Monday, September 6, 2010

எழுத்தாளர் ஜெயமோகனுடன் முதல் நாள்: பேசித் தீராத பொழுதுகள்

அதிகாலை 6.00மணிக்கெல்லாம் நானும் எழுத்தாளர் கோ.புண்ணியவானும் கூலிம் தியான ஆசிரமத்திற்குப் புறப்பட்டு சென்றோம். பிரமானந்த சுவாமியுடன் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு 7.00மணிக்கு மேல் பினாங்கு விமான நிலையத்திற்கு ஜெயமோகனை அழைத்து வர அவருடன் கிளம்பினோம். இன்றைய காலை ஒரு இலக்கிய பொழுதாகவே தொடங்கியது எனலாம். காலையிலேயே அநங்கம் புதிய இதழ் குறித்தும் மௌனம் இதழ் குறித்தும் பேசிக் கொண்டேதான் இருந்தோம்.

மணி 8.30க்கு மேல் பினாங்கு விமான நிலையத்தில் தோள் பையைப் பிடித்துக் கொண்டும் கையில் உருளைப் பையை வைத்துக் கொண்டும் நின்றிருந்த எழுத்தாளர் ஜெயமோகனைச் சந்தித்ததும் ஒருவித மகிழ்ச்சி உருவானது. நாம் சந்திக்க நினைக்கும் / நினைத்த அரிய மனிதர்களை முதன் முதலில் சந்திக்கும்போது என்ன பேசலாம் என்ன கேட்கலாம் என்கிற தடுமாற்றமே அலாதியானது என உணர்கிறேன். அதை அங்கு உணரவும் செய்தேன். காரில் சென்று கொண்டிருக்கும்போது எப்படியோ உரையாடல் தொடங்கியது. அண்ணன் ஜெயமோகனும் பேசத் தொடங்கினார். எங்கேயும் இடைமறிக்க மனமில்லாமல் கேட்க மட்டுமே பிடித்திருந்தது. எங்களுடன் பழகிய சிறிது நேரத்திலேயே மிக இயல்பாக பேசத் துவங்கினார். ஜெயமோகனை குறுகிய காலத்திலேயே அதிகமாக வாசித்துவிட்ட சுவாமி பிரமானந்த சரஸ்வதி அவர்கள் அவருடன் உரையாடுவதில் கூடுதலான முனைப்பையும் ஆர்வத்தையும் காட்டினார்.

முதல் உரையாடல் சினிமாவிலிருந்தே தொடங்கியது. மணிரத்னம் இயக்கி வெளிவந்த இராவணன் படத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ஒரு இராவணனை வைத்தே படத்தில் புனையப்பட்டிருக்கும் பல சிக்கலான குறியீடுகளைப் பற்றி பேச்சு தொடர்ந்தது. பிறகு மாற்று சினிமாவில் குறிப்பாக மலையாளம் கன்னடம் போன்ற படங்களில் இலக்கியம் வகிக்கும் முக்கியமான இடத்தைச் சுட்டிக் காட்டினார். எப்பொழுதும் அந்த மாதிரி சினிமாக்களில் இலக்கியமும் சினிமாவும் தொடர்புடையதாகவே எடுக்கப்பட்டிருப்பதையும், தமிழில் இன்னமும் இயக்குனர்களே கதையை எழுதி இயக்கவும் செய்கிறார்கள் எனவும், இன்னமும் ஓர் எழுத்தாளனைக்கூட தமிழில் சினிமா ஆக்கங்களுக்காக/கதைகளுக்காகப் பயன்படுத்தியதில்லை எனவும் ஜெயமோகன் மேலும் கூறினார்.

வரலாறு குறித்தும் கடாரத்தை வென்ற ராஜேந்திர சோழன் குறித்தும் வனப்பகுதிகளில் வளர்ந்திருக்க வாய்ப்பில்லாத நாகரிகம் கலாச்சாரம் குறித்தும் பேச்சு தொடர்ந்தது. ஜெயமோகன் எல்லாம் தளங்களிலும் ஆளுமை உள்ளவர் என அவரது உரையாடலை 15 நிமிடத்திற்கு மேல் கேட்கும் யாரும் தீர்மானிக்கக்கூடும். பிறகு தியான ஆசிரமத்திற்கு வந்ததும் அவருடான கலந்துரையாடல் மேலும் தொடர்ந்தது. நவீன இலக்கிய சிந்தனைக்களத்தில் இதுவரை பேசி கலந்துரையாடப்பட்ட ஜெயமோகன் படைப்புகள் குறித்த தகவலை அவருடன் பகிர்ந்து கொண்டோம்.

மாலையில் திட்டமிட்டப்படியே துங்கு பைனும் ஆசிரியர் பயிற்றகத்தில் ஜெயமோகன் அவர்களின் இலக்கிய உரை மிகவும் சிறப்பாக நடந்தேறியது. மண்டபம் நிறைந்து சிலர் கூடுதலான நாற்காலிகள் போட்டு அமர்ந்து கேட்கும் அளவிற்குப் பார்வையாளர்களின் வருகை திருப்தியளித்தது. கெடா மாநில தமிழ்ப்பள்ளி அதிகாரிகளும் ஆசிரியர்களும் மேலும் பினாங்கு மாநில ஆசிரியர்களும் பயிற்சி ஆசிரியர்களும் இந்த இலக்கிய நிகழ்வில் கலந்துகொண்டார்கள். எழுத்தாளர் கோ.புண்ணியவான் அவர்கள் ஜெயமோகனை அறிமுகப்படுத்தி பேசினார்.


ஜெயமோகன் பேசத் துவங்கிய சில நிமிடங்களிலேயே மண்டபத்தில் அமர்ந்திருந்த சிலர் இருக்கையிலிருந்து எழுந்து இடம் மாறுவதும் நகர்வதுமாக இருந்ததைத் தடையாக உணர்ந்த ஜெயமோகன், அதைச் சபையிலேயே குறிப்பிட்டார். வேறு எந்த இடத்திலும்/நாட்டிலும் இப்படியொரு தடைகள் ஏற்படாது, பேச்சாளர் பேசிக்கொண்டிருக்கும்போது பார்வையாளர்கள் எழுந்து நடக்கமாட்டார்கள் எனவும் வெளிப்படையாகக் கூறினார். அதன் பிறகு யாரும் எழுந்து நடக்கவும் இல்லை, நிகழ்வு மேலும் தனக்கான கவனத்தைப் பெற்று சிறப்பாக நடந்தது.

ஜெயமோகன் நிகழ்வில் பேசுகையில் இலக்கியத்தில் கற்பிக்கப்படும் அல்லது கருதப்படும் அறங்கள் குறித்து மேலும் தெளிவாக முன்வைக்க கதைகளின் வழி விளக்கினார். வெறுமனே அறங்களை மட்டும் போதிப்பது ஒரு நல்ல இலக்கியமாகக் கருத முடியாது எனவும் அந்த அறங்களின் வழி உருவாகும் சீற்றங்களை அந்த அறத்தின் வழி உருவாகும் வெளிப்பாடுகளை ஒரு கலையாகத் ஒரு மகத்தான தருணங்களாகத் தருவதில் இலக்கியத்திற்கு முக்கியமான இடம் உண்டு எனவும் குறிப்பிட்டுப் பேசினார். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் புதியதாக ஒரு எழுத்தாளன் முளைத்து வந்து அறங்கள் குறித்து எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறான். அது எப்பொழுதும் நிகழ்ந்துகொண்டே இருக்கும் யதார்த்தத்தையும் குறிப்பிட்டார். தண்ணீரின் மேற்பரப்பை மூடியிருக்கும் பாசியைப் போலத்தான் அறம் என்றும் அதை எப்பொழுதும் விலக்கி பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்து விடுவதாகவும் கூறினார்.

செம்மொழி மாநாடு எந்தவகையில் தமிழின் வளர்ச்சிக்கு வித்திட்டது எனப் பார்வையாளரால் கேட்கப்பட்ட கேள்விக்கு மிகவும் அற்புதமான பதிலைக் கொடுத்தார். ஜெயமோகன். தமிழில் முக்கியமான (கல்வெட்டுகளின் ஆவணங்கள் நூலாக்கப்படவில்லை, சுவடிகள் நூலாக்கப்படுவதில்லை) சில முயற்சிகள் ஏதும் செய்யாமல், கூட்டம் கூட்டி ஊர்வலம் நடத்தி குடும்ப அரசியலை நிகழ்த்திக் காட்டியெல்லாம் தமிழை வளர்த்துவிட இயலாது எனக் கூறினார்.

மலேசிய இலக்கியம் குறித்து கேட்கப்பட்டபோது ஒரு வாசகனாக மலேசிய இலக்கியத்தை அணுகும் நான் அந்தப் படைப்பின் மூலம் என்னை அடையாளம் கண்டு கொள்ளும் அனுபவத்தைப் பெறக்கூடிய சாத்தியங்களை அந்த இலக்கிய படைப்பு தர வேண்டும். அதுவே நல்ல இலக்கியம் எனக் குறிப்பிட்டார். இங்கு வாசிக்கப்படும் பிரதிகள் பினாங்கு பற்றியும் கோலாலம்பூர் பற்றியும் தெரிந்துகொள்ள மட்டும் வாய்ப்பளிப்பதாக இருப்பதை நல்ல இலக்கியம் என அடையாளப்படுத்துவதில் சரியான அணுகுமுறை கிடையாது எனக்கூறினார். மேலும் இங்கு உருவாகி வரும் அநங்கம் வல்லினம் போன்ற இதழ்களின் மூலமும் கராரான இலக்கிய விமர்சனத்தின் மூலமும் வளரக்கூடிய இளம் படைப்பாளிகளை அறிய முடிவதாகக் கூறினார். நிகழ்வு முடிந்தும் எங்களின் உரையாடல் இரவுவரை தொடர்ந்தது. எங்களுடன் விரிவுரையாளர் தமிழ் மாற்ன் அவர்களும் இணைந்துகொண்டார்.

-தொடரும்-
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா