Wednesday, June 9, 2010

சினிமா விமர்சனம்(ஸ்பானிஷ் திரை) : Cell 211 / குற்றம் என்கிற அறையின் மௌனம்

நம்மில் பலர் ஒரு சுற்றுப்பயணியாகக்கூட சிறைச்சாலைக்குச் சென்றிருக்க மாட்டோம். எனக்குத் தெரிந்தவர்களில் பலர், சிறைச்சாலையைத் தூரத்தில் இருந்து ஒரு பார்வையில் கடந்துவிட்டுப் போகக்கூடிய மனநிலையிலேயே இருக்கிறார்கள். சிறையைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் முள்வேலியைப் போல சிறை குறித்து நமக்கிருக்கும் எண்ணமும் பார்வையும்கூட கரடுமுரடாகத்தான் இருக்கின்றன. என் வகுப்பு மாணவர்களிடம் சிறை என்றால் என்னவென்று கேட்டிருந்தேன். பின்வரும் பதில்கள் அவர்களிடமிருந்து வெளிப்பட்டன.

1. குற்றவாளிகள் தண்டிக்கப்படும் இடம்
2. தங்களின் குற்றத்திற்கு ஏற்றவாறு தண்டனையை அனுபவிக்கும் இடம்
3. பாவம் செய்தவர்கள் அடைக்கப்பட்டிருக்கும் இடம்
4. சமூகத்திற்கு ஆபாத்தானவர்களை அடைத்து வைத்திருக்கும் இடம்
5. தவறு செய்தவர்களை அடைத்து வைத்து தண்டிக்கும் இடம்

மாணவர்கள் சுயமாக சிறையைப் பற்றிய இந்தப் புரிதல்களைப் பெற்றிருக்கவில்லை, அவர்களுக்கு வலிந்து கற்பிக்கப்பட்டிருக்கிறது. சிறையையும் குற்றவாளிகளையும் காட்டி பிள்ளைகளை மிரட்டி வளர்க்கும் பெற்றோர்களே இங்கு அதிகம். சிறை என்பதே அடைக்கப்பட்டு தண்டிக்கப்படும் கொடூரமான குறியீடாக எல்லோர் மனதிலும் மிக வலுவாகப் பதிக்கப்பட்டிருப்பதால், சிறையிலிருந்து வெளியேறும் ஒருவனை இன்னமும் குற்றவாளியாகவே பார்க்கும் மனநோய்க்குப் பலர் ஆளாகியிருக்கிறோம். அந்தக் கொடூரமான ஒரு குறியீட்டின் வலியையும் அதனிலிருந்து மீள முடியாத தவிப்பு மனநிலையையும் மிகச் சிறப்பாகச் சொல்லும் படம் தான் ஸ்பானிஷ் திரைப்படமான “சிறை எண் 211”.

சிறை எண் 211இல் இதற்கு முன்பு 4 கைதிகள் கொடூரமான முறையில் மரணித்திருக்கிறார்கள். படத்தின் முதல் காட்சியில் சிறை எண் 211-இல் உள்ள ஒரு குற்றவாளி கைகளை அறுத்துக் கொண்டு, தனது குருதியைச் சொட்டவிடுவது போன்ற அழுத்தமான சூழ்நிலை காட்டப்படுவதுடன் படம் துவங்குகிறது. குற்றவாளிகளின் உலகம் வலிகளாலும் இறுக்கமான மனநிலையினாலும் தவிர்க்க முடியாத புறக்கணிப்பின் கொடூரத்தாலும் கட்டப்பட்டவை என்கிற உண்மையைச் சொல்லும் வகையில் வித்தியாசமான புரட்சிக்கர வெளிப்பாடாக இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இருண்ட வேரை நோக்கிய பதிவாக இப்படத்தைக் காணலாம்.

ஜூவான் என்கிற புதிய சிறை அதிகாரி தனது பணியைத் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பே அந்தச் சிறைக்கு வருகிறான். அவனுடன் சக அதிகாரிகளும் சிறை கைதிகளைப் பற்றியும் சிறை தொடர்பான அனுபவங்கள் சட்டத்திட்டங்கள் போன்றவற்றையும் பகிர்ந்துகொண்டே, மூவரும் சிறைக்குள் நுழைந்துவிடுகிறார்கள். அந்த நேரம் பார்த்து சிறையின் முதலை என அடையாளப்படுத்தக்கூடிய Malamadre எனும் பழைய கைதி ஒருவன் அதிகாரி ஒருவனைத் தாக்கிவிட்டு சிறையைத் தனது ஆக்கிரமிப்பிற்க்குள் கொண்டு வருகிறான். அதிகாரியிடமிருந்து பறிக்கப்பட்ட சாவியின் மூலம் எல்லாம் சிறைக்கதவுகளையும் திறந்துவிடுகிறான்.

திடீரென தலையில் காயப்படும் ஜூவானை சக அதிகாரிகள் காலியாக இருக்கும் சிறை எண் 211-க்குக் கொண்டு செல்கிறார்கள். அரை மயக்கத்தில் இருந்த அந்தப் புதிய அதிகாரியை அங்கேயே போட்டுவிட்டு வேறு வழியில்லாமல் இருவரும் தப்பித்துவிடுகிறார்கள். இப்பொழுது சிறை முழுவதும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலிருந்து குற்றவாளிகளின் ஆக்கிரமிப்பிற்குள் வருகிறது. ஜூவான் எனும் இந்தப் புதிய அதிகாரி மட்டும் உள்ளே சிக்கிக் கொள்கிறான். அவன் அந்தக் குற்றவாளிகளின் உலகத்தினுள் நுழையும் விதமும் அவர்களைப் புரிந்துகொள்ளும் விதமும் மிகவும் அபாரமான அரசியல் கற்பனை ஆகும்.

ஏற்கனவே ஒருமுறை அந்தச் சிறை இதே போல கைதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு பல அதிகாரிகளும் பிணை கைதிகளும் கொல்லப்பட்டுருக்கிறார்கள். அதற்கு முக்கியமான காரணமானவன் இந்த மாலமட்ரே தான். குற்றவாளிகளுக்குள் அதிகாரத்திற்கு எதிராக வளர்ந்திருக்கும் ஒட்டுமொத்த வெறுப்பின் அடையாளம் அவன்தான். ஆகையால் ஏற்கனவே அந்தச் சிறையில் பதிந்துள்ள கசப்பான அனுபவமும் வரலாறும் அதிகாரிகளைப் பயமுறுத்துகின்றன. குற்றவாளிகளிடம் சிக்கிக் கொண்ட ஜூவானைக் காப்பாற்ற வேண்டும் என்கிற உரையாடல் அதிகாரிகளின் மத்தியில் சலனத்தை ஏற்படுத்துகிறது. இதற்கிடையில் அவர்கள் சிறை முழுவதும் பொறுத்தப்பட்டிருக்கும் காமிராவின் மூலம் உள்ளே நிகழும் சம்பவங்களை முதலில் கண்கானிப்பதாகத் தீர்மானித்துவிட்டு, இராணுவப்படையின் உதவியுடன் சிறையைச் சுற்றி பாதுகாப்பும் அமைக்கப்படுகிறது.

இந்தச் சிறையில் உள்ள கைதிகளுக்கு மத்தியில் ஓங்கி ஒலிக்கக்கூடிய வலிமையயன குரலாக மால்மட்ரே திகழ்கிறான். ஆகையால் எல்லாமும் அவனின் ஆணணப்படி நடத்தப்படுகிறது. 211-இல் சிக்கிக் கொண்ட ஜூவானை அவனிடம் கொண்டு செல்ல ஒரு வயதான கைதி முடிவு செய்கிறான். அந்தக் கைதி திரும்புவதற்குள் ஜூவான் அவனைச் சுற்றி நிகழ்ந்துகொண்டிருக்கும் அபாயத்தைப் புரிந்துகொண்டு உடனடியாக இந்தச் சூழலிருந்து தப்பிக்க முயல்கிறான். அவன் மிகத் தந்திரமாக தனது தப்பிக்க முடியாத இயலாமையை உணர்ந்துகொண்டு தான் ஒரு அதிகாரி என்கிற அடையாளங்களை மறைத்துவிடுகிறான். தான் ஒரு அதிகாரியாக அந்தச் சிறையில் சிக்கிக்கொண்டால் கொடூரமாகப் பழித் தீர்க்கப்படும் மேலும் கொல்லப்படுவான் என்பதை உணர்தே உடனடியாக அவனது அடையாள அட்டை, பணப்பை, காலணி எல்லாவற்றையும் அகற்றி மறைத்துவிடுகிறான்.

இந்தச் சிறைக்கு வந்ததும் முதலில் சக அதிகாரிகள் அவனுக்கு ஒரு குற்றவாளி எப்படியெல்லாம் அணுகப்படுவான் என்றும் குற்றவாளிகளின் மத்தியில் எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கற்றுக்கொடுக்கப்படுகிறான். குற்றவாளியின் முன் எப்பொழுதும் பயந்த சுபாவத்தைக் காட்டக்கூடாது. எப்பொழுதும் அவர்களைக் கண்கானித்துக் கொண்டே இருக்க வேண்டும் எனப் பல ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. அதே போல ஒரு குற்றவாளி சிறைக்கு வந்ததும் அவன் ஆடையும் உள்ளாடையும் கழற்றப்படுவதோடு, அவனது ஆசன வாய் பரிசோதிக்கப்படும், அவனிடமிருக்கும் எல்லாம் உடமைகளும் பறிக்கப்படும் என்றெல்லாம் குற்றவாளியின் அடையாளம் விரிவாகச் சொல்லப்படுகிறது.

அதற்குத் தகுந்த மாதிரி புதிய அதிகாரியாக நாளை பணியைத் தொடரவிருக்கும் ஜூவான், தன்னை 211 சிறைக்கு புதியதாக வந்திருக்கும் குற்றவாளியாக அடையாளப்படுத்திக் கொள்கிறான். ஜூலியசை அங்கிருந்து கடத்தி மால்மட்ரேவிடம் கொண்டு வருகிறார்கள். மால்மட்ரே ஒரு குற்றவாளி எப்படியெல்லாம் இதுவரை சிறையில் அவமானப்படுத்தப்பட்டுருக்கிறானோ அதையே ஜூவான் மீதும் பயன்படுத்தி அவனைப் பரிசோதித்துப் பார்க்கிறான். ஜூலியசின் ஆடைகள் அகற்றப்பட்டு அவனை நிர்வானமாக்கி, சுற்றியுள்ளவர்களிடம் அவனது ஆண் குறியைக் காட்டச் சொல்லி அதனைக் கிண்டலடிக்கிறார்கள். இந்தக் காட்சித்தான் குற்றவாளியின் உலகத்தில் நிகழும் மிகவும் வன்மையான செயல். ஒவ்வொரு குற்றவாளியும் பாலியல் ரீதியில் சிறைக்குள் அவமானப்படுத்தப்பட்டு கொடுமைப்படுத்தவும் படுகிறார்கள்.

குற்றவாளிகளின் மீதான இந்தப் பாலியல் கேலியும் அவமானப்படுத்துதலும் எங்கிருந்து தொடங்குகிறது எனப் பார்த்தால், சிறை அதிகாரிகளிடமிருந்து பிறகு தலைமை குற்றவாளியின் குழுவிடம் தாவுகிறது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குற்றவாளியும் தன்னைப் போலவே இன்னொருவன் அவமானப்படுவதைக் காணும்போது அவர்களுக்குள் வளர்ந்து அடர்ந்திருக்கும் வன்முறையும் பரிதவிப்பும் காயமும் மெல்ல தணிவது போல கற்பித்துக் கொள்ளும் அளவிற்கு அத்தகையதொரு மனநிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஜூவான் ஒரு அப்பாவி கொலையாளியாக அவர்களுக்கு மத்தியில் ஏற்றுக் கொள்ளப்படுகிறான்.

ஒரு அதிகாரி குற்றவாளியாகி, குற்றவாளிகள் நடத்தப்படுவதைப் போல எல்லாம் அநியாயங்களையும் போராட்டங்களையும் சந்தித்து அவர்களுள் ஒருவனாக அவர்களின் மனநிலைகள், வலிகள், இருண்ட வாழ்வின் பதிவின்மைகள், சூன்யம் எல்லாவற்றையும் அடைவதாக இப்படத்தில் காட்டப்படுகிறது. மேலும் அதிகாரத்திற்கு எதிராக வதைக்கப்பட்டு, ஒரு முழு குற்றவாளியாகவே மாறிவிடும் குற்றவாளியின் மௌனம் நிரம்பிய நிதர்சன அறையை பார்வையாளர்கள் முன்னிலைக்குக் கொண்டும் வரப்படுகிறது. சமூகத்தில் எல்லா வசதிகளுடனும் பணத்தின் மூலம் பெறப்படும் நல்ல பெயருடனும் ஒழுக்கத்தைச் சுயமாக உற்பத்தி செய்துகொண்டு மேல்தட்டு மனோபாவத்தில் வாழும் அதிகார சக்திகளுக்குச் சீர்த்திருத்தம் எனும் பெயரில் சமூகத்தின் எச்சங்கள் தேங்கிக்கிடப்பதாகச் சொல்லப்படும் சிறையில் குற்றவாளிகளுக்கு நடக்கும் அகக் கொடுமைகள் பற்றியும் உடல் துன்புறுத்தல் பற்றியும் என்ன தெரியப் போகிறது? என்கிற கேள்விக்குப் பளார் எனும் அறையும் படம்தான் “சிறை எண் 211”.

சிறை 211-இன் சுவரில் ஏற்கனவே இறந்துபோன குற்றவாளிகளின் கிறுக்கல்களும், அவர்கள் எப்படி மரணித்தார்கள் என்ற குறிப்புகளும் காணப்படும். ஒருவன் தலையில் ஏற்ப்பட்ட புற்றுநோயால் கதறி கதறி தலை பிளந்தும், இன்னொருவன் அறையிலிருக்கும் சன்னல் கம்பியில் தூக்குப் போட்டுக் கொண்டும் இறந்திருப்பார்கள். இந்தச் சிறையின் 211 அறைக்குள் நிகழ்ந்த குற்றவாளிகளின் மரணம் அதிகாரத்தின் அலட்சியத்தையும் குற்றவாளிகளின் அகத்தை முறையாகச் சீர்ப்படுத்தாத கொடூரத்தையும் காட்டுகிறது. அவர்கள் ஒரு மிருகத்தைப் போல நடத்தப்படுவதன் விளைவையும் சிறை எண் 211 பிரதிபலிக்கிறது.

ஸ்பானிஷ் பிரதேசத்தின் இப்படமானது நிறைய விருதுகளையும் பாராட்டுகளையும் உலக அளவில் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் மைய கதைப்பாத்திரமாகவும் குற்றவாளியாகவும் நடித்திருக்கும் மால்மட்ரே எனும் பெயரில் வரும் லுய்ஸ் தோஷர் ஸ்பானிஷ் மொழி சினிமா உலகத்தின் மிக முக்கியமான நடிகராவவர் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மொழியில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் லுய்ஸ் 20க்கும் மேற்பட்ட விருதுகளையும் வென்றுள்ளார். மேலும் அந்த நாட்டின் பல முக்கியமான தொடர்களிலும் நடித்து இரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர். இந்த சிறை எண் 211 படத்தில் இவரின் பாத்திரப்படைப்பு வெகுஜன இரசிகர்களையும் கவர்ந்துவிடும் அளவிற்கு ஆளுமை நிறைந்திருப்பதாக இருக்கிறது. அலட்டலும் மிகை உணர்ச்சி வெளிப்பாடுகளுமற்ற நிதானமான உடல் மொழியாலும் குற்றவாளிகளின் கரார் தன்மை நிரம்பிய குரலிலும் உண்மையான அடையாளமாக படத்தில் வாழ்ந்திருக்கிறார்.

4 படத்திற்கும் மேல் இயக்கி அனுபமுடைய Daniel Monzón இப்படத்தையும் இயக்கியுள்ளார். பலவகையான காரணத்தால் உள்ளுக்குள் திடீரென அடரும் ஒருவகை வெறுப்புணர்ச்சியாலும், கோபத்தாலும் குற்றங்களைச் செய்துவிட்டு சிறைக்கு வருபவர்களின் மீது மேலும் மேலும் சித்ரவதைகளும் துன்புறுத்தல்களும் திணிக்கப்பட்டு, அவர்களுக்குள் உருவான வன்முறை உணர்வை வலுப்படுத்தி, அவர்களை மீண்டும் ஒரு குற்றவாளியாகவே வெளியே அனுப்பும் சிறையின் கண்டிக்கத்தக்க செயல்பாடுகளை எதிர்க்கும் முரண் பிம்பமாக இப்படம் 2009-இல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தை குற்றவாளியின் அறைக்குள் அனுப்பி கடைசிவரை காப்பாற்ற முடியாமல் போன சிறை நிர்வாகத்தின் கையறுநிலையை தந்திரமான சிக்கலான களத்தில் வைத்து மிக வலுவான திரைக்கதையின் மூலம் படைத்திருப்பது பாராட்டத்தக்க உதாரணம்.

ஜூவானை கடைசிவரை குற்றவாளிகளின் உலகத்திலிருந்து சிறை அதிகாரிகளால் காப்பாற்றவே முடியவில்லை. மால்மட்ரேவின் நம்பிக்கைக்குரியவனாக ஆவதற்கும் “உயிருடன் இருக்கவும்” அங்குச் சிக்கிக் கொண்ட அதிகாரியான ஜூவான் பிணை கைதி ஒருவனின் காதை அறுக்க நிர்பந்திக்கப்படுகிறான். மேலும் தன் கற்பினி மனைவியான எமிலாவைக் கலவரத்திலிருந்து காப்பாற்றத் தவறிய அதிகாரியும் மேலும் அவளைக் கலவரத்தில் தாக்கிவிட்டு, அங்கேயே விட்டுச் சென்ற மேலதிகாரியுமான ஒருவன் சிறைக்குள் சிக்கிக் கொள்கிறான். அதிகாரத்தின் நேர்மையற்ற செயலைக் கண்டு துடிக்கும் ஜூவான் அந்த மேலதிகாரியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிடுகிறான். படத்தின் இந்தப் புள்ளி விரியும் இடம் மிக முக்கியமானது. அதவாது ஓர் அதிகாரி உண்மையான குற்றவாளியாக மாறுகிறான். அதற்குக் காரணம் யார்?

டாக்டர் சண்முகசிவா அவர்களின் ஒரு வரியை மலேசிய செம்பருத்தி இதழில் வாசிக்க நேர்ந்ததும் இப்படத்தின் மையக்கருவுடன் அதை ஒப்பீட்டுப் பார்க்க முடிந்தது.

“சமூகம் குற்றங்களை உற்பத்தி செய்கிறது, குற்றவாளிகள் அதைச் செய்து முடிக்கிறார்கள்”

முன்பு ஒருமுறை இங்குள்ள சிறையைக் கண்காட்சிக்காகப் பொதுமக்களுக்குத் திறந்துவிட்டடர்கள். அப்பொழுது தூக்குத் தண்டனை கைதிகளின் அறைகளைப் பார்க்க நேர்ந்தது. அங்கு என்னால் விவரிக்க முடியாது ஒரு துக்கமும் மௌனமும் நிரம்பியிருந்தது. சுவரில் எழுதப்பட்டிருந்த ஒரு தூக்குத் தண்டனை கைதியின் வரியுடன் இந்த விமர்சனத்தை முடிக்கின்றேன்.

“ நாளிக்கு எனக்கு தூக்கு. அம்மா என்ன மன்னிச்சிறு”

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
http://bala-balamurugan.blogspot.com/