Monday, June 1, 2009

ஜூன் மாத தீராநதி இதழில் -யஸ்மீன் அமாட் திரைப்பட விமர்சனம்



ஜூன் மாத தீராநதி இதழில் எனது சினிமா கட்டுரைப் பிரசுரமாகியுள்ளது.
மலேசிய மலாய் திரைப்பட இயக்குனர் யஸ்மீன் அமாட் அவர்களின் படங்களைப் பற்றிய விமர்சனமாக அக்கட்டுரை மலர்ந்துள்ளது.
(டேலண்ட் டைம் திரைப்படம்)
யஸ்மீன் அமாட் ஒரு துணிகர இயக்குனராக தமது குரலை ஆளுமையை சினிமாவின் மூலம் பதிவு செய்து வரும் முற்போக்குத்தனம் கொண்ட யதார்த்தவாதி. அவரது "டேலண்ட் டைம்" படம் குறித்தும் முஷ்கின் படம் குறித்தும் எனது கட்டுரை பதிவாகிவுள்ளது.


ஒரு இனத்தின் அடையாளத்தைக் கேள்விக்குள்ளாக்கும் சினிமாதான் மலேசிய மலாய் இயக்குனரான யாஸ்மின் அமாட் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் “முஷ்கின்” மற்றும் “டேலண்ட் டைம்”.



(யஸ்மீன் அமாட்)
இந்தப் படங்களின் மூலம் வெளிப்படும் காட்சிகள் மலாய்க்கார சமுகத்தின் எதிர்வினைகளையும் கண்டனங்களையும் சம்பாதித்துள்ளன. பெரிய அளவில் பேசப்படவில்லையென்றாலும் யஸ்மின் அமாட் அவர்களின் குரலுக்கு அரசு ரீதியிலிருந்து இன்னமும் எதிர்ப்போ கண்டனமோ வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மலேசிய திரைப்பட கலையைக் கலாச்சார தளத்திலும் மதமற்ற மனித பண்பாட்டுத் தளத்திலும் வைத்து நுட்பமான வெளிப்பாடுகளாக ஆக்கப்படுத்தியுள்ளார் யஸ்மின் அமாட் என்கிற துணிகர மலேசிய சினிமாவின் மிகச் சிறந்த அடையாளம். . . . . .
மேலும் வாசிக்க தீராநதி ஜூன் மாத இதழை மறவாமல் பார்க்கவும். . . .

தேவதைகளைத் துரட்டியடித்த பொழுதுகள்

எப்பொழுது என் தேவதைகளைத்
துரட்டியடித்திருப்பேன்?





அம்மா சோறு ஊட்டும்போதெல்லாம்
நிலவிலிருந்து உருகி வெளிவந்த
வெள்ளைத் தேவதை
எப்பொழுது என் உலகிலிருந்து
காணாமல் போயிருப்பாள்?
அம்மா இல்லாமல்
சொந்தமாக சாப்பிட
அடம் பிடித்த ஒரு நாளிலா?



அக்காவின் கைப்பிடித்து
கண்ணு கடை சாலையில்
நடந்தபோதெல்லாம்
எனக்கருகில் நடந்து வந்த
மோகினி தேவதை
எப்பொழுது தொலைந்து போயிருப்பாள்?
அக்கா வேண்டாம் என
தனியாக நடக்கப் பழகிய ஒரு நாளிலா?


அப்பாவுடன் மோட்டார்
சவாரி செய்த பொழுதுகளிலெல்லாம்
என்னைப் பின் தொடர்ந்த
காட்டுத் தேவதைகள் எப்பொழுது ஓடிப் போயிருப்பார்கள்?
அப்பா எனக்கென்று தனி சவாரிக்காக
ஒரு சைக்கிள் வாங்கித் தந்த ஒரு நாளிலா?


நீண்ட நாட்களுக்குப் பிறகு
தனிமை எனக்குள்ளிருந்து
உதிரும் போதெல்லாம்
நான் முன்பு தொலைத்த தேவதைகளெல்லாம்
இப்பொழுது கணக்கிறார்கள்
என் மீது சிறுக சிறுக சுமத்தப்பட்ட
தனிமைகளென.


கே.பாலமுருகன்