1998: பொருளாதார வீழ்ச்சி உக்கிரத்தில் இருந்த
காலம்
அப்பொழுது ஆப்பே கடை மீண்டும் புத்துணர்ச்சிப் பெற்றது. ஆப்பே கடையின் மலிவு தேநீர் அல்லது
காப்பி என்பதோடு பலர் ஒத்துப்போயிருந்தனர். ஏறக்குறைய மக்கள் மறந்துபோன ஆப்பே கடைக்கு மீண்டும் அலை
மோதினர். ஒரு காப்பியின் விலை அப்பொழுது 60 சென் மட்டுமே. அவ்வளவு குறைவாக ஆப்பே கடையைத் தவிர
வேறு எங்கும் கிடைக்காது.
“சரி வரச்சொல்லுங்க…” எனக் கைத்தொலைபேசியில் யாரிடமோ சொல்லிவிட்டு மணிமாறன் முதலில் வந்து அமர்ந்தான்.
அவனுக்கு அடுத்து முருகேசனின் தம்பி சிவனேசன், முரளி என ஆப்பே கடையின் முதல் மேசை இன்னும் இரண்டு பேருக்காக மட்டுமே காத்திருந்தது. திட்டமிட்டதைப் போல சரியாக 7மணிக்கு Table Talk. அப்பொழுதுதான் வேலை முடிந்து செல்பவர்களின் கூட்டம் குறையும்.
ஆப்பே கடை பெரிய சாலைக்கு வலது புறமாகப் பிரிந்து செல்லும் ரையில்வே பாதையில் இருக்கும் இரண்டாவது கடை. மொத்தம் 8 தகற மேசைகள். 1960களில் சீன சிறுநகரங்களில் தொடங்கப்பட்ட காப்பிக் கடையின் அமைப்பை ஆப்பே மாற்றாமல் அப்படியே தக்க வைத்திருந்தார்.
லாடாங் சிறுநகர் பகுதியில் வாழும் தமிழர்கள் சொற்பமானவர்களே. ஆங்காங்கே எனக் கணகிட்டாலும் சொல்லும் அளவிற்குத் தேராது. 1983 மார்ச் மாதத்தில் ஒரு வாரம் விடாமல் அங்கு நடந்த இரண்டு குண்டர் கும்பலின் தகராறில் ஏறக்குறைய 72 ஆண்கள் இறந்துவிட்டார்கள். அவர்களில் காவல்துறை சுட்டது போக மீதி பேர் திருவிழாவில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் லாடாங் கம்பத்திலேயே வைத்துக் கொல்லப்பட்டனர்.
இறந்துபோன அவர்கள் யாவரும் குடும்பத் தலைவர்கள். அதில் பாதி பேர் அப்பொழுதுதான் திருமணமானவர்கள். ஆகையால் அதன் பிறகு அங்குக் குழந்தை பிறப்பு விகிதம் வருடத்திற்கு வருடம் குறைந்துகொண்டே வந்தது. ஒரு சிறு பகுதியினர் அந்தக் கலவரத்துக்குப் பிறகு தன்னைக் காப்பாற்றிக்கொள்ள புலம் பெயர்ந்து வேறு பட்டணங்களுக்குச் சென்றுவிட்டனர். மீதி நிலைத்தவர்கள் பெருக்கிக்கொண்ட ஜனமே இப்பொழுது அங்கு மிச்சம் சொச்சமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அந்த இரு குண்டல் கும்பல் மட்டும் இன்னமும் உயிர்ப்புடன் இயங்கி வந்தது. அவர்களை வேறுப்படுத்திக்கொள்ள எண்களைத் தங்களின் குழுவிற்கு இட்டுக் கொண்டார்கள். அந்த எண்ணைக் குறிப்பிட்டு சொன்னால் லாடாங் கம்பமும் பட்டணமும் நடுங்கும். வாழ்வாதாரத்திற்குப் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காகவே அந்தக் கும்பல்களின் விவாகரங்களில் யாரும் தலையிடுவதே இல்லை. அவர்கள் எல்லாம் காலங்களிலும் உரையாடல் நடத்துவது அந்த ஆப்பே கடையில்தான். Table Talk என அவர்கள் அதனை அழைத்துக்கொள்வார்கள். பெரும்பாலும் தாய்லாந்திலிருந்து ‘பொருள்’ வந்துவிட்டாலோ அல்லது யாரையாவது கொல்ல வேண்டுமென்றாலோ அல்லது யாரையாவது காப்பாற்ற வேண்டுமென்றாலோ, திருவிழாவிற்கு முன் ‘ஆள் மார்க்’ செய்ய வேண்டும் என்றாலும் எல்லோரும் ‘டேபிள் டாக்குக்கு’ வருவது ஆப்பே கடைக்குத்தான். அங்கு வைத்துப் பல கொலைகள் திட்டமிடப்பட்டிக்கின்றன.
ஆ பேங் கடை ஆப்பே கடையான கதை
ஆ பேங் என்ற பெயர்தான் நாளடைவில் மறுவி ஆப்பே கடை என்றானது. 1965ஆம் ஆண்டில் லாடாங் ஒரு மிகப்பெரிய தோட்டமாக இருந்தபோது ஆ பேங் தொடங்கியதுதான் இந்தக் கடை. முதலில் தோட்டத்தின் மூலையில் இருந்த அவன் வீட்டிலேயே ஒரு சிறிய கடையாக துவங்கியவன். கொஞ்சம் காலம் ஆனதும் அந்த வீட்டையே இடித்து வெளிவரந்தாவை இன்னும் முன்னே இழுத்து அதைக் கடையாக்கினான். அதுதான் ஆப்பே கடை.
1983இல் நடந்த கலவரத்திற்கு முதல் நாள் ஆப்பே கடையில் முதல் கொலை நடந்தது. காப்பிக் குடித்துக்கொண்டிருந்த நொண்டிக் குமாரை அங்கு வைத்துதான் கட்டை மணியம் போட்டுத்தள்ளினார். அதன் பிறகு போத்தக்கடை சேகர், சாரி மக்கான் முனியாண்டி என வரிசையாகக் கொலைகள் ஆப்பே கடையில் வைத்து நிகழ்த்தப்பட்டன.
ஆப்பே கிழவனுக்கு இதெல்லாம் பெரிய பிரச்சனை கிடையாது. எதுவுமே நடக்காததைப் போல மறுநாள் கடையைக் கழுவி சுத்தம் செய்து வியாபாரத்தை ஆரம்பித்துவிடுவான். அவன் போடும் காப்பி லாடாங்கில் பேர் போனது. பக்கத்து பட்டணங்களிலிருந்தும் ஆப்பே காப்பியைக் குடிக்க ஆட்கள் வருவார்கள். இதுவரை லாடாங்கில் உள்ள கும்பல் மட்டும் ஆப்பே கடையில் நடத்திய மொத்த Table Talk எண்ணிக்கை 235 ஆகும். அதில் பாதிக்குப் பாதி சண்டையிலும் கொலையிலுமே முடிந்துள்ளன.
இப்பொழுது அவனுக்கு 60 வயதாகிவிட்டது. யாராவது கேட்டால் இது மொத்தம் 23 கொலைகள் நடந்த கடை எனச் சிரித்துக்கொண்டே
சொல்வான். இரத்தத்தையும் கத்தியையும் பார்த்து பார்த்துச் சலித்தவன் ஆப்பே. அவன் மனைவி ஓர் இந்தியர். அதனால், தமிழும் பேசுவான். லாடாங் தோட்டம் பின்னர் ஒரு பகுதி சிறிய நகரமானது. நகரத்திற்கும் கம்பத்திற்குமான இடைவேளி சுவராக ஆப்பே கடை ஆகிப்போனது. பட்டணத்துப் பேருந்தெல்லாம் அங்கு வந்து லாடாங்கில் ஆட்களை இறக்கிவிட்டு ஆப்பேயின் காப்பியைக் குடிக்க ஐந்து நிமிடம் நிற்பதுண்டு. அவன் மகனுடன் உற்சாகம் குறையாமல் கடையை ஓட்டினான்.
முதல் கொலை
நொண்டிக் குமார் வழக்கம்போல காப்பிக் குடிக்க வந்தான். தினமும் மாலை 7க்கு மேல் ஊர்ச்சண்டை பேச ஆப்பே கடைக்கு வருபவன், இரவு 11மணிவரை ஊர் வம்பை இழுத்துவிட்டு நான்கு பேரைக் கடுமையான வசைக்குள்ளாக்கிவிட்டுத்தான் போவான். செம்பனைத் தோட்டத்தில் பழம் அறுத்துக் கொண்டிருந்தவன், பின்னர் ட்ரெக்டர் ஏறி கால் உடைந்து நொண்டிக் குமாரானான். அன்றிலிருந்து அவன் மனைவி சரசுத்தான் மரம் சுத்தம் செய்யும் வேலைக்குப் போனாள். அவனால் வீட்டில் இருந்து கொண்டு வெட்டி நியாயம் பேசுவது, அவனுடைய இயலாமையை சரசின் மீது திணித்து அவளைச் சண்டைக்கு இழுப்பது என்று மட்டுமே வாழ்க்கையைக் கடத்த முடிந்தது.
ஏறக்குறைய வேலையை விட்டு வீட்டில் இருந்த காலத்தில் சரசை அடித்துத் துண்புறுத்தத் துவங்கியிருந்தான். அவளைக் காலால் எட்டி உதைப்பது; சட்டென்று எழுந்து நிற்க முடியாததால் அவள் மீது கையில் கிடைக்கும் பொருளை விட்டடிப்பது என சரசின் உடல் முழுக்கக் காயப்படுத்தினான். அவளைப் பலவீனமாக்க வேண்டும். அவள் காலை உடைக்க வேண்டும் என்று மட்டுமே சதா சொல்லிக்கொண்டே இருப்பான். ஒருமுறை அவள் கொஞ்சம் வேகமாக நடந்தாள் என்பதற்காக, “ஓ நீ இப்ப என்ன நொண்டின்னு சொல்லிக் காட்டறியா?” என முதுகில் ஓங்கி உதைத்தான். அதையே பலமுறை செய்து அவளைச் சிதறடித்தான்.
“ஏய்ய்ய் நீ இப்ப சம்பாரிக்கறேன்னு திமிர்ல ஆடுறியா? சொல்லுடி, எவன்கூட ஊரு சுத்திட்டு வர்றே?” எனக் கர்ஜித்து நொண்டிக் குமார் கட்டையை விட்டடிக்கும்போது பலமுறை அவள் தலையை அது கூறு போட்டுள்ளது. அன்றைய இரவில் இரத்தம் ஒழுக இறங்கி சாலையில் ஓடினாள். பின்னர், இரண்டொரு மணி நேரம் கழித்து வீட்டுக்கே வந்துவிட்டாள். நொண்டிக் குமார் சாப்பிட்டுவிட்டு கைகள் இரண்டையும் மார்பில் குறுக்காகப் போட்டு ஒரு மிருகத்தைப் போல தரையில் படுத்திருந்தான். சரசுக்கு அவனைக் கடப்பதென்பது முடியாத காரியமாக இருந்தது.
அவள் உடல் மறுத்தவளாக இருந்தாள். உடலற்று இருந்தால் பரவாயில்லை என்றே தோன்றியது. உடல் ஓர் ஆடையாக இருந்திருந்தால் அடி வாங்கிய பிறகு அதனைக் கழற்றி வைத்துவிடலாம். ஆனால், சரசு அடி வாங்கி அடி வாங்கி உடலை மேலும் மேலும் பற்பல உடலாக்கினாள். ஒவ்வொரு அடிக்கும் எதிர்க்காமல் நின்றாள். நொண்டிக் குமாரின் அடிகளைவிட அவன் வார்த்தைகளே கொடூரமானவையாக மாறியிருந்தன.
ஆப்பே கடைக்கு அவன் போய்விட்டு வரும் அந்தச் சிறிய இடைவேளி மட்டுமே அவளுக்கு ஆறுதலான தருணம். நான்கு பிள்ளைகள். ஒவ்வொன்றுக்கும் படி அளக்க வேண்டும். பசியில் அழுது அழுது துவண்டு போய் அதற்கு மேல் அழ முடியாத சோர்வில் பிள்ளைகள் தரையில் படுத்திருப்பதை வேலை முடிந்து வீட்டிற்கு வரும் சரசு பார்த்து அரண்டுவிடுவாள். கடைசி பையனுக்கு 3 வயதுதான். சரசின் மூத்த மகளான கௌரியின் கவுனைப் பிடித்திழுத்துப் பசியை வெளிப்படுத்தி அழுது ஆர்பாட்டம் செய்த களைப்பில் அவளுடைய கவுனை விடாமலேயே தூங்கிப் போயிருப்பான். அதையெல்லாம் பார்த்துதான் சரசு கொஞ்சம்கூட சளிக்காமல் செம்பனை மரம் சுத்தம் செய்யப் போய் வந்தாள். மட்டையின் முனை குத்தினால் அது ஆபத்தானது எனத் தெரிந்தும் அவளுக்கு அதெல்லாம் சிரமமானதாகத் தோன்றவில்லை.
நொண்டிக் குமார் ஒரு காலை நொண்டியடித்துக் கொண்டே ஆப்பே கடைக்கு வந்துவிடுவான். நொண்டுவதைப் பற்றி அவனுக்குக் கவலையே இல்லை. அரை கிலோ மீட்டர் நொண்டினால் ஆப்பே கடை. வருவோர் போவோர் எல்லாம் அவன் மீது இரக்கப்பட்டாலும் அவர்களைப் பார்த்துக் கெட்ட வார்த்தையில் ஏசிவிட்டு, “உன் வேலைய பாத்துக்கிட்டு போடா நாயே” என்பான்.
நொண்டிக் குமாரிடம் யாரும் வாயைக் கொடுக்கமாட்டார்கள். உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டே சாபமிடுவான். சிறிது நேரம் அவன் பேச்சைக் கேட்டாலும் நாடி நரம்பெல்லாம் கொதித்துப் போகும். அப்படி அவனுடன் பலமுறை வாய்ச்சண்டை உருவாகி வெறுப்படைந்தவன் தான் கட்டை மணியம். அன்று கட்டை மணியம் 7.30மணிக்கு மேல் ஆப்பே கடையில் மருந்து விசயமாக கும்பலில் உள்ளவர்கள் சிலருடன் Table Talk ஒன்றை ஏற்பாடு செய்திருந்தான். கட்டை மணியம் சியாமுக்கும் பினாங்கிற்கும் பெரிய லாரி ஓட்டுபவன். பெரும்பாலும் சரக்குகளை அவனை வைத்துதான் ஏற்றுவார்கள். எல்லாம் கும்பலுடன் நல்லுறவில் இருந்தான். யாரும் அவனைச் சட்டென பகைக்க மாட்டார்கள்.
அன்று வழக்கம்போல டேபிள் டால்க் நடக்கத் துவங்கியது. இது போன்ற இரகசிய உரையாடல்கள் ஆப்பே கடையின் முதல் மேசையில்தான் நடக்கும். அது அவர்களுக்கே உரிய தேர்வு. கடைக்குள் நுழைபவர்கள் உடனே கண்டுக்கொள்ள முடியாத கடை வாசலின் ஓரத்தில் அந்த மேசை இருக்கும். கட்டை மணியத்தின் நண்பர்கள் எல்லாம் வந்ததும் நொண்டிக் குமாரும் கடைக்கு வந்துவிட்டான். இரண்டாவது மேசையில் அமர்ந்துகொண்டு காப்பிக் குடிக்கத் துவங்கினான். முதலில் பேச்சை ஆப்பேவிடமிருந்து தொடங்கி, பிறகு கடைக்குள் இருப்பவர்களை நோக்கி சாமர்த்தியமாகத் திருப்புவான். அவர் எரிச்சல் அடைந்ததும் அடுத்தவரை நோக்கிப் பேசத் துவங்குவான். இதுதான் நொண்டிக் குமார் வாடிக்கையாகச் செய்வது.
அன்று தன் நிரந்திர எதிரியான கட்டை மணியம் அங்கிருப்பதைப் பார்த்ததும் குமாருக்கு ஏக சிரிப்பு. காப்பியை உறிஞ்சிவிட்டு ஆரபித்தான். கட்டை மணியத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான்.
“சியாம்ல சரக்கு வச்சிருக்கியாம் மணியம்…என்ன கதை?” என நொண்டிக் குமார் கிண்டலடித்தவாறு சொன்னதும், கட்டை மணியம் நாற்காலியைவிட்டு எழுந்தான். அதுவரை சண்டையும் சச்சரவும் மட்டுமே நடந்து கொண்டிருந்த ஆப்பே கடையில் முதல் கொலை நடந்தது. தகற மேசையில் கால் வைத்து நொண்டி குமாரின் கழுத்தைப் பார்த்து எகிறினான் கட்டை மணியம்.
அன்றுதான் லாடாங் தோட்டத்தில் கலவரம் நடப்பதற்கு முந்தைய நாள். நொண்டி குமாரின் கொலைக்கும் அந்த இரு கும்பலின் கலவரத்துக்கும் தொடர்பில்லை என்றாலும் அந்தக் கொலையே பேசுப்பொருளாக ஒரு வாரம் முழுக்க லாடாங்கில் உலா வந்தது.
1983 –
மார்ச் 10
அதுவரை லாடாங் கம்பத்தின் இரு பெரும் பகுதிகளிலும் பேசப்பட்டு வந்த இரண்டு குழுவின் தலைவர்களில் ஒருவரை யாரோ கொலை செய்து லாடாங் ஆற்றில் மிதக்கவிட்டார்கள். துப்பாக்கி சூடு நெஞ்சிலும் வயிற்றிலும் பதம் பார்த்திருந்தன. சந்தேகம் வழுக்கத் துவங்கி கடைசியில் எதிர்க்கும்பலின் தலைவனைத் தாக்க வேண்டு என்ற நிலைக்கு வந்தது. நொண்டி குமார் இறந்து சரியாக மூன்றாவது நாளில் லாடாங்கில் பார்க்கும் இடங்களிலெல்லாம் இரு கும்பலைச் சேர்ந்தவர்களும் துரத்தித் துரத்தி வெட்டிக் கொல்லத் துவங்கினர். யாரும் வீட்டுக்கு வெளியில் வர முடியாமல் உள்ளேயே முடங்கிக் கிடந்தார்கள். வெளியிலிருந்து வரும் லாரிகள், சந்தைக்கான பொருள்கள் எல்லாம் தடைப்பட்டன. ஊர் அடங்குச் சட்டம் விதிக்கப்படாத குறை மட்டுமே. காவல் துறையினரின் நடமாட்டமும் அதிகரித்தன. ஆயுதங்களுடன் வெளியில் திரிந்த பலர் சுடப்பட்டனர்.
லாடாங்கில் இருந்த பல பெரியவர்கள் மனம் உடைந்து செய்வதறியாமல் ஊசலாடினர் என்றே சொல்ல வேண்டும். சிலர் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தனர். ஒரு வாரம் விடாமல் படுகொலைகள் நடந்தன. லாடாங் கம்பமே இரத்த வாடையில் சூழந்திருந்தன.
மேட்டுவீடு மாரியப்பன் அண்ணன், கட்டை மணியம், லாரிக்கார வேலு, சியாம் பாலு, முருகேசன், கோபால், தண்ணி வண்டி ராஜா, காபோத்தை குமார், பாஞ்சாங் மணியம் என வரிசையாகக் கும்பலில் இருந்தவர்களும் இல்லாதவர்களும் என அனைவரும் செத்தொழிந்தனர். கம்பமே ஒரு வாரத்திற்குச் சுடுகாடாகின.
இறுதியாக, எதிர்க்கும்பலின் தலைவன் ஜாலான் செல்வனின் மரணத்தோடு கலவரம் அமைதியானது. ஒரு இரத்தக் காட்டேரி தின்றுபோட்ட சக்கையாகப் ஜாலான் செல்வத்தின் உடல் சாலையின் நடுவில் கிடந்தது. காவல்துறையினர் வந்து அள்ளிப் போட்டு எடுத்துப் போனார்கள்.
“டேய்ய்ய்…அடிச்சிக் கொன்னு தின்னுட்டீங்களாடா? கொலைவெறிப் பிடிச்சவனுங்கள…ஏண்டா இப்படி ஆனிங்க? தாயா பிள்ளையாதானே இருந்தோம்? எங்கேருந்துடா வந்துச்சி இந்தக் கொல வெறி? உருப்படவே மாட்டிங்கிடா”
வேளாயி கிழவி மண்ணை அள்ளி யாருமற்ற வெளியை நோக்கி வீசினாள். அவளை யாரும் கண்டுகொள்ளவில்லை. லாடாங் மிகப்பெரிய அமைதிக்குள் போனது. மீதம் இருந்த பலரையும் காவல் துறையினர் கைது செய்து கொலை வழக்கில் சிறையில் சேர்த்தனர். சில முக்கியமான ஆட்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
லாடாங் கம்பத்தில் பல வீடுகள் ஆண்கள் இல்லாமல் போன காலம் அது. ஆண்களில்லாத வீட்டில் பசியும் தனிமையும் கொளுந்துவிட்டு எரிந்தன. சைம் டேர்பி பெண்களுக்கு வாழ்க்கை கொடுத்தன. செம்பனை காட்டில் வேலை செய்ய எல்லோரும் கூட்டம் கூட்டமாகச் சென்றனர்.
சரசு தன் குடும்பம் தன் தம்பியின் குடும்பம் என இரண்டிற்கும் பொறுப்பேற்றாள். யாரும் பசியில் வாடாமல் இருக்க இரவு கையுறை தொழிற்சாலையிலும் கூடுதலான வேலை செய்ய நேரிட்டது. ஓய்ந்து வீடு வரும் அவளே ஆணாகவும் பெண்ணாகவும் இருந்தாள். தம்பி மனைவியின் பாதுகாப்பிற்கும் சேர்த்து அவளே உத்ராவதாக இருந்தாள்; கடுமையான வேலிக்குள் ஒளிந்துகொண்டாள். பெண் பிள்ளைகள் நிறைந்திருக்கும் வீடு அது. தன் வாழ்க்கையைப் பற்றி வேறு ஏதும் சிந்திக்காமல் சரசு முழுக்கக் குடும்பத்திற்கானவளாக மாறினாள். யாரைப் பார்த்தாலும் எரிச்சலுடன் பேசத் துவங்கினாள். எப்பொழுதும் அவள் அறைகட்டிலின் கீழ் கத்தியைப் பதுக்கி வைத்தாள்.
நொண்டிக் குமார் விட்டுப் போன கத்தி அது. அதை வீட்டில் வேறு யாருக்கும் தொட அனுமதியில்லை. அவளே அதற்கு உரிமையானவளாக மாறினாள். வீட்டில் ஆண்களிடம் மட்டுமே கத்தி இருக்க வேண்டும் என்கிற விதி லாடாங்கில் இருந்தது.
“ஓய்ய்ய் சரசு… புருஷன் இல்லாதவள…ஆடாதெ ரொம்ப. சரியா? அடங்கு”
“சரசு…இன்னிக்கு வீட்டுக்கு வரட்டா?”
இப்படி வேலைக்குப் போகும்போதும் வரும்போதும் அவளைக் கிண்டலடிக்காத ஆண்களே கிடையாது. அதிகபட்சமாகத் திரும்ப கேட்ட வார்த்தையில் கேட்டு வைப்பாள்.
“கலவரம் நடந்தப்ப என்னா உன் பொண்டாட்டி கைலிக்குள்ளயா… ஆங்ங்ங்…சொல்லு? ஆம்பளைனா அன்னிக்கே செத்துருக்கணும்” என அவள் கத்தும்போது ஒட்டுமொத்த வெறுப்பும் அவள் கண்களில் பொங்கும்.
முருகேசனின் தம்பி சிவனேசன் அவளைக் காரில் இழுத்துச் செல்ல முயன்ற நாள் சரசின்
வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை உருவாக்கியது. இரவு வேலை முடிந்து கொய்த்தியோ வாங்கிவிட்டு வீட்டுக்கு
நடந்து வந்தவளை முருகையாவின் தம்பி சட்டென காரில் இழுத்துப் போட்டான். எவ்வளவோ மல்லுக்கட்டி அவனுடன் போராடினாள். அவள் சட்டையைக் கிழிப்பதற்கு முன் காரின்
கதவை ஓங்கி உடைத்து எகிறி வெளியே குதித்தோடினாள்.
மறுநாளே முருகேசனின் மனைவியிடம் போய் எல்லாவற்றையும் சொல்லிப் பெரிய ஆர்பாட்டாம்
செய்தாள். வீட்டுக்கு வெளியிலேயே நின்று அழுது ஆர்ப்பரித்தாள்.
“உன் புருஷன்கிட்ட சொல்லு, அவன் தம்பிக்கு அவ்ள முடியலைனா சியாம்க்கு
போவச்சொல்லு. ஏன் ஊர்ல உள்ளவன் பொண்டாடிக்கு…” அவள் கண்கள் சிவந்திருந்தன. முருகேசனின் தம்பியைப் பார்த்தால் உயிருடன்
எரித்துவிடும் கோபத்தில் நின்றிருந்தாள்.
“எங்களுக்கும் தெரியும் உன் லட்சணம். நடிக்காம வீட்டுக்குப் போ” என முருகேசனின் மனைவி அப்படிச் சொன்னதும்
சரசு உடைந்து போனாள். ஒன்றும் பேசாமல் வந்துவிட்டாள்.
அதன் பிறகு சரசு லாடாங்கில் யாருடனும் பேசுவதில்லை. வேலைக்கு உடன் வரும் பெண்களிடம் பேச்சைக் குறைத்துக் கொண்டாள். பின்னர், அவளுடைய மூத்தப் பெண் கௌரி வயதுக்கு வந்ததும், சரசு தன் நீளமான கூந்தலைக் கட்டையாக வெட்டிக்கொண்டாள். தம்பி மனைவிக்கு எந்தக் குறையும் தோன்றிவிடக்கூடாது என்பதற்காகவே அவளை வேலைக்கும் அனுப்பாமல் பார்த்துக்கொண்டாள்.
வீட்டின் போக்குவரத்துக்கு அவளே ஒரு சைக்கிள் வாங்கினாள். பழைய சீன சைக்கிள் அது. பெரிய மகளைச் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்குப் பொருள் வாங்குவது, அவளைப் பள்ளிக்கு அனுப்புவது என எல்லாம் வேலைகளையும் கவனித்துக்கொண்டாள். இரவில் வீடு சேர்ந்து அசதியில் படுக்க நினைக்கும்போது சின்ன மகன் அழ ஆரம்பித்துவிடுவான். அவனுக்கு வயிற்றுப்போக்கு நிற்காமல் போனபோதுதான் வேறு வழியில்லாமல் ஒரு வாரம் பெரிய மருத்துவமனையில் வைத்துப் பார்த்தாள். பிள்ளை உயிர் பிழைத்து மீண்டு வந்ததே ஆச்சர்யம்.
அவ்வப்போது லாடாங் ஆண்கள் கொடுக்கும் தொல்லைக்கும் குறைச்சலில்லை. எப்பொழுதுதாவது முருகேசனின் தம்பியைப் பார்த்தால் மட்டும் மண்ணை வாரி இறைப்பாள். அவன் அதைப் பொருட்ப்படுத்திக்கொள்ள மாட்டான். மீண்டும் மீண்டும் எங்காவது பார்த்தாள் அவளைச் சீண்டுவான்.
தம்பி மனைவிக்கு இன்னொருவரின் மீது ஆசை வந்து வாழத் துடித்த கணங்களில் சரசு கையில் வெள்ளிக் காப்பை அணிந்தாள். அதில் அவள் முகத்தை ஒருமுறை கிழித்ததுதான். அதன் பிறகு இன்னொருவனை தம்பியின் மனைவி நினைக்காமல் வீட்டோடு அடங்கியவளாக இருந்தாள்.
“ஏய் சரசு. உன் வாழ்க்கைத்தான் அப்படிப் போனுச்சி…அவ என்னா வயசு? பாவம்டி” எனச் சொன்ன பெரியாத்தா கிழவின் முடியைக் கொத்தாகப் பிடித்துச் சுவரில் மோதச் சென்றாள். அருகில் இருந்தவர்கள் பிடித்து அவளைக் கட்டிவைத்து இரண்டு மணி நேரம் நொருக்கினார்கள். இரத்தம் சொட்ட சொட்ட வீடு வந்தாள். வீடு அலறிவிட்டது. ஆனால் சரசு ஒன்றும் சொல்லவில்லை; அழவில்லை.
236ஆவது Table Talk
சரியாக 7மணிக்கு அந்த டேபிள் டால்க் ஆரம்பமானது. சிவனேசன், மணிமாறன், முரளி என மேலும் இதில் முக்கியமான நபர்களான X -உம் Y-யும் வந்து சேர்ந்தார்கள். கும்பலில் உள்ளவர்கள் என்பதால் அவர்களின் பெயரும் அதுதான்.
“சரி…கணக்கு எங்க எப்பெ முடிக்கிற மாதிரி? ‘பொருளு’ இரண்டு இலட்சம். தெரியும்லே” மணிமாறன் தான் ஆரம்பித்தான்.
“சியாம் பார்டர் தாண்டிட்டோனே சொல்றன் மைக்கு…லாடாங் ஹைவேலே வச்சு முடிச்சிக்குலாம்” எக்ஸ் கொஞ்சம் மிரட்டலுடனே பதில் கூறினான்.
“சரி…அடுத்த சரக்கு ரெண்டு மாசம்னு பெரியவரு சொல்லிட்டாரு. பாத்துக்கோ” என மணிமாறன் சொல்லிவிட்டு ஆப்பே கடையை நோக்கி சைக்கிளில்
வந்து கொண்டிருந்த சரசைக் கவனித்தான்.
“சிவனேசா! அவ வர்ற பாரு மச்சான், கவனிச்சியா?”
சிவனேசன் அவள் சைக்கிளில் வருவதைப் பார்த்தான். அவள் ஆப்பே கடையைத்தான் நெருங்கி வந்தாள்.
“என்ன சரசு ஒண்டியா வர்ற?” எனச் சொல்லிக்கொண்டே அவளைப் பார்த்துக்
கிண்டலாகக் கையைத் தூக்கினான்.
சடாரென சைக்கிளைக் கீழே போட்டுவிட்டு ஓடி வந்து, தகற மேசையின் மீது ஏறி சிவனேசனையும் மணிமாறனையும் ஓங்கி
அறைந்தாள். சரசு அப்பொழுது ஜீன்ஸ் அணிந்திருந்தாள்.
மணிமாறன் அவள் தலைமுடியைக் கொத்தாகப் பிடிக்க முனைந்தான். மீண்டும் அவனைப் பலம் கொண்டு அறைந்துவிட்டு சைக்கிளை எடுத்துக்
கொண்டு ஆப்பே கடையை விட்டு அவசரமாக வெளியேறினாள்.