Sunday, January 18, 2015

சிறுகதை: முகுந்தனின் நாற்காலி ஒழிப்புக்குழு - 2014


குழு உருவாக்கம்: மே 2014

நேரம்: ஓய்வு மணி அடிப்பதற்கு 5 நிமிடத்திற்கு முன்

உறுப்பினர்கள்: பிரபா, சிவா , குமார்

குழுவின் நிரந்திர எதிரி: முகுந்தனும் அவனுடைய நாற்காலியும்


குழு உறுப்பினர்களின் சுயசரிதை

பிரபா

வகுப்பிலேயே இவன் தான் கோபக்காரன். ஆனால் கோபப்படும்போது அழுவான். முகத்தை எப்பொழுதும் பல வகைகளில் நவரசமாக வைத்துக்கொள்வான். ஒரு முரட்டுத்தனமான பாவனை இருக்கும். சக மாணவர்கள் தன்னைப் பார்த்துப் பயப்பட வேண்டும் என நினைப்பான். ஆனால், யாரும் இதுவரை பயந்ததில்லை. அதற்குக் காரணம் அவனுடைய ஓட்டை சிலுவார்தான். அவனுக்கு இன்னொரு பெயரும் உண்டு. ‘ஓட்டைச் சிலுவாரு பிரபா’. கடந்த மூன்று வருடத்திலும் அவன் சிலுவார் ஓட்டையாகவே இருக்கும். அது எப்படி உருவாகும் என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆனால், நிச்சயம் அவன் சிலுவாரில் எங்கேயாவது ஓட்டை இருக்கும். அதை அவன் தைத்து தைத்து மீண்டும் கிழிந்து மீண்டும் தைத்து தைத்து, ஒரு நாள் அவனுக்கு சலிப்பேற்பட்டுவிட்டது. அதன் பிறகு தைப்பதை நிறுத்திக்கொண்டான்.

சிவா
கொஞ்சம் ஆர்வக்கோளாறு அதிகம் உள்ளவன். ஆனால், எதையும் முழுமையாக முடித்ததில்லை. வகுப்பில் ஆசிரியரின் அதிகப்படியாகத் தண்டனைகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறான். ரிப்போர்ட் கார்ட்டில் சொந்தமாக அப்பாவின் கையொப்பம் வைப்பதில் கெட்டிக்காரன் என்பதால் அவ்வப்போது குமாரும் பிரபாவும் இவனிடம்தான் கையொப்பம் வாங்குவார்கள். மகா நல்லவன் என்ற பெயரும் அவனுக்குண்டு.

குமார்
இவன் ஒரு அனுபவமிக்க தலையாட்டி. எதற்கெடுத்தாலும் தலையாட்டுவான். குமாருக்கு அவன் நண்பர்கள் எடுக்கும் அனைத்து முடிவிற்கும் எப்பொழுதும் சம்மதம்தான். அதனால், அவர்கள் இவன் அனுமதியையோ கருத்தையோ கேட்பதற்கு முன்பே தலையாட்டி வைப்பான். பள்ளியில் தலைமை மாணவன் என்பதால் எல்லோரும் இவன் சொல்லாமலேயே இவனைக் கண்டால் பயப்படுவார்கள். குமாரை எல்லோரும் ‘may I go out’ என்றுத்தான் விடைப்பார்கள். வகுப்பில் பாதி நேரம் இருக்கவே மாட்டான். வெளியே போக அனுமதி தாருங்கள் எனக் கேட்டு எங்குப் போவான் என யாருக்குமே தெரியாது.

முகுந்தனின் நாற்காலி கதையும்முகுந்தனின் நாற்காலி ஒழிப்புக்குழுவின்செயல்திட்டமும்


இந்த நாற்காலியின் பெயர் ‘xyz’. அப்படித்தான் அழைக்க வேண்டும் என்கிற விதிமுறை. முகுந்தனின் பிரியமான நாற்காலி. கடந்த நான்கு வருடங்களில் அவன் இந்த நாற்காலியை மாற்றாமல் பயன்படுத்தி வருகிறான். ஒவ்வொரு வருடமும் வகுப்பு மாறி வரும்போது முகுந்தன் மட்டும் பழைய வகுப்பில் போய் அவனுடைய நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வந்துவிடுவான். அவனை நண்பர்கள் வேடிக்கையாகப் பேசுவார்கள். இதில் உட்கார்ந்து படித்தால்தான் அவன் எடுப்பான் என்றெல்லாம் கிண்டலடிப்பார்கள். ஆனாலும், வகுப்பில் அவன்தான் கெட்டிக்காரன். ஒரு மகா நல்ல பையனின் வாழ்க்கையில் அவன் வகுப்பு நண்பர்கள் மூவர் எப்படி விளையாடினார்கள் என்பதுதான்முகுந்தனின் நாற்காலி ஒழிப்புக்குழுவின்மையக்கொள்கையாகும்.

சிவாவிற்கும் இந்த நாற்காலிக்குமான பகை அதிகபட்சம் முகுந்தன் இல்லாத நேரங்களில் அதனை எட்டி உதைத்திருக்கிறான். அவன் பெயர் எழுதப்பட்டிருக்கும் இடத்தைச் சேதப்படுத்தியுள்ளான். அவ்வளவுத்தான். முகுந்தனுக்கு அந்த நாற்காலியின் மீதிருக்கும் பற்றைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தால் அவனை ஜெயித்துவிடலாம் என்கிற ஒரு எண்ணம்தான். ஆனால், அவன் அந்த நாற்காலியை விட்டப்பாடில்லை. மீண்டும் பெயர் எழுதி வைத்துக்கொள்வான்.