நேற்று (28.03.2010) காலையில் கோலா மூடா/யான் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் மொழிப் பாடக்குழுவின் தலைவர்களுக்கு(தமிழாசிரியர்களுக்கு) வாசிப்புக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வைக் கோலா மூடா/யான் மாவட்ட கல்வி இலாக்காவும் கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கமும் இணைந்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. சுமார் 23 தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஆர்வமாகக் கலந்து கொண்டனர்.
முதல் அமர்வில் சுல்தான் அப்துல் அலிம் ஆசிரியர் கழகத்தின் விரிவுரையாளரும் தமிழ் பற்றாளருமான திரு.ப.தமிழ் மாறன் அவர்கள் வாசிப்பின் அணுகுமுறைகள் குறித்து உரையாற்றினார். தமிழ் மாறன் அவர்கள் இன்றும் இலக்கிய வாசிப்பிலும் விவாதத்திலும் ஆர்வத்துடன் இயங்கி வருபவர். எனக்கு பாரதியையும் புதுமைப்பித்தனையும் ஆரம்பக் காலக்கட்டத்தில் அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். மேலும் பல மாணவர்களுக்கு வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தியவர் அவர். தனது அமர்வில் அதிகமாக இலக்கியம் குறித்தும் நவீன இலக்கிய வாசிப்புக் குறித்தும் மிகவும் வசீகரமாகப் பேசினார். மாணவர்கள் மத்தியில் வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய வழிகளை அல்லது சூட்சமங்களை ஆசிரியர்கள் தெரிந்திருக்க வேண்டும் என்றும் அதைக் கொண்டுதான் அவர்களுக்கிடையே ஒரு தெறிப்பை ஏற்படுத்த முடியும் எனக் கூறினார். மேலும் தனது வாசிப்பு அனுபவங்களையும் அதன் மூலம் அவர் அடைந்த புரிதல்களையும் ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இரண்டாவது அமர்வில் மூத்த இலக்கியவாதியும் முன்னாள் பேராசியருமான டாக்டர் ரெ.கார்த்திகேசு அவர்கள், “நாளிதழ் வாசிப்பை” பற்றி உரையாற்றினார். நாளிதழ்களிலிருந்து நாம் என்ன அறிவை அல்லது தகவல்களைப் பெற முடியும் என ஆசிரியர்களையும் இணைத்து அதை ஒரு பட்டறையைப் போல நடத்தினார். நாளிதழ் செய்திகளிருந்து நாம் பெறும் தகவலை அது புது விஷயமாக இருந்தால் அதுவே ஒரு அறிவாக நம்மை வந்தடையும் எனவும் நாளிதழ் செய்திகள் என்பதே நேற்றைய தொடர்ச்சித்தான் என்பதையும் விளக்கமாகக் கூறினார். தொடர்ந்து அரசியல் தொடர்பான செய்திகளை முன்வைத்து அதிலுள்ள பழைய தகவல்களையும் புதியதாகச் சேர்க்கப்படிருக்கும் தகவலையும் பிரித்தறிந்து எப்படி ஒரு நுகர்வாளன் பயன்பெற முடியும் என்பதையும் தெளிவாகக் கூறினார். ஏற்கனவே இவருக்கு பத்திரிக்கைத் துறையிலும் வானொலி துறையிலும் அனுபவம் இருந்ததால் அவரது அனுபவங்களின் வழியாக உரையாற்றினார்.
மூன்றாவது அமர்வில், மூத்த எழுத்தாளரும் முன்னாள் தலைமை ஆசிரியருமான திரு.கோ.புண்ணியவான் அவர்கள் “வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள 10 எளிய வழிமுறைகள்” எனும் தலைப்பில் மிகவும் நகைச்சுவையாகவும் எளிமையாகவும் உரையாற்றினார். எப்படி வாசிப்பை நமது அன்றாட நிகழ்வாக மாற்றுவது என விரிவாகப் பேசினார். மேலும் தனது வாழ்வில் எங்கெல்லாம் அவரது சந்தர்ப்பங்களும் பொழுதுகளும் அவருக்கு வாசிப்பை நெருக்கமாக்கியது எனக் கூறும் போது தன் குடும்பத்து பெண்கள் புடவைகள் வாங்கும்போது ஒரு முழு நாவலையே வாசித்து முடித்ததையும் குறிப்பிட்டு எல்லோரையும் சிரிக்க வைத்தார். அவரது அமர்வில் மேலும் சில எளிமையாக கவிதைகளையும் நகைச்சுவை துணுக்குகளையும் வாசிக்கச் செய்து ஆசிரியர்கள் மத்தியில் வாசிப்பின் தொடக்கம் முதலில் எளிமையிலிருந்தும் உங்களுக்குப் பிடித்த இடத்திலிருந்தும் தொடங்கினால் அது உங்களை மேலும் ஒரு வாசகனாக வளப்படுத்தும் எனக் குறிப்பிட்டுப் பேசினார்.
ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி