Thursday, May 5, 2011

ஒரு தலைமுறையின் சாபம்

பல நெடுங்காலம்
மிகவும் கவனத்துடன்
கூர்மை மங்கிய பொழுதுகளில்
தனக்கு முன் வந்துபோன
அத்துனைப் பருவங்களையும் வெறித்துக்கொண்டிருந்தார்
முனிமா பாசார் முனியாண்டி.

கவுச்சி வாடையும்
சொருகப்பட்டிருக்கும் கோடாரி சுருட்டுகளும்
தவறுதலாக விட்டுப்போயிருந்த
நாலு நம்பர் தாட்களும்
மம்டி சாராயமும் என
ஒவ்வொரு தலைமுறையும்
சாபத்தில் நீள்கின்றன
முனியாண்டிக்கு.

வெகுநாட்களுக்குப் பிறகு
இந்தத் தேசம் ஒரு விடுதலைக்குத் தயாராகியிருந்தது.
ஈட்டியையும் கோடாரியையும் கொண்டு வந்தவர்கள்
மெல்ல மெல்ல தகர்த்தனர்.
இருந்த இடம் தெரியாமல்
மறுநாள் காலையில்
முனிமா பாசார் முனியாண்டி
காணாமல் போயிருந்தார்.

சுருட்டு வாசம்
குதிரை காலடி சப்தம்
சாட்டையடி
சாராய வாடை என
அங்கிருந்தவர்களுக்கு
மீதமாக இருந்தது
வெறும் பிரமை.

கே.பாலமுருகன்