Wednesday, November 6, 2013

'Highland tower ' திரை விமர்சனம் - புதையுண்டுபோன மரணங்கள்

'Highland tower ' திரை விமர்சனம் 


11 டிசம்பர் 1993, சரியாக மதியம் 1மணிக்கு, உலு கிள்ளானிலுள்ள 12 மாடி கொண்ட மூன்று அடுக்குமாடி கட்டிடங்களில் ஒன்றான 'highland tower block 1' இடிந்து தரைமட்டமானது. மலேசிய வரலாற்றில் 48 உயிர்களைப் பறித்த அந்த மறக்க முடியாத சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட மலாய்த் திரைப்படம் ' highland tower'. 20 வருடங்களாக மலேசிய மக்களின் நினைவுகளில் உறைந்து புதையுண்டுபோன ஒரு துர்சம்பவத்தை இப்படம் மீண்டும் பற்பல பீதியுடன் மீட்டுக் கொண்டு வருகிறது. ஒரு சினிமா என்பது மக்களின் மனசாட்சி என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். காலத்தால் மறக்கப்படும் சில உண்மைகளை மீண்டும் விசாரிப்பதோ அல்லது நினைவுக்குக் கொண்டு வருவதோ ஒரு நல்ல சினிமாவின் செயல்பாடுகளில் ஒன்று.


highland tower இடிந்து மக்கிப் போன ஒரு 12 மாடி கட்டிடத்துடன் இருளடைந்து ஆட்களே இல்லாத நிலையில் மற்ற இரு 12 மாடி கட்டிடங்களும் திகிலுடன் 20 வருடங்களாக அங்கேயே இருக்கின்றன. இடிந்த கட்டிடத்தின் அருகாமையில் இருந்த மற்ற இரு 12 மாடி கட்டிடங்களிலிருந்தும் அந்தத் துர்சம்பவத்திற்குப் பிறகு படிப்படியாக அனைவரும் வெளியேறிவிட்டனர். ஆளே இல்லாத அந்த 200 வீடுகள் கொண்ட 12 மாடி கட்டிடங்கள் 11 டிசம்பரின் கதறலையும் இரத்தப் பழியையும் நினைவுப்படுத்திக் கொண்டும் பற்பல திகில் சம்பவங்களை ஞாபகபப்டுத்திக் கொண்டும் இருக்கின்றன. அதனைக் கதைப்பொருளாகக் கொண்டு எடுக்கப்பட்ட பேய் படம்தான் highland tower. 



1998களின் இறுதிவரை அந்த இடிந்த கட்டிடடத்தை வைத்துப் பல பேய் கதைகள் பேசப்பட்டு வந்தன. மலேசியா முழுவதும் பல வருடங்களுக்கு அந்தச் சம்பவம் ஓர் ஈர்ப்பை உருவாக்கி வைத்திருந்தன. கோலாலம்பூரில் இருக்கும் என் அக்காள் ஒருமுறை இதை வைத்தே ஒரு கதையைச் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது. அந்தப் பக்கமாகச் செல்லும் வாடகைக் கார்களை  அடையாளம் தெரியாத நபர்கள் நிறுத்த முயன்றிருப்பதாகவும், சிலர் வாகனத்தைத் துரத்திக் கொண்டு சில தூரம்வரை வந்திருப்பதாகவும் வாடகைக் கார் ஓட்டுனர்களால் பல கதைகள் சொல்லப்பட்டன. இது அங்குச் சில காலம்வரை வாடிக்கையாக நிகழ்ந்துள்ளது.