Tuesday, March 16, 2010

திரை விமர்சனம்: கடவுளுடன் ஒரு சைக்கிள் பயணம் : பாப் ஆண்டவரின் கழிப்பறை (The Pope’s toilet)

சேசர் சார்லோன் என்கிற மாற்று மொழி இயக்குனரின் முயற்சியில் 2007ஆம் ஆண்டில் வெளிவந்த உருகுவே படம் “The Pope’s Toilet” ஆகும். பெரும்பாலும் உலக சினிமாக்களின் வரிசையில் நல்ல தரமான முறையில் கலை சார்ந்த வாழ்வை முன்வைப்பதில், இத்தாலிய சினிமா, ஈரானிய சினிமா மற்றும் பிரசில் சினிமா முக்கியத்துவம் நிரம்பியதாகும். ஆனால் இம்முறை ஓர் உருகுவே சினிமா தனது கலாச்சார வெளியின் அடையாளத்தை வலுவாக இந்தப் படத்தின் மூலம் பதித்திருக்கிறது என்றே கூறலாம்.

கடவுள் என்கிற சொல் ஒவ்வொரு மதத்திலும் அதிகாரத்துவம் நிரம்பியதாகவும் வலிமை மிகுந்ததாகவும் கருணை மிகுந்ததாகவும் கற்பிக்கப்பட்டிருப்பது யதார்த்தமான செயல்பாடாகும். கடவுளின் பிரதிநிதியாகப் போற்றப்படும் உலக கிறித்துவத்தின் மதக் குருவான இரண்டாம் பாப் ஆண்டவர் (பாவ்ல்) அவர்கள் உருகுவேயில் இருக்கும் மிலோ என்கிற நகருக்கு வருவதையொட்டி மிலோவிலுள்ள கீழ்த்தட்டு மக்கள் ஒரு கடவுளின் வருகைக்கு நிகராக அவரைப் பல நம்பிக்கைகளுடனும் எதிர்ப்பார்ப்புகளுடனும் வரவேற்பதற்காகத் தயாராகும் விதத்தைப் படத்தின் இறுதி காட்சிகளில் மிகவும் உன்னதமாகப் படமாக்கியிருக்கிரார் இயக்குனர். இது உண்மையில் உருகுவேயில் பாப் ஆண்டவரின் வருகையின்போது அந்த மிலோ என்கிற பிரசிலின் எல்லையையொட்டி இருக்கும் சிறுநகரில் 1988-இல் நிகழ்ந்த உண்மை சம்பத்தை முன்வைத்து எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

மிலோ நகரத்தின் எளிமையான மக்கள் பாப் ஆண்டவர் வருகையின் மூலம் தமது நகரமே புனிதமடையப் போகிறது என்கிற புரிதலில், எல்லோரும் தனித்தனியாக அவரின் வருகை தினத்தன்று வியாபாரம் செய்து தங்களின் நிலைமையை உயர்த்திக் கொள்ள திட்டமிடுகிறார்கள். அதன்படி எல்லோரும் சிறுவியாபாரிகளாக முற்படுவது படத்தில் காட்டப்படும் அற்புதமான முயற்சிகள். ஒர் ஒடுக்கப்பட்ட சமூகம் மதம் சார்ந்து தன்னை எப்படி வழக்கத்திற்கு எதிராக வடிவமைத்து கொள்கிறது என்பதன் யதார்த்தம்தான் அத்தகையை காட்சிகள். ஆனால் பாப் ஆண்டவர் வருகை தினத்தில் மிலோ நகரத்தின் அனைத்து சிறுவியாபாரிகளும் ஒட்டுமொத்தமாக ஏமாற்றப்படுகிறார்கள். புறக்கணிப்பின் எல்லையில் மிகவும் மோசமாக நஷ்டம் அடையும் அவர்கள் பாப் ஆண்டவரையும் அவரின் வருகையையும் அந்தச் சமூகத்தின் துயரை மேலும் அடர்த்தியாக்கும் ஒரு விளைவாகவே பார்க்கிறார்கள்.

பேத்தோ (இப்படத்தின் மையக் கதைப்பாத்திரம்) தனது குடும்பத்தின் வறுமையைச் சரிக்கட்டுவதில் எப்பொழுதும் ஒரு போராட்டமான வாழ்வின் முன் தன்னை ஒப்படைக்கக்கூடியவன். பாப் ஆண்டவர் வருகையை முன்னிட்டு “பாப் ஆண்டவரின் கழிப்பறை” எனும் பெயரிட்ட ஒரு கழிப்பறையைத் தன் வீட்டின் அருகில் கட்டுவதற்குத் திட்டமிடுகிறான். அன்றைய தினத்தில் மிலோ நகருக்குள் வரும் பிரசியலியன்ஸ் தனது பாப் ஆண்டவரின் கழிப்பறையைப் பயன்படுத்துவார்கள், அதன் மூலம் பணம் சம்பாதித்து முன்னேறிவிடலாம் என்கிற ஒரு மிலோ சமூகத்தின் ஏழையின் மாபெரும் கனவின் முன் அவன் அடையும் தோல்வி மிகவும் வலி நிரம்பியது. ஒடுக்கப்பட்டவர்களின் தோல்வி என்பது ஒரு வரம் போல அல்லது கடவுளைப் போல அவர்களின் வாழ்விற்குள் திணிக்கப்படுகிறது என்பதன் உண்மையை மிகவும் துணிச்சலாகப் பதியும் முக்கியமான கதைக்களம் இப்படம்.

இப்படத்தில் இன்னொரு ஆளுமை, பிரசில் நாட்டின் எல்லையில் இருக்கும் மிலோ நகர மக்களின் வாழ்க்கை முறையும் அன்றாட போராட்டமும் ஒரு கலையாகச் சொல்லப்படிருப்பதாகும். மிலோ நகரத்திலுள்ள செலவு கடைகளுக்கு குறைந்த விலையில் பொருள்களைப் பிரசில் நாட்டின் எல்லை பகுதியிலிருந்து திருட்டுத்தனமாகச் சைக்கிளில் கொண்டு வரும் பல குடும்பத் தலைவர்களுள் பேத்தோவும் ஒருவன். தினமும் மிலோ கடை வியாபரிகளின் வேண்டுகோளுக்கிணங்க பலர் சைக்கிளிலும் மோட்டாரிலும் பிரசிலுக்குச் சென்று பொருள்களைக் கடத்தி உள்ளே கொண்டு வந்து பிழைப்பு நடத்துவதை ஓர் அழகான சைக்கிள் பயணமாக இயக்குனர் காட்டியிருப்பது கலை அம்சம் மிகுந்த மதிப்பீடுகளாகும்.

படத்தின் தொடக்கக் காட்சியே பேத்தோ பிரசிலிலிருந்து பொருள்களைச் சைக்கிளில் வைத்துக் கொண்டு வேகமாக எல்லையைக்(பிரசில் – உருகுவே) கடப்பதைக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். சிறுபான்மை மக்களின் போராட்டமான வாழ்வை இந்தக் கொடுமையான சைக்கிள் பயணத்தின் மூலம் ஒரு குறியீடாகப் பாவித்துக் காட்டியிருக்கிறார்கள். மிலோ நகரத்தைச் சேர்ந்த பல குடும்பத் தலைவர்கள் நெருக்கடியான வாழ்வின் முன், அறம் ஒழுக்கம் போன்ற சமூக மீறல்களையும் கடந்து போதை பொருள், மது பானங்கள் போன்றவற்றையும் கடத்த வேண்டிய சூழலில் நிர்பந்திக்கப்பட்டிருப்பதையும் கதையின் ஓட்டத்தில் புரிந்துகொள்ளலாம்.

ஒடுக்கப்பட்டவர்களின் மீதான அதிகாரக் கட்டமைப்பையும் இப்படத்தில் பல இடங்களில் இயக்குனர் காட்டியிருக்கிறார். குறிப்பாக பொருள்களை எல்லையிலிருந்து திருட்டுத்தனமாகக் கொண்டு வருபவர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் எல்லை போலிஸ் அதிகாரி. அவனுக்கு வேண்டியதை அவர்களிடமிருந்து தனது அதிகாரத்தைக் காட்டி மிரட்டி பறித்துக் கொள்கிறான். வரலாற்றில் தொடங்கி இன்றும் நடைமுறையில் அதிகாரத்தின் இருப்பு எளிமையானவர்களை ஒடுக்குவதன் மூலமே வளமடைந்து வருவதையும், அவர்களைச் சுரண்டுவதன் மூலமே பிழைப்பு நடத்தி வருவதையும் இந்தப் படத்தில் ஒரு மாபெரும் துரத்தலுக்கு நடுவே உக்கிரமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த அதிகாரி எல்லையின் பரிசோதனை பகுதியின் கவனத்திலிருந்து தப்பித்து ஓடும் சைக்கிள்காரர்களை தனது காரில் துரத்துவதும், அவர்கள் அவனுக்கு மிரண்டு ஓடுவதையும் ஒரு நீளமான அகன்ற திறந்த புல்வெளியில் படமாக்கியிருப்பார்கள். அதிகாரமும் அதிராகத்திற்குக் கட்டுப்படுதலின் கொடுமையும் அந்தத் திறந்தவெளிப் போல எங்கும் பரவலாக வெளிப்படையாக எந்தப் பாதுகாப்புமின்றி நிகழக்கூடியவை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

பிரசில் எல்லையிலிருந்து மீண்டும் உருகுவேவிற்கு சைக்கிளில் பயணிப்பது என்பது வெகு சிரமமாக இருப்பதை உணரும் பேத்தோ ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கிவிட எண்ணம் கொள்கிறான். அவர்களைப் போல எல்லையை வெகு இயல்பாகவும் வேகமாகவும் கடக்கும் மோட்டாரோட்டிகளைப் பார்க்கும்போதெல்லாம் அவனது இலட்சியம் குறித்த எண்ணங்கள் உச்சத்தை அடைகின்றன. மோட்டாரோட்டிகள் வசதியும் வேகமும் இருப்பதால் சைக்கிளோட்டிகளைவிட அதிகமாகச் சம்பாரிக்கிறார்கள், அதனால் தானும் ஒரு மோட்டார் வாங்கி அதிகம் சம்பாரிக்க வேண்டும் நிறைய பயணங்கள் கிடைத்தால் மேலும் புகழுக்குரியவனாக வாழலாம் என்கிற ஆசையும் அவனை ஆக்கிரமிக்கிறது. மோட்டாரை வாங்குவதற்குரிய பணத்தைப் பெறுவதற்காக மேலும் கூடுதலான சைக்கிள் பயணங்களுக்காக ஒப்புக் கொள்கிறான் பேத்தோ.

அந்தச் சமயத்தில்தான் மிலோ நகருக்கு பாப் ஆண்டவர் வரவிருப்பதாகத் தகவல்கள் ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது. உலகம் முழுக்க உள்ள பொதுமக்களின் கவனம் இப்பொழுது உருகுவேயின் மிலோ நகரத்தின் மீது குவிக்கப்படுகிறது எனற எண்ணத்தில் பாப் ஆண்டவர் கழிப்பறைக் கட்டுவதற்கு முடிவெடுத்து அதற்காகத் தினம் அல்லல்படுகிறான் பேத்தோ. கடைசியில் அன்று பாப் ஆண்டவர் வரும் தினமும் நெருங்குகிறது. காலை 10 மணிக்கெல்லாம் கழிப்பறையை இயங்க வைக்க வேண்டும் என்கிற திட்டம். மக்கள் கூட்டம் திரள் திரளாக அதிகரிக்கத் துவங்குகிறது. ஆனால் பேத்தோ பெருநகரத்திலிருந்து கழிப்பறை தொட்டியை வாங்கிக் கொண்டு சைக்கிளில் வந்துகொண்டிருக்கிறான். வழியில் அவனது சைக்கிளில் சங்கிலி அறுந்துவிடவே, அதைச் சரி செய்துவிட்டு மீண்டும் உற்சாகத்துடன் பயணிக்கிறான். பாப் ஆண்டவர் பொதுமக்களிடம் பேசுவது தொலைக்காட்சியில் நேரடியாகக் காட்டிக் கொண்டிருக்க, இயங்காமல் இருக்கும் கழிப்பறையின் அருகில் பேத்தோவின் மனைவியும் ஒரு மகளும் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் அந்த அதிகாரி பேத்தோவின் சைக்கிளை வழிமறித்து அவனுக்கு மேலும் பிரச்சனையை எழுப்புகிறான். அவனுடைய சைக்கிளைப் பிடுங்கிக் கொண்டு அவனை அங்கேயே விட்டுவிட்டு போய்விடுகிறான். பாப் ஆண்டவர் மேலும் பேசிக் கொண்டிருக்கிறார், பேத்தோ கழிவுத் தொட்டியைத் தூக்கிக் கொண்டு தன் இல்லத்தை நோக்கி வேகமாக ஓடத் துவங்குகிறான். இது ஒரு முரணான புனைவு என்றே சொல்லலாம். பாப் ஆண்டவரைப் பார்க்க வந்த கூட்டத்தின் நடுவே கழிவுத் தொட்டியை உயரமாகப் பிடித்து தூக்கிக் கொண்டு பேத்தோ ஓடி வருவதைத் தொலைக்காட்சியின் வழியாக அவனது மகளும் மனைவியும் பார்க்கும் காட்சி நெகிழ்ச்சியாக அமைந்துள்ளது.

பேத்தோ வந்தடைந்ததும் கழிப்பறையில் தொட்டியைப் பொறுத்திவிட்டு அதைத் திறந்து வைக்கிறார்கள். பிறகு பேத்தோ ஒவ்வொருவருவரிடமாகச் சென்று தனது “பாப் ஆண்டவரின் கழிப்பறையை” பயன்படுத்துங்கள் எனக் கெஞ்சுகிறான். எல்லோரும் கடந்து செல்வதிலேயே கவனமாக இருக்கிறார்கள். ஆகக் கடைசியில் பாப் ஆண்டவரும் பொதுமக்களும் அங்கிருந்து சென்றுவிட்ட பிறகு பேத்தோ சிரமப்பட்டு அவனது கனவுகளால் உருவாக்கிய கழிப்பறை அப்படியே கிடக்கிறது. இதுவரை அப்பாவிடமிருந்து எப்பொழுதும் முரண்பட்டே இருந்த அவளது மகள், அன்றைய போராட்டத்தின் மூலம் அப்பாவின் நிசமான இருப்பையும் உழைப்பையும் முழுமையாக உணர்ந்துவிடுவது அடித்தட்டு மக்களின் குடும்பங்களில் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கும் உறவுகளுக்கிடையான அன்பையும் புரிதலையும் காட்டுகிறது.

இந்தப் படத்தின் கழிவுத் தொட்டி கடைசி காட்சியில் ஒரு பகிங்கரமான குறியீடாகப் பாவிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. அங்குக் கூடியிருக்கும் அனைவரும் மதத்தையும் மதப் போதனைகளையும் உயரமாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் பேத்தோ தனது அன்றாட வாழ்வின் நெருக்கடியிலிருந்து விடுதலை பெறும் இலட்சியத்துடன் ஒரு கழிவுத் தொட்டியை உயரமாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நாகரிகத்தைப் பற்றி கவலைப்படாமல் ஓடுகிறான். கழிவுத் தொட்டி என்பது ஒரு அசிங்கத்திற்குரிய பொருளாகப் பாவிக்கப்படுபது வழக்கமானது ஆனால் இந்தப் படத்தில் அதை ஒரு மனிதனின் உழைப்பின் முன் புனித பிம்பமாக மாற்றியிருப்பது கலை உணர்வு எத்துனை முரணுக்குள்ளும் ஒரு கலையைச் சென்றடையும் எனப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா