் தேவை என்ன என்பதைத்தான் ‘தீர்ந்து போகாத வெண்கட்டிகள்’ எனும் என்னுடைய சினிமா நூலில் விரிவாக உரையாடியுள்ளேன். கட்டாயம் இந்த நூலைப் படித்து முடிப்பவர்களுக்கு சினிமா என்பது எத்தனை ஆழமான கலை வடிவம் என்பதை உணர முடியும்.

Friday, February 17, 2012

மெரினா திரைப்படம் - கொஞ்சமாகப் பிழைத்துக்கொண்ட கலை


மெரினா கடற்கரை – பசிக்கிறது எனும் ஓர் ஆதி செயலை எதிர்க்கொள்ள எத்தனை வகையான போராட்டம், வாழ்தல், தப்பித்தல், சுரண்டல், புறக்கணிப்பு நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. உலகத்தின் ஒரு பகுதியா மெரினா எனும் பகுதியில் நடந்து முடிந்த பல்லாயிரம் கணக்கான வாழ்வின் மீதத்தைப் பற்றிய கதை.

வழக்கம் போல பாண்டிராஜ் படத்தில் வரும் கதையின் மையத்தைவிட்டு நகரும் கிளைக்கதைகள் இப்படத்திலும் வந்து போகின்றன. காதல் இப்படத்தில் கேலி செய்யப்பட்டுள்ளது, விமர்சிக்கப்பட்டுள்ளது. மெரினாவிற்கும் காதலுக்கும் நீண்ட நெடிய தொடர்பு இருப்பதைச் சித்திரமாக வரைந்து வைத்திருக்கிறது மெரினா வாழ்வு. காதலர்கள் வாங்கி உண்பதற்காகச் சுண்டல் விற்கப்படுகிறது. அந்தச் சுண்டல்களை விற்று ஏதோ கொஞ்சமாக

Thursday, February 16, 2012

தமிழ் எழுத்துகள் அறிமுக வாரம் 2012

எழுத்துகளை நேசிக்க வைப்பதன் மூலம் அவனுடைய மொழியைக் காப்பாற்ற முடிகிறது


மாணவர்களுடன் இன்றுதான் இந்த எழுத்துகளைத் தரிசிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது

Thursday, February 9, 2012

கலை இலக்கிய விழா 4 – நூல் வெளியீடு


5ஆம் திகதி கோலாலம்பூரில் வல்லினம் ஏற்பாட்டில் 4ஆவது கலை இலக்கிய விழா 4 நூல்களின் வெளியீட்டுடன் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. வல்லினம் ஆசிரியர் ம.நவீன், யோகி, சிவா பெரியண்ணன் மேலும் பல நண்பர்களின் ஒத்துழைப்புடன் விழாவை முன்னெடுக்க முடிந்தது. 2மணியைப் போல விழா ம.நவீனின் வரவேற்புரையுடன் தொடங்கியது. வல்லினம் பதிப்பகத்திற்கும் மற்ற பதிப்பகத்திற்குமான வித்தியாசத்தை முன்வைத்து, மற்ற மலேசிய எழுத்தாளர்கள் அதிகாரத்தின் முன் கூனி குறுகி நின்று புத்தகம் போடும் அவலத்தை அழுத்தமாகச் சொன்னார். புத்தகம் எழுதும் எழுத்தாளர்களுக்கு ரோயல்டி வழங்குவதைப் பற்றியும் அவர் குறிப்பிட்டுப் பேசினார். அரசியல்வாதிகளை நம்பி புத்தகம் போடும் எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு விழாவை எப்படி அரசியல்வாதிகள் தங்களின் பிரச்சார மேடையாகப் பாவித்துக்கொள்கிறார்கள் என்றும் எடுத்துரைத்தார்.

Tuesday, February 7, 2012

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு... 2 - ஆற்றல் மிகு கரத்தில் – கே. டானியல்அறிமுகம்: யாழ்ப்பாணத்தில் 1927-இல் பிறந்தவர் டானியல். இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தில் பங்கு கொண்டு 11 மாதங்கள் சிறைப்பட்டார். தமிழகத்திற்கு வந்து தஞ்சையில் தங்கினார். இலங்கையில் தீண்டாமை ஒழிப்பு வெகு ஜன இயக்கத்தின் அமைப்பாளராகவும், மக்கள் கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவராகவும் இருந்தவர். தஞ்சையில் மார்ச்சு 1986-இல் மரணமடைந்தார். ஈழத்து பஞ்சமர் மக்களுக்காகத் தோழர் டானியல் தன் இலக்கிய இயக்கப் பணிகளை அர்ப்பணித்தவர். தமிழ் இலக்கியத் துறைக்கு நாவல், குறுநாவல், சிறுகதை என பல வடிவங்களில் தம் பங்களிப்பைச் செய்துள்ளார்.

Wednesday, February 1, 2012

போராளி : மனநோய் சித்திரம்

“இந்தச் சமூகத்தில் ஆளுமைகளுக்கு இரண்டு வகையான தண்டனைகள் மட்டுமே தரப்படுகின்றன. ஒன்று அரசியலுக்கு அவர்களை அடிமையாக்கி அவர்களின் அறிவை அடகு வைப்பது அல்லது அதிகம் படித்தப் பைத்தியம் என மனநோயாளியாகச் சித்தரிப்பது”

மனநோய் என்பது எப்படிப்பட்டது? அதன் உக்கிரம் என்ன? அதை இந்தச் சமூகம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எப்படிக் கையாண்டு வருகிறது? மனநோய் பற்றிய விசயங்களைச் சினிமாவும் மற்ற கலை வடிவங்களும் எப்படிப் பதிவு செய்திருக்கின்றன? என்ற கேள்விகளுடன் இப்படத்தை அணுக வேண்டியுள்ளது. இதன் மூலமே போராளி படத்தின் முக்கியத்துவம் பலவீனம் என உரையாடலை நீடிக்க வாய்ப்பாக இருக்கும்.

சமீபக் காலமாக சமுத்திரக்கனி - சசிக்குமார் கூட்டணி தமிழ் சினிமா சூழலில் உருவாகி நிலைக்கொள்கின்றன. சசிகுமார் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பதும், சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிக்குமார் நடிப்பதும் என அந்தப் பாரம்பரியம் தொடர்கிறது. இருவருமே அந்தந்தப் படங்களில் கச்சிதமாகப் பொருந்துவதால் அதை ஒரு முரணாகவும் பார்க்க முடியவில்லை. தமிழ் சினிமா சூழலில்

Friday, January 13, 2012

தீர்ந்து போகாத வெண்கட்டிகள் நூலின் முன்னுரைநான் ஒரு கதை உருவாக்கி

எனக்கும் சினிமாவுக்குமான தொடர்பு மிகவும் நெருக்கமானது. என்னுடைய 5 ஆவது வயதில் என் ஞாபக சக்தியைச் சோதிப்பதற்கு அதிகமாகக் கேட்கப்பட்டது சினிமா தொடர்பான கேள்விகள்தான். கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு அப்பா முன் நின்றாக வேண்டும். எந்தப் படத்தில் யார் நடிக்கிறார்கள், படக்காட்சியைச் சொல்லிவிட்டு படத்தின் பெயரைக் குறிப்பிடுவது என நான்

Monday, January 2, 2012

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு ...1 ( யோ.கர்ணன் சிறுகதை: ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும்)

பல வருடங்கள் நீடித்த ஈழப் போர் சூழலிலிருந்துதான் இன்றைய புலம் பெயர் வாழ்வதென்பது தீவிரமாகக் கவனிக்கப்பட்டது. 50களில் தலைகாட்டிய ஈழத்தமிழர் பிரச்சனை 80களில் உலகக் கவனத்தைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் ஆங்காங்கே உதவிகளும் ஆதரவுகளும் கிடைக்கப்பெற்றும் அரசியல் சூழ்ச்சியினால் ஆயுத உதவியினால் 2009இல் இறுதி நிலையை எட்டியது. போர் முடிந்துவிட்டதா அல்லது தமிழீழம் எனும் கனவு தகர்ந்துவிட்டதா எனும் கேள்வியே பேரோசையாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இலங்கையுடன் கைக்கோர்த்து பல விசயங்களைச் சாதித்துக்கொள்வதற்காகச் சீனாவைப் போல பல

Sunday, January 1, 2012

இந்தியப் பயணம்-5 –ஆதவன் தீட்சண்யாவுடன் மோட்டார் பயணம்


திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் என்னைப் பேருந்து ஏற்றிவிடுவதற்காக செல்மா வெகுநேரம் காத்திருந்தார். அவர் வீட்டுக்குச் சென்று மிகவும் அவரசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு வரவேண்டிய சூழல். செல்மா குழந்தைகளிடம் அதிகம் பேசவும் முடியவில்லை. அதுவே மிகுந்த வருத்தமாக இருந்தது. ஒரு சகப் பயணியைப் போலவே என்னுடன் செல்மா இந்தியா பயணம் முழுக்கவும் அவ்வப்போது உடன் இருந்தார். சரியாக 10.45க்கு வரவேண்டிய பேருந்து மேலும் தாமதமாக்கியது. எங்களுடன் செல்மா காருக்கு டிரைவராக வந்த தோழர் ஒருவர் அங்கு இருந்ததால் செல்மாவை வீட்டுக்கு அனுப்பிவைத்தேன். தோழர் முன்பு கம்னியுஸ்ட் கட்சியில் இருந்து வெளியேறியவர். அவரிடம் வெறும் மௌனம் மட்டுமே இருந்தது. திண்டுக்கல் பற்றி மட்டும் கொஞ்சம் விசாரித்துக்கொண்டேன்.
 
இங்கிருந்து ஓசூருக்குச் செல்வதாகத் திட்டம். அண்ணன் ஆதவன் தீட்சண்யாவைச் சந்தித்தாக வேண்டும் எனப் பிடிவாதமாகவே இருந்தேன். 5ஆம் திகதி அவர் மதுரைக்கு வருவதாக இருந்தது. அம்பேத்கார் நினைவு தினத்தை முன்னிட்டு உரையாற்ற ஆதவன் மதுரைக்கு வரும் அந்த 5ஆம் திகதி என் பயணத்திட்டத்தின்படி நான் பாண்டிச்சேரியில் இருக்க வேண்டும். ஆகையால் முன்னதாகவே பயணத்தை ஓசூருக்கு மேற்கொள்ள முடிவு செய்திருந்தேன். ஆதவனைப் பார்க்க எத்துனைத் தூரம் வேண்டுமென்றாலும் பயணிக்க அப்போதைய மனம் தயாராக இருந்தது.