Thursday, January 27, 2011

பெண் படைப்பாளிகள் மரபு மீறி எழுதுவது இங்கு வரவேற்கப்படுவதில்லை – வாணி ஜெயம்

சந்திப்பு &நேர்காணல்: கே.பாலமுருகன்

வாணி ஜெயம் மலேசிய பெண் படைப்பாளிகளில் மிக முக்கியமானவர். அண்மையில் மிக ஆர்வமாக நவீன சிற்றிதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் எழுதத் தொடங்கி தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். மௌனம் இதழ் மூலம் மீராவாணி எனும் புனைப்பெயரில் கவிதைகளும் எழுதி வருகிறார். இவருடைய சிறுகதைகள் உயிர் எழுத்து, வல்லினம், மக்கள் ஓசை, மலேசிய நண்பன் போன்ற இதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் தொடர்ந்து வெளிவருகின்றன. அநங்கம் இதழுக்காக கடந்த வருடம் நடத்தப்பட்ட நேர்காணல் இது.

1) கே.பா: இரண்டாம் தலைமுறை பெண் படைப்பாளிகள் இலக்கிய வெளியில் தீவீரமாக வெளிப்படுவதாக நினைக்கிறீர்களா? விளக்கவும்.

வாணிஜெயம்: எனது பார்வையில் இரண்டாம் தலைமுறை படைப்பாளிகள் இரண்டு பிரிவுகளாக தெரிகிறார்கள்.
முதல் பிரிவினர் இணையம், சிற்றிதழ்கள் என நவீன இலக்கியத் தளத்தில் கால் தடம் பதித்தும் அதை நோக்கிய அவர்களின் நகர்வு தீவிரமாகவும் இருக்கின்றது. அது சிறு வட்டமாக இருந்த போதிலும் அவர்களுக்குள் ஆரோக்கியமான இலக்கிய புரிதல்களை ஒவ்வொரு சந்திப்பின் போதும் வெளிப்படுதிக் கொள்கிறார்கள். மற்றொர் பிரிவினர்
வார, மாத ஞாயிறு பதிப்புகளில் கவனத்தை செலுத்திக் கொண்டிருப்பவர்கள். இவர்களின்  பெரும்பாலோரின் படைப்பில் தீவீரம் இருந்தாலும் அது வெளிப்படும் முறையில் ஆளுமையும் இலக்கிய குறித்தான விரிவான பார்வையும் பெற்றிருக்கவில்லை என நினைக்கிறேன்.

2) கே.பா: சிறுகதை & கவிதை துறையில் பெண் படைப்பாளிகளின் ஈடுப்பாடு வெறும் படைப்பு ரீதியில் இருக்கிறது. விமர்சன முனைப்பும் பகிர்தலும் பலவீனமாக இருப்பதாக நினைக்கிறேன். உங்கள் கருத்து..?

வாணிஜெயம்: உண்மை! படைப்பையும் பகிர்தலையும் ஒப்பிடுகையில் பகிர்தலில் பலவீனமான போக்கே காணப்படுகிறது. ஒரு சிறந்த படைப்பு வெளிவருகையிலும் குறைகள் நிறைந்த படைப்பு பிரசுரம் காணுகையிலும் அதுக்குறித்தான விமர்சனமும் பகிர்தலும் வெளிப்படுவது மிக குறைவு. அதற்கு இலக்கிய வளர்ச்சி மீதான பொறுப்பற்றதனமும் அலட்சிய போக்கும் மட்டும் காரணமாக இருக்க முடியாது, தமிழகத்தைப் போன்று இங்கு பெண்களிடையே வாசிப்பும் ஆழமான இலக்கியத்
தேடலும் குறைவாக இருப்பதுவும் முக்கிய காரணம் எனலாம்.