Saturday, December 19, 2015

ஜகாட் திரைப்படமும் நானும் - பாகம் 1 & 2

நானும் 1990களில் சிறுவனாக வளர்ந்தவன் என்பதால் எனக்கும் இப்படத்தில் வரும் பல காட்சிகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஜகாட் என் வாழ்க்கையின் சில பகுதிகளை மீட்டுத் தருகிறது. எந்தக் கலப்படமும் இல்லாமல் ஷங்கரும் நானும் பல இடங்களில் ஒத்துப்போகிறோம். 1995-96களில் நான் வாழ்ந்த கம்பத்தை அப்படியே பெயர்த்தெடுத்துக் காட்சிப்பூர்வமாக்கிக் காட்டுகிறார் இயக்குனர் சஞ்சய். அவர் தேர்ந்தெடுத்த கதைக்கான களங்களும் கதாபாத்திரங்களும் காலக்கட்டத்திற்கு ஏற்ப பொருந்தி நின்று நிஜமாகத் தெரிகின்றன.
இலக்கியத்தில் கதைச்சொல்பவனுக்கும் திரையில் கதைச்சொல்பவனுக்கும் எப்பொழுதுமே தீவிரமான பங்களிப்புண்டு. எழுத்தாளன் தன் மொழியின் வழியே சொல்லிச் செல்வதை இயக்குனர் காட்சிகளின் வழி காட்டிச் செல்கிறான். சினிமாவைப் பொறுத்தவரை காட்சிகளே அதன் முதல் மொழி. அதனை மேலும் செதுக்கிக் கொடுக்க உரையாடல் துணைக்கு வருகிறது. இன்றும் உலகத் திரைப்படங்களில் வசனங்களுக்குச் சொற்பமான நேரத்தைக் கொடுத்துக் காட்சிக்கு அதிக இடம் கொடுக்கும் நல்ல சினிமாக்கள் தொடர்ந்து சமூகத்தில் தாக்கத்தை உருவாக்கிக் கொண்டுத்தான் இருக்கின்றன. அதனை நன்கறிந்தவர் சஞ்சய் என்பதால் ஜகாட் திரைப்படத்தில் பல அர்த்தப்பூர்வமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
காட்சிகளின் மொழி சினிமா
முதல் கட்டமாக ஜகாட் திரைப்படத்தின் காட்சிகளைப் பற்றி உரையாடலாம் என நினைக்கிறேன். சினிமா காட்சிகளின் நகர்ச்சி என்று சத்ய ஜித்ரே ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். காட்சிகளுக்குக் காட்சி ஓர் இடைவேளிவிட்டு செல்லப்படும்போது அதற்குள் ஒரு பார்வையாளன் தன்னைப் பொருத்திக் கொள்கிறான். அவ்வகையில் ஜகாட் காட்சிகளின் வழியாக இச்சமூகத்துடன் உரையாடுகிறது. எல்லாவற்றையும் வசனங்களின் வழி விளக்கிவிட நினைப்பது சினிமாவுக்குரிய கச்சிதம் கிடையாது. வாழ்க்கையின் சில தருணங்களைச் சொற்களின் வழி சொல்லிவிட முயல்வது அதன் தீவிரத்தைக் குறைத்துவிடும்.

வானொலியில் முன்னாள் பிரதமர் துன் மஹாதீர் மலேசியப் பொருளாதாரத்தில் சமூகங்களுக்கிடையே பேதமில்லாத ஒரு நிலை இருப்பதைப் போன்று ஒரு செய்தி ஒலிப்பரப்பாகிக் கொண்டிருக்கும். அப்பொழுது மலேசியாவின் பொருளாதாரத் திட்டங்கள் அனைத்து இந்தியர்களையும் முழுமையான ஏழ்மை நிலையிலிருந்து முன்னேற்றிக்கொண்டிருப்பதாக முன்னாள் ..கா தலைவர் .சாமிவேலு கூறியதாகச் செய்தி சொல்லப்படும். அந்தவேளையில் ஷங்கரின் அப்பா தனது காற்சட்டைக்கு நெகிழிக் கயிற்றை எடுத்துக் கட்டிக் கொண்டிருப்பார். மலேசிய அரசியலை இத்தனை கூர்மையான ஒரு காட்சியின் வழி விமர்சிக்கும் ஆற்றலையே சினிமா வழங்குகிறது. இதற்கு எந்த வசனமும் விளக்கமும் தேவையிருக்காது. ஒரு காட்சியை வெறும் காட்சியாக மட்டுமே தாண்டிவிட முடியாது என்பதற்கான ஓர் அனுபவத்தைப் படம் வழங்குகிறது.