Saturday, January 26, 2013

Mama- ஆங்கிலப் படம்



மனநோய் கொண்டவர்களை எப்படி எதிர்க்கொள்வது என்பதே இச்சமூகம் இன்றளவும் கற்றுக்கொள்ளாத ஒரு விசயமாகும். உடலால் துவண்டவர்களைப் பராமரிப்பதிலேயே அதிகபட்சம் வெறுப்படையும் நம் மனோநிலை, மனம் சிதைந்தவர்களை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. ஆகையால்தான் அவர்கள், சாலையில் பித்துப் பிடித்துக் கவனிப்பாரின்றி திரிகிறார்கள். உடலுக்கு ஏற்படும் பிரச்சனையைப் போன்று ஒத்திருப்பதுதான் மனத்திற்குள் ஏற்படும் சிக்கலும்.

அப்படி மனநோய்க்கு ஆளான ஒரு பெண்ணின் கதைத்தான் ‘mama’. தேவாலையத்தால் மனநோய்க்கு ஆளான அவளுடைய குழந்தை பறிக்கப்பட்டு தனியாக வைத்து வளர்க்கபடுகிறது. தன் குழந்தையின் மீது அபிரித அன்பு கொண்ட அந்தத் தாய் குழந்தையை அங்கிருந்து தூக்கிக் கொண்டு மலை உச்சியிலிருந்து குதித்து விடுகிறாள். குழந்தை மட்டும் ஒரு கற்கிளையில் சிக்கி அங்கேயே இறந்துவிடுகிறது. அவளும் தண்ணீரில் மூழ்கி இறக்கிறாள். பல வருடங்களுக்குப் பிறகு அதே பள்ளத்தாக்கின் அருகாமையில் காருடன் மூவர் வந்து வீழ்கிறார்கள். மனைவியைக் கொன்றுவிட்டு இரு பெண் பிள்ளைகளுடனும் அங்குத் தப்பி வரும் தந்தை ஒரு பாழடைந்த வீட்டில் நுழைகிறார். அங்கு வைத்துத் தன் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்வதாகத் திட்டம். ஆனால், தன் மூத்தப் பெண் பிள்ளையைக் கொல்ல முயலும் அச்சமயத்தில்தான் அவ்வீட்டில் ஆவியாக வாழும் ‘mama’ தோன்றி அவனைக் கொன்றுவிடுகிறார்.