Monday, July 6, 2009

சை. பீர்முகமது எழுதிய ‘ஜாலியன் வாலா படுகொலையும் அஜித் சிங்கும்” சிறுகதை குறித்து கலந்துரையாடல்

இன்று கெடா மாநில எழுத்தாளர் சங்க செயலவை கூட்டத்திற்குப் பிறகு வழக்கம்போல சிறுகதை கலந்துரையாடல் நடைபெற்றது. இம்முறை மலேசிய படைப்பாளியின் கதை குறித்த கலந்துரையாடல் என்பதால் சை.பீர்முகமது எழுதி ஏப்ரல் “உயிரெழுத்து” இதழில் வெளிவந்த சிறுகதை கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கதை அஜித் சிங் என்கிற சீக்கிய இளைஞனின் வாழ்வைக் காட்டி சீக்கியர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கொண்டிருக்கும் 5 மத அடையாளங்களை மனிதநேய தளத்தில் வைத்துப் பின்னப்பட்டிருக்கிறது.

ஒரு நம்பிக்கையாக இருந்த சீக்கியம், குரு கோவிந்த சிங்கின் வருகையாலும் சீக்கியர்களுக்கு எதிராக இஸ்லாமிய முகாலய மன்னன் அவுராத் ஜித் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையாலும் இனப்படுகொலையாலும் அவர் எழுப்பிய போராட்டாமும் போரும் பிறகு மத அடையாளமாக நிறுவப்பட்டதை ஆங்காங்கே கதைகளில் வலிந்து புகுத்திச் சொல்லியிருக்கிறார். படிப்பறிவு இல்லாத அஜித் சிங் அந்த 5 அடையாளங்களை வைத்திருப்பதே ஜாலியன் வாலா பார்க் படுகொலையில் உயிரிழந்த தன் முஸ்லிம் நண்பனுக்காக என்று கதையில் சை.பீர் காட்டியிருக்கிறார். ஜாலியன் வாலா படுகொலையைச் செய்த “டையர்” உத்தம் சிங்கால் கொலை செய்யப்படுகிறான் (எல்லோருக்கும் தெரிந்த வரலாறு) என்பதைக் கேள்விப்பட்டதும், அவன் தனது சீக்கிய மத அடையாளங்களைத் துறப்பதாகக் கதை முடிகிறது.

வரலாற்றில் எப்பொழுதோ நடந்த சீக்கிய கொடுமைகளுக்குச் சாதகமாக திணிக்கப்பட்ட இஸ்லாம் எதிர்ப்புணர்ச்சியும் அதன்பால் உருவான அடையாளங்களும் இப்பொழுது சமூகத்தில் நல்ல முறையில் நல்லிணக்கத்துடன் வாழும் சீக்கிய (இஸ்லாமியர்களும் சீக்கியர்களும் நண்பர்களாக சமரசமாக வாழும்) இஸ்லாமியம் உறவுகளுக்கு நடுவே அதே வன்முறையுடன் பின்பற்றப்பட வேண்டுமா என்கிற கேள்வியை நடைமுறை மீது சுமத்துவது போல கதையை சை.பீர் வடிமைத்துள்ளார்.

கலந்துரையாடலில் பெரும்பாலும் நண்பர்கள் சை.பீரின் கதை மனதில் ஒட்டவில்லை, மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட கருத்தாக்கத்திற்காக கதையில் சை.பீர் மெனக்கெட்டுள்ளார் என்று வெளிப்படையாகத் தெரிகிறது என்று பகிர்ந்துகொண்டார்கள். ஜாலியன் வாலா படுகொலையையும் சீக்கிய மத அடையாளங்களையும் தேர்ந்தெடுத்து மனிதநேய கதையைச் சொல்ல முற்பட முயன்ற சை.பீர் அதற்கான வடிவமாக சிறுகதையைத் தேர்ந்தெடுத்து தோல்வியடைந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டது. சில இடங்களில் தேவையில்லா உரையாடல்கள், மேற்கொள்கள் காட்டப்படுகிறது. கதையின் இறுக்கத்திற்கு எந்த வகையிலும் வலு சேர்க்காத நிலையில் இந்த மாதிரியான நீட்டிப்புகள் தேங்கிவிடுகின்றன என்றும் சொல்லப்பட்டது.

சை.பீர் அவர்கள் இதையே ஒரு கட்டுரையாக எழுதியிருந்தால் கொஞ்ச சிறப்பாக இருந்திருக்கும் என்றும் சிலர் சொன்னார்கள். படைப்பைப் படைத்த பிறகு அதை எவ்விதத்திலும் மதிப்பீட எல்லாம் உரிமைகளும் வாசகனுக்கு உண்டு. அதை நியாயப்படுத்தவோ அல்லது நிராகரிக்கவோ, அந்த நியாயப்படுத்துதலின் நம்பகத்தன்மையை ஏற்றுக் கொள்வதும் வாசகனுக்குரிய களம். கலந்துரையாடலில் கலந்துகொண்ட, மணிஜெகதீஸ், குமாரசாமி, புண்ணியவான், முனியாண்டிராஜ், க.பாக்கியம், சந்தியாகு, ஜோன்சன் எல்லோரும் தங்களின் பங்களிப்பைச் செய்தார்கள்.

கே.பாலமுருகன்
மலேசியா