Thursday, December 3, 2009

சிறுபான்மை இனத்தின் தாய்மொழிக்கு - மொழி பேரழிவு



கடந்தாண்டு எஸ்.பி.எம் தேர்வில் சுமார் 4391 இந்திய மாணவர்கள் தமிழ் இலக்கியத்தைத் தேர்வு பாடமாக எடுத்து அதன் தேர்வையும் எழுதியுள்ளனர். இந்த எண்ணிக்கை 1998-இல் 340ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 10 வருடக் காலக்கட்டத்தில் 4000 இந்திய மாணவர்கள் தன் தாய்மொழி மீதான அக்கறையையும் தமிழ் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தையும் காட்டியிருப்பது பெருமைக்குரிய முன்னேற்றமாகும். இனத்தின் அடையாளம் மொழியும் மொழியறிவும் ஆகும் தொடர்ந்து தன் தாய்மொழியை வளர்ப்பதன் மூலமும் அதை அடுத்த தலைமுறைக்குப் பயிற்றுவிப்பதன் மூலமும் ஒரு மொழியை அழியாமல் பாதுகாக்க இயலும்.

அன்மையில் மலேசிய கல்வி அமைச்சு எஸ்.பி.எம் தேர்வில் மாணவர்கள் 10 பாடங்கள் மட்டுமே இனி எடுக்க முடியும் என்கிற சட்டத்தை அமலுக்குக் கொண்டு வரப்போவதாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு நாடளவில் மலேசியத் தமிழர்களிடமிருந்து பெரும் எதிர்வினையையும் திருப்தியின்மையையும் எழுப்பியுள்ளது. கட்டம் கட்டமாக எதிர்ப்பு அலைகள் பரவியபடியே இருப்பதால், இந்தச் சட்ட அமலாக்கம் குறித்துத் தீவிரமாகச் சிந்திக்கவும் கலந்துரையாடவும் வேண்டியிருக்கிறது. ஒரு சராசரி மலேசிய குடிமகனாக இந்தப் பிரச்சனையை அணுகும்போது, தமிழ்க் கல்விக்கே பேரழிவு நடைப்பெறவிருப்பதை மிகவும் வெளிப்படையாக அனுமானிக்க முடிகிறது.

எஸ்.பி.எம் என்பது மலேசிய இடைநிலைப்பள்ளி மாணவர்கள்(17/18 வயது)) படிவம் 5இல் மேற்கொள்ளும் உயர் தேர்வாகும். இந்தத் தேர்வை எழுதிய மாணவர்கள் உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடரலாம் அல்லது வெளிநாட்டில் பயிலச் செல்லலாம், அல்லது உள்நாட்டு கல்லூரிகள், ஆசிரியர் பயிற்றகம், தொழில் திறன் பயிற்சி கல்லூரிகள் எனத் தொடரலாம். இத்துனைக் காலமாக எஸ்.பி.எம் தேர்வில் கலை மற்றும் அறிவியல் வகுப்பைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் தமிழ் மொழியையும் தமிழ் இலக்கிய பாடத்தையும் தனது தேர்வு பாடமாகவும் எடுத்து வந்தனர்.

ஆனால், அடுத்த வருடம் தொடக்கம், எஸ்.பி.எம் தேர்வில் 10 பாடம் மட்டுமே எடுக்க முடியும் என்கிற வரையறை கல்வி அமைச்சின் புதிய சட்டமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், இனி இரண்டு வகையான மொழி பேரழிவு தனது அரசியல் கிளையைப் பரவவிடும் என்பதை நமது இந்திய கல்வியாளர்கள் உணர்ந்து அதை வெளிப்படையாகப் பொது மக்களுக்கு தெரிவிப்பார்களா என்பதும் சந்தேகத்திற்குரிய இடமாக இருக்கிறது.

பெரும்பான்மை இனமான மலாய்க்காரர்களின் மொழியான தேசிய மொழி(மலாய் மொழி) கட்டாயப் பாடமாகவும் அதிகாரப்பூர்வ மொழியாகவும் கற்பிக்கப்பட்டு, அதை மாணவர்கள் கட்டாயம் எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கல்வி வாய்ப்புகள் சாத்தியப்பட வேண்டுமென்றால் தேசிய மொழியில் தேர்ச்சிப் பெற வேண்டும் என்கிற சட்டத்தை ஒட்டுமொத்த மலேசியர்களும் ஒரே தேசிய அடையாளத்தின் கீழ் இன்னமும் அதைப் பின்பற்றுவதோடு தமிழ்ப்பள்ளியில் மரியாதைக்குரிய வகையிலும் நிர்வாகத்தால் அமல்படுத்தப்பட்டு, இன்றும் நம் இந்திய மாணவர்கள் தேசிய மொழியான மலாய் மொழியில் சிறந்த தேர்ச்சிப் பெற்றும் வருகின்றனர். சிறுபான்மையினர் தேசியத்தை ஏற்றுக் கொள்வதோடு மதிக்கவும் செய்கிறார்கள், ஏன் இந்தத் தேசியம் சிறுபான்மையினத்தவரின் தாய்மொழிக்கு சரிவு ஏற்படகூடிய சட்டங்களை அமல்ப்படுத்த வேண்டும்?

எஸ்.பி.எம் தேர்வில் மாணவர்கள் 10 பாடங்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்கிற சட்டம், இந்தப் புது நடைமுறை அமலுக்கு வந்தால் கலை பிரிவில் படிக்கும் மாணவர்கள் தமிழ் அல்லது தமிழ் இலக்கியம் என ஏதாவது ஒன்றையே தேர்வு செய்ய முடியும், மேலும் அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்கள் இரண்டு தமிழ் பாடத்தையும் எடுக்க முடியாமல் போய்விடும்.(மக்கள் ஓசை 2.12.2009) இது தாய்மொழிக்கு நேரிடையாக ஏற்படப் போகும் அழிவு என்பதை எந்தவித உடனடி உணர்ச்சிவசத்திற்குரிய புரிதலும் இல்லாமல் மிக வெளிப்படையாகவே தெரிந்துகொள்ள முடியும்.

    "எஸ்.பி.எம் தேர்வில் 10 பாடங்கள் மட்டுமே என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை, ஆகையால் தாய்மொழி தேர்வை பள்ளியளவிலேயே எழுதிக் கொள்ளுங்கள்" என்ற அறிவிப்பைக் கொடுத்துள்ளார். ஒரு முக்கியமான சிறுபான்மை இனத்தவரின் தாய்மொழிக்கு எதிரான ஆதிக்கக் குரலாக இந்தப் புதிய சட்டத்தை அணுகக்கூடுமா? தேசியம் என்ற கட்டமைப்பு சிறுபான்மையையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமே தவிர சிறுபான்மையின் முக்கியத்துவங்களை அலட்சியப்படுத்துவதாக இருக்கக்கூடாது. அப்படி இருக்குமாயின் அது அரசியலின் மிகப் பெரிய தவறாகவும், அரசியல் சக்திகளின் நேர்மையின்மையெனவும் கருதக்கூடும்.

பள்ளி அளவிலேயே தாய்மொழி தேர்வை நடத்திக் கொண்டு, பள்ளி நிர்வாகமே அதற்குரிய சான்றிதழை வழங்கிக் கொள்ளட்டும் என்ற பரிந்துரை மேல்மட்ட தீர்மான மதிபீட்டுக் கொள்கையிலிருந்து சிறுபான்மை இனத்தவரின் தாய்மொழியை அலட்சியப்படுத்தி நீக்குவது போல தோன்றுகிறது. இது ஒருவகையில் தாய்மொழியைப் பயின்றால் எதிர்க்காலத்தில் வேலை வாய்ப்பும் வெற்றி வாய்ப்பும் இல்லை, அதே சமயம் அறிவியல் மாணவர்களுக்குத் தமிழ் மொழி தேவையில்லாத மொழியாகிவிடும் என்கிற புரிதலையும் கொண்டிருக்கிற அரசின் மனப்பான்மையைத்தான் வெளிப்படுத்துகிறது.

“ஒரே மலேசியா” என்கிற கொள்கையின் தந்தையான மலேசியப் பிரதமர், இந்தச் சிறுபான்மை இனத்தவரின் தாய்மொழிக்குரிய பெரும் பாதிப்பை உடனடியாக உணர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க ஆலோசிக்க வேண்டும் என்றுதான் இந்திய சமூகமே எதிர்ப்பார்க்கின்றது.

குறிப்பு:  ஏ எடுக்க முடியாமல் போனதற்காக, தற்கொலை செய்து கொண்ட இந்திய மாணவர்களின் முகங்களும், அதே சமயம் 6 பாடத்தில் ஏ எடுத்து ஒரு பாடத்தில் வீழ்ச்சி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட யூ.பி.எஸ்.ஆர் மாணவரின் முகமும் தோல்வியின் பிம்பமாக வந்துவிட்டுப் போகிறது. அப்படி வந்துவிட்டுப் போகும் போதெல்லாம் எந்தவித முன்னறிப்பும் இன்றி அதிருப்தியும் கோபமும் ஏற்படுகின்றது.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா.