Thursday, May 23, 2013

Gandhi Is My Father – ஓர் இந்துத்துவ தந்தையின் அதிகாரம்


வரலாற்றில் பற்பல முறை உடைத்து உடைத்து மீண்டும் கட்டியெழுப்பப்பட்டவர் காந்தி. எழுத்தாளர் ஜெயமோகன் முதல் நடிகர் கமல்ஹாசன் வரை எல்லோராலும் மீண்டும் மீண்டும் புனையப்பட்ட அடையாளம்தான் காந்தி. சிலர் காந்தியின் அமைதி போராட்டத்தை வைத்து இந்தியாவின் மிகச் சிறந்த எதிர்ப்புணர்வு உண்ணாவிரதம்தான் எனக் கூறினார்கள். சிலர் காந்தியைச் சுதந்திர தந்தை என அடையாளப்படுத்தினார்கள். இன்னும் சிலர் காந்தி தன் ஆண்மையைத் தன் பேத்திகளிடமே பரிசோதித்துப் பார்த்தவர் என அவரின் ஒழுக்கத்தை விமர்சித்தார்கள். மேலும் சிலர் காந்தியின் அரசியல் தவற்றை வன்மையாகக் கண்டித்தனர். சிலர் காந்தியை இராமருக்கு நிகரான சமய அடையாளமாகப் புனைந்தார்கள். ஒரு பக்கம் அவரைக் கட்டியெழுப்பியவர்களும் இன்னொரு பக்கம் அவரை நிர்முலமாக்கியவர்களும் காலம் முழுக்க இருக்கவே செய்தார்கள்.

காந்தியின் வரலாற்று படமான ‘காந்தி’ 1982-இல் வெளியாகி ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது. ஒரு வழக்கறிஞர் எப்படி இந்தியாவின் மிகச் சிறந்த அரசியல்வாதியாக மாறுகிறார் எனும் வரலாற்றை தகவல்கள் அடிப்படையில் மட்டுமே கொண்டு போய் சேர்த்த அப்படத்தை விட்டுவிடலாம். காந்தி குறித்து எந்தக் கேள்வியுமே எழுப்பாத முயற்சி அது. ஆனால், பிறகு வெளிவந்த இரு முக்கியமான படங்கள் கவனத்திற்குரியவை. இரண்டுமே இந்தி திரைப்படங்கள் ஆகும். இவ்விரண்டு படத்தையும் புரிந்து கொள்வதற்கு நமக்கு காந்தியைப் பற்றிய குறிப்புகளும் அவரின் அரசியல் ஈடுபாடுகளும் தெரிந்திருக்க வேண்டும்.