Wednesday, October 15, 2014

கவிதை: எதிர்ப்பாராத ஒரு மழைநாளில்


நான் அலட்சியமாகக் கவனித்துக்கொண்டிருந்த
ஒரு மழைநாளில்
கூடிவந்த சோம்பல்கள்
உடலைத் தீண்டி
தின்கையில்
வந்து சேர்ந்தன
நீ முன்பொருநாள் அனுப்பிய
அனைத்துக் காகிதக் கப்பல்களும்.

சொல்லத் தவறிய
உன் அனைத்து விளையாட்டுத்தனங்களும்
கவனியாமல் கடந்துபோன
உன் குறும்பு சிரிப்பும்
உயிர் பிழைத்துத் தப்பி
வந்திருந்தன.

கவிதை: கரை சேராதிருப்போமாக

கரையைச் சேர்ந்துவிடுவதைவிட
கரையைத் தேடி அலைவதில்தான்
அத்தனை ஆச்சர்யங்கள்.
கரையைக் கண்டுபிடிப்பதைவிட
கரையைத் தேடி அலைவதில்தான்
அத்தனை அனுபவங்கள்.
கரையின் திசையறிந்து சேர்வதைவிட
கரை அறியாமல் தேடுவதில்தான்
அத்தனை திருப்பங்கள்.


ஆகவே கரையைச்
சேராதிருப்போமாக.

கரை சேர்வது ஆபத்தானது.

நம்மை சோர்வாக்கிவிடும்
நம்மை ஆற்றுப்படுத்திவிடும்
நம்மை திருபதிப்படுத்திவிடும்
நம்மை நிதானமாக்கிவிடும்.
நம் பயணங்களை முடித்துவிடும்.