Friday, November 13, 2015

சீன இலக்கியம்: பெருநகரின் கனவுகள்

மலேசியத் தற்கால சீன இலக்கியம் எந்த இலக்கில் இருக்கிறது என அறிய ஆவலாக இருந்த சமயத்தில் வீட்டின் நூலகத்தில் ஏற்கனவே வாங்கி வைக்கப்பட்டிருந்த சீனா நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதை தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. எளிமையான ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்ட நூல். பத்து கதைகள் வரை படித்தேன். எல்லாமே ஜனரஞ்சகமாக இருந்தாலும் சீனாவின் புறமாற்றங்களால் எப்படி அங்குள்ள மனங்கள், உறவுகள், கல்வி பாதிப்புக்குள்ளாகின்றன என்பதைக் கதைகள் விவாதிக்கத் தவறவில்லை.

அனைத்துக் கதைகளும் புறவெளியிலிருந்து தொடங்கி குறிப்பிட்ட மனங்களுக்குள் நுழைந்து விரிவதை உணர முடிந்தது. சீனாவின் பெருநகர் பற்றிய விவரனையில் தொடங்கும் கதை ஆரம்பத்தில் ஒரு சலிப்பை உருவாக்கினாலும், அடுத்து கதை ஒரு குடும்பத்தைத் தேர்ந்தெடுத்து, அதிலுள்ள எப்பொழுதும் தனிமையில் இருக்கும் சிறுவனின், எப்பொழுதும் கோபப்பட்டுக் கொண்டே இருக்கும் தாத்தாவின், எல்லோரையும் திட்டிக் கொண்டே இருக்கும் அம்மாவின் அகத்தை நோக்கி செல்லும்போது கதையோட்டம் சட்டென தனக்குரிய வலுவான இடத்தை ஏற்படுத்திக் கொள்கிறது.

ஒரு நிலத்தைத் தேர்ந்தெடுக்கும் இலக்கியம் அதன் வெளிப்பரப்பை மட்டும் ஆராயமல் அக்காலத்தில் வாழும் மனிதர்களின் அகசிக்கல்களையும் விவாதிக்க வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்புகளை நான் படித்த அனைத்து கதைகளுமே நிரூபிக்கின்றன. மற்றப்படி மூலமொழியைப் படிக்க முடியாததால் இக்கதைகள் எழுதப்பட்ட மொழியில் அது எத்தனை தீவரமான சொல்லாடல்களைக் கையாண்டுள்ளன என விமர்சிக்க இயலவில்லை.