Friday, December 28, 2012

இமையத்தியாகம்- அ.ரெங்கசாமி


சுபாஷ் சந்திரபோஸ் - வரலாற்றின் மறக்கப்பட்ட ஆளுமை. உலகம் முழுக்கச் சென்று இந்திய இளைஞர்களை ஒன்றினைத்து வெள்ளையர்களுக்கு எதிரான சக்திமிகுந்த இராணுவப்படையை உருவாக்கினார். காந்தி அஹிம்சை வழியில்  போராடிக்கொண்டிருந்த அதே காலக்கட்டத்தில்தான் கப்பல் மூலம் டெல்லி வரை சென்று வெள்ளையர்களைத் தாக்கினார். அவர்களின் ஆயுத வருகையைக் கடல் பாதையை ஆக்கிரமித்ததன் மூலம் தடுத்தார். ஆயுதமின்றி போரிட முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளையர் படை பலவீனமானது. இந்திய சுதந்திரம் பெறுவதற்கு முன்பும், அல்லது காந்தியினுடான சுதந்திரப் பேச்சு வார்த்தை தொடங்குவதற்கு முன்பும், வெள்ளையர் படை இந்தியாவில் இருப்பதைக் கேள்விக்குறியாக்கியவர் சுபாஷ் சந்திரபோஸ். காந்தியின் பேச்சு வார்த்தையும் அவரின் அஹிம்சை போராட்டமும்தான் இந்திய சுதந்திரத்திற்குக் காரணம் எனக் கொண்டாடப்படுகின்றது. மிக எளிமையாக பகவத் சிங்-கின் உயிர்த்தியாகம் மறக்கப்பட்டதைப் போலத்தான் இதுவும். சுபாஷ் சந்திரபோஸ் தன் ஆளுமையால் அவர்களை விரட்டியடிக்க அடித்தளம் அமைத்தார். இதைத்தான் இந்திய வரலாற்றின் பின்னணியில் மறக்கடிக்கப்பட்ட விசயமா?

Tuesday, December 25, 2012

2012 ஆம் ஆண்டின் சினிமா பார்வை - 12012 ஆம் ஆண்டில் தமிழ் படங்களின் மீதான பொது அலசல் ஒன்று செய்யலாம் என நினைக்கிறேன். இன்றும் ஒரு சில நண்பர்கள் என் சினிமா  விமர்சனத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். நான் தமிழ் சினிமாவைக் குறை கூறுபவனோ அயல் சினிமாவைப் புகழ்ந்து பேசுபவனோ இல்லை. நான் சிறுவயது முதல் 'பயங்கர சினிமா பைத்தியம்'. தொலைக்காட்சி முன் படம் பார்த்துக் கொண்டேத்தான் உறங்குவேன். என் சினிமா விமர்சன நூலிலும் நயனம் பேட்டியிலும்கூட அதைப் பற்றிச் சொல்லியிருப்பேன். ஆகையால், சினிமா என் வாழ்நாள் இரசனை. அதை ஒரு கலையாகத் தரிசிப்பவன்.

அடுத்த ஆண்டு முதல் வல்லினத்தில் 'கலை சினிமாவின் மாற்றுத் தரிசனம்' எனும் சினிமா தொடரைத் தொடங்கியுள்ளேன். சினிமா ஒரு பக்கம் தொழில்ரீதியானதாகக் கருதப்பட்டாலும் இன்னொரு பக்கம் அதன் வெளிப்பாடு குறித்தும் அரசியல் குறித்தும் எப்பொழுதுமே விமர்சிக்க/விவாதிக்க வேண்டிய சூழல் உள்ளது. விமர்சனமும் விவாதமும் மட்டுமே சினிமாவை உயர்த்த முடியும்.

Tuesday, December 18, 2012

சிறுகதை: எச்சில் குவளை

மலைகள் இணைய இதழில் பிரசுரமான என்னுடைய அன்மைய சிறுகதை: எச்சில் குவளை.

காயத்ரியின் மூத்திரப் பையைக் கழுவதும் அவள் ஆடைகளைத் துவைப்பதும் அவளுக்கு உடை உடுத்துவதும் என அவளை முழுமையாக ஆட்கொண்டிருந்தான். இல்லை, காயத்ரித்தான் அவனை ஆக்கிரமித்திருந்தாள். அவன் கண்களை நேரேதிரே பார்த்து கூண் வளைந்த அவளுடைய முதுகை மேலும் தாழ்த்தி புன்னகைப்பாள். வாய்நீர் ஒழுக சிரித்து கைத்தட்டுவாள்........ மேலும் வாசிக்க:

http://malaigal.wordpress.com/2012/12/18/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87/

Friday, December 14, 2012

சிறுகதை: மோப்பம்

நான் ரவிகுமார். கொஞ்சம் உயரமாக இருப்பேன். கண்கள் இரண்டும் குழிக்குள் பதுங்கியிருக்கும். வலிமையற்றவன் போல உடலை இயக்கத் தெரியாமல் சோர்ந்திருப்பேன். யாராவது அழைத்தால் நான் பார்க்கும்விதம் எரிச்சல் ஊட்டும்படி இருக்கும். பெரும்பாலும் அழைப்பவர்களை நான் பொருட்படுத்துவதில்லை. எனக்கு நடக்க மட்டுமே தெரியும். உடலின் மையம் கால் பாதத்திற்கு இடம்பெயர்ந்துவிட்டதைப் போல கால்களில் வெறும் அவசரம் மட்டுமே. எங்கிருந்து எங்கு நகர எத்தனை அடிகள் வைத்தால் போதும் என்ற அளவிற்கு துல்லியமாக நடப்பேன். அது கண் தெரியாதவர்களின் கணக்கு. சட்டென பொருள்கள் மறைந்து வெறும் சுவராகி போகும்போது இருளைத் தடவுவேன்.

வேலை முடிந்ததும் ஜாலான் அம்பாங் பாசார் பூரோ கோடியில் இருக்கும் அப்பே நாசி லெமாக் கடையில் 10 நிமிடம் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு அறைக்கு உடனே சென்றுவிட வேண்டும். அதிகநேரம் நான் வெளியில் திரியும் தருணத்தை ஆபத்தாகவே உணர்கிறேன். ஒரு நிமிடத்திற்கு மேல் நான் உற்றுக்கவனிக்கும் எதன் மீதும் வெறுப்பு வந்துவிடுகிறது. உலகத்தையே வெறுத்துவிடும் அபாயம் எனக்கு அருகாமையிலே சுருண்டிருக்கும். விருவிருவென மாடியேறி அறைக்குள் புகுந்துவிடுவேன்.

Wednesday, December 12, 2012

கவிதை: உரோமங்களின் தனிமை


எப்பொழுதோ வந்துபோன
ஒரு பூனை உதிர்த்த உரோமத்தை
வெகுநேரம் கவனித்துக் கொண்டிருந்தேன்.

ஒற்றை உரோமம்.

எத்தனைமுறை பார்த்தாலும்
அது ஒற்றை உரோமமே.

மீண்டும் ஓர் இரவில்
விட்டுச் சென்ற உரோமத்தை
எடுத்துச் செல்ல வரக்கூடும்
பூனைகளின் மீது வெறுப்புக்கூடியது.

Saturday, December 1, 2012

சிறுவர் சிறுகதை :அல்ட்ராமேன் சைக்கிள்

சன்னலுக்கு அருகில் தொங்கிக் கொண்டிருந்த மரக்கிளை வெகுநேரம் கதவை உரசிக் கொண்டிருந்தது. முகிலன் மெல்ல கண்களைத் திறந்தான். சன்னல் கதவின் சிறு துளையிலிருந்து உள்ளே நுழைந்த ஒளி அவன் முகத்தில் படர்ந்தது.

தம்பி அழும் சத்தம் அவனுடைய காதைக் குடைந்தது. வெளியே வந்து சத்தம் கேட்டத் திசையை நோக்கிச் சென்றான். ஒரு கால் உடைந்த தம்பியின் சைக்கிள் முன்வாசல் கதவோரம் கிடந்தது. 

“தம்பி சைக்கிள் உடைஞ்சிருப்பா” என அம்மா கூறிவிட்டு அவனைச் சமாதானப்படுத்துவதில் மும்முரமாக ஆனார்.