Tuesday, August 25, 2009

இரு படங்கள் பற்றி : 1.ஊடக மொழியுடன் ஷங்கர் படத்தின் ஒரு நகலாக கந்தசாமி 2.மனச்சிதைவின் இன்னொரு இருண்ட பரிணாமம் “orphan”

மேற்குறிபட்ட இரு படங்களையும் ஒரே நாளில் வெவ்வேறு நேரங்களில் பார்க்க நேர்ந்தது. இரு படங்களும் தனித்தனி அதிர்வுகளை ஏற்படுத்தின. கந்தசாமி படம் முடிவடைந்தபோது ஷங்கரின் ஊடக செல்வாக்குடன் விளிம்புநிலை மனிதர்களின் குரலாக அவர்களின் கதாநாயகனாக வலம் வரும் மூன்றாம்தர புரட்சி கமார்ஷியல் படம் போன்ற தாக்கத்தை ஒரு நகலாக வெளிப்படுத்தியிருப்பதை உணர முடிந்தது.



மீண்டும் மீண்டும் கதாநாயக பிம்பத்தின் சாகசங்களையும் அட்டுழியத்தையும் கொண்டு வியாபாரம் செய்யும் சந்தையின் அடுத்த இறக்குமதியாக சிரேயாவின் தாராள காம சேட்டைகளையும் தாராள உடை குறைப்பையும் சேர்த்து திரைஅரங்குகளில் ஒரு மசாலா புத்திமதி படம்தான் தரப்பட்டுள்ளது. ஏழைகளின் நாயகனாக ஏற்கனவே சிவாஜியில் ஷங்கர் சொன்ன அதே கருப்பு பணத்தை மீட்கும் பாணியில் மெக்சிக்கோ வரை நீண்டு கந்தசாமியின் மண்டைக்கு எட்டாத வெறுப்பேற்றும் திடீர் சாகசங்களைக் கட்டமைத்து அதை ஊடகத்தின் வாயிலாக ஊடகத்தைத் துணையாகக் கொண்டு வெளிப்படுத்தியிருப்பது பலமுறை அரங்கேறி சலித்துவிட்ட பாங்கு.

குறிப்பு: அஸ்ட்ரோவில் அண்மையில் விக்ரமுடன் காந்தீபன் நடத்திய நேர்காணலில் விக்ரம் இப்படியொரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

“கந்தசாமி படத்தில் வரும் பாடல்களெல்லாம் குழந்தைகளுக்காக எழுதப்பட்டது, “போடா போடி. . மியாவ் மியாவ். . .” இதெல்லாம் பார்த்தீங்கனா சின்ன பிள்ளைங்கத்தான் இப்படி விரும்புவாங்க பேசுவாங்க” என்று கந்தசாமி நேரடி ஒளிப்பரப்பில் வெட்கமில்லாமல் சொல்ல அதை ஆமோதிக்கும் வகையில் காந்தீபனும் (மலேசிய கதாநாயகர்) தலை ஆட்டினாராம் வெட்கமில்லாமல். அதற்குப் பல மாற்றுக் கருத்துகளும் வந்ததென்று சொன்னார். இனி விக்ரம் படங்களின் பாடல்களை (சிரேயாவுடன் போடும் துண்டாட்டம்) எல்லாவற்றையும் “குழந்தைகளுக்கான பாடல்” என்று வெளியீட நேர்ந்தாலும் ஆச்சிரியமில்லை.

2. orphan (அனாதை)

அண்மையில் வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் ஆங்கில படம். குளிர் பிரதேசம் ஒன்றின் பின்னனியில் ஒரு குடும்ப பெண்ணின் தோல்வியடைந்த தனது மூன்றாவது பிரசவத்தின் ஒரு கொடூரமான துர்கனவிலிருந்து தொடங்குகிறது படம். அவளது மூன்றாவது குழந்தை வயிற்றிலேயே இறந்துவிடுவதால், அந்த மரணமும் வலியும் பெரும் பாதிப்பாக அவளின் நாட்களைப் பின் தொடர்கிறது. ஏற்கனவே ஒரு பையனும் காது கேளாத ஒரு பெண் குழந்தையும் இருக்க, மூன்றாவதாக ஒரு பெண் சிறுமியைத் அனாதை இல்லத்திலிருந்து தத்தெடுக்கிறார்கள்.

தத்தெடுக்கப்படும் அந்தப் பெண் சிறுமியைச் சுற்றித்தான் கதை சொல்லப்படுகிறது. அந்தச் சிறுமியின் சிதைந்த உலகத்தை வேறொரு பரிணாமத்தில் காட்டும்போது அதை ஏற்றுக் கொள்ள மனம் தடுமாறுகிறது. நீங்களே அதன் கதையையும் சம்பவங்களையும் அவளுக்குள் ஏற்படும் மனச்சிதைவின் பின்னனியையும் தெரிந்துகொள்ளும்போது அது தனி அனுபவமாக அமையும்.

முழுக்க ஒரு குடும்பத்தில் நிகழும் கதையாக, அந்த அனாதை சிறுமியின் அகத்தின் அடுக்குகளை உளவியல் இரகசியங்களுடனும் முடிச்சுகளுடனும் மர்மமாகக் காட்சியப்படுத்தியிருப்பது ஒரு தரமான கமர்ஷியல் + உளவியல் படத்திற்க்குரிய தேர்ச்சியும் கலையும் வெளிப்படுகிறது.

குறிப்பு: இந்தப் படத்தின் பல காட்சிகளை எதிர்க்கொள்ள மனத்திடம் ரொம்பவும் அவசியம் என்றே கருதுகிறேன். சில காட்சிகள் அதிர்வை ஏற்படுத்தக்கூடும். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்கக்கூடிய படம் என்றே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

(எ.காட்டாக: தனது கையைச் சொந்தமாக அவளே முறித்துக் கொள்வதும், எலும்பு உடைந்து சதைக்குள்ளிருந்து விரைப்பதும் மிக அருகாமையில் காட்டியிருப்பது மனதைப் பதற்றத்திற்க்குள்ளாக்க வாய்ப்புண்டு)

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Monday, August 24, 2009

இம்மாத அநங்கத்தில் (புறக்கணிக்கப்பட்ட/மறக்கப்பட்ட கலைகளின் இதழாக)

சண்முகசிவா பக்கம்

மொழி பிரதானமாக ஒரு தொடர் பாடல் சாதனம் என்ற வகையில் மொழிமரபு நவீன தொடர் பாடலுக்கு இடையூறாக அமையும்போது அம்மரபு மாறவேண்டியிருக்குமே தவிர மரபைப் பேணுவதற்காக மொழி தன் தொடர்ப்பாடல் திறனை இழந்துவிடக்கூடாது. . .
விமர்சன நூல்களில், உரையாடல்களில், கருதரங்குகளில், நவீனத்துவம் என்ற சொல்லே மிகுதியாக பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது, இருந்தும் வருகிறது .. . மேலும். . .

நமது கலாச்சார ஆவணங்கள் கொண்டாடப்படவில்லை

நிச்சயமாக. பூஜாங் பள்ளத்தாக்கின் ஆவணங்கள் அங்குள்ள மக்களால் தோற்றுவிக்கப்பட்ட கலாச்சாரம் கிடையாது. அதனால்தான் வெகு சீக்கிரத்திலேயே நிராகரிக்கப்பட்டது. மக்களால் தோற்றுவிக்கப்பட்ட கலாச்சாரமாக இருந்திருந்தால், அது அழிந்து போகவோ நிராகரிக்கப்படவோ மறைக்கப்படவோ வாய்ப்பில்லை. பிற்காலத்தில் பூஜாங் பள்ளத்தாக்கில் குடிபெயர்ந்த இனத்தால் சண்டி ஆவணங்கள் நிராகரிப்பட்டுள்ளது. இதெல்லாம் கபீர் வழிபாடுகள் என அடையாளப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது.. . . . மேலும் விரிவான கலந்துரையாடல்

மலேசிய தமிழ் இலக்கிய போட்டிகளின் அரசியலும் அலட்சியமும்-கே.பாலமுருகன்

சிறிதளவும் இலக்கிய நாட்டம் இல்லாதவர்களும் இலக்கிய ஆளுமை இல்லாதவர்களும் நடத்தும் இலக்கிய போட்டிகள் கூழிக்கு மாறடிக்கும் தன்மையைப் பெற்று அரசியல் குப்பைகளால் நிரம்பி வழியும் சகதியாகவே மாறிவிடும் என்பதில் சந்தேகமிருக்க வாய்ப்பில்லை. அது அந்த இயக்கத்தின் ஒரு செயல்பாடாகவோ அல்லது அவ்வாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாகவோ நடந்து முடிந்துவிடுகிறது.இதன் விளைவு குறித்தும் நோக்கம் குறித்தும் எவ்வித பிரக்ஞையும் இல்லாமல் தான் சார்ந்திருக்கும் இயக்கம் / பல்கலைக்கழகம் செயல்திட்டத்தின் முழுமையைப் பெறுவதற்குத் தொண்றாட்டும் கடமைக்குப் பங்காற்றும் சந்தா கட்டி தனது உறுப்பியத்தைப் புதுபித்துக் கொள்வது போல இலக்கிய போட்டி நடத்தி தனது பெயரைப் புகழைச் செயல்பாடுகளின் மீதுள்ள பிடிப்பை. . . .

ஏ.தேவராஜன் தலையங்கம்

திருவிழாவின் இரத ஊர்வலத்திற்குப் பின் நடந்தேறும் கச்சேரிகளில் நாடகமும் இடம்பெற்றிருந்தது. ஓரளவு தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த அன்றைய தமிழாசிரியர்களிடம் நூல்களைப் பெற்று அவற்றிலுள்ளவற்றை நாடக வசனமாகத் தீட்டி அவற்றிற்கு உயிரூட்ட உள்ளூர் இளைஞர்களைப் பயிற்றுவித்துள்ளனர் அன்றைய கலைஞர்கள்.

பூர்வ குடி தோழர் சொன்னது- அ.விக்னேஷ்வரன்

காட்டில் இருந்த பூர்வக் குடி மக்களால் ஏன் அவர்களை எதிர்க முடியவில்லை? அவர்கள் இனத்தால் சிறுத்திருந்தார்களா? பலத்தால் வலுவிழந்து இருந்தார்களா? கொள்ளையர்களின் ஆயுதங்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லையா? யார் இந்த கொள்ளையர் கூட்டம்?. . . மேலும்

கடைசி மணியின் அவலச் சத்தம்-கோ.புண்ணியவான்

எனக்கு முன்பே என் மனைவி சில அடிப்படை தமிழ்ப் பயிற்சிப் புத்தகங்களை அவளிடம்கொடுத்து பயிற்சி செய்வித்து வந்திருக்கிறாள். இந்தக்கதைப் புத்தகங்களைப் பார்த்தவள் சிவ பூஜைக்குள் கரடி நுழைந்துவிட்டதாய் திடுக்கிட்டு இதனை அபகரித்து “பரீட்சையில அவள் நல்ல மார்க்கு வாங்கணும், மொத இதெல்லாம் செய்து முடிக்கட்டும் பின்னால கதையப்படிக்கலாம்,” . . . .

பாட்டியின் இரகசிய சமையல் குறிப்புகள்-யோகி

“என் அம்முச்சி பட்டமிளகாயைக் காயவைத்து அம்மியில் அரைத்துக் கறிவைப்பார். அந்த மாதிரி குழம்புவகைகளை சாப்பிட என் பிள்ளைகளுக்கு கொடுத்து வைக்கல” என்பார் என் பாட்டி. குலதெய்வத்திற்குப் படையல் சமைக்கும் போது மூக்கையும் வாயையும் துணியால் கட்டி வாசனையை. . .

பாதுகாக்காத படைப்பு – சேர்த்து வைக்காத சொத்து-சிதனா

அப்பாவுக்கும் இரயில்வேயில் வேலை. குடியிருந்த ஜாலான் டிறவர்ஸில் வீட்டிற்கருகிலேயே இரயில்வே டிஸ்பன்சரி. பின்பக்க கதவைத் திறந்து கொண்டு, காலில் சிலிப்பரை மாட்டினால், மிஞ்சி போனால் மூன்று, அதிகமாக போனால் ஐந்து நிமிடத்தில் டிஸ்பன்சரி வாசலில் நிற்கலாம்.

“வாடா மல வத்துமல
வாடா போவோம் பத்துமல
பத்துமல மாதா பெரிய சக்தி- . . . .

சிறுகதை: புறா- க.ராஜம் ரஞ்சனி

புறாக்கள் தங்கள் விஜயத்தின் போது எச்சத்தைத் தவறி விட்டுச் செல்வது அவர்களைக் கோபத்திற்கு உள்ளாக்கியது. வீட்டின் முற்றம் புறாக்களால் அசுத்தமாவதை அவர்கள் கொஞ்சமும் விரும்பவில்லை. அந்தத் தருணங்களில் புறாக்கள் மீது நிறைய கோப வெடிகள் வெடித்து சிதறும்.

சிறுகதை : யார் அந்த சண்முகம்?- முனிஸ்வரன்

“செண்பகம், யார் இந்த சண்முகம்? கண்டவனோட சாமானெல்லாம் உன் பையில வச்சிருக்கயே? உனக்கும் இந்த சண்முகம்ன்றவனுக்கும் என்ன சம்மந்தம்?” என்று இறுக்கமான முகத்தைக் காட்டிக் கேட்டேன். . . .

மேலும் 8 கவிதைகள். . .

for detail and subcription of ananggam:
contact : bala_barathi@hotmail.com / ananggam@hotmail.com

Thursday, August 20, 2009

அநங்கம் மலேசிய இதழ் (ஆகஸ்ட்)


ஆகஸ்ட் அநங்கம் இதழில்


1.பாட்டியின் இரகசிய சமையல் குறிப்புகள் : யோகி

2. பூர்வ குடி தோழர் சொன்னார் - அ.விக்னேஷ்வரன்

3. கடைசி மணியின் அவலச் சத்தம் - கோ.புண்ணியவான்

4. மலேசிய தமிழ் இலக்கிய போட்டிகளின் அரசியலும் அலட்சியமும்- கே.பாலமுருகன்

5. சேர்த்து வைக்காத சொத்து - சிதனா
6.முரசு வளர்த்த இலக்கியம் - இராம.கண்னபிரான்
7. தலையங்கம் - தேவராஜன்
8. கோ.முனியாண்டி, சை.பீர்முகமது, பாண்டித்துரை , பா.அ.சிவம், தினேசுவரி, ரமேஷ்.டே கவிதைகள் மேலும். .
9. புறா: க.ராஜம் ரஞ்சனி சிறுகதை
10.இவர்களுடன் சில நிமிடங்கள் : சிங்கப்பூர் எழுத்தாளர்கள் (மாதங்கி - சித்ரா ரமேஷ்)
11. ஆதிகாலச் சீனப் பெண் கவிகளின் கவிதைகள் - ஜெயந்தி சங்கர்

12. முதல் அமர்விற்கும் இரண்டாம் அமர்விற்கும் இடைப்பட்ட தருணம்- மீராவாணி
13. சிறுகதை : யார் அந்த சண்முகம்?-முனிஸ்வரன்

13. ஆலயங்கள் ஆகம விதிகள் படி கட்டப்படுகின்றன - சிறப்பு கேள்வி பதில்
(சுவாமி பிரமானாந்த)
மேலும் பல. .
விரைவில். .
கே.பாலமுருகன்
இதழாசிரியர்

Thursday, August 13, 2009

சில அமானுட குரல்களும் என் வீட்டிற்கு வராத பிள்ளை பேயும்


சிறுவயதிலிருந்தே நமக்கு அதிகமான பேய் கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன. பேய் கதைகளைக் கேட்பதிலும் பேய்கள் பற்றி உரையாடுவதையும் ஒரு விருப்பமான சுவார்ஷ்யமான விஷயமாக ஒவ்வொரு வயதினரும் அதைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள், பேசி பிரமித்தும் கொள்கிறார்கள்.

இரவில் அறையில் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருக்கும் போதோ, அல்லது இருள் சூழ்ந்த இடத்தில் அமர்ந்திருக்கும்போதோ எப்படியாவது அமானுட விஷயங்கள் தொடர்பாக நாம் பேசுவதற்குத் தயாராகியிருப்போம். யார் அதைத் தொடங்கியிருப்பார்கள் என்று அவ்வளவு நுட்பமாக அறிந்திருக்க சிரமமாக இருக்கும். ஏதாவது ஒர் உரையாடலிலிருந்து ஏதாவது ஒரு சொல்லிலிருந்து “பேய்” பற்றிய கதை தொடங்கியிருக்கும். (எல்லோருக்கும் இது நிகழும் என்று சொல்லவில்லை-சிலருக்கு)

அதைப் பேசுவதற்கு அல்லது நமது உரையாடலில் பேய் வந்துவிட்டதற்கான அறிகுறிகள் ஏதும் அறியாமல் நாம் தாராளமாகப் பேசுவதற்குத் துவங்கியிருப்போம். தொழிற்சாலையில் இரவு வேலை செய்துகொண்டிருக்கும் போது யாரும் அசைக்காமல் சுயமாக நகர்ந்து விழுந்த பொருள் பற்றிய பதிவிலிருந்து, காலி வீட்டின் சன்னலில் எட்டிப் பார்த்த வெள்ளை உருவம் வரை பேய்களைப் பற்றிய அல்லது அமானுட அசைவுகள் பற்றிய கதை வளர்ந்து நீண்டு நம்முடன் நெருக்கமாகியிருக்கும். உடலின் வெப்பம் இலேசாகக் கூடி, இதயத் துடிப்பு அதிகரித்திருக்கும் சமயத்தில், அருகில் உள்ள நண்பன் இப்படி சொல்லலாம் :

“பேய் இப்பெ நம்ப பக்கத்துலே இருந்தா, நம்பளோட கை ரோமம்லாம் மேல தூக்கிக்கிட்டு நிக்கும். . பாரு” என்று சொல்லும்போது, உங்கள் கையின் ரோமத்தை நீங்கள் பரிசோதிக்க நேர்ந்தால், அது எழுந்து மேலே தூக்கிக் கொண்டு நிற்பது போல பிரமை ஏற்படலாம் அல்லது நிஜமாகவும் அது நிகழலாம்.

பல நேரங்களில் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது அவர்களில் சிலருக்கு இது நிகழ்ந்துள்ளது. சிறு வயது பிள்ளைகள் தொடங்கி, பெரியவர்கள் வரை எல்லோரின் உரையாடல்களிலும் பேய் பற்றிய பகிர்வு இருப்பதற்கான காரணம் நம்மைச் சுற்றி ஏதோ ஓர் அமானுட அசைவுகள் அல்லது உலகம் இருப்பதாக நமக்குள் ஏற்பட்டிருக்கும் மத போதனை, கடவுள் நம்பிக்கை, தலைமுறை வழிக்காட்டல், முன் அனுபவங்கள் உருவாக்கிய பிம்பங்கள் என்று பல கோணங்களில் போய்க்கொண்டே இருக்கும்.

பேய் பற்றிய பயம் இருப்பதாலே நமக்குக் கடவுள் நம்பிக்கை ஆழமாக இருக்கவும்/ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அல்லது அத்தகையதொரு அனுபவத்தைக் கடந்து வந்திருக்கலாம். 1993களில் “பிள்ளை பேய்” என்று ஒரு பேய் வீடு வீடாக உலாவுவதாக வதந்திகள் பரவின. அப்பொழுது எனக்கு 8 வயதுதான். பத்து டுவா கம்பத்தில் மலாய்க்கார குடியிருப்பு பகுதியில் ஒரு பலகை வீட்டில் வசித்து வந்தோம். அருகில் அம்பாங் பாய் என்கிற பெரிய குளமும் இருந்தது. அப்பொழுது பள்ளிக்கூடத்தில் இதைப் பற்றி பெரிய மாணவர்கள் பரவலாகப் பேசிக் கொண்டும் அதைப் பற்றி புத்தகங்களில் எழுதிக் கொடுத்தும் “பிள்ளை பேய் உன் வீட்டுக்கு வரும்” என்கிற பீதியை உருவாக்கியிருந்தார்கள்.

“பிள்ளை பேய்” என்பது தனது குழந்தையைப் பறிக்கொடுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண் என்றும் அந்தப் பேய் வீடு வீடாக சென்று கதவைத் தட்டி மூன்று கோரிக்கைகளைக் கேட்கும் என்றும் மூன்றாவது கோரிக்கையை நீங்கள் நிறைவேற்றவில்லை என்றால் அது உங்களைச் சாப்பிட்டுவிடும் என்றும் சொல்லியிருந்தார்கள்.

கோரிக்கை 1: “என் பிள்ளை அழுவுது, பால் கொடுங்க”
கோரிக்கை 2: “என் பிள்ளைக்குப் பசி சாப்பாடு கொடுங்க”
கோரிக்கை 3: “என் பிள்ளைக்கு உங்க இரத்தம் வேண்டுமாம்”

இதைக் கேட்டதும் எனக்குப் பயம் உடல் முழுவதும் பரவி ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. நண்பர்கள் எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு அமானுட ஒலிகளை எழுப்பி விளையாடி கொள்ள முயற்சித்தும் எனக்கு ஏற்பட்ட இரகசியமான பயம் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கக்கூடும்.

மூன்றாவது முறையான கோரிக்கை விடுக்கப்பட்டதும், அந்தப் பேயின் கையிலிருக்கும் குழந்தையின் உருவம் நமக்குத் தெரிய ஆரம்பிக்குமாம், அப்பொழுது அந்தக் குழந்தைக்குத் தலை இல்லாததையும் அந்த இடத்தில்(முண்டத்தில்) புழுக்கள் மேய்ந்து கொண்டிருப்பதையும் பார்க்க நேரிடுமாம். அடுத்த கணம் இரத்தம் கக்கி சாக வேண்டும்.

அப்பொழுது பரவலாகப் பேசப்பட்ட கதை இதுதான். எல்லாம் மாணவர்களும் “பிள்ளை பேய்” பற்றியே பேசி அதிக்காரப்பூர்வமாக அந்தப் பேயை அங்கீகரித்து அதன் வருகை உண்மையென்று நம்ப வைத்திருந்தார்கள்.

அன்று வீட்டிற்குச் சென்றதும், வீடு முழுவதும் அபாயக்கரமான தோற்றத்தை எழுப்பிய வண்ணமே காட்சியளித்தது. இன்று கண்டிப்பாக அந்தப் பிள்ளை பேய் என் வீட்டிற்கு வரும் என்று நம்பிவிட்டேன். நான்தான் கதவைத் திறக்கவும் போகிறேன், அந்தப் பேய் என்னிடம் அந்த மூன்று கோரிக்கைகளைக் கேட்கும் என்றும் நம்பியிருந்தேன்.

முதலில் பல மாதம் உள்ளே நுழையாத சாமி மேடைக்குள் நுழைந்து கீழே விழுந்து சாமியை வேண்டிக் கொண்டேன். “சாமி என்னைக் காப்பாத்து, பிள்ளைப் பேய் என் வீட்டுக்கு வரக்கூடாது” என்று நெற்றியில் பட்டையடித்துக் கொண்டு அன்று சாமி பக்தனாக ஆகியிருந்தேன்.

அதுவரை கடவுள் பற்றிய பிரக்ஞை எனக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது கடவுள் தப்பு செய்தால் தண்டிக்கக்கூடிய ஒரு ஆளாகவோ அல்லது கண்ணுக்குத் தெரியாத ஒன்றாகவோ நினைத்திருந்தேன். சாமி மேடையில் அம்மா வாங்கி வைத்திருந்த “சரஸ்வதி, லட்சுமி, விநாயகர்” ஸ்ட்டிக்கர்களை எடுத்து முன் கதவில் வரிசையாக ஒட்டி வைத்தேன். கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்த்ததும் அந்தப் பிள்ளை பேய் கதவைத் தட்டாது என்று உறுதியாக நம்பினேன். இவர்கள் அந்தப் பேயை உள்ளே வரவிடாமல் தடுக்கக்கூடிய சக்தி படைத்தவர்கள் என்று எண்ணி, அவர்களை அங்கே ஒட்டிவிட்டு, அம்மாவிடம் உதை வாங்கியபோது அவர்களி மீது மெல்ல சந்தேகமும் எழுந்தது.

இரவில் வெகுநேரம் உறங்காமல் காத்திருந்தேன். அன்றைய இரவு மிகவும் தெளிவான ஒரு விழிப்பை உருவாக்கியிருந்தது. சிறிது அலட்சியம் ஏற்பட்டாலும் உறங்கிவிடுவேன் என்பதால் கண்களை அகலமாகத் திறந்துகொண்டு ஏதாவது அமானுட குரல்கள் கேட்கிறதா என்று வெளியின் அசைவுகளைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். பக்கத்தில் உள்ள காட்டின் முணுமுணுப்பும் பூச்சிகளின் சத்தமும் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. காலையில் அம்மா என்னை எழுப்பும்போது முதலில் எழுந்ததும் வெளிக்கதவைத்தான் பார்த்தேன். நிம்மதியாக இருந்தது.

நம்மைச் சுற்றி எப்பொழுதும் ஒரு பிடிமானம் அவசியமாகத் தேவைப்படும் போதெல்லாம், கண்களுக்குத் தெரியாத கடவுள் என்கிற இருப்பு நம்மைச் சுற்றி நம்பிக்கை என்கிற பிடியை உருவாக்கி வைத்துள்ளது. கால் இடறும் போதெல்லாம் அதில் தொற்றிக் கொள்ள வசதியும் உரிமையும் மதம் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. கடவுளையும் மதத்தையும் துறந்தவர்கள் கடவுள் இல்லாத அந்தக் காலியான இடத்தை எதைக் கொண்டு நிரப்புகிறார்கள் என்பது மிக அவசியமானது. நம்முடைய தொன்ம வாழ்வில் கடவுள் என்கிற இருப்பு மிக பலமாக வலுவாக நம் மனித அமைப்பைப் பிடித்துக் கொண்டுள்ளது. அந்த இருப்பு ஏற்படுத்தும் வெறுமையில் வேறு எதுவும் இல்லாமல் இருக்க நேர்ந்தால் துவண்டு வீழும்போது மனதளவில் நாம் சிதறிப் போகவும் வாய்ப்புண்டு.

சிலர் பிரபஞ்சத்தைக் கடவுளாகப் பார்க்கிறார்கள், சிலர் சக மனிதனின் அன்பைக் கடவுளாகப் பார்க்கிறார்கள், கடவுள் என்கிற இருப்பு, அடையாளம் பல பரிமாணங்களில் தொடர்ந்து நம்மைப் பின் தொடர்கின்றன. இன்றும் பிள்ளைப் பேய் பற்றிய நினைவு வரும்போதெல்லாம், நான் கடவுள் நம்பிக்கையை எப்பொழுது இழந்தேன் என்றும் கடவுள் இல்லாத இடத்தில் எதையெல்லாம் கொண்டு நிரப்பி அந்த இல்லாமையைச் சரி செய்து கொண்டிருக்கிறேன் என்றும் கேள்விகளும் ஞாபகங்களும் தோன்றிய வண்ணமே இருக்கின்றன. இதை எழுப்பிக் கொண்டிருப்பதும் எனக்குள் தொலைந்துபோன சில அமானுட குரலாகவும் இருக்கக்கூடும்.

சில நினைவுகளுக்காக
கே.பாலமுருகன்

Monday, August 10, 2009

நீங்களும் உங்கள் வீடும் ஆபத்தில் உள்ளீர்கள்

சிறு பகிர்வு மட்டுமே. அறிவுரையென்று எடுத்துக் கொள்ள வேண்டாம். ADT என்ற முழுநேர கண்கானிப்பு பாதுகாப்பு திட்டத்தினை வீடு வீடாகச் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த சில சீன இளைஞர்களைப் பார்க்க நேர்ந்தது. கையில் ஒரு கோப்பையும் சில விவரங்கள் அடங்கிய அட்டைகளையும் வைத்துக் கொண்டு, “உங்கள் வீடும் நீங்களும் ஆபத்தில் உள்ளீர்கள்” உடனே இந்தப் பாதுகாப்பு வளையத்தை உங்கள் வீட்டில் பொருத்துங்கள். இதுவே தற்காலத்து ஆபத்திலிருந்து தப்பிக்க முடியும் என்று ஏதேதோ வசனங்களை அடுக்கிக் கொண்டே போனார்.

அவர் எடுத்துக்காட்டாக சொன்ன சில விஷயங்கள் இங்கே:


1. உங்கள் வீட்டில் அலாரம் உள்ளதா?
-இல்லையென்றால், அலாராம் இல்லாத வீட்டைத்தான் கொள்ளையர்கள் கண்டறிந்து உள்ளே நுழைகிறார்கள்
-இருக்கிறது என்றால் அந்த அலாராத்தை உடனே செயலிழக்கச் செய்துவிட்டு / செயலிழக்கச் செய்யச் சொல்லி வற்புறுத்தி உள்ளே நுழைகிறார்கள்

2. சாதரண அலாரம் என்னச் செய்யும்? (லோ லோ என்று கத்தும்/ புலம்பும் - இது வேறு அலாரங்கள்-பிறகு பார்த்துக் கொள்ளலாம்)

- சத்தமாக ஒலிக்குமே தவிர அதைப் பொருட்படுத்தாதவர்களின் காதுகளில் ஒலிக்கப் போவதில்லை அல்லது உங்கள் வீடு ஆபத்தில் உள்ளதைக் காவல் துறைக்குச் சொல்ல யாராவது நல்லுள்ளங்கள் முன்வந்தால் ஒழிய, உங்களை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற முடியாது.

- அல்லது அந்த அலாரம் 20-30 வினாடிகள் கழித்தே ஒழிக்கத் துவங்கும், அதற்குள் அதனை அடைத்துவிட கொள்ளையர்கள் திடீர் நடவடிக்கைகளில் இறங்கலாம்

3. ADT அலாரம் என்னச் செய்யும்?

- எல்லாம் வசதிகளும் சேவைகளையும் உள்ளடக்கிய கருவித் தரப்படும். அந்தக் கருவியிலேயே கொள்ளையர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாலோ அல்லது முன்வாசல் கதவை அறுக்க முயன்றாலோ, சன்னலை உடைக்க முயன்றாலோ, அதன் அதிர்வுகள் உடனே “கொள்ளை நடந்து கொண்டிருப்பதற்கான அறிகுறியை அங்கீகரித்து” சத்தம் எழுப்பத் துவங்கிவிடும். ஒரு நிமிடத்திற்குள்ளேயே இந்தத் தகவல் மையக் கண்கானிப்பு நிறுவனத்திற்குச் சென்றவுடன், அருகிலுள்ள ரோந்து காவல் துறையினரிடம் இது குறித்து உடனே அவசர தகவலும் முகவரியும் அனுப்பப்படும்.

- அல்லது இந்தக் கருவியைக் கண்ட கொள்ளையர்கள் அதை உடனே செயலிழக்க வறுபுறுத்தும்போது, அந்தக் கருவியை அடைப்பதற்கான இரண்டு கடவுசொல் கொடுக்கப்பட்டிருக்கும், அதில் இரண்டாவது கடவுசொல்லின் இரகசிய எண்களை அழுத்தும்போது, அந்தக் கருவி செயலிழந்துவிடும் ஆனால் நீங்கள் ஆபத்தில் இருப்பதற்கான தகவல் உடனே கண்கானிப்பு மையத்திற்குச் சென்றுவிடும். (இதுதான் இந்த அலாரக் கருவியின் வித்தியாசம் என்று அந்த இளைஞர் கூறினார்).

- ஆகையால் உங்களைக் கொள்ளையடிக்கும் வந்திருக்கும் நபர்கள் அலாரம் அடைந்துவிட்டதாக எண்ணி எல்லாவற்றையும் முடித்துவிட்டு வெளியே வரும்போது காவலாளிகள் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்துவிடுவார்களாம்.

சரி இப்பொழுது சில காமெடிகளைப் பார்ப்போம்:

அந்த அதிநவீன பாதுகாப்பு கருவியை அறிமுகப்படுத்தி பேசியவர் சொன்னதிலிருந்து

1. தகவல் உடனே (சிங்கப்பூரில் இயங்கிக் கொண்டிருக்கும் மைய நிறுவனம்) அவர்களைச் சென்றடைந்ததும், அவர்கள் மலேசிய ரோந்து காவல் துறையினரிடம் தகவல் சொல்லிவிடுவார்காளாம், அவர்களும் உடனே விரைந்துவிடுவார்களாம். இது எவ்வளவு உறுதி என்று கேட்டேன், காரணம் அன்மையில் ஓர் இடத்தில் கொள்ளை நடப்பதாக அறிவித்து 4 மணி நேரம் கழித்தே “பாதுகாப்பு வழங்க” வேண்டியவர்கள் அங்கே சென்றுள்ளார்கள்.

2. அதற்கு அந்த இளைஞர் கூறியது: “இல்லை, எங்கள் நிறுவனம் அவர்களுக்கு 30% பணம் தருகிறது, அதாவது இந்தப் பாதுகாப்பு சேவையை வீட்டில் பயன்படுத்துபவர்களுக்கு, அவர்கள் விஷேச பாதுகாப்பும் கண்கானிப்பும் வழங்குவார்கள். -அப்படியென்றால் 30% பணத்திற்காக மட்டுமே உடனே ஓடி வந்து சேவை செய்வார்களாம் அந்தப் “பாதுகாப்பு சேவை” பணியாளர்கள்.- பணம் இல்லாதவர்களின் வீட்டில் கொலை நடந்தாலும் தாமதித்து வந்து பிணங்களை அள்ளிச் செல்ல முனைவார்கள் போல.

3. உள்ளே நுழைந்துவிட்ட கொள்ளையர்கள், (அவர்கள் உள்ளே நுழைந்த தகவல் உடனேயே கண்கானிப்பு மையத்திற்குச் சென்றுவிட்டது) வெளியே வரும்போது அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு அவர்கள் கொள்ளையிட்ட உடைமைகள் மீட்கப்படும் என்று சொன்னார். – உடைமைகளாக இருந்தால் மீட்கலாம், போனது உயிராக இருந்தால்?

4. எனக்குத் தெரிந்த ஒரு விரிவுரையாளர் இப்படித்தான் வீட்டில் இருக்கும்போது திடீரென்று உள்ளே நுழைந்தவர்கள், உடனே தரையில் படுத்திருந்த அவரின் 3 வயது குழந்தையின் கழுத்தில் பாராங்கை வைத்தபோது, அவரால் தன்னிடமிருந்த பணங்களைக் கொடுப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லையாம்.

எப்படிக் கொள்ளையர்கள் சாமர்த்தியமாக இயங்குகிறார்கள்?

1. தொடர்ந்து உங்களின் நடவடிக்கைகளைக் கண்கானிக்கிறார்கள்.
- (நீங்கள் வெளியே செல்லும் நேரம், வீட்டில் எத்தனை பேர் உள்ளீர்கள், எத்தனை
மணிக்கு வீடு திரும்புகிறீர்கள்)
-சமயம் பார்த்து, எல்லாம் தகவல்களும் சேமிக்கப்பட்டு, வீட்டில் நுழைவதற்கான
சாத்தியங்களை உறுதிப்படுத்திவிட்டு, கொள்ளைக்குத் தயாராகுகிறார்கள்.

2. வீட்டிற்கு வெளியில் இருக்கும் குப்பைத் தொட்டியில் குப்பை நெகிழியை
வீசுவதற்கு வெளியே வரும்போது, உங்களை வழிப்பறி செய்யவும் வாய்ப்புண்டு.
(முகத்தில் ஓங்கி குத்திவிட்டு சங்கிலியை அபக்கறித்துப் போன சம்பவங்கள் உண்டு)
3. வேலை முடிந்து வீடு திரும்பும்போது, காரிலிருந்து இறங்கி வீட்டிற்குள் நுழைய
முனையும் தருணத்தில் கொள்ளையர்கள் சடாரென்று உங்களுடன் உள்ளே
நுழையக்கூடும்.

5. வீட்டு முன் வாசலில் நிறுத்தப்பட்டிருக்கும் உங்கள் காரின் பின்பக்கம்
ஒளிந்துகொண்டு நீங்கள் வீட்டின் முன் கதவைத் திறக்கும்வரைக் காத்திருந்து
உங்கள் கழுத்தில் பாராங் வைக்கப்படலாம்.

6. பொருட்கள் விற்பனைக்கு வருபவரின் தோற்றத்தில், உங்களுக்குத் தெரிந்த நபரைப் போல உரிமையுடன் “அக்கா, அக்கா” என்ற அழைப்புடன், கோவில் திருவிழா வசூலுக்காக வந்திருப்பது போன்ற அறிமுகத்துடன், இப்படிப் பல வேடங்களில் உங்கள் வீட்டின் முன் வந்து நிற்பவர்களுக்கு உடனே கதவைத் திறந்துவிடக்கூடாது.

7. வழக்கமாக வீட்டிற்கு நடந்து செல்பவராக நீங்கள் இருந்தால், சந்தேகம்படும்படி ஏதாவது ஒரு கார் உங்களைப் பின் தொடரலாம். இதில் கவனமாக இருக்க வேண்டும். (மோட்டார் சைக்கிளோட்டிகள் எல்லோரும் நல்லவர்கள் இல்லை, நடந்து செல்பவர்களின் கழுத்திலுள்ள சங்கிலியை அறுத்துவிட்டோ அல்லது அவரைத் தரதரவென்று இழுத்து சேதப்படுத்தி அவரைக் கொள்ளையடிக்கக்கூடிய நபர்கள் மோட்டாரிலும் உலவுகிறார்கள்.

8. இப்படி உங்களைச் சுற்றி இருக்கும் ஒவ்வொன்றிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நிர்பந்தமும் அபாயமும் உருவாகியுள்ளன. அதற்காக மனிதர்களிடமிருந்து விலகி வாழ வேண்டும் என்று முடிவெடுத்து விட வேண்டாம். நல்ல மனிதர்களும் நம்மைச் சுற்றி வாழ்கிறார்கள். அடையாளங்காணல் என்பதில் நாம் தீவிரமாக இருக்க வேண்டும்.

குறிப்பு: கொடூரமான கொள்ளை சம்பவங்கள் நடந்த வீட்டில் அந்த வீட்டு மனிதர்களின் மனம் உளவியல் ரீதியில் வீழ்ச்சியடைந்து சோர்வுற்றிருக்கும். முக்கியமாக அந்த வீட்டில் அந்தக் கொடூரமான கொள்ளையர்களை எதிர்நோக்கிய குழந்தைகள்/சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களை மீட்டுக் கொண்டு வருவதற்கு பெரியவர்கள் உறுதியாக இருப்பதும் அவசியம். அன்மையில் ஒரு சீனர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்திற்குப் பிறகு அந்த வீட்டின் சிறுமி ஒருத்தி அடிக்கடி இரவில் எழுந்து அலறுகிறாள், அழுது அடம் பிடிப்பதாகக் கேள்வியுற்றேன்.

நட்புடன்
கே.பாலமுருகன்

Sunday, August 9, 2009

படைப்பாளன் எப்படி உருவாகின்றான்? அசிங்கத்தின் கொண்டாட்டக்காரன் – தோல்விகளை ஒப்புக் கொள்பவன்

படைப்பு / எழுத்து என்பது பிறர் வகுத்து வரையறை அளித்து புள்ளிகள் வழங்குவது போல அவ்வளவு நேர்த்தியானது கிடையாது என்றே நினைக்கிறேன். எழுத்தாளனை உருவாக்கும் பாத்திரம் இருக்கிறதா என்ன? அல்லது “எழுத்தாளர்/படைப்பாளர் ஆவது எப்படி” என்கிற புத்தகத்தை யாரேனும் வெளியீட்டுள்ளார்களா? எழுத்து என்பது தொழில் அல்ல, அல்லது சம்பளமும் கிடையாது. எழுத்து என்பதைச் சிலர் தவம் என்பார்கள் சிலர் தியானம் என்பார்கள் சிலர் ஆன்மீக உணர்வு என்பார்கள், சிலர் கடைமை என்பார்கள், சிலர் தரிசனம் என்பார்கள்.

மேலேயுள்ளபடி எந்தவகையிலும் என்னால் எழுத்தையோ படைப்பையோ பார்க்கவோ உணரவோ முடிவதில்லை. ஒருவேளை சராசரியாக இருந்துவிடலாம், பிறர் போல வாழ்ந்து வளர்ந்து சம்பாரித்து மடிந்து போய்விடலாம்தான். ஏன் இவ்வளவு அழகான, வலி நிறைந்த, என்னால் நிரப்பபட்ட என் பொழுதுகளின் கதைகளை நான் எழுத்தில் பதிக்க வேண்டும்? எங்கிருந்து எனக்கு இத்தகையதொரு படைப்பிற்கான தருணமும் மனமும் தோன்றியிருக்கக்கூடும்? என்று எழுத்தாளன் நினைக்கக்கூடும்.

ஒவ்வொரு எழுத்தாளனும் தான் எப்பொழுது எழுதத் தொடங்கினேன், எந்தச் சம்பவத்திற்குப் பிறகு எழுதத் துவங்கினேன், எந்தப் புறக்கணிப்பின் வலி தாங்க முடியாமல் எழுதத் துவங்கினேன், எந்த அவமானத்தின் இறுகிய பிடியில் தளர்ந்திருந்தபோது எழுதத் துவங்கினேன், எந்தத் தோல்வியின் விரக்தியில் இருந்தபோது எழுதத் துவங்கினேன், எந்தப் படைப்பு என்னை எழுதுவதற்கு உற்சாகப்படுத்தியது, எந்த மனிதன் எனக்குள் எழுத்துலகைக் கொண்டு வந்தான், எந்த வாழ்வு எழுதுவதற்கான தருனங்களைச் சேமித்துக் கொடுத்தது. இப்படியாகக் கேள்விகள் விரியும்போது ஒரு படைப்பாளன் தன்னை அடையாளங்காண்கிறான்.

வெறும் பொழுதுபோக்கிற்கவோ, புகழ் சம்பாரிப்பதற்காகவோ, தன் எழுத்து பலத்தைச் சோதித்துப் பார்க்கவோ எழுதுவது அல்ல எழுத்து. அதையெல்லாம் கடந்து உன்னைப் பற்றி உன் வாழ்வைப் பற்றி உரையாடுவதற்கான பகிர்ந்துகொள்வதற்கான மிகச் சிறந்த இடமே எழுத்தும் படைப்பும்தான்.

உலகிலுள்ள சிறந்த எழுத்தாளர்கள் முதல் கவனமே பெறாமல் மறைந்துபோன எழுத்தாளர்கள்வரை எல்லோரிடமும் எழுத வந்ததற்கான காரணங்கள் இருக்கலாம். ஒருவேளை எந்தக் காரணமும் தெரியவில்லை என்றும் சொல்லலாம். ஒரு வெறுமையிலிருந்து அந்த வெறுமையை நிராகரிக்க சிலர் எழுதத் துவங்கியிருக்கலாம். அல்லது தன்னிடம் உள்ள பல மனிதர்களின் விசித்திரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று எழுதத் துவங்கியிருக்கலாம்.

புரட்சிக்கரமான எழுத்து வகைகளைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் சமூகத்தின் விளிம்பிலிருந்து தன் சமூகத்தையும் மனிதர்களையும் முன்னெடுக்க வேண்டும் தங்களின் குரல்களை ஓங்கி ஒலித்தல் செய்ய வேண்டும் என்பதற்காக எழுத வந்தவர்களாகவும், தன் சமூகம் கடந்து வந்த வன்முறை வாழ்வையும் போராட்டங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்று எழுத வந்திருக்கலாம். மொழி புரட்சி, இனப்புரட்சி என்று ஒவ்வொரு துறைகளையும் அதன் விளிம்பி அழிவுகளையும் தன் எழுத்தின் மூலம் ஒலிக்கச் செய்வதற்காகப் பேனாவைக் கையிலெடுத்திருப்பார்கள்.

அரசியல் சார்ந்து எழுத வந்தவர்கள், தன் சார்ந்த கட்சியின் கொள்கைகளைப் பரப்புவதற்கும் அல்லது பிரச்சாரம் செய்வதற்கும் எழுத வந்திருப்பார்கள். அல்லது அந்த அரசியல் கட்சியின் இதழில் கட்சிகளின் செயல்பாடுகளையும் மேல்மட்ட தலைவர்களின் போலி குரலாக இயங்குவதற்கு எழுதத் துவங்கியிருப்பார்கள்.

பொழுதுபோக்கு எழுத்து என்பது நறுக்கு எழுதுவதிலிருந்து துவங்கியிருக்கலாம். எனக்குத் தெரிந்த சில தலைமை ஆசிரியர்கள் எப்பொழுதோ அவர்கள் எழுதிய நறுக்கு ஏதாவது ஒரு நாளிதழில் பிரசுரமாகி, அதை இன்றும் நினைவுக்கூர்ந்து, “நானும் முன்ன எழுதியிருக்கேன், துண்டு சைஸ்ல நறுக்குலாம் எழுதி போடுவேன்” நானும் ஒரு எழுத்தாளன் என்று பெருமைப்பட்டுக்கொள்வார்கள். அல்லது வாசகர் கடிதம் எழுதி பொழுதுகளைக் கழிப்பவர்களும் உண்டு. இவர்களும் எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் ஆச்சரியமில்லை.

ஒரு சிலரிடம் ஏன் எழுத வேண்டும் என்று கேட்க நேர்ந்தால் அவர்கள் அடுக்கிக்கொண்டே போகும் பதில்களைக் கேட்டு ஒருவேளை இருதய பலவீனம் உள்ள எழுத்தாளர் என்றால் அப்பொழுதே இறந்துவிடக்கூடும்.

1. சமூகத்தைத் திருத்த வேண்டும்
2. சமூகத்தைத் தூக்கி நிறுத்த வேண்டும்
3. சமூகத்திற்கு நன்னெறிப்பண்புகளைப் புகட்ட வேண்டும்
4. சமூகத்திற்கு அறிவுரைகள் வழங்க வேண்டும்
5. சமூகத்தை மேம்படுத்த வேண்டும்
6. . . . . . சமூகம் சமூகம் சமூகம்

படைப்பாளனை முற்றிலுமாக நிராகரித்துவிட்டு வெறும் சமூக முன்னேற்றத்தை முன்னிறுத்தி தனது எழுத்தை, “கா. . இ. . ம்” போன்ற தன்முனைப்பு பயிற்சிகள் வழங்கி வியாபாரம் செய்யும் அளவிற்கு தள்ளிவிடும் அபாயக் கருத்துகளைக் கொண்டவர்களைக் கண்டால் பெரும்பாலும் நான் படைப்பு குறித்து அல்லது படைப்பாளன் குறித்து பேசுவதில்லை. பிறர் நினைப்பது போல பிறரின் தேவைக்காகவோ திருப்திக்காகவோ எழுதி வாசகர் கூட்டத்தையும் புகழையும் சம்பாரிக்க நினைக்கும் எழுத்தாளன் அந்த வாசகர்கள் இல்லாமல் போய்விட்டால் அவன் எழுத்தும் இறந்துவிடக்கூடும்.

சமூகத்திற்குப் பிரச்சாரம் செய்வதற்கு நிறைய களங்களும் வாய்ப்புகளும் இருக்க, தனது வாழ்வை எழுத வருபவனிடம் ஒரு பேனா அன்பளிப்பாகக் கொடுத்து என் பிறந்தநாளுக்கு ஒரு கவிதை எழுது என்று கொடுத்தால், ஒரு படைப்பாளனின் வாழ்வில் அவனது ஆளுமையில் நிர்ப்பந்திக்கக்கூடும் வன்முறையென்றே சொல்லலாம். தலைவரின் பிறந்தநாளுக்குக் கவிதை எழுதுதல், கழக நிகழ்வுகளுக்கு தட்டியெழுப்பும் வசனங்களை எழுதுதல், துதிப்பாடும் கேவலமான வேலைக்காக தன் எழுத்தை உபயோகிப்பது என்று எழுத்தைக் கொண்டு பிழைப்பது எழுத்திற்குரிய மரியாதை கிடையாது.

இலக்கியப் போட்டிகளில் பங்கெடுப்பதற்காகவே எழுத வருபவர்களும் பணத்தை முன்னிறுத்தி தன்னைச் சுரண்டி அர்ப்பணிப்பதற்குச் சமம். தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும் அல்லது அங்கீகரித்துக் கொள்ளவும் சிலர் போட்டிகளில் பங்கெடுத்து தன் படைப்பின் பலத்தைப் பரிசோதித்துக் கொள்ளக்கூடும். பிறருடன் ஒப்பிட்டு பரிசோதித்துக் கொள்வதுதான் படைப்பா? இதையும் வியாபாரம் என்று சொல்லத்தான் வேண்டும். மேலும் இந்த வியாபாரத்தைப் பல எழுத்தாளர்கள் செய்து கடந்துவந்துவிட்டார்கள். சிலர் இன்றும் தைரியமாக இலக்கிய போட்டிகளைப் புறக்கணித்து வருகிறார்கள். தன் எழுத்திற்கான ஒரு களம் உருவான பிறகு பிறர் நம்மை அங்கீகரிக்க வேண்டும் என்று போட்டிகளுக்குக் கதைகளை அனுப்பி பரிசுக்காகத் தவம் கிடப்பவன் எழுத்தாளனா என்று கேட்கத் தோன்றுகிறது. 2007 தொடங்கி 2008வரையிலும் நான் பல இலக்கிய போட்டிகளில் பங்கெடுத்து பல பரிசுகளும் பெற்று வந்தேன். எழுதத் துவங்கி தீவிரமாக அங்கீகாரத்திற்கா அலைந்துகொண்டிருந்த காலக்கட்டம் அது. எழுதி வெற்றிப்பெற வேண்டும் என்கிற உத்வேகத்துடன் எழுத்து அரசியல் குறித்தும் எழுத்துலக தண்ணுர்வுகள் குறித்தும் எந்தவித ஆழமான புரிதலும் இல்லாமல் போட்டிப் போட்டு என்னை அடையாளப்படுத்திக்கொண்டேன்.

புதியதாக எழுத வரும் பெரும்பான்மையான எழுத்தாளர்கள் இலக்கிய போட்டிகளின் மோகத்திலும் அது கொடுக்கும் புகழிலும் சிக்கிக் கொள்வது யதார்த்தமானது. பல மூத்த எழுத்தாளர்கள் இன்றும் இலக்கிய போட்டிகளில் கலந்துகொண்டு ஆறுதல் பரிசுவரைப் பெற்றுக் கொண்டு ஆதரவுடன் வீடு திரும்புகிறார்கள். நீதிபதியாகப் பணியாற்றியவர்களும் மறு வருடத்தில் அதே போட்டியில் பங்கெடுத்து போட்டிப் போடுவது எதற்காக என்று கேட்கத் தோன்றுகிறது. (இந்தக் கேள்வியைக் குற்றம் என்றால் மன்னிக்கவும்) ஒருவேளை பொழுது போக்கிக் கொள்வதற்காக அல்லது தன்னை மேலும் மேலும் நிறுவிக் காட்ட வேண்டும் என்பதற்காகவா அல்லது நான் இன்னும் தொலைந்துபோகவில்லை என்று உறுதிப்படுத்திக்கொள்வதற்காகவா.

(ஆமாம். . யார் கலந்துகொள்ள வேண்டும் - கூடாது என்று நிர்ணயிக்க நீ யார்)

நான் நிர்ணயிக்கவில்லை. இதைத் தவறென்றும் கண்டிக்கவும் இல்லை. சிலருக்கு போட்டிகள் இன்னமும் ஏதோ ஒரு அங்கீகாரத்தை வழங்கிக் கொண்டே இருக்கிறது, ஏதோ ஒருவகையில் அவர்களின் இருத்தலைச் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறது. போட்டிகளை நிராகரிக்க ஒருவனுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே போல அதைப் பின்பற்றவும் மற்றவனுக்கு உரிமை உண்டு. ஆனால் எல்லாவற்றையும் பொதுபுத்தி சார்ந்து மதிப்பீட முடியும் என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டால் நல்லது. யார் படைப்பாளன் எதற்காக அவன் படைப்பாளனாக தன்னை ஆக்கிக் கொள்கிறான் என்பதையும் நிர்ணயம் செய்து அவனது இருப்பை அடையாளப்படுத்தபோவதும் காலம்தான்.

பிறருக்குத் துதிப்பாடவோ பிறரை மகிழ்ச்சிப்படுத்தவோ, பிறரின் எதிர்ப்பார்ப்புகளுக்கு உடன்பட்டு எழுதுவதோ, பிறருக்காக தன் எழுத்தை வடிவமைத்துக் கொள்வதோ, சுயத்தை இழந்து, ஒரு சந்தை வியாபாரி போல ஆகிவிட்டதற்கான அடையாளம்.



அன்மையில் மறைந்த எழுத்தாளரும் கவிஞருமான “கமலாதாஸ்” அவரின் எழுத்து வாழ்வை இப்படிச் சொல்கிறார்,

“எனக்கு அன்பு கிடைத்திருக்குமானால் ஒருபோதும் நான் எழுத்தாளராக ஆகியிருக்கவே முடியாது. நான் வெறும் மகிழ்ச்சியான மனுஷியாக மட்டுமே இருந்திருப்பேன். எனக்குள் இருந்த ஏதோ ஒரு பலவீனமே நான் எழுதத் தொடங்க் காரணமாயிருந்தது”

தனது வாழ்நாள் பலவீனங்களின் இரைச்சல்களைக் கட்டுப்படுத்த எழுதத் துவங்கும் எழுத்து ஆளுமைகளும் இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் எழுத்து சமூகத்திலிருந்து தொடங்கவில்லை, அவர்களின் தோல்விகளிலிருந்து அவர்களின் பலவீனங்களிலிருந்து துவங்குகிறது.

அதேபோல கமலாதாஸ் பெண்ணடிமைத்தனங்களைக் கண்டித்தும் தன் எழுத்தின் மூலம் புரட்சியை ஏற்படுத்தியவர். அவர் எழுத்தின் புரட்சியைக் கண்டு மத ஆதிக்கத்தால் நிறுவப்பட்டிருந்த சமூகம் கடுமையான எதிர்வினைகளைத் தூக்கி வீசியது.

“என் தம்பியின் சட்டையை அணிந்துகொண்டு தலைமுடியை மிகக்குட்டையாக வெட்டிக் கொண்டு என் பெண்மையைத் தவிர்த்தேன், புடவை அணி, பெண்னாயிரு, மனைவியாயிரு என்றார்கள் அவர்கள். பின்னல் வேலை செய், சமையற்காரியாய் இரு, வேலைக்காரர்களுடன் சண்டையிடுபவளாய் இரு, கத்தினார்கள், வகைப்படுத்துவோர்” – கமலாதாஸ்.

புரட்சிகளுக்கு எதிராக வீசப்படும் கூச்சல் குரல்கள் எப்பொழுதும் வரலாற்றில் மங்கிப் போய், காணாமல் போய்விடும். புரட்சியை ஏற்படுத்திய ஆளுமைகளின் நினைவுகள்தான் நிலைத்திருக்கும். ஒரு அன்பைத் தொலைப்பதிலிருந்து, ஒரு அன்பு கிடைக்காமல் போன விரக்தியிலிருந்தும் ஒரு படைப்பு தொடங்கலாம் என்று எழுதியும் வாழ்ந்தும் சென்றவர்கள் ஏராளம்.

கடைசிவரை தன்னை தன்னாலே அடையாளம்காண முடியவில்லை, “எனக்கு யாரும் இல்லை நான்கூட” என்று இருத்தலைத் தொலைத்துவிட்டு தனிமையின் உக்கிரத்தில் வாழ்ந்து மறைந்த எழுத்தாளர் நகுலன் தொடங்கி விரக்தியின் உச்சத்தால் மனச்சிதைவால் தற்கொலை செய்துகொண்ட கவிஞர் ஆத்மாநாம் வரையில் , எழுத்தாளன் மிகப் புனிதமானவன், எழுத்தாளன் சீர்த்திருத்தவாதி மட்டுமே, எழுத்தாளன் ஒரு தியாகி என்று கூச்சல்போடும் அனைவரின் குரல்கலையும் விழுங்கி எழுத்தாளனின் மறுபக்க பலவீனங்களையும், தோல்விகளையும் தைரியமாகக் காட்டிய பல எழுத்தாளர்கள் இருக்கவும் செய்கிறார்கள்.
அப்துல் ரகுமானின் “ஆலாபனை” கவிதை தொகுப்பில், இப்படி ஒரு கவிதை வரிகளைப் படித்திருக்கிறேன்:

“உன் மனத்தின் இருண்ட
அறைகளுக்கும் அங்கே உலவும்
பேய்களுக்கும் நீ பயப்படுகிறாய் அல்லவா?

உன் மனம் உன் இரகசியங்களின்
குப்பைக் கூடையாக
இருக்கிறதல்லவா?

உன் மனம் பயத்தினாலும்
கூச்சத்தினாலும் உன் இரகசியமான
ஆசைகளை யாருக்கும் தெரியாமல்
ஒளித்து வைக்கும் அந்தரங்க அறையாக
இருக்கிறதல்லவா?

உன் மனம் ஒரு பாற்கடல்
அதைக் கடைந்தால் அமுதம் மட்டுமல்ல
ஆலகாலமும் வெளிப்படும் என்பதை
நீ அறிவாய் அல்லவா?

உனக்கொரு அரியாசன வேண்டி
பொய்முகமூடியை அணிந்துகொண்டு
திரிகிறாய் என்று உனக்குத் தெரியுமல்லவா?

பிறகேன் இத்துனை நாடகம் இத்துனை நடிப்பு?
உத்தம புத்திரனென துடித்து புலம்புகிறாய்?

நம்முடைய முகவரிகள் பொய்யானவை
நம்முடைய முகங்கள் பொய்யானவை.

(குறிப்பு: உத்தமன் போல ஆரவாரம் செய்பவனின் மனதின் ஆழத்தில் அவன் ஒளித்து வைத்து ஆடும் அவனது ஆசைகளும் உணர்வுகளும் பொய்களும் வெளிப்படும்வரை அவன் ஆடுவது ஆட்டமே, ஆடிவிட்டுப் போகட்டும்)

சமூகம் அசிங்கம் என்று தூக்கி எறிந்துவிட்டதையும் படைப்பாக்கும் படைப்பாளனின் மனம் எல்லாவற்றையும் கொண்டாடக்கூடியது. ஜெயமோகன் சொல்வார், “நீக்க நீக்க நீக்கமர நிலைத்திருக்கும் அழுக்கையும், நீக்குவதன் கொண்டாட்டமாக ஆக்கிக்காட்டுவான் படைப்பாளன்.”

ஆக்கம்: கே.பாலமுருகன்






Wednesday, August 5, 2009

இது பின்நவீனத்துமல்ல-2 (மொழி அறிவும் ஆதிக்க மனோபாவமும்)

வட்டாரமொழி எனப்படுவது ஒரு வட்டாரத்தில் அல்லது குறிப்பிட்ட ஒரு இடத்தில் வாழும் சமூகம் பேசிப் பழகிய தனித்தன்மை கொண்ட மொழியாகும். இது அவர்களின் வட்டார வாழ்வின் நுட்பங்களையும் கலாச்சாரங்களையும் பிரதிபலிக்கும் தொடர்பு ஊடகமாக கட்டமைக்கப்பட்டு வழக்கத்தில் இருந்த மொழியெனவும் சொல்லலாம்.

ஒரு சமூகம் பேசி வாழ்ந்த மொழியை, மேன்மக்கள் அல்லது நகர்புறத்தில் சகல சௌபாக்கியங்களுடன் வாழ்ந்த நடுத்தர/மேல்தட்டு மக்கள் அதைக் கொச்சை மொழியென்று தூற்றுவது, வட்டார மொழி எதிர்க்கொள்ளும் முதல் சிக்கல். சீ.முத்துசாமி எழுதிய மண் புழுக்கள் நாவல் முழுக்க முழுக்க அந்தத் தோட்டப்புற மக்களின் வட்டார மொழியிலேயே எழுதப்பட்டவை. மேலும் அவர்களின் வாழ்வையும் வலியையும் அடக்குமுறையின் அதிகாரத்தில் சிதைந்துபோன அவர்களின் மனதையும் அவர்களின் மொழியின் வழியாகவே சொல்வது வட்டார வாழ்வைப் பதிவு செய்வதற்கான சரியான கள உணர்வை ஏற்படுத்தும். ஆனால் அந்தத் தோட்டப்புற சமூகத்தின் மொழியைக் கொச்சையெனவும் அசிங்கம் எனவும் பல எதிர்வினைகள் எழுந்தன.

//தமிழில் இரண்டு வகைத்தான் உண்டு, ஒன்று பேச்சுமொழி, மற்றொன்று செந்தமிழ்// இதை ஒட்டுமொத்த தமிழ் மொழியின் வகைகள் என்று சொல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது. தமிழை எழுத்து மரபு கொண்ட மொழியாகவும் பேச்சு மரபு மொழியாகவும் சொல்வதுதான் சரியான கூற்றாகும். ஆனால் அந்த மரபுகள் யாவும் இன்று மீறப்பட்டுவிட்டன. (சான்றுகள் கட்டுரையின் இறுதியில்)

செந்தமிழிலேயே பேசி வாழ்ந்த சமூகம் அரச சபையில் அல்லது சங்க காலத்தில் இருந்திருக்கலாம். ஆனால் சமக்காலத்து குடும்ப சூழலிலும் சமூகத்திலும் இரண்டு வகையான பேச்சு மொழி (தமிழ் மொழி) வழக்கத்தில் உள்ளன. ஒன்று பிறமொழி கலவையுடன் பேசுவது எழுதுவது, மற்றொன்று வட்டார மொழியில் பேசுவது எழுதுவது. இதனையும் தவிர்த்து செந்தமிழிலும் படைப்புகள் கற்றவர்களால் எழுதப்படுகிறது.

மேலும் எழுத்து வகையில் எடுத்துக்கொண்டாலும் செந்தமிழில் எழுதுவது, வட்டார மொழியிலேயே எழுதுவது மேலும் துறை சார்ந்த சொல்லாடல்களைப் புகுத்தி நவீன மாற்றத்துடன் எழுதுவது. எடுத்துக்காட்டாக கணினி சார்ந்த எழுத்துக்களில் பெரும்பாலும் புதிய சொற்பிரயோகங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இது தமிழ் மொழியிலும் அறிவியலிலும் ஆற்றலுள்ள ஆளுமைகளால் அங்கீகரிக்கப்பட்ட புகுத்தப்பட்ட சொல்வகைகளாகும். (எடுத்துக்காட்டாக: சுஜாதா). சுஜாதாதான் கணினி என்கிற சொல்லைக் கண்டறிந்து தமிழுக்குக் கொண்டு வந்தவர். இதை ஒரு மாற்றம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். மரபில் அந்தக் கருவிகளுக்குத் தமிழில் சொல் இல்லை காரணம் அக்காலக்கட்டத்தில் அப்பொருள்கள்/நவீன கருவிகள் கண்டறியப்படவில்லை. ஆகையால் கால வளர்ச்சிக்கேற்ப சில பொருள்களுக்குத் தமிழில் சொல்லை உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பிறமொழியுடன் பேசுவது குற்றம் என்ற போதிலும் நடைமுறையில் அது சாத்தியப்படுவதற்காக காரணம் இன்றைய அன்றாட சூழலில் பிற இனத்தவருடன் பேசிப் பழகி, பகிர்ந்து வாழக்கூடிய ஒரு வட்டாரச் சூழல் இருப்பதால் இந்தப் பிறமொழி சேர்க்கை ஏற்படுகிறது. மேலும் மலேசிய தமிழ் சமூகமாக மட்டும் வாழவில்லை, பன்முகக் கலாச்சார வெளியில் ஒன்றாக வாழக்கூடிய நிலையில் இருப்பதால், பிற இனத்தவரின் மொழி தாக்கம் நமது அன்றாட உரையாடல்களிலும் வருகிறது.

எடுத்துக்காட்டாக : “சின்னாங்க சொல்லாத” – senang
“ஏய் ஜாலான் காசு எங்களா?” jalan
“அப்பே. . அம்மோய்” சீன மொழி இன்னும் நிறைய.

பிறமொழி பயன்பாடு தமிழில் குற்றம் என்றால், அதை நிராகரிக்கும் வகையிலும் சில சான்றுகள் உண்டு.

யூ.பி.எஸ்.ஆர் 2008 (தமிழ் மொழி – படைப்பிலக்கியம் கேள்வி பிரிவு சி)
கருத்துணர்ப்பகுதியின் சிறுகதையிலிருந்து : 11ஆவது வரியில் :
“நிமலன் என் கலர் பென்சிலைத் திருடிட்டான் சார்”
14ஆவது வரியில்
“தாத்தா ஜாகா வேல செய்யறாரு”

யூ.பி.எஸ்.ஆர் 2007 (தமிழ் மொழி – படைப்பிலக்கியம் கேள்வி பிரிவு சி)
கருத்துணர்ப்பகுதியின் சிறுகதையிலிருந்து : 33ஆவது வரியில்

“காலையில் ஆபிசுக்கு வந்ததும் சொல்லி விடலாம் என்று நினைத்தேன்”
(ஒவ்வொரு வருடத்தின் கேள்விகளிலும் சிறுகதைகளில் நடைமுறை பேச்சு மொழியிலுள்ள வட்டாரத்தன்மையையும் பிறமொழி பயன்பாட்டையும் இணைத்துள்ளார்கள்)

இதுவும்கூட யதார்த்தவாத வாழ்க்கையையும் உரையாடல்களையும் மாணவர்களுக்குக் காட்ட வேண்டும் என்கிற தேர்வுதான். அப்படித் தூயத்தமிழ் சமூகத்தைத்தான் காட்ட வேண்டும் தூயத்தமிழ் உரையாடலைத்தான் இணைக்க வேண்டும் என்று இருந்திருந்தால் அது இன்றைய வாழ்வோடு தொடர்பில்லாத துண்டிக்கப்பட்ட கனவு பிரதேசத்தின் கற்பனைத்தனமாக ஆகிவிடும் என்பதைத் தவிர்ப்பதற்காகத்தான் அறிஞர்கள் அல்லது கல்வியாளர்கள் யூ.பி.எஸ்.ஆர் சோதனைகளில் அதுவும் படைப்பிலக்கியத்தில் இதைச் சாத்தியமாக அங்கீகரித்துக் கொண்டு வந்துள்ளார்கள். இதற்கு முரண்படுபவர்கள் முதலில் அவர்களிடம் கேள்வியெழுப்பி வாதம் செய்துவிட்டு வரவும்.

//நான் முரண்படுவதாகக் கூறப்பட்ட பகுதியிலிருந்து://

நான் முரண்படவில்லை, செந்தமிழ் புலவர்கள்தான் முரண்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். அதாவது அவர்களின் கூற்றுபடி :

//தமிழில் இரண்டு வகைத்தான் உண்டு, ஒன்று பேச்சுமொழி, மற்றொன்று செந்தமிழ்//


அப்படியென்றால் பேச்சு மொழியை அவர்கள் அங்கீகரித்து அதுவும் தமிழே என்று சொல்லும்போது யார் பேசிய எந்த மக்கள் பேசிய பேச்சு மொழி என்கிற விளக்கம் இல்லை. சமக்காலத்து பேச்சு மொழி என்றால் அதில் பிறமொழி சேர்க்கையும் வட்டாரத்தன்மையும் கலந்திருக்கிறது. அப்படி இவர்கள் பேச்சு மொழியை அங்கீகரித்தால் சமக்காலத்து பேச்சு மொழியில் பிறமொழி பயன்பாட்டையும் மேலும் வட்டாரத்தன்மையுடைய பேச்சு மொழியையும் ஏற்றுக் கொள்வதாக அர்த்தப்படும். அப்படி இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்பவர்கள், துறை சார்ந்த மாற்றங்கள், தொழில்நுட்பம் சார்ந்த மாற்றங்கள், உலகமயமாதல் ஏற்படுத்திய மாற்றங்கள் நமது மொழிக்குள்ளும் சிற்சில மாற்றங்களையும் வடிவத்தையும் கொண்டு வந்துள்ளதை ஏற்க மறுப்பது இவர்களின் முரண்பாட்டைத் தெளிவாகக் காட்டுகிறது.

பின்நவீனத்துவம்: மொழி சார்ந்த பின்நவீனத்துவ புரிதல்: மொழி என்பது மனிதர் தன் இருப்பை நிலைப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களில் ஒன்றாகவே அமைந்து வந்திருக்கிறது. பெயரற்ற ஒரு பொருளை எதிர் கொள்வது என்பது மனித இருப்பை அச்சுறுத்துவதாகவும் ஒருவகையில் அவரது இருப்பைக் குலைக்கக்கூடியதுமாகவே அமையும். அதனால் மனிதர் எதிர்க்கொண்ட ஒவ்வொரு பொருளுக்கும் பெயரிடுதல் என்பது அப்பொருளைத் தன்னுடைய இருத்தலின் சூழலுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு வினையாகவே அமைந்திருக்கிறது. எனவே இந்நிலையில் மொழி என்பதன் மூலமாக மனிதர் தனது சூழலின் மீதான முதல் வினையைத் தொடங்குகின்றார்கள். மொழி என்பது அறிவாகவும், அறிவு என்பது பொருளின் மீதான ஆதிக்கமாகவும் செயல்படுகிறது.

இன்றைய சமூகம் எதிர்க்கொள்ளும் பின்நவீனத்துவம்: சமக்காலத்து வளர்ச்சியில் நமது சந்தைக்குள் நுழையும் ஒவ்வொரு பொருளையும் எதிர்க்கொள்ள வேண்டி, பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுவதால், நமது மொழி அறிவின் மூலம் அதை ஆக்கிரமிக்க ஒரு பெயரைக் கொடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, Pen drive, Hard disk. . இது நடப்பில் நாம் சந்தித்து வரும் பின்நவீனத்துவம். இன்று கணினி என்ற சொல்லை ஏற்றுக் கொண்டு நம் தாய்மொழியின் ஊடாக இந்தப் பொருளை ஆக்கிரமித்துக் கொண்டும் பயன்படுத்திக் கொண்டும் இருக்கிறோம். இந்தப் பின்நவீனத்துவத்தை நாம் எங்கிருந்து கற்றுக் கொண்டோம். (நவீன படைப்பாளி மட்டுமல்ல, எல்லோரும் இந்தத் தொழில்நுட்ப வசதிகளை ஆக்கிரமித்து வருகிறோம்)

இதற்குப் பதில், பின்நவீனத்துவ கோட்பாடுகள்/மொழியியலும் ஆக்கிரமிப்பு சக்தியும்: இரு இனக்குழுக்கள் ஒன்றையொன்று எதிர்ப்படும்பொழுது அவற்றுக்கிடையிலான சமச்சீரற்ற தொழில்நுட்ப அறிவால் ஒரு ஆதிக்க மோதலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. இந்த இடத்தில் எந்த இனக்குழு, தனது தொழில்நுட்ப அறிவால் மேலோங்கியிருக்கிறதோ அந்த இனக்குழு மற்றோரு இனக்குழுவை மேலாதிக்கம் கொள்ளும் ஒரு செயலை சாதித்து விடுகிறது. இதைத்தான் இந்தச் சூழலைத்தான் தொழில்நுட்பங்களை எதிர்க்கொள்ளும்போது மேலாதிக்க மோதல்கள் ஏற்பட்டு, அதைச் சரிக்கட்ட மொழியும் மொழி உருவாக்கமும் பயன்படுத்தப்படுகிறது.

எந்தப் பின்நவீனத்துவத்தையும் கற்றுக் கொள்ளாமலே ஒரு பின்நவீனத்துவ வாழ்வையும் அதன் மொழி ஆதிக்க சவால்களையும் இன்றும் சந்தித்துக் கொண்டிருக்கும்போது, இது பின்நவீனத்துவம் என்பதா அல்லது நிதர்சனம் என்பதா? ஆகையால் தொழில்நுட்ப புரட்சி நம் கலாச்சாரத்தில் ஏற்படுத்திய மாற்றங்களை எழுதுபவன் ஒரு பின்நவீனத்துவாதியாகத்தான் தன்னை உணர்ந்து எழுத வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
-தொடரும்-

ஆக்கம்:கே.பாலமுருகன்

இது பின்நவீனத்துமல்ல-பாகம் 1
http://bala-balamurugan.blogspot.com/2009/07/1_28.html

மூலங்கள்/குறிப்புகள்:
1. நான் ஒரு பின்நவீனத்துவ நாடோடியல்ல (யமுனா இராஜேந்திரன்)
2. மொழியியலும் பின்நவீனத்துவமும் (கார்பல் சொல்ட்-பிரசில்- மலாய்மொழியில் பேராசிரியர் சோபியா முகமட்)

Tuesday, August 4, 2009

யாருக்காக எழுத்தாளன்? (புத்தக வெளியீட்டின் அரசியல்)

பிறரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவோ அல்லது பிறர் வடிக்க நினைக்கும் அடையாளமாகவோ ஓர் எழுத்தாளன் உருவாகுவது பிறரின் அரசியலை ஏற்று ஒரு பொம்மைப் போல ஆட்டிவைக்க தன்னை விற்றுவிடுவதற்கு சமம். இதற்கு முன் பிறரின் அதாவது எழுத்துலகில் முக்கியமான இடத்தை நிருவியிருந்த எழுத்தாளர்களின் வாயால் புகழப்பட்டாலே அதுதான் சிறந்த அங்கீகாரம் என்று நினைத்ததுண்டு. எழுதத் துவங்கி அங்கீகாரம் வேண்டி எதிர்ப்பார்த்து காத்திருந்த ஒரு மனநிலை அது. ஆனால் அதற்கு மாறாகவும் பல மூத்த சக எழுத்தாளர்களால் தூற்றப்பட்ட போது அதன் எதிர் தாக்கங்களையும் சந்திக்க நேர்ந்தது.

தூற்றப்படுவதும் தூக்கியெறியப்படுவதும் அரவனைத்துக் கொள்வதும் சமூக மனிதர்களின் அரசியல் அடுக்குகளிலிருந்து ஒவ்வொருமுறையும் தவறி வீழும் ஒரு சந்தர்ப்பம் போன்றவைத்தான். அதைப் பொருட்படுத்துவதால் புறக்கணிக்கப்படுவதன் பாதிப்புகளை அடையக்கூடும்.

எழுத்துலகில் யாருக்கும் தனிப்பட்ட உரிமையோ அதிகாரமோ இல்லை என்றுதான் நினைக்கிறேன். குழுவாத மனநிலையில் சிக்கிக்கொண்டவர்கள் ஒரு கூட்டமாக இருக்கக்கூடியவர்கள் சில சமயங்களில் கூட்டத்துடன் சேர்ந்து சிந்திக்க கூட்டத்துடன் சேர்ந்து கருத்துரைக்க, எப்பொழுதும் கூட்டத்தின் பால் ஈர்ப்புக் கொண்டு சுயத்தை இழக்கவும் நேரிடலாம். இதை ஒரேவகையில் சிந்திக்கக்கூடிய நண்பர்கள் என்றாலும் சில நண்மைகள் உண்டு. இலக்கியம் குறித்த கலந்துரையாடல், விவாதங்கள், பகிர்வு என்று அந்தக் கூட்டம் இலக்கியத்தை வளர்க்கவும் தன்னை மேம்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புண்டு. இதை ஆரோக்கியமாகவும் பார்க்கலாம்.

ஓர் எழுத்தாளன் தனது புத்தக வெளியீட்டிற்காக அரசியல்வாதிகளின் திகதிக்காக தேடி ஓடும்போதும் தவம் கிடக்கும்போதும் அவனைக் குறித்த சமூக பார்வையும் மதிப்பீடுகளும் மிகவும் காத்திரமாகவே விழுவதற்கு வாய்ப்புண்டு. இவன் யாருக்காக எழுதுகிறான், யாருக்காக இவன் எழுத்தாளன் என்கிற அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளான் என்ற கேள்வியும் எழுகிறது. மேலும் அவனின் இத்துனைக்கால எழுத்துகள் குறித்து சில ஐயங்களும் எழுவதுண்டு.

அன்மையில் கோலாலம்பூரில் ஒரு மூத்த எழுத்தாளரின் சிறுகதை தொகுப்பு வெளியீட்டிற்காகச் சென்றிருந்தேன். அவர் அழைத்தமைக்காகவும் நண்பர் என்கிற அடிப்படையிலும் அவருடைய அந்தச் சிறுகதை தொகுப்பு வெளியீட்டிற்காக இரண்டாவது முறையாகச் செல்ல நேர்ந்தது. ஏற்கனவே சிங்கப்பூரில் நிகழ்ந்த அதே எழுத்தாளரின் புத்தக வெளியீட்டிற்காகச் சென்றிருந்த போது பொன்னாடைகள் நிரம்பிய ஒரு சூழலில் கூட்டத்துடன் கூட்டமாக பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தபோது சில தவிர்க்க முடியாத மேடை நாடகங்களை அங்கும் காண வாய்ப்புக் கிடைத்தது. இருந்தும் அதை அவ்வளவாகப் பொருட்படுத்தும் அளவிற்கு பலமானவைக் கிடையாது. வெளி சக்திகளின் சில அரசியல் உந்துதல்களால் நிகழ்ச்சி அப்படியொரு கோனத்தில் சில சடங்குகளுடன் நடந்து முடிந்தது.

ஆனால் இங்கு மலேசியாவில் நடந்த அந்த வெளியீட்டு விழாவில் இரு பழைய நண்பர்களும் இன்னொரு அரசியல்வாதியின் பால்யமும் நினைவுக்கூறப்பட்டு, செண்டிமெண்ட்டல் போராட்டமே மிக நேர்த்தியாக நடந்து அரங்கேறியதைப் பார்க்க முடிந்தது. கொஞ்சம் செயற்கையான மேடை பேச்சுகள் நிறைந்திருந்தாலும் அன்றைய வெளியீட்டு வசூல் பல ஆயிரங்களைக் கடந்தபோது, ஆ ஆ ஒரு அரசியல்வாதியின் பேச்சும் வருகையும் விழாவிற்கு எப்படியெல்லாம் வலு சேர்க்கும் என்று அசைப்போட முடிந்தது. எனக்கருகில் இருந்த நண்பர்கள் வசூலைக் கணக்குப் பண்ணி வியந்தார்கள். அந்த மூத்த அரசியல்வாதி பேசிய பேச்சுக்காகவாது இவ்வளவு பணம் சேர்ந்திருப்பது வரவேற்கக்கூடியது. பாசக்கார நண்பர்கள் நட்பு பாராட்டிக் கொள்ள இதுவே மகா சந்தர்ப்பமென சில நூறு பேர்களை அழைத்து வந்திருந்த பிரமுகர்கள் எல்லோரையும் பேச வைத்து, நூலாய்வு அங்கம் ஒரு சிட்டுக்குருவியின் சிறு வருகைக்கு நிகராக நடந்து முடிந்ததையும் யாரும் கவனிக்காமல் விட்டிருக்கலாம்.

நண்பரும் சகோதருமான திரு.பாலுமணிமாறன் சிங்கையிலிருந்து வந்து நூலாய்வு செய்ய அவருக்குக் கொடுக்கப்பட்ட நேரம் 15 நிமிடங்கள்தான். ஒரு புத்தக வெளியீடு என்றால் அந்தப் புத்தகத்தைப் பற்றிய ஆய்வும் வாசகர்களுக்கு ஒரு சிறு புரிதலைக் கொடுக்கக்கூடிய கேள்வி பதில்களும் அல்லது எழுத்தாளரே தான் கதைகளை எழுதிய அனுபவத்தையும் பகிர்ந்துகொள்வது முக்கியமான அமசமாகும். ஆனால் அங்கு நடந்ததோ தலைவர் அவர்களின் அரசியல் பேச்சும், தி.மு.க பேச்சும்தான். இந்தியாவிலிருந்து வந்திருந்த ஒரு பேச்சாளர் அப்படித்தான் பேசினார். மேலும் பல இடங்களிலிருந்து பல எல்லைகளிருந்து முக்கியமான நன்கொடையாளர்களும் வரவழைக்கப்பட்டிருந்தார்கள்.
இது முழுக்க முழுக்க தனி ஒரு நபரின் முயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு என்பதால் அரசியல் சார்ந்தும் சாராமலும் நிகழ்வு அமைவது அந்தத் தனிநபரின் விருப்பத்தை/பார்வையைப் பொருத்தது. ஒரு பார்வையாளன் என்கிற அளவுகோலோடு மட்டுமே இதைப் பதிவு செய்ய முடிகிறது.

இதெல்லாம் எனக்குள் முரண்பாடாக இருந்தாலும், புத்தகம் எழுதி வெளியீடு செய்தவரை அவ்வளவு எளிதாக நிராகரிக்கவும் முடியவில்லை. பொதுநலம் சார்ந்தும் மலேசிய இலக்கியம் குறித்து பல முயற்சிகளை மேற்கொண்டவர் என்கிற வகையில் அவரைப் பாராட்டவும் செய்ய வேண்டும். இன்றும் இளம் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்துவதிலும் அவர்களுடன் இலக்கியம் குறித்த உரையாடலில் ஈடுபடவும் தனது நேரங்களை ஒதுக்கவும் செய்கிறார். எழுத்தாளர் சண்முகசிவா சொல்வது போல:

“எழுத்தாளன் சுய மரியாதையுடன் தன்மானத்துடன் தன் எழுத்தின் வளமையில் நிற்க கற்றுக் கொள்ள வேண்டும், அரசியல் தலைவர்களின் வருகைக்காக தவம் கிடப்பது, அவர்கள் கொடுக்கும் பண முடிப்பைக் கூனிகுறுகி பெற்றுக் கொள்வது, அரசியல்வாதிகளைச் சார்ந்தே வாழ நினைப்பது, ஓர் எழுத்தாளனின் இருப்பை சாகடித்துவிடும்” சண்முகசிவா.

கே.பாலமுருகன்

Monday, August 3, 2009

ஆழ்நதியை நோக்கிய ஒரு மீன் குஞ்சின் நீந்துதல்



வணக்கம். நான் "பாட்டனுக்குத் தப்பி பிறந்த கே.பாலமுருகன்" சொல்வது என்னவென்றால்:

அறிவியல் நிபுணர்களும் உலக ஆராய்ச்சியாளர்ககளும் தோற்றுப் போகும் அளவிற்கு ஒரு விந்தையான கண்டுபிடிப்பொன்று நிகழ்ந்துள்ளது. முதலில் ஏதார்த்தமாக அதைக் கண்ணூற்ற பொழுது உண்மையில் வியந்து போனேன் அதன் விந்தையைக் கண்டு.

நவீன இலக்கியம் + பாலியல் = எச் 1 என் 1 பன்றிக்காய்ச்சல்



என்ற கண்டுபிடிப்பின் மூலம் ஒருவர் எல்லோரையும் மிஞ்சிவிட்டார். இனி பன்றிகாய்ச்சலுக்கான நோய் தடுப்பு சக்தியை உலக மருத்துவர்கள் தேடி அலைய வேண்டாம். நேராக இங்கு வந்தால் மலேசிய வலைப்பூ ஒன்றில் அதன் தீர்வு அமைக்கப்பட்டுள்ளது.
அதுவும் அந்தக் கண்டுபிடிப்பின் சூட்சமத்திற்குக் கீழே பன்றி இனத்தைக் கேலி செய்யும் வகையிலான ஒரு புகைப்படம் வேறு. பன்றிக்காய்ச்சல் பறவியதற்குக் கண்டிப்பாக பன்றி முழுக்காரணமாக இருந்திருக்க வாய்ப்பில்லாதபோது, அந்த நபர் பன்றியை நவீன இலக்கியத்தோடு இணைத்து பன்றியையும் இலக்கியத்தையும் கேலி செய்து தனது வன்முறையான பார்வையை (மேடையில் கூச்சல்போடும் கூச்சல்காரர்களுக்கு நிகரான) வெளிப்படுத்தியிருக்கிறார். மெத்த படித்தவர்கள் இப்படி ஒரு மிருக இனத்தை சூட்சமத்திற்குள் சொருகி தனது அறிவியல் அறியாமையின் மூலம் மிருகவதை செய்ய முற்படுகிறார். ஒரு மிருகத்தை அவமானப்படுத்தும் ஒருவர் மிருகத்திற்கு நிகரானவர் என்று சொல்லலாமா? திருக்குறளில் எங்காவது இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

“தின்றுகொழுத்த அந்த அறிவுகெட்டப் பன்றிகள்தான் இதனை அறியுமா?” மலேசிய வலைப்பூ ஒன்றில், ஒரு பதிவர் சொன்னது.

பன்றியும் ஒரு மிருகம்தானே. அதை இப்படியொரு உவமைக்கு ஆளாக்கி தனது வெறித்தனத்தைக் காட்டியிருக்கும் இந்த நபரை என்ன செய்யலாம்? மதத்தைக் காட்டி ஒரு மிருகத்தை அரவனைப்பதும் இன்னொரு மிருகத்தை எட்டி உதைப்பதும், என்ன மனிதன் நீ? தமிழ் தமிழ் என்று கூச்சலிடும் நீ ஒரு வாயில்லா ஜீவனுக்கு ஒரு மரியாதையைக் கொடுக்க தெரியவில்லையா? பிறகென்ன தமிழ், தமிழ் கொடுத்த அறிவு? இதுதானய்யா தீண்டாமையின் முதல் படி. இந்தச் சிந்தனையை முதலில் நீக்க வேண்டும்.

“இது பின்நவீனத்துமல்ல”
என்கிற (http://bala-balamurugan.blogspot.com/2009/07/1_28.html) பகுதியில் ஒரு சமூகம் எப்படி அடக்குமுறை அரசியலின் மூலம் சிதைந்து பின்நவீனத்துவ வெளிப்பாடுகளை அடைந்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டினேன். அவர்களின் வாழ்வுக்கு அல்லது மேலாதிக்க சிந்தனாவாதிகளின் ஒடுக்குமுறையால் நம் தோட்டத்து மக்கள் அடைந்த எல்லைக்கு அவர்கள் எந்த மேற்கத்திய பின்நவீனத்துவத்தையும் நாடவில்லை. அப்படியிருக்க அந்தத் தோட்டத்து மக்களின் வாழ்வையும் நகர மனிதர்களின் இன்றைய வாழ்வையும் படைப்புகளில் கொண்டு வரும் எழுத்தாளன் மேற்கத்திய சிதைவிலிருந்து உருவான எந்த பின்நவீனத்துவத்தையும் மேற்கோளாகக் கொண்டு எழுத வேண்டிய அவசியம் இல்லாததால் இங்கு யாரும் பின்நவீனத்துவம் எழுதவில்லை என்று சொன்னேன்.

“எதோ ஒரு இடத்தில் ஏற்பட்ட பன்றிக்காய்ச்சல், எல்லைக் கடந்து நாடு கடந்து- கண்டம் கடந்து- கடல் கடந்து- வெளி கடந்து நம் நாட்டிலுள்ள ஒரு சிற்றூரிலுள்ள தமிழ்ப்பள்ளியில் வகுப்பறையில் பயிலும் மாணவனுக்குப் பன்றிக்காய்ச்சல் ஏற்படுதைக் கண்டு என்ன ஒரு விந்தை, என்ன ஒரு வியப்பு” என்று சொல்லும் ஒருவருக்கு உலகமயமாதலின் தன்மைகள் பற்றியும் உலகம் சிறு கிராமமாக மாறிவிட்டதன் பாதிப்புகள் பற்றியும் விழிப்புணர்வே இல்லை என்பது தெரிகிறது. வகுப்பில் 4ஆம் ஆண்டு பயிலும் மாணவனிடம் கேட்டால்கூட சொல்வான் இணையத்தின் பயன்பாடுகள் பற்றியும் அது உலகை எப்படி சுருக்கி ஒரு எலி நகர்த்தலில் நுழைந்து வெளியாகிவிடலாம் என்று. அப்படியிருக்க எங்கோ பரவும் ஒரு நோய் இங்கு வந்து அடைவதற்கான காரணத்தில் எந்த வியப்பும் இல்லை. ஒருவேளை விமானங்களே உருவாகாத ஒரு காலக்கட்டத்திலோ அல்லது உலக சந்தை விரிவாக்கமடையாத ஒரு பிற்காலத்திலோ இருக்க நேரும் மனிதனுக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருக்கக்கூடும். ஐயா கொஞ்சம் வெளியில் வாருங்கள். வியந்தது போதும். உங்கள் ஒப்புவமையும் கண்டுபிடிப்பும். . . .

உங்களிடம் (மேடை கூச்சல்காரர்களிடம்) பேசியும் விவாதித்தும் எந்தப் பயனும் இல்லை – மேலும் நவீன இலக்கியத்தை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று யார் வந்து அழுதது? மக்களிடம் என்னவேண்டுமானாலும் பிரச்சாரம் செய்து கொள்ளுங்கள் புரிய வைத்துக் கொள்ளுங்கள்- எல்லாம்வித முகத்திரைக் கிழித்தலுக்கும் விவாதங்களுக்கும் கடைசியில் காலமே பதில் சொல்லும்). ஒரு தனிமனிதனின் கருத்தும் பிரச்சாரமும் ஒப்புவமைகளும் சமூகத்திற்குள் பிரச்சாரமாக வரும்போது முதலில் பெரும் கவர்ச்சியை ஏற்படுத்தும் ஆனால் பிறகு அதன் தோலை உறித்துப் போட்டுவிட்டு எங்கோ ஒரு புதருக்குள் போய் ஒளிந்துகொள்ளும் பாம்பு போல் நெளிந்துவிடும்.இதுதான் வெறும் கூச்சலுக்கும் பிரச்சாரங்களுக்கும் ஏற்படும் விளைவுகள்.

மரபிலக்கியங்களில் ஆபாசம் என்று எதுவுமே இல்லை, காரணம் ஒவ்வொரு பாலுறுப்பு பயன்பாடுகளையும் கடந்து அங்கு வந்து பதிவாகுவது வெவ்வேறு நிலப்பரப்பில் மதமின்றி வாழ்ந்த ஒரு சமூகத்தின் அன்பும் வாழ்வும்தான். ஆனால் பாலியல் சொற்களைக் கண்டாலே அலறும் சிலருக்காக, சங்க இலக்கியங்களிலும் பாலியல் சொல்லாடல்கள் பயன்படுத்தியிருப்பதைச் சுட்டிக் காட்டினேன். எப்படி இளம் முலை என்கிற சொல்லைக் கடந்து போக உளவியல் அணுகுமுறை தேவைப்படுகிறதோ அதேபோல நம் நாட்டு நவீன இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சில பாலியல் சொல்லாடல்களையும் கடந்து போவதற்கு சமக்காலத்து பற்பல அச்சுறுத்தல்கள் தடையாக இருப்பதைக் காண முடிகிறது. காமக்கிளர்ச்சியை ஏற்படுத்தும் எழுத்துக்கும் யதார்த்தவாத எழுத்துக்கும் வித்தியாசம் தெரியாத பரந்துபட்ட வாசிப்பாளுமை இல்லாதவர்களுக்கு தவறான கடுமையான ஒப்புவமைகள்தான் மேற்கோளாக வந்து சேரும்.

“யதார்த்தவாதம்” என்பதும் “இயல்பியல்வாதம்” என்பதும் முரண்பாடானது கிடையாது. இலக்கியம் காலத்தையும் வாழ்வையும் பதிவு செய்யும் களம் என்பதால், அதில் சில புனைவுகளும் கற்பனைகளும் உவமைகளும் அழகியலுக்காகச் சேர்ந்தே வரும். அதனுடன் நன்னெறி கட்டமைப்புகள் பிரச்சாரத்தன்மைகள் என்றும் பிற்காலத்தில் சேர்ந்து கொண்டவை. பிரச்சாரத்தன்மைகளையும் வலிந்து வந்து புகுத்துவதும் அறம் சார்ந்த வாதங்களையும் நீக்கிவிட்டு சமூகத்தின் கண்ணாடியாக ஒரு சமூகத்தின் தோல்வியையும் வீழ்ச்சியையும்கூட பதிவாக்கும் தன்மையுடன் வெளிப்பட்டதுதான் யதார்த்தவாதம். பிறகு அதற்கு எதிராகவும் பல முரண்பாடுகள் உருவாகின. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எல்லாம்வகையான இலக்கிய வடிவங்களுக்கும் எதிர்மறையான சிந்தனைகள் எழுவதும் இயல்பு. அதையே ஒரு வன்முறையாகப் பாவித்து மொழி சார்ந்த பிரக்ஞையின் வெறி ஆட்டத்துடன் போர்க்கொடி தூக்குவதும் மரண அடியெல்லாம் கொடுப்பதும் வீண் கூச்சல்.

ஒரு நவீன எழுத்து வகைத்தான் இளைஞர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கப் போகிறது என்று பயப்படும் ஒருவரின் விவாதம் சிறுப்பிள்ளைத்தனமாக உள்ளது. ஒரு எடுத்துக்காட்டுக்காக விஜயகாந்த் சொல்வது போல ஒரு கணக்கெடுப்பு. 100 சதவீத இளைஞர்களில், படித்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் ஒரு 50 சதவீதம், அதில் தமிழ் படித்தவர்கள் ஒரு 25 சதவீதம் என்றாலும், அதில் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் ஒரு 15 சதவீதம் என்றாலும், அதிலும் தீவிர வாசிப்புடையவர்கள் ஒரு 8 சதவீதம் என்றாலும் அதிலும் நவீன இலக்கியத்தைத் தேடி வாசிப்பவர்கள் ஒரு 5 சதவீதம் என்றாலும், இந்த 5 சதவீத இளைஞர்கள் என்ன முட்டாள்களா? இவ்வளவு தூரம் தனது வாசிப்பையும் தேடலையும் அகலப்படுத்தியவர்கள் என்ன மூளை இல்லாதவர்களா? நவீன இலக்கியத்தை வாசித்துச் சீரழிந்து போவதற்கு. புறஉலகின் பாதிப்புகள் எவ்வளவோ இருக்க இது என்ன சிறுபிள்ளைத்தனமான புரிதல் மற்றும் அளவுகோல்.

வகுப்பறையில், “கோழி குஞ்சு, மீன் குஞ்சு” என்று சொல்வதற்குக்கூட அஞ்சும் பயப்படும் அல்லது அதைச் சொல்லிவிட்டு சிரிக்கும் மாணவர்கள் இருப்பது இந்தச் சமூகம் எப்படி அவர்களை அடக்கி மதம் என்கிற பெயரின் புனித போர்வையால் போட்டு மறைத்து அச்சுறுத்தி வைத்துள்ளதைக் காண முடிகிறது. அப்படிப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து தலைநகரத்திற்குச் செல்ல நேர்ந்தபோது சினிமாத்தனமான ஆபாசங்களும் நிர்வாணப் புகைப்படங்களும் அச்சுறுத்தலாக இருந்த அதிர்வுகளை ஒரு இறுக்கமான கலாச்சார வெளிக்குள்ளிருந்து வியந்து பார்த்த ஒன்றைப் பதிவு செய்ய நேர்ந்தபோது பாலியல் சொல்லாடல்களும் அவசியமாகப்பட்டது. இதுவும் ஒரு உளவியல் பாதிப்பிலிருந்து வெளிவந்த உணர்வுகள்தான் என்று வைத்துக்கொள்ளலாம். தற்போதைய சூழலில் நம் இளைஞர்களும் மாணவர்களும் மிக சர்வசாதரணமாக இணையத்தளங்களில் நிர்வாண காட்சிகளை 3.00 வெள்ளி கட்டி பார்க்கும் அளவிற்கு வந்துவிட்ட கலாச்சார அச்சுறுத்துதலின் விளிம்பில் நின்றுகொண்டு இன்னும் இலக்கிய படைப்புகளைக் குறை கூறிக் கொண்டிருந்தால் வேலி கடந்த ஆடுகள் மேய்ந்த விளைநிலத்தின் மீதங்கள்கூட கிடைக்காது.

அடுத்ததாக “பாட்டனுக்கு தப்பிப் பிறந்த கே.பாலமுருகன்” என்று மிகவும் வன்முறையாக தனது சங்க இலக்கிய ஆளுமையைக் காட்டுவதற்காக பதிவு போட்ட “தமிழரன்” என்பவர் பெயர் தவிர வேறு எந்த அடையாளமும் இல்லாத கோழை. என் வலைப்பூவில் என்னைப் பற்றிய விவரங்கள் உண்டு, என் புகைப்படமும் உண்டு. தமிழரண் என்பவர் ஒரு ஆளா அல்லது அவரே பல பெயர்களின் அந்த வலைப்பூவிலேயே பின்னூட்டம் போட்டுக் கொண்டு கிளர்ச்சியடையும் ஒரு ஆசாமியா என்பது தெரியவில்லை. சங்க இலக்கியம் ஓர் ஆழ்நதியைப் போன்றது, அதில் இன்னமும் எனது சமக்காலத்தைத் தூக்கிக் கொண்டு நீந்தும் ஒரு மீன் குஞ்சுதான் நான். இதைச் சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்தத் தடையும் இல்லை. திமிங்கிலம் போல ஆழ்நதியின் ஆழத்தில் நீந்தும் எல்லாவற்ரையும் கரைத்துக் குடித்துவிட்ட அவரின் சங்க இலக்கிய எதிர்க்கருத்துகளுக்கு விரைவில் பதிலிடுவேன்.

(பின்குறிப்பு: கமலின் தசாவதாரம் படம் பாகிஸ்த்தானிய இஸ்லாமியர்களின் வாழ்வையும் தெலுங்கு இனத்தவரின் மொழி உணர்வையும் கேலி செய்த ஒரு சினிமாவும்கூட, மேலும் பெரியாரிசத்தை முன்னெடுக்க வேண்டும் என்கிற சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்தும் பழைய விவாதங்களைக் கொண்டு வந்தது. படம் முழுக்க துரத்துதலும் தப்பித்தலும் என (butterfly effect) என்கிற தியோரியைத் தவறாகப் பயன்படுத்திய சினிமா என்று பல திரை விமர்சகர்கள் விமர்சித்து பழைய கதையாகிவிட்ட ஒன்றை மலேசியாவின் ஒரு வலைப்பதிவாளர் மிகவும் புகழ்ந்து தனது விவாதங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும் கூத்து சிரிக்க வைக்கிறது.)

கே.பாலமுருகன்

Sunday, August 2, 2009

யானைகளை வைத்து காமெடி பண்ணாதீர்கள்- மிருகங்களின் மீதான மத அரசியல்

சற்றுமுன் சன் தொலைக்காட்சியில் “the tale of elephant” என்கிற நகைச்சுவை படம் ஒன்றை ஒளிப்பரப்பியிருந்தார்கள். தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. அறையிலிருந்து கேட்கும்போது ஏதோ கீழ்த்தரமான நகைச்சுவை தமிழ் சினிமாவின் காட்சி ஓடிக் கொண்டிருப்பது போன்று தோன்றியது. கோயம்புத்தூர் வட்டார மொழியில் பலர் பேசிக் கொண்டும் திட்டிக் கொண்டும் உரையாடிக் கொண்டும் இருப்பது போன்ற ஒலிப்பதிவுகள்.

இதென்ன வட்டார வாழ்வை மையமாகக் கொண்டு வெளிவந்திருக்கும் புது படமா என்று தொலைக்காட்சியை எட்டிப் பார்த்தபோது பயங்கர அதிர்ச்சி. (சன் தொலைக்காட்சி வந்தததிலிருந்து பல அதிர்ச்சிகள் நிகழ்ந்துகொண்டுத்தான் உள்ளன. இனி சன் தொலைக்காட்சி இல்லாமல் போனால் நம் வீட்டிலுள்ள பெரும்பாலான பெண்களெல்லாம் இடிந்து வீழ்ந்து உருகிவிடுவார்கள் என்பதும் வேறு விஷயம்). யானை கூட்டம் ஒன்று ஆப்பிரிக்கா வனத்தின் அடர்த்தியைக் கடந்து வெட்டவெளி பிரதேசத்தில் நடந்துகொண்டிருக்கும் காட்சி. ஆமாம், யானைகள் அனைத்தும் “கோயம்புத்தூர் மொழியின் அசல் தொனியிலும் சினிமாத்தன வசனங்களுடனும் கிண்டலடித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் நடந்துகொண்டிருக்கின்றன.

“டே. . என்றா அங்குட்டு போய் மாட்டிக்காதே மச்சான்”
“டே இவரு பிளிறி காட்டறாருடா. . பயமா இருக்கு”
“நாங்களெல்லாம் வந்தாலே அதிரும்லே”

பெரியார் ஏற்கனவே ஒருமுறை சொல்லியிருந்தார், “அவ்வளவு பெரிய விநாயகருக்கு இவ்வளவு சின்ன எலி வாகனமா? இது மிருகவதை” என்று. பக்தி காலத்திற்குப் பிறகு எந்த மிருகத்தையெல்லாம் நாம் தெய்வமாக்கியிருக்கிறோம் என்று பார்த்தால், உலகில் உள்ள எல்லாம் மிருகங்களும் நம் இந்து கடவுள்களின் அப்பாவி வாகனங்களாக மாற்றப்பட்டிருப்பதைக் கண்டறிய முடியும். பல மிருகங்கள் கோவில்களில் ஒரு குறியீடாக நிறுவப்பட்டு சிலை வடிவங்களாக மதவாதிகளால் சிறைப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அவைகள் அங்கிருந்து நகர முடியாமல் இந்துத்துவ பின்னனியில் வேத புராணக் கதைகளின் கட்டமைப்பில் தெய்வங்களின் அடிமைகளென சிக்கிக் கொண்டு காலத்திற்கும் அதன் குறியீடுகளாக கிடக்கின்றன.

முருகனுக்கு மயில் வாகனம், விநாயகருக்கு எலி வாகனம், எமனுக்கு எருமைமாடு வாகனம், முனியாண்டி சாமிக்கு குதிரை வாகனம், அம்மனுக்கு புலி வாகனம், பெருமாள் படுத்துக் கொள்ள பாம்பு படுக்கை, நம் இந்து கடவுள்கள் இந்த மிருகங்களெல்லாம் இல்லையென்றால் அநேகமாக தடுமாறி கையறு நிலையில் இருக்க வேண்டி வரும் போல.

“எமன் உயிரைப் பறிக்க எருமைமாட்டின் மீது வருகிறார்” இவர் செய்யும் தொழிலுக்கு எருமை மாட்டையும் உடந்தையாக்குகிறார். எருமைமாட்டில் வந்தால் கோரமாக அச்சுறுத்தலாக இருக்கும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அவர் ஒரு “தெர்ரர்” போல தெரிய வேண்டும் என்பதற்காக இருக்கலாம். கிரெக்க நாகரிகத்தில் காளை சண்டை ஒரு மாவிரனுக்குறிய உயிர் பிரக்ஞையைத் துறந்த ஒருவனுக்கான வீர விளையாட்டு என்று தீர்மானிக்கப்பட்டு நடத்தப்பட்டது. அதே விளையாட்டு, “ஜல்லிக்கட்டு காளையென” இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்து சந்தைக்குள் நுழைந்தது. சரி இது ஒரு மிருகவதை என்று எடுத்துக் கொண்டாலும், அவர்கள் காளையை வீரத்திற்கான கடைசி குறியீடாகப் பாவித்து அதனை அடக்குபவன் மாவீரன் என்று வரையறுத்தார்கள். ஆனால் நம்ப எமலோகம் மன்னன் எமதர்மன், வேத காலத்தின் மிகப் பயங்கரமான புனைவு, உலக மாவீரராகத்தான் இருக்க முடியும் போல.

“மொத்த குதிரைகளும் நம்ப முனியாண்டி சாமி எப்பொழுது குத்தகைக்கு எடுத்தார்” என்பதைச் சற்றுக் கூர்ந்து கவனித்து அவதானிக்க வேண்டும்” ஒருவேளை அந்தக் காலத்து ஜமிந்தார்களும் பணக்காரர்களும் காவல்காரர்களும் குதிரை சவாரியை ஒரு பொழுது போக்காக பின்பற்றியிருந்திருக்கலாம். அல்லது அவர்களின் காவல் தொழிலுக்கு அதைப் பயன்படுத்தியிருக்கலாம். அதே வழக்கமாக ஆகி, காவல் காப்பவர்கள் எல்லாம் குதிரையில்தான் வருவார்கள் என்ற நம்பிக்கையாகவும் இருக்கலாம். (தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்) கதாநாயகன் குதிரையில் வந்து கதாநாயகியைக் காதலிப்பது, காப்பாற்றுவது, கவர்வது போல.

அலெக்செண்டர் போர்க்களத்தில் வென்ற நாடுகளைவிட, இழந்த போர்வீரர்களைவிட, அவரின் படையில் மரணித்த குதிரைகள்தான் அதிகம் என்று ஒரு கட்டுரையில் படித்தேன். பாவத்திற்குரிய மிருகம் குதிரை. அதன் வேகமே அதற்கு பலவீனம்.

“குதிரை சத்தம் கேட்டால், சிலருக்குப் போர் ஞாபகம் வரலாம், அல்லது சிலருக்கு பந்தையம் ஞாபகத்திற்கு வரலாம், அல்லது சிலருக்கு பயண சவாரி ஞாபகத்திற்கு வரலாம் அல்லது சிலருக்கு, ஐய்யனார் குதிரைலே சவாரி செய்து காவல் காத்துக்கிட்டு இருக்காரு என்கிற ஞாபகம் வரலாம். ஆனால் எல்லாம் இடங்களிலும் குதிரை பரிதாபத்திற்குரிய பொருளாகவேப் பாவிக்கப்பட்டுள்ளது. நமது அதிர்ஸ்ட்டத்தை நிர்ணயம் செய்ய குதிரைகள் ஓடி தேய்கின்றன. சிறுதெய்வ கோட்பாடுகள் குதிரையை ஒரு காவல் தெய்வத்தின் அடிமையாக ஆக்கிவிட்டிருந்தது. எங்காவது சுற்றுத்தளங்களுக்குச் செல்ல நேரும்போது ஒரு குதிரைக்காரன் குதிரையின் வாயில் கயிரைக் கட்டி அதனை தனது கட்டுபாட்டிற்குள்ளே வைத்திருந்து வியாபாரம் செய்வதைப் பார்க்கக்கூடும் (சவாரி). மிருகங்களின் வாயை இப்படித்தான் கட்டிப்போட்டே நமது மதத்தையும், வயிறையும் நிரப்பிக் கொண்டோம்.

அடுத்ததாக யானை. பாரதி இறப்பதற்கு யானை ஒரு காரணம் என்று சிறுவயதில் தெரிந்தபோது அதன் மீது கொஞ்சம் கோபம் இருந்தது. ஆனால் தைப்பிங் மிருகக்காட்சி சாலையில் அதன் மகா கம்பீரமான உருவத்தைப் பார்த்தபோது நான் பயந்து தோல்வியை ஒப்புக் கொண்டேன். பிறகு சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அங்குச் சென்றபோது ஒரு சங்கிலியில் பிணைக்கப்பட்டு ஒரு வட்டத்திற்குள்ளே நகர்ந்துகொண்டு தனது கம்பீரத்தை இழந்த பல யானைகளை அங்கு பார்க்க முடிந்தது. சிறுவயதில் ஒரு பெரிய கம்பீரமான மிருகமாக தெரிந்த யானையை மீண்டும் பார்க்கும்போது அதன் தனிமையையும் அதை ஒரு பயங்கரமான ஆபத்தான மிருகம் என்பதன் புரிதலில் சிறைப்படுத்தி வைத்திருக்கும் அடக்குமுறையையும் அவதானிக்க முடிந்தது. யானை காட்டில் இருந்தால் அது நிதர்சனம் அதே நகருக்குள் புகுந்தால் மதம். நகருக்குள் யானைகள் கொண்டு வரப்படுவதன் காரணமே இரண்டுத்தான். ஒன்று மதம் மற்றொன்று வியாபாரம்.

நம்ப தமிழ் சினிமாவில் இயக்குனர் இராமநாராயனின் மீதுதான் முதலில் மிருகவதை சட்டத்திற்குக் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பாம்பு முதல் யானைவரை எல்லாம் மிருகங்களையும் வைத்து ஒரு இந்துத்துவா சினிமாவைக் கொடுத்து மக்களை முட்டாளாக்கி வைத்திருந்தார். அம்மனுக்குப் பாலிபிஷேகம் செய்யும் யானைகளைக் காட்டியது தமிழ் சினிமாதான். இதைவிட பெரிய அபத்தம் வேறெங்கிலும் நடந்திருக்காது. அதையும் கடந்து போய் யானைக்குச் சட்டை சிலுவார் தைத்து அதற்கு அணிவித்து சாலையில் உலா வர வைத்து சிரிப்புக் காட்டி பணம் பண்ணிய தமிழ் சினிமா இந்துத்துவா ஆசாமிகளை எப்படிக் கண்டிப்பது? மதம் நிறுவப்பட்ட பின் நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாவற்றையும் ஒரு புனைவாக அதற்குள் கொண்டு வந்து திணிக்கப்பட்டன.

இந்த இரண்டையும் முன் வைத்து யானையை ஒரு கேலி பொருளாக மாற்றும்போது அது உக்கிரம் கொள்வதை மதம் பிடித்தல் என்று சொல்லித் தொலைகிறார்கள். மனிதர்களின் நெருக்கமும் அவர்களின் தொல்லைகளின் மொத்த எதிர்ப்புணர்வுதான் யானையின் மதம். இதற்கு சில அறிவியல்/உயிரியல் காரணங்களும் இருக்கக்கூடும். இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கு மாலைப் போட்டுக் கொண்டும் வருபவர் போவோர்களுக்கு பழங்களையும் பூவையும் கொடுத்து பணம் பண்ண பழக்கப்பட்டிருக்கும் பல கோவில் யானைகளைக் கதைகளிலும் கட்டுரைகளிலும் படித்தத்துண்டு. “யானையை விநாயகர் என்று சொல்லும் இந்து சமூகம்தான் அதைக் கோவில் வாசலில் பிச்சையெடுக்கவும் பழக்கப்படுத்திருக்கிறது” அப்படியொரு இருண்ட நாகரிகத்தின் வாசலிலிருந்துதான் தவழ்ந்து முட்டிப் போட்டு நடந்து வந்திருக்கிறோம்.

இப்பொழுது யானைகள் சினிமாத்தன நகைச்சுவைகளை பேசும் அளவிற்கு அதன் வாழ்க்கைக்குள் புகுந்து அதைக் காட்சி பொருளாக்கி “டப்பிங்” என்கிற பெயரில் சுரண்டி தள்ளுகிறார்கள். இவர்கள் டப்பிங் செய்து பிழைக்க யானைகளின் வாழ்வும் அதன் சரித்திரத்தின் களம்தான் கிடைத்ததா? “national geography” தவிர மற்றவர் எவரும் மிருகங்களின் வாழ்வையும் உலகத்தையும் ஆய்வு நோக்கோடும் பதிவிட வேண்டும் என்கிற அக்கறையுடன் அணுகினார்களா என்று தெரியவில்லை.

நமக்குத் தெரிந்ததெல்லாம் இராமன் என்கிற காப்பிய கதாநாயகனுக்கு கல் எடுத்து கொடுத்து இலங்கைக்கு பாலம் அமைத்த தெய்வ குரங்குகள்தான் அல்லது இராமரின் சிறந்த பக்தரான அனுமானுக்கு வால் இருப்பதாலும் வானர படைகளிலிருந்து வந்ததாலும், எல்லாம் குரங்குகளும் அனுமான் போலவே தெய்வத்தன்மை கொண்டது என்றுதான் புரிந்து வைத்துள்ளோம். ஆனால் பத்துமலை கோவில்களிலும் தண்ணீர்மலை கோவிகளிலும் ஒரு வாழைப்பழத்திற்காக ஏங்கி தவிக்கும், நம்மை இந்து பக்தர்கள் என்று பார்க்கத் தெரியாத, உங்களிடமிருந்து உணவை மட்டுமே எதிர்ப்பார்க்கும் இந்த இயற்கையின் ஒர் உயிரினமான குரங்குகள்தான் அதிகமாக அங்கு இருக்கின்றன.

என்றாவது ஒருநாள் மிருகங்களெல்லாம் அழிந்துவிட நேர்ந்தால் அன்று அனாதையாக நிற்கப் போவது இந்து கடவுள்கள்தான் போல. இது மதம் மிருகங்களின் மீது நிறுவிய அரசியல்.

ஆக்கம்
கே.பாலமுருகன்

மௌனத்தின் உரையாடல்கள்

தற்கால கவிதைக்கான சிற்றிதழாக மௌனம் தீவிர கவனத்தைப் பெற்று வெளிவந்துகொண்டிருக்கிறது. எழுத்தாளர் ஏ.தேவராஜன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு மலாக்காவிலிருந்து வெளிவரும் மௌனம் இதழில் மலேசியாவின் முக்கியமான கவிஞர்களும் எழுத்தாளர்களும் தங்களின் சமக்காலக் கவிதைகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.

கவிதை குறித்த புரிதல்களும், கவிதைகளைப் பற்றிய உரையாடல்களும், கவிதை விமர்சனங்களும் மேலும் தரமான நவீன கவிதைகளும் மௌனம் இதழில் பிரசுரம் கண்டு சமக்காலத்து சூழலின் பிரதிபலிப்பாக ஒரு மாபெரும் களமாக மௌனத்தின் உரையாடல் நவீன இலக்கிய வெளியின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கிறது.

நாட்டின் மூத்த எழுத்தாளர்களும் இளம் எழுத்தாளர்களும் அறிமுக எழுத்தாளர்களும் எழுதி வரும் மௌனம் இதழ் 160 பக்கங்களுடன் ஆகஸ்ட் மாத வெளியீடாக மலர்ந்துள்ளது. மேலும் 29 ஆகஸ்ட் நடக்கவிருக்கும் வல்லின விழாவை முன்னிட்டு எழுத்தாளர் தின சிறப்பிதழாக மௌனம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதழைப் பெறும் விவரம் அறிய மின்னஞ்சல் மூலம் தொடர்புக் கொள்ளவும்:
thevarajan : sathika2009@hotmail.com

கே.பாலமுருகன்