Wednesday, September 24, 2008

தேவாலய மரங்களின் கஞ்சத்தனம்


10வயதில்
தேவாலயத்தின் வாசலில்
அடிக்கடி நின்று
மேரி மாதா சிலையை
வெறித்துவிட்டுப் போவேன்

மேரி மாதா
ஆசிர்வதிப்பாள்
எனக்கே எனக்கு மட்டும்
கேட்கும்படியாக

மாலையில்
மீண்டும் தேவாலயத்தின் பக்கமாக
போய் நின்று கொள்வேன்
மேரி மாதாவின்
முகத்தில்
வெயில் இறங்கியிருக்கும்

மரங்களைத் திட்டிக் கொண்டே
நடக்கத் துவங்குவேன் வீட்டிற்கு. . .
அருகிலிருந்தும்
சருகுகளைக் கஞ்சத்தனமாக
வைத்துக் கொண்டு
மாதாவின் முகத்தில்
வெயில் படர
இந்த மரங்கள்
என்ன செய்துக் கொண்டுருக்கின்றன?

சருகுகள்
கட்டிப் போட்டாற் போல
மரத்தில் உதிர்ப்பதற்கு
உத்தரவின்றி
காத்திருக்கின்றன!

இந்த மரங்களுக்கு
அப்படியென்ன கஞ்சத்தனம்?
மாதாவின் முகத்தில்
வெயிலை அப்படியே விட்டுவிட்டு!

கே.பாலமுருகன்
மலேசியா

bala_barathi@hotmail.com

Friday, September 5, 2008

குழந்தைகள் முளைக்கும் பேருந்து




குழந்தைகள் முளைக்கும் பேருந்து



அன்றுதான் பள்ளிப் பேருந்திற்கு
இறக்கைகள் முளைத்திருந்ததைப்
பார்த்தேன்



இறக்கைகள்
அசையத் துவங்கியதும்
பேருந்து
பறக்கிறது



பேருந்தின்
கண்ணாடிகளுக்கு
வெளியில் இறக்கைகள்
முளைத்து
போவோர் வருவோரைப்
பார்த்துக் கையசைத்து
ஆரவாரம் செய்கின்றன



பேருந்துதுப்பிய
குச்சி முட்டைகள்
வாகனமோட்டிகளின்
முகத்தில் பட்டும்
யாரும் கலவரமடையவில்லை



பேருந்தின் வயிற்றிலிருந்து
குதித்து வரும்
பாலித்தின்களை
யாரும்
குப்பைகளாக
நினைப்பதில்லை



பேருந்து எழுப்பும்
ஆர்பாட்ட ஓசைகளை
எல்லோரும் ஆனந்தமாகச்
சகித்துக் கொள்கிறார்கள்



சாப்பாட்டுக் கடைகளில்
அமர்ந்திருப்பவர்கள்
மீன் கடை சீனக் கிழவி
பழ வியாபாரிகள்
முச்சந்தி கடையின்
வெளிச்சத்தில் நின்றிருப்பவர்கள்
எல்லோரையும் பார்த்து
பேருந்து கையசைத்துக்
கத்துகிறது

பேருந்தின் உடல்முழுவதும்
விரல்கள் தோன்றி
பட்டண வீதிகளைச்
சுரண்டி அலசுகிறன்றன



அன்றைய காலைபொழுதுகளில்
பேருந்து வயிறு குழுங்கி
சிரித்துக் கொண்டே
நகர்கிறது



எல்லோரும்
பேருந்துடன்
சேர்ந்து கொண்டு
சிரித்துக் கொண்டே
கடக்கிறார்கள்



ஏனோ தெரியவில்லை
சிலநேரங்களில்
பேருந்து முகம்
கவிழ்ந்து

இறந்த உடலுடன்
காலியாக
வந்து சேர்கிறது



இறக்கைகள் காணவில்லை
சவ ஊர்வலமாய்
பேரிரைச்சிலுடன்
புகைக் கக்கி
உறுமுகிறது



சிறகைத் தொலைத்த
பறவையாய்
நகரத்தில் விழும்
பேருந்தைச்
சிலருக்குப் பிடிப்பதில்லை





ஆக்கம்: கே.பாலமுருகன் ,
சுங்கைப்பட்டாணி

Tuesday, September 2, 2008

சன்னலின் கதை





எப்பொழுது திறந்துவிட்டாலும்
ஏதோ ஒரு கதையை
உள்ளே அனுமதிக்கிறது
தனிமையின்
உக்கிரத்தில் உலர்ந்து போயிருந்த
என் சன்னல்
2.

இருள் அகன்று
வெளியே விரிந்திருக்க
அருகாமையில்
ஓர் இருக்கை
அதற்கும் அப்பால்
இயங்கிக் கொண்டிருக்கிறது
சன்னல்

3.
எவரோ
ஆவேசமாக
புணர்கின்ற ஓசையையும்
சேர்த்தே
கொண்டு வந்து போடுகிறது
சன்னல்

கே.பாலமுருகன்
மலேசியா