Tuesday, November 30, 2010

டிசம்பர் வல்லினம் இணைய இதழில்- என் படைப்புகள்

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை குறும்படப் போட்டி 2010 தேர்வான பத்து மலேசிய குறும்படங்களின் விமர்சனம்
"பெருங்கதையாடல் நிகழ்த்த வேண்டிய அத்துனை சந்தர்ப்பங்களையும் சாமர்த்தியங்களையும் தருணங்களையும் குறைந்த நிமிடங்களிலேயே குறும்படம் மூலம் நிகழ்த்த வேண்டிய சவால் குறும்பட இயக்குனர்களுக்கு உண்டு."



சில நேரங்களில் சில ஏவாள்கள் - தொன்ம குறியீடும் ஆதியில் தோற்றுப்போன ஏவாளும் (மார்கரேட் செல்லதுறையின் சிறுகதை விமர்சனம்)
"அடர்ந்து தூறும் ஒரு மழைப்பொழுதில் பேரங்காடியினோரமாக ஒதுங்கி நிற்கும் ஏவாளிடமிருந்து சிறுகதை தொடங்குகிறது. வீட்டுக்குச் செல்லும் வழியில் அவள் தனக்கு மிகப் பழக்கமான ஒருவனை வெகுநாட்களுக்குப் பிறகு சந்தித்துவிடுகிறாள்."


மக்கள் ஓசை ஞாயிறு பதிப்பு ஆசிரியருக்கு ஒரு கடிதம்
"மலேசியப் பத்திரிக்கைகளுக்கு எழுதக்கூடாது என்கிற என்னுடைய கடந்த வருடத் தீர்மானத்தை, ஒருநாளில் பொய்யாக்கிவிட்டீர்களே என நினைக்கும்போது, உங்களுடைய பின்நவீனத்துவக் குழாயில் சிக்கிக் கொண்ட என் மலர்கொடியை ஏக்கமாக மட்டுமே பார்க்கத் தோன்றுகிறது."
கே. பாலமுருகன்

Saturday, November 27, 2010

சிறுகதை: தனசேகர் தாத்தா மற்றும் அவரின் 3 வகையான தொல்லையும்

தனசேகர் தாத்தாவிற்கு மாதம் மாதம் ஓய்வூதியம் கிடைத்துவிடுவதால், அவருக்கென்ன கவலை. காலையில் சீக்கிரம் எழுந்துவிட்டு வீட்டுக்கு வெளியில் ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்துகொள்வார். நாள் முழுக்க அந்த நாற்காலி அவருக்கு மிகவும் வசதியாக இருந்துவிடுகிறது. மதியத்தில் சோறும் மாலையில் ஒரு குவளை காப்பியும் அவர் இருக்கும் இடத்திற்கே தேடி வந்துவிடும். அவருக்கு முன் விரிந்து வளரும் பகலின் ஒவ்வொரு கணத்தையும் அசைபோட்டே களைத்துவிடும் பொழுதுகள்.

“குமாரு. . என்ன வேலைக்கா?”

குமார். பக்கத்து வீட்டு வாலிபன். அடிக்கடி தனசேகர் தாத்தாவிற்கு அடிமையாகிவிடும் ரொம்ப நல்ல பையன். தொடக்கத்தில் அவருடன் வேடிக்கையாகக் கழிந்த தருணங்கள் மெல்ல மெல்ல துன்புறுத்தலாக மாறிவிட்டது. எப்படியாவது தனசேகர் தாத்தாவின் வாயில் விழாமல் ஓடிவிடுவதே அவனுக்கு மிகப்பெரிய போராட்டமாக இருந்தது.

“இல்லெ. . சுத்தி பாக்க”

“சுத்தி பாக்கெ எதுக்குடா டைலாம் கட்டி அழகா உடுத்திக்கிட்டு வெளியில போற? வீட்டுலெ இருந்துகிட்டெ சுத்தி பாரேன் படவா”

“உங்ககிட்ட மனுசன் பேச முடியுமா?”

“அப்பெ நீ என்ன நாயா? டேய் ஆளை ஏய்க்காதெ”

குமாருக்குக் காலையிலேயே கண் கலங்கிவிடும். அவரிடம் கோபப்பட்டாலும் அவனுக்கு எந்த நன்மையும் இல்லை. யாருடைய கோபத்தையும் அவர் மிகத் தந்திரமாக அலட்சியப்படுத்திவிடுவார். படியில் இறங்கி ஓடிவிட முயற்சித்தான் குமார்.

Wednesday, November 24, 2010

சந்திப்புக் கூட்டம்: கெடா மாநில தமிழ் ஆசிரியர்களும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கமும்

நேற்று சிங்கப்பூரிலுள்ள உமருபுலவர் தமிழ்மொழி நிலையத்தில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கமும் கெடா மாநிலத்தின் தமிழாசிரியர் குழுவும் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. 3 மணி நேரச் சந்திப்பில் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் ஆண்டியப்பன் உரையாற்றினார். பிறகு கெடா மாநில கல்வி இலாகாவின் மொழித்துறை துணை இயக்குனர் திரு.தமிழ்செல்வன் உரை நிகழ்த்தினார். ஒவ்வொரு படைப்பாளனுக்குப் பின்னனியிலும் ஓர் ஆசிரியர் கட்டாயம் இருப்பார் எனவும் அவருடைய பாதிப்பு ஏதாவது ஒருவகையில் அவனை ஆட்கொண்டிருக்கும் எனவும் ஆசிரியரின் முக்கியத்துவத்தைக் கூறினார்.

தொடர்ந்து, கூலிம் பண்டார்பாரு மாவட்டத்தில் ஆசிரியரராகப் பணியாற்றும் திருமதி.உதயகுமாரி அவர்கள் கெடா மாநிலத்தின் தமிழாசிரியர்களின் இலக்கியப் பணி எனும் தலைப்பில் கட்டுரையைப் படைத்தார். அதற்குப் பிறகு எனக்கும் பேசுவதற்கு வாய்ப்பளித்துவிட்டார்கள். அது ஒரு விபத்து போல சில உண்மைகளைப் பேசுவதற்குக் காரணமாகிவிட்டது. அந்தச் சந்திப்புக்கூட்டத்தில் சிங்கப்பூர் எழுத்தாளர் சங்கம் சார்பாக 3 பேர் மட்டுமே கலந்துகொண்டார்கள். கெடா மாநில ஆசிரியர்கள் 40க்கும் மேற்பட்டோர். இதைச் சந்திப்புக்கூட்டம் எனச் சொல்வதற்குக் கொஞ்சம் வேடிக்கையாக இருந்ததால் தவறுதலாக அதை மேடையில் அப்படியே சொல்லிவிட்டேன்.

கெடா மாநிலத்திலிருந்து சுமார் 700 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வந்திருக்கும் ஆசிரியர்களுக்குக் குறைந்தபட்சம் சிங்கப்பூரில் எழுதிக்கொண்டிருக்கும் முக்கியமான எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி அவர்களையும் உரையாடச் செய்வதன் மூலம் ஒரு பயனுள்ள களத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம். அதைச் செய்யத் தவறியதற்கு 25 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட ஒரு எழுத்தாளர் சங்கம் கொடுக்கும் காரணங்கள் என்னால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை. இந்த முக்கியமான நிகழ்வுக்காகச் சிரமம்பாராமல் வருவதற்குக் கட்டாயம் அங்குள்ள எழுத்தாளர்கள் தயாராகத்தான் இருப்பார்கள் என நினைக்கிறேன். குறிப்பாக நான் அறிந்த வரையில் இப்பொழுது மிகத் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் ஷானவாஷ், ஜெயந்தி சங்கர், மூத்த எழுத்தாளர் கண்ணபிரான் போன்றவர்களுக்கு இந்த நிகழ்வு குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை என்பதை நேரடியாகக் கேட்டறிந்தேன். அதை இங்குக் குறிப்பிடவும் கடமைப்பட்டுள்ளேன்.

ஆகையால் அடுத்தமுறை இம்மாதிரியான சந்திப்பின்போது கூடுதலான சிங்கப்பூர் எழுத்தாளர்களைத் திரட்டுவதற்கான சக்தியாகச் சங்கம் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டேன். தொடர்ந்து 3 வருடத்திற்கும் மேலாகச் சிங்கப்பூர் எழுத்தாளர்களுடன் நட்புடன் பழகுவதன் மூலம் அங்குள்ள சில கட்டுப்பாடுகளையும் செயல்பாடுகளையும் தொடர்ந்து அவதானித்து வருகிறேன். யாரிடம் நேர்மையை எதிர்பார்க்க வேண்டும் என்கிற சமயோசிதம் இருக்கப்பெறுவது ஒரு படைப்பாளனுக்கு மிக அவசியம்.

அதனைத் தொடர்ந்து மலேசியாவிலிருந்து வந்திருக்கும் ஆசிரியர்களுக்கு எதைப் பற்றி அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற திட்டம் முறையாகச் செய்யப்படாததைப் போல தோன்றியது. ஆகையால் என்னுடைய உரையில் சிங்கப்பூரில் வாசிப்பு சார்ந்து நடத்தப்படும் ‘வாசிப்போம் சிங்கப்பூர்’ எனும் நிகழ்வைப் பற்றியும் அங்குள்ள நூலகத்தின் சிறப்பு பற்றியும் கூறினேன். வாசிப்பின் மூலம் தன் நாட்டு மக்களை மேம்படுத்த வேண்டும் என்கிற அக்கறையை இங்குள்ள 22 நூலகங்களும் வெளிப்படுத்துகின்றன. கவனிக்கத்தக்க ஒரு முயற்சி ஆகும். ஆயிரம் குழுமங்கள் நூலகம் சார்ந்து உருவாகிவிட்டதாகக் கருத்துரைக்கப்பட்டாலும், நூலகம் என்பது பொதுவான ஓர் இடம். அதனை முழுமையாகப் பயன்படுத்த பொதுமக்களுக்கு முழுமையான சுதந்திரமும் உண்டு.

இனி இது போன்ற சந்திப்புகளை நடத்த நேர்ந்தால், மேற்பகுதியில் சுட்டிக்காட்டப்பட்ட குறைகள் தவிர்க்கப்படும் என்கிற நம்பிக்கையை அங்கு வந்த தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நல்லது.

கே.பாலமுருகன்
மலேசியா

Sunday, November 21, 2010

சிங்கப்பூரில் முதல் நாள்

இரவுவரை மின்சார இரயிலின் இரைச்சலிலேயே இன்றைய முதல் நாள் கடந்து சென்றது. அர்ஜுனைட் என்கிற இடத்தில் சொந்தமாக உணவு கடை வைத்துக் கொண்டு வியாபாரம் நடத்தி வரும் எழுத்தாளர் ஷானவாஸ் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. இரண்டு மணி நேரம் அவர் கடையிலேயே இருந்து உரையாடிக் கொண்டிருந்தோம்.

ஷானவாஸ் அவர்களின் பத்தி தொடர்ந்து உயிரோசை இணைய இதழில் பிரசுரமாகிக் கொண்டிருக்கிறது. 34 வாரங்களையும் கடந்து உற்சாகமாக அவரது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். மலேசியாவில் மஹாத்மன் அவர்களின் அனுபவத் தளம் வித்தியாசமானது என்றால் சிங்கப்பூரில் ஷானவாஸ் அவர்களின் அனுபவம் அத்தகைய வித்தியாசத்தையே கொண்டிருக்கிறது. உணவும் அதன் சார்ந்தும் வாழ்வையும் தனது கட்டுரைகளில் சொல்லக்கூடிய மொழியையும் அனுபவத்தையும் அவர் கொண்டிருக்கிறார். கூடிய விரைவில் அவரது அந்தப் பத்திகள் உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடாக வரவிருக்கிறது.

அந்த நூல் புதிய தளத்தைப் பற்றி பேசக்கூடிய முக்கியமான நூலாக இருக்கும் எனக் கருதுகிறேன். ஷானவாஸ் அவர்களுடன் தொடர்ந்து பல சமயங்களில் தொலைப்பேசியில் உரையாடியிருக்கிறேன். சிங்கப்பூர் சென்றிருந்த சமயங்களில் சில வேளைகளில் குறைவான அளவில் நேரில் சந்தித்தும் பேசியிருக்கிறேன். இன்று ஓரளவிற்கு அவருடன் நெருங்கி உரையாட வாய்ப்புக் கிடைத்தது. 20 வருடத்திற்கும் மேலாக இந்த உணவகத் தொழிலில் பற்பல மனிதர்களையும் சவால்களையும் வித்தியாசமான அனுபவங்களையும் சந்தித்த அவருடன் பேசுவதே இனிய அனுபவமாக இருந்தது.

பிறகு மாலையில் ஒரு இசைத்தட்டு வெளியீட்டிற்குச் சென்றிருந்தேன். பாண்டித்துரையின் நண்பர் ஒருவரின் சொந்த உழைப்பில் தெம்மாங்கு பாடல்களில் ஒலிவடிவத்தின் வெளியீட்டு நிகழ்வு. பாடல்களில் ஒலித்த அவரது குரலில் எப்பொழுதோ கேட்ட கானா பாடல்களின் எதிரொலி கேட்டது. தெம்மாங்கு பாட்டிற்கும் அதன் இசைக்கும் மத்தியில் எப்பொழுதும் ஒரு நெருக்கத்தை உணர முடிகிறது. எல்லாவற்றிக்கும் மேலாக அந்த இசையிலிருந்து வெளியே வந்து விழக்கூடிய கிராமியச் சாயலைக் கொண்டிருக்கும் குரல் மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. ஒரு பாடல் மட்டுமே கேட்டேன். அவரது குரல் வலம் பாராட்டுதலுக்குரியது.

மீண்டும் மாலையில்  நானும் பாண்டித்துரையும் பழைய பொருள்களை குறைந்த விலையில் விற்கும் தெருவோர சந்தைக்குச் சென்றிருந்தோம். நாலாப்பக்கம் பிரிந்து மிக நீளமாகச் செல்லக்கூடிய ஒரு சந்தை அது. ஆச்சர்யம் என்னவென்றால் எல்லாமும் முன்பொரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய பொருள்கள். 1980களில் சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் முதல் அதற்கு முந்தைய காலத்திலும் உபயோகிக்கப்பட்ட பொருள்களும் விற்கப்படுகின்றன. ஒரு கட்டத்தில் மூர்ச்சையாகிவிடும் அளவிற்கு கூட்ட நெரிசல். பெரும்பாலும் அயல் நாட்டுக்காரர்கள். அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாத அளவிற்கு அடர்ந்த கூட்டம்.

இரவு வீடு திரும்பியதும் பாண்டித்துரையும் நானும் லதாமகன் எழுதிய ஒரு கவிதையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். வெகுநாட்களுக்குப் பிறகு மனதிற்குப் பிடித்தமான ஒரு கவிதையை வாசித்தது போல இருந்தது. இராம கண்ணபிரான் எழுதிய ‘ நவீனவாதம் ஓர் அறிமுகம்’ கட்டுரையை வாசித்தேன். நாளை அவரைச் சந்தித்து சில விசயங்கள் குறித்துப் பேசவிருக்கிறேன்.

தொடரும்
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

 

சிங்கப்பூர் பயணம்

இன்று மதியம் சிங்கப்பூர் வந்து சேர்ந்தேன். நண்பர் பாண்டித்துரை அவர் தங்கியிருக்கும் இல்லத்திற்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார். மூன்று நாள் இங்குள்ள இலக்கிய நண்பர்களைச் சந்தித்து உரையாடுவதாகத் திட்டம்.

ஒரு சில நண்பர்களைத் தொடர்புக் கொள்ள இயலவில்லை. மின்னஞ்சல் மூலம் என்னைத் தொடர்புக் கொள்ளலாம். bala_barathi@hotmail.com

23 ஆம் திகதி கடாரத்திலிருந்து ஆசிரியர் குழு ஒன்று சிங்கப்பூருக்கு வருகிறார்கள். தலைமை ஆசிரியர் தேவராஜன் அவர்களின் தலைமையில் கல்வி இலாகாவின் மொழித்துறை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் அவர்களும் இந்தக் குழுவில் இணைந்து இங்கு வருகிறார். அவர்கள் அனைவரையும் 23ஆம் திகதி உமர் புழவர் தமிழ் மொழி நிலையத்தில் மாலை 6.30க்கு சந்திக்கின்றேன். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கடாரத்திலிருந்து வரும் தமிழாசிரியர்கள் குழு சிஙக்ப்பூர் எழுத்தாளர்களைச் சந்திக்கும் நிகழ்வு அங்கு நடைப்பெறுகிறது.

மேலும் சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர்கள் சிலரைச் சந்தித்து கேள்வி பதில் அங்கத்தையும் உரையாடலையும் நிகழ்த்தவும் திட்டமுண்டு.

கே.பாலமுருகன்
மலேசியா.

Friday, November 19, 2010

பென்சிலும் அழிப்பானும்- ஒரு வரலாறும் முரணான நமது வன்முறையும்

முதல் புரிதல்: பென்சில் ஆக்கங்கள் உருவாவதற்கான குறியீடு என்றால் அழிப்பான் சுய ஒழிப்புக்குரிய குறியீடாகும். இவை இரண்டும் ஒன்றை ஒன்று மிக நெருக்கமாகச் சார்ந்திருக்கிறது. ஒவ்வொரு ஆக்கங்களுக்குப் பிண்ணனியில் எத்தனையோ சுய ஒழிப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன என்பதற்கான ஆதாரமாகப் பென்சிலும் அழிப்பானும் அதனுடைய செயல்பாடுகள் சார்ந்து தன்னை இருத்திக் கொண்டிருப்பது ஒருவகையான ஆச்சர்யம் என எல்லோரும் நினைக்கக்கூடும்.

அழிப்பான் இல்லாத பென்சிலின் உழைப்பில் சில தடுமாற்றங்களும் கோளாறுகளும் பிழைகளும் திருத்தப்படாத விடப்பட்ட பகுதிகளும் நிறைந்து அந்தப் படைப்பை அரைகுறையானதாக மாற்றிவிடும் சாத்தியம் உண்டு. பென்சிலின் இருப்பிற்கு மிகச் சிறந்த அர்த்தத்தை ஏற்படுத்துவது அழிப்பான். பென்சிலின் ஒவ்வொரு பிழைகளையும் அழிப்பான் உடனுக்குடன் சரி செய்து அதனை நேர்த்தியாக்கி அழகு சேர்க்கிறது.

கவிதை: துறவு

1
எனக்கு முன்
மௌனத்திருந்த காலம்
முதன் முதலாய்
நீண்டகால இருப்பை
தொலைத்துக் கொண்டிருந்தது.

2
சன்னலுக்கு வெளியே
நான் காத்திருந்த ஒரு காலம்
எங்கேயோ சென்றுவிட்டிருந்தது.

3
தனது பருவத்தை
முடித்துக்கொண்ட
காலம்
வெறுமையுற்று
திரும்புதலுக்காக அலைந்து திரிந்தது.

கே.பாலமுருகன்
மலேசியா

Friday, November 12, 2010

வல்லினம்- புதிய படைப்பாளிகளை அடையாளம்காணல்

மேம்போக்கான பொழுதுபோக்கு இலக்கியங்கள் பரவலான கவனத்தைப் பெற்றுக்கொண்டிருக்கும் காலக்கட்டத்திலேயே அதற்கு முற்றிலும் முரணான வாழ்வின் கவனிக்கத்தக்க தருணங்களையும் சிக்கல்களையும், தீவிரமாய் அதைப் படைப்பாக்கி வெளிப்படுத்தும் நல்ல இலக்கியங்களும் பொதுவான கவனத்தைப் பெறாவிட்டாலும் இயங்கிக் கொண்டேதான் இருக்கும். இது சமக்காலத்தின் இலக்கிய தர்மம் என்பது போலவே தோன்றுகிறது. ஆனால் நல்ல இலக்கியங்களைக் கொண்டு போய் வாசகர்களிடம் சேர்ப்பது குறித்தான செயல்பாடுகளின் மீதே இப்போதைக்கு ஒட்டுமொத்த கவனம் திரும்ப வேண்டும்.

ஆரம்பத்தில் அநங்கம் இதழ் தொடங்கிய காலக்கட்டம் முதல் ஒவ்வொரு இதழிலும் ஒரு அறிமுக எழுத்தாளரை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தோம். ஆனால் அவர்கள் அந்த அறிமுகத்திற்குப் பிறகு காணாமல் போவதுதான் அறிமுகங்கள் அளிக்கும் விந்தை போல. முனிஷ்வரன், தயாஜி தவிர்த்து மற்றவர்கள் எழுதுவதில்தான் தன்னை விலக்கிக் கொண்டார்களா அல்லது எழுதாமல் மௌனத்தின் மூலம் தன்னைக் கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறார்களா எனபதும் கேள்விக்குறி. அறிமுகங்களை விட அவர்களிடம் தரமான இலக்கியத்தைக் கொண்டு போய் சேர்த்து முதலில் அவர்களிடம் சில திறப்புகளை ஏற்படுத்த முயல்வதே சிறந்த வழி. பிறகு அவர்களுக்கான இடத்தைத் தேடிக் கண்டடையவும் வாய்ப்புண்டு.

தற்சமயம் வல்லினம் இளம் படைப்பாளிகளையும் வாசகர்களையும் அடையாளம் காண்பதில் சாத்தியமான முயற்சிகளை ஏற்படுத்தி வருகிறது. மேம்போக்கான இலக்கியங்கள் அச்சு இதழில் மட்டும் பல நிலையிலான வாசகர்களை எட்டி வரும் வேளையில் இணைய வசதியைப் பயன்படுத்தி நல்ல இலக்கியங்கள் உலக தமிழர்களுடைய வாசிப்பின் மையமாக ஆகிவருவதை வல்லினம் மூலம் உணரலாம். மலேசியாவில் எழுதி வரும் தத்துவப்பார்வை, அரசியல் உணர்வு, வாழ்வின் அழகியல், காத்திரமான மதிப்பீடுகள் கொண்ட பல முக்கியமான படைப்பாளிகள் வல்லினத்தில் எழுதி வருகிறார்கள். மலேசிய இலக்கியத்தை நோக்கி விரியும் வாசகப் பார்வை பொழுது போக்கு இலக்கியங்களின் மீது படிந்துவிடுவதில் எவ்வளவு அபாயம் இருக்கிறதோ அதே போல திவீர இலக்கியத்தின் மீது கவனம் குவிய வாய்ப்புகளும் இப்பொழுது தாராளமாக இருக்கின்றன. வல்லினம், அநங்கம், மௌனம் மேலும் வல்லினம் இணையப்பக்கம் போன்றவற்றின் மூலம் மலேசிய இலக்கியத்தின் இன்னொரு முகத்தை வாசகர்கள் கண்டறியலாம்.

நவீன இலக்கியம் மீதான தேடல் ஒரு வாசகனை உலக இலக்கியத்தின் ஆழ்ந்த ஆத்மாவிற்குள் போய் நிறுத்தும் என்பதற்கு இங்குள்ள பல முக்கியமான வாசகர்கள் உதாரணமாக இருக்கிறார்கள். அவர்களின் தொடர் வாசிப்பு இப்பொழுது இலக்கியம் படைத்து வரும் அனைவரின் படைப்பின் மீதும் தீவிரமான பல அம்சங்களைக் கூர்மையாகக் கொண்டிருக்கும் மதிப்பீடுகள் விழக்கூடும். அது ஒருவேளை இங்குப் படைக்கப்படும் இலக்கியத்தின் தரம் என்கிற நம்பிக்கையை அசைக்கக்கூடும். ஆகையால் மிகவும் சொற்பமாக(நான் அறிந்தவரையில்) நல்ல வாசிப்பில் தன்னை ஈடுப்படுத்தியிருக்கும் இந்த மாதிரியான வாசகர்களின் தாக்கம் மாணவர்களிடமும் உருவாக வேண்டும் என்பதற்காகவே வல்லினம் தனது “2010 சிறப்பிதழை” தொகுத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இலவசமாக அளித்துள்ளது. மாணவர்கள் நவீன இலக்கியத்தின் மீது ஆழ்ந்த வாசிப்பை ஏற்படுத்திக் கொண்டால் அடுத்த தலைமுறையில் இன்னும் கூடுதலான பின்புலத்துடன் மலேசியாவில் படைப்புகள் எழுதப்படும் வாய்ப்புண்டு. இந்த நம்பிக்கையை விரிவுப்படுத்தும் வகையில் புதிய இளம் படைப்பாளிகளுக்கு வல்லினம் வாய்ப்பை அளிக்கிறது. ஆகையால் எழுத விருப்பம் உடையவர்கள், தங்களின் படைப்புகளை பின்வரும் மின்னஞ்சல்களுக்கு அனுப்பி வைக்கலாம். ஆலோசிக்கப்படும். வெளிப்படையான விவாதத்திற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் எப்பொழுதும் இடம் உண்டு. முதலில் ஆழமான தேடல் நிரம்பிய வாசிப்பே நம்மை செம்மைப்படுத்தும் என்பதைப் புரிந்து கொண்டால் நல்லது.

vallinam: editor@vallinam.com.my

ananggam: bala_barathi@hotmail.com

கே.பாலமுருகன், மலேசியா

Sunday, November 7, 2010

மரணத்தையும் இழப்பையும் கடக்க முடியாத தருணங்கள்- அஞ்சலி

இந்த வருடம் தீபாவளிக்கு முந்தைய சில நாட்களில் இரண்டு சம்பவங்கள் மனதை ஏதுமற்ற ஓர் உணர்வுக்குள் தள்ளிச் சென்றன. சில சந்தர்ப்பங்களில் நமக்கு முன் விரியும் காட்சிகளுக்குள் காலமற்ற ஒரு ஜடமாக நிலைத்துவிட்டு மீண்டும் தன்னிலைக்குத் திரும்பும்போது மனம் உணர்வற்றுப் போகிறது. எதையும் சிந்திக்க முடியாத இறுக்கம். பொதுவில் என் சோகத்தை நான் காட்டுவதில் எனக்கிருக்கும் தயக்கம்தான் அப்படியொரு மனநிலைக்குக் காரணம் எனப் பிந்தைய நாளில் தெரிந்துகொண்டேன். எத்துனை நேரம்தான் சோகத்தை வெறும் இறுக்கமாகவே காட்டுவது?

ஒருமுறை நண்பர் ஒருவர் என்றாவது நீ கதறி கதறி அழுதுருக்கிறாயா எனக் கேட்டார். அதற்கு ஒரு ஆழ்ந்த சோகம் காரணமாக வேண்டுமே என்றேன். ஒரு கதையைப் படிக்கும்போதுகூட அது நேரலாம் எனச் சாதாரணமாகக் கூறினார். கதை எழுதுபவனின் உச்சம் கதையை எங்குக் கொண்டு போய் கலையாக்குவதில் இருக்கிறதென்றால் வாசகனின் உச்சம் கதையில் நகைச்சுவை என்றால் சத்தமாகச் சிரிப்பதும் சோகமென்றால் கதறி கதறி அழுதுவிடுவதிலும்தான் இருக்கிறதோ எனத் தோன்றியது.

எளிய சம்பவங்களில் உறைந்துபோகும் தருணங்களில்கூட அந்தச் சோகம் எந்த அறிவிப்புமின்றி நமக்குள் நுழைந்து சலனமுற செய்து அழ வைக்கும். எந்தச் சாவு வீட்டிற்குச் சென்றாலும் அம்மா அழுவதை நான் பார்த்திருக்கிறேன். அது எல்லோரையும் போல பாவனைக்காகச் செய்யும் அழுகையல்ல. அப்படி அழுகையில் அம்மா அவரை அறியாமலேயே ஏதோ முணுமுணுக்கத் துவங்கியிருப்பார். உற்றுக் கேட்டால், அது இறந்தவருக்கும் அவருக்கும் உள்ள அன்பைப் பற்றியதாக இருக்கும். வாழ்வில் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் இறந்துபோன மனிதனின் சந்திப்பும் சாதாரணமான பேச்சும்கூட அன்றைய தினத்தில் மிகவும் அன்பான நெருக்கமான உறவைப் போல ஆகிவிட்டிருக்கும். அதற்கு ஒரே காரணம் அவன் இப்பொழுது இல்லாமல் போயிருப்பது. அம்மாவிடமிருந்துதான் நான் இதைக் கற்றுக்கொண்டிருக்கக்கூடும்.

முன்பெல்லாம் நான் சாவு வீட்டிற்குச் செல்வதைத் தவிர்த்தே வந்தேன். அங்குச் செல்வதென்பது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். எல்லோரையும் போல உடனடியாகச் சோகத்தை வரவழைத்துக் கொண்டு வெளிப்படுத்துவது மிகச் சிரமமான காரியமாகக் கருதுவேன். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நான் சிரித்துவிட்டால், அங்குள்ள ஒட்டுமொத்த நிகழ்வின் தொனியே என்னால் நாசமாகிவிடும் என்பது போல் தோன்றும். ஆகையால் அம்மாவுடன் சாவு வீடுகளுக்குச் சென்ற போதெல்லாம் நான் குட்டையாக இருந்ததால் நான் தற்செயலாகச் சிரித்துவிடும் ஓசை கூட்டத்தில் உள்ளவர்களுக்கு எட்டாமல் போய்விடும். ரொம்ப காலமாகவே நான் தப்பித்தே வந்திருக்கிறேன். இருந்தபோதும் சாவு வீட்டில் சிறுவர்களுக்கு எந்த விதிமுறைகளும் கிடையாது என்பது கொஞ்சம் ஆறுதல். நமது கிழக்கிந்திய தத்துவத்தின் விளைவுகளெல்லாம் பெரியவர்களுக்குத்தானே.

மரணம் குறித்து மிக நெருக்கத்தில் நான் உணர்ந்த சோகம் என்பது கோலாலம்பூர் தாத்தா இறந்துபோன சமயத்தில்தான். அன்று தலைநகரிலுள்ள ஒரு தேவாலயத்தில் ஒவ்வொருவாரமும் 25 வெள்ளி கொடுப்பார்கள் என்பதற்காக தாத்தா கிறிஸ்த்துவ மதத்திற்கு மாறியவர். வீட்டில் நடக்கும் சண்டையின்போதெல்லாம் கைவாலி ஒன்றை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்து, “பரலோகத்தில் இருக்கும் பிதாவே, இந்தப் பாவிகளை மன்னியுங்கள்” எனத் தண்ணீரை வானத்தை நோக்கி ஓங்கி வீசுவார். பிறகொரு நாட்களில், அதே தொனி, அதே கோபம், ஆனால் வார்த்தைகள் மற்றும் தாத்தாவிடம் மாற்றம் கண்டிருந்தது. “பரலோகத்தில் இருக்கும் பிதாவே இவர்களைத் தண்டியுங்கள், இவர்களுக்குச் சாபமிடுங்கள்” எனத் தாத்தா சபிக்கத் தொடங்கினார். கடவுளின் பெயரைச் சொல்லி சபிப்பதை அன்றுதான் நான் கேட்டிருந்தேன்.

என்னைக்கூட ஒருமுறை அவருடைய காலை மிதித்தற்காக சபித்திருந்தார். நடைமுறை பிரச்சனைகளிடமும் சவால்களிடமும் தோற்றுப்போகும்போதெல்லாம் தாத்தா கைவாலியைத் தூக்கிக் கொண்டு வெளியே போய்விடுவார். மதம் எதற்காக என்பது ஓரளவிற்கு எனக்குப் புரிய துவங்கிய காலக்கட்டம் அது. சுங்கைப்பாட்டாணியிலிருக்கும்போது தாத்தா காணாமல் போய்விட்டார் என்ற தகவல் வந்தது. எங்கள் குடும்பத்தில் ஏற்கனவே ஒருவர் காணாமல் போயிருப்பதால் அந்த வலியே இன்னமும் அடுத்த தலைமுறைவரை நீங்காமல் இருக்கும் சமயத்தில் தாத்தாவும் ஒரு மதியத்தில் வீட்டிலிருந்து கிளம்பியவர் காணாமல் போய்விட்டதாகச் சொன்னது மேலும் வருத்தத்தை ஏற்படுத்தியது. 2007-ல் நான் எழுதிய “நடந்துகொண்டிக்கிறார்கள்” எனும் கதையில் தாத்தாவைப் பற்றி ஒரு பகுதியாகவே எழுதியிருப்பேன். பிறகொரு நாளில் தாத்தா மருத்துவமனையில் இறந்து கிடைக்கப்பட்டார். அவர் மருத்துவமனைக்கு வந்து அங்கேயே இரு வாரங்கள் யாருமற்ற தனிமையில் இருந்து இறந்துவிட்டார் எனப் பக்கத்து கட்டிலிலுள்ளவர் சொன்னபோது அப்பொழுதுதான் கதறி கதறி அழுதேன். சொல்லப்போனால் அவருடைய மகன்கள்தான் அதைச் செய்திருக்க வேண்டும். 16 வயதில் நான் அப்படி அழுதது எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. என்ன செய்வது அம்மாவிடமிருந்து தொற்றிக்கொண்ட பழக்கமாயிற்றே.

தேவாலயத்தில் கொடுக்கும் 25 வெள்ளியைக் கொண்டு தாத்தா சம்சு குடிக்கிறார் என்ற விசயம் தெரிந்ததும் அவர்கள் பணம் கொடுப்பதைத் தற்சமயம் நிறுத்தியிருக்கிறார்கள். மதத்தைப் பிரச்சாரம் செய்யுங்கள், அதுதான் புனித செயல் எனக் கூறியிருக்கிறார்கள். ஆனால் தாத்தாவோ சம்சுவிற்குப் பணம் தேடி அலைந்த கணத்திலே சாலையில் விபத்துக்குள்ளாகியிருக்கிறார் எனத் தெரிய வந்தது. மதம் எதற்காக என உங்களால் புரிய முடியும் என நம்பிக்கையால் அந்தச் சர்ச்சையான விசயத்தை இங்குப் பேசாமல் தவிர்த்துவிடுகிறேன். இன்றும் தாத்தாவின் அந்த மரணத்தை நினைக்கும்போதெல்லாம் மனம் உணர்வற்றுப் போகிறது.

தொடர்ந்து நண்பர்களின் அப்பா மரணித்த சமயங்களில் மீண்டும் அந்தச் சோகங்கள் என்னைத் திரும்பிப் பார்க்கின்றன. இரண்டுநாட்களுக்கு முன் நண்பர் விநோத் குமாரின் அப்பா இறந்த செய்தி இரவு 12மணிபோல என்னை வந்து சேர்ந்தது. காரணமே இல்லாமல் அந்த மனிதரை நினைத்து மனம் வலித்தது. இரண்டு வாரங்களுக்கு முன் அவரைப் பட்டணத்தில் பார்த்திருந்தேன். அவர் கட்டாயம் தீபாவளிக்கு வீட்டிற்கு வரச் சொல்லியிருந்தார். என்னுடைய நலத்தை ரொம்பவே விசாரித்தார். வேலை செய்யும் பள்ளிக்கூடம் முதல் இப்பொழுது தங்கியிருக்கும் வீடுவரை விசாரித்தார். விநோத் வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் ஏதாவது இரண்டு வார்த்தை அல்லது குறைந்தபட்சம் ஒரு சிறு புன்னகை செய்யக்கூடியவர். அன்று அவருடைய இறப்புக்குப் போயிருந்தபோது நான் அம்மாவைப் போலவே உணர்ந்தேன். மிகவும் நெருக்கத்தில் நின்றுகொண்டு அவருடைய பிரிவை உணர்ந்தேன். காலம் காலமாக மரணத்தைப் பற்றிய பயத்தை நீக்குவதற்காகச் சொல்லப்பட்ட அத்துனைத் தத்துவங்களும் விநோத் கதறி கதறி அழும்போது பொய்யாகிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.

வீட்டிற்கு வந்தபோது ஞானிகள் மீது கோபம் கோபமாக வந்தது. அவர்கள்தானே இருப்பவர்களுக்காகவும் இறந்தவர்களுக்காகவும் வருந்தாத ஜென்மங்கள்? அப்படியொரு மனதை எப்படி அவர்கள் பெற்றிருப்பார்கள்? கடவுள் கொடுத்த வரமா? நடைமுறையிலிருந்து தப்பி ஓடிய பிறகு இயலாமையின் மாற்று வடிவமா? எனக்குத் தெரிந்து விநோத் அன்பின் மீது மிகவும் வலுவான பிடிமானம் கொண்டவன். அன்பான மனிதர்கள் இழப்பின் போது எந்த வியாக்கியானமும் பேசமாட்டார்கள் என்பது உண்மைத்தான். கதறி கதறி அழுவார்கள். தன் சகோதரர்களைக் கட்டியணைத்து அப்பாவின் முன் நின்றுகொண்டு “அப்பான்னு கூப்டுங்கடா, அப்பான்னு கூப்டுடா கோபி” என விநோத் அழுதது எனக்கு வெறும் ஒப்பாரியாகத் தெரியவில்லை. அது ஓர் உயிரின் வலி. எந்தத் தத்துவப் புரிதலையும் கொண்டு சமாதானப்படுத்த இயலாத அன்பின் குரல். அந்தத் தருணத்தின் மிக நியாயமான காட்சி. ண்கள் கலங்கியபோது அப்பொழுது நான் குட்டையாக இல்லை, கூட்டத்திற்குத் தெரியும்படி நன்றாக வளர்ந்திருப்பதை மறந்திருந்தேன்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Wednesday, November 3, 2010

சாருவுக்கு ஒரு கடிதம்: மலேசிய சிங்கப்பூர் இலக்கியம்

வணக்கம் சாரு,

நலமா? தங்களின் தங்கமீன் இணையத்தளத்தில் வெளிவந்த கட்டுரையையும் அதன் பின்னூட்டங்களையும் வாசித்தேன். மலேசிய சிங்கப்பூர் சனரஞ்சக இலக்கியவெளியை நோக்கிய உங்களின் விமர்சனத்தில் எனக்குச் சில இடங்களில்  உடன்பாடு உண்டு.

மலேசியாவில் தீவிர இலக்கியம் சிற்றிதழ்களின் மூலம் தொடங்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. 2006 தொடங்கி காதல் சிற்றிதழின் மூலம் இந்த நவீன இலக்கிய புரிதலைப் பகிர்ந்துகொள்ளும் முயற்சிகள் இங்குள்ள இளம் எழுத்தாளர்களின் மூலம் முன்னெடுக்கப்பட்டது. அது பிறகு வல்லினம் இதழாக மாறி, அடுத்தடுத்து அநங்கம், மௌனம் என விரிவடைந்து இன்னமும் சிறு கூட்டத்தின் மூலமே நடத்தப்பட்டு வருகின்றன. சிறு கூட்டத்தின் முயற்சிகள் எப்பொழுதும் அலட்சியப்படுத்தப்படும் என்பது உண்மைதானே.

மலேசியாவின் மூன்றாம்தர எழுத்து எனப்படுவது இங்குள்ள தினசரி பத்திரிக்கை/இதழ் மூலம் பெரும்பான்மை வாசிப்புக்குச் சென்றுகோண்டிருப்பதால், அதனைச் சார்ந்து உருவாகி வரும் அடுத்த தலைமுறைகளுக்கு நல்ல இலக்கிய பரிச்சயமே இல்லாமல் போய்விட்டதை நான் கடுமையானதாகவே கருதுகிறேன். ஒருவேளை இம்மாதிரியான குழுவில் சிக்கிக் கொள்ளும் இளம் எழுத்தாளன் முதலில் அதனைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் மாயையை அறுத்தெறிந்துவிட்டு புகழ் எனும் சிறிதுநேர முதுகு சொறிதலைத் தூக்கி எறிந்துவிட்டு சனரஞ்சக வெளியிலிருந்து மீளத் தெரிந்திருக்க வேண்டும். இதுவே அவனுக்கு மகத்தான சவால். என்னையும் உட்பட இங்குள்ள சில இளம் எழுத்தாளர்கள் அப்படிப்பட்ட ஒரு மாயையின் வலையிலிருந்து தப்பித்து வந்து தனக்கான அடையாளத்தை தீவிர இலக்கியத்தின் புரிதலை நோக்கி ஏற்படுத்திக் கொண்டவர்களே.

அடுத்ததாக இன்னமும் மூன்றாம்தர இலக்கியத்தை எழுதி கொண்டு, அதுதான் சிறந்த இலக்கியம் எனப் புரிந்துகொண்டும் அதைப் பிரச்சாரம் செய்து கொண்டும், உலக இலக்கிய பரிச்சயமே இல்லாமல் திரியும்  எழுத்தாளர்களும், அரசியல்வாதிகளின் வாலைப் பிடித்துக் கொண்டு அலையும் எழுத்தாளர்களும் இங்குத் தவிர்க்க முடியாத பிம்பமாக வளர்ந்து எம்பி குதித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைக் கடந்து மலேசியாவில் தரமான இலக்கியம் உருவாவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருப்பதைத் தெரிவிப்பதென்பது சிறு போராட்டம்தான். இவர்களின் பரிந்துரையும் குறுக்கீடல்களும் ஒரு மையச்சக்தியாக வளர்ந்து தீவிர இலக்கியத்தை நோக்கிய எல்லாம் வழிகளையும் மூடி மறைத்துவிட்டு வாசிப்பின் மூலம் அடைய வேண்டிய எல்லையைப் பற்றி பிரக்ஞையில்லாமல் அடுத்த தலைமுறையைச் சுற்றி ஒரு வட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. வட்டத்தில் சிக்கிக் கிடப்பவர்களுக்குக் கடைசிவரை சரியான இலக்கியமோ வாசிப்போ கற்பிக்கப்படப் போவதில்லை. ஆகையால்தான் வல்லினம் ஆசிரியர் நவீன் நம்முடைய இலக்கியமும் நவீன இலக்கியம் சார்ந்த வாசிப்பும் மலேசியாவின் மாணவர்களை நோக்கி சீக்கிரமாகப் பரவ வேண்டும் எனக் கூறினார். இன்று வல்லினம் சிறப்பிதழ் மலேசியாவிலுள்ள முக்கியமான கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் இலவசமாகத் தரப்பட்டுள்ளது. இந்த முயற்சியைப் பற்றி யாருக்கு என்ன அக்கறை?

தாங்கள் சிங்கப்பூரிலுள்ள ஒருவரைப் பார்த்து உலகம் முழுக்க பல இடங்களில் நாடகம் அரங்கேற்றிய இளங்கோவன் எனும் கலைஞரை இதுவரை அங்கு அடையாளப்படுத்தியதேயில்லை எனக் கேட்டிருக்கிறீர்கள். இளங்கோவனின் எழுத்தும் நாடகமும் எப்பொழுதுமே அவர்களுக்கு ஒவ்வாதவையாகும். அதிலிருந்து தப்பித்து ஓடிக் கொண்டிருக்கும் அவர்களிடம் எப்படி அடையாளப்படுத்துதல் என்கிற நேர்மை சார்ந்த பங்களிப்பு இருக்கப் போகிறது? ஒவ்வொருமுறையும் அரசியல்வாதிகளுக்கு விலை போனவர்களையும் ஒடுக்குமுறைகளுக்குத் தலையை கொடுத்துவிட்டு சுகமாகத் திரிபவர்களையும், சுரணையில்லாமல் மேடையில் விலை போகும் எழுத்தாளர்களையும், நிஜ வாழ்விற்கும் எழுத்திற்கும் இடையில் சோரம்போகும் எழுத்ததாளர்களையும், சொந்த இனத்தைப் பற்றி நிஜ வாழ்வில் எந்த அக்கறையும் இல்லாமல் எழுத்தில் மட்டும் சுரணையைக் காட்டும் எழுத்தாளர்களையும் நோக்கி அவர்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்தும், அவர்களின் செயல்பாட்டின் மீது எச்சில் உமிழும், அவர்களின் கோலைத்தனத்தின் மீது நகக்கீறலைப் போன்ற வரிகளை அள்ளி வீசும் இளங்கோவனின் கூர்மையான எழுத்திற்கு முன் அவர்கள் செய்வது இரண்டு காரியம்தான், ஒன்று தப்பித்துக் கொள்வது, இன்னொன்று அமைதியாக மௌனம் சாதிப்பது.

இந்த மாத வல்லினம் இணைய இதழில்(மலேசியா) இளங்கோவனின் நீண்ட நேர்காணலும் அவருடைய நாடகத்தின் எழுத்துப் பிரதிகளும், அவரைப் பற்றிய சக எழுத்தாளர்களின் பத்திகளும் இடம் பெற்றுள்ளன. அவருடைய நாடகத்தைப் பற்றி சு.யுவராஜனும், இளங்கோவன் என்கிற ஆளுமையைப் பற்றி நவீன், முத்துசாமி, முனியாண்டி இராம.கண்ணபிரான், அவர்களும் எழுதியிருக்கிறார்கள். நீங்கள் முன்வைத்திருக்கும் கேள்வியை அதிகமாகப் பூர்த்தி செய்யும் வகையில் இளங்கோவன் என்கிற கலைஞரை வல்லினம் முன்னெடுத்துள்ளது. இளங்கோவனின் ஒரு நாடகத்தை மட்டும் பார்த்துவிட்டு என்னால் செய்யப்பட்ட விமர்சனத்தில் எனக்குத் திருப்தில்லாமல்தான் இருந்தது. ஆனால் இம்முறை வல்லினம் அவருடைய ஆறு நாடகத்தின் எழுத்துப் பிரதிகளின் சில பகுதிகளை மட்டும் வாசிப்பதற்கு வாய்ப்பளித்துள்ளது. (முழுமையான நாடகத்தின் எழுத்துப் பிரதிகளை வாசிக்க அவரின் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். அதற்கான தகவல்களும் வல்லினம் இணைய இதழின் விளம்பரப்பகுதியில் உள்ளது).

அவருடைய ஊடாடி நாடகம் தமிழில் எழுதப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் தமிழன் எத்துனைக் கொடூரமாக நடத்தப்படுகிறான் என்பதை ஓர் உயிரின் கதறலின் மூலம் அறிய முடியும் அனுபவத்தை இளங்கோவன் தருகிறார். சுதந்திர காலக்கட்டத்தில் அங்குக் குடியேறி வெள்ளையனுக்கு வேலை செய்து கொடுத்த யாழ்ப்பானத்து தமிழர்களும், பிராமணர்களுமே தமிழனை பயங்கரமாக ஒடுக்கியுள்ளான் என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது.

சிங்கப்பூரின் இலக்கிய நிலைமை எப்படி இருக்கிறது என்பதற்கான ஆழமான பார்வை இளங்கோவனின் நேர்காணலின் மூலம் பெற முடியும். இன்னமும் நம்பிக்கையளிக்கக்கூடிய எந்த இளம் எழுத்தாளர்களும் இல்லாத ஒரு நகரமாக வளர்ந்து வருகிறது சிங்கப்பூர் இலக்கியம். தமிழகத்திலிருந்து வந்து குடியேறி இங்கு வேலை பார்த்துக் கொண்டு சில இலக்கிய முயற்சிகளைச் செய்துகொண்டிருக்கும் நண்பர்களைத் தவிர்த்துவிட்டு சிங்கப்பூர் இலக்கியத்தை மதிப்பீட வேண்டிய கட்டாயம் இப்பொழுது இருக்கிறது.

தொடர்ந்து உரையாடலாம்.

நன்றி: படங்கள் (வல்லினம் இணைய இதழ்)
              தங்கமீன் இணைய இதழ்(சிங்கப்பூர்)

கே.பாலமுருகன்
மலேசியா

Monday, November 1, 2010

நான் மகான் அல்ல - மனநோயின் வேர்களும் குற்றவாளிகளின் நகரமும்

“உடல் நோயைவிட மனநோய்தான் மனிதனை அதிகம் அழிக்கும் தன்மை வாய்ந்தது” – சிசரோ எனும் உளவியல் நிபுணர் குறிப்பிடும் ஒரு மகத்தான கருத்து.

சமூக நடைமுறைக்கும் சமூகத்தின் பொது புத்திக்கும் சற்றும் பொருத்தமில்லாத நடவடிக்கைகளையும் மனதையும் கொண்டவர்களை “functional psychoses” எனக் குறிப்பிடுவார்கள். மூளை பாதிப்பு ஏதும் இல்லாமல் மனதளவில் பாதிக்கப்பட்டதன் விளைவுகளை சமூகத்தின் மைய அறத்திற்கு எதிராகப் பாவிப்பதைத்தான் இப்படி அடையாளப்படுத்தலாம். அத்தகைய ஒரு பிரச்சனையைத்தான் நான் மகான் அல்ல படம் மையக் கருவாக எடுத்திருக்க வேண்டும். ஆனால் படத்தில் இப்பிரச்சனை மையக் கதைப்பாத்திரத்தைச் சுற்றி மிகவும் மிதமான தன்மையுடன் புனையப்பட்டிருக்கிறது.

கமல் நடித்து வெளிவந்து பழைய படமான “சத்யா”வில் வேலையில்லாமல் நகரத்தில் தனக்கென ஒரு அறத்தையும் அதற்கு உடனான ஒரு மனதையும் உருவாக்கிக் கொண்டு சுற்றி அலையும் கதைப்பாத்திரத்தின் இன்னொரு வடிவமாகத்தான் இந்தப் படத்தில் கார்த்தி செய்திருக்கும் வேடத்தைப் புரிந்துகொள்ளக்கூடும். மேலும் பல தமிழ்ப்படங்களில் இப்படி மையக்கதைப்பாத்திரம் வேலை ஏதும் இல்லாத நாடோடியாகவும் அதே சமயம் வீட்டில் அடிக்கடி திட்டப்படும், அப்படித் திட்டப்பட்டும் கொஞ்சம்கூட கவலையில்லாமல் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குவதும் என வாடிக்கையாகக் காட்டப்பட்டிருக்கிறது. இது போன்ற நாடோடிகள் கட்டாயம் வெளியே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்பவர்களாகவும் இருப்பார்கள்.

சத்யா’ படத்திலும் ‘சுப்ரமணியபுரத்திலும்’ வேலையில்லாமல் சுற்றி திரியும் இளைஞர்களைப் பற்றிய வாழ்வும் அது எப்படி தன்னை பொதுபுத்திக்கு எதிராக நிறுவிக்கொள்கிறது என்பதைப் பற்றியும் விரிவாகச் சொல்லப்படுகின்றன. ஒரே மாதிரியான பிரச்சனையை எப்படி வெவ்வேறு வகையில் சலிப்பை ஏற்படுத்தாமல் சொல்வதென்பது மிகப் பெரிய சாமர்த்தியம் எனக் கருதுகிறேன். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கார்த்தி வேலையில்லாமல் நண்பர்களுடன் திரிவது முதல், அவருடைய அப்பா அவருக்குச் சாதகமாக இருப்பதும், அம்மா எப்பொழுதும் திட்டிக் கொண்டிருப்பதும், அத்தகையதொரு சூழலிலும் திடீரென அவருக்கு ஒரு காதல் மலர்வதையும் பெண்ணின் அப்பா நல்ல வேலை கிடைத்தவுடன் மீண்டும் வா எனச் சொல்வதுவரை வழக்கம்போல தமிழ் சினிமாக்களில் அளித்து அளித்துப் புளித்துப்போன ஒரு அமைப்புமுறைத்தான்.

தேர்ந்த பார்வையாளன் இதைக் கட்டாயம் கடந்து வந்து கதைக்குள் இருக்கும் இன்னொரு பகுதியை அடைய வேண்டியிருக்கிறது. இப்பொழுது அந்தப் பகுதித்தான் கதையின் பலத்தை அதிகரிக்கிறது. வழக்கமான கதைச்சொல்லும் முறையிலான ஒரு படத்தை கூர்மையாக்கும் பகுதியே அதன் தீவிரம்தான். அப்படியொரு தீவிரம்தான் இப்படத்தில் காட்டப்படும் இளம் குற்றவாளிகளின் மிகவும் சிதைந்துபோன அக உலகம். ஆனால் இந்தத் தீவிரத்தை படத்தில் வலுவாக வளர்த்தெடுக்க முடியாத தோல்வியைப் படம் அடைந்துள்ளது.

கல்லூரி மாணவர்களான அந்த நால்வரும் மிக இயல்பாக சமூகத்தில் எல்லோரையும் போல நடமாடக்கூடியவர்கள், பழகக்கூடியவர்கள். ஆனால் இவர்களின் அகம் ஏதோ ஒரு காரணத்தால் ஆழமாகச் சிதைக்கப்பட்டிருக்கிறது. சமூகத்தில் தன் இருப்பைப் பற்றிய பிரக்ஞையும் அதே சமயத்தில் ஆழ்மான பாதிப்பையும் கொண்ட சீரான ஒரு மனச்சிதவை கொண்ட 4 இளைஞர்களை இப்படத்தில் பார்க்க முடிகிறது. தொடர்ந்து சில கொலைகளைச் செய்யக்கூடிய இவர்களின் பாதிப்புகளும் குற்றங்களுக்கான மூலமும் படத்தில் எந்த இடத்திலும் வலுவாகப் பதிக்கப்படவில்லை. ஆகையால் ஏன் இவர்கள் இப்படியொரு மோசமான வன்கொலைகளை நிகழ்த்தியாக வேண்டும் என்கிற அளவில் கேள்வி உருவாகிறது.

மேலும் தனக்கு ஓர் அழகான காதலி கிடைக்க மாட்டுகிறாள் என அந்த 4 இளைஞர்களின் ஒருவன் சொல்வது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். ஆனால் இதைச் சொல்லும் இளைஞர் பார்க்க அழகாகவும் சீரான தோற்றத்துடனும் இருப்பான். அதெப்படி அத்துனை இருந்தும் இன்னமும் ஒரு நல்ல காதலி இவனுக்கு அமையவில்லை எனும் கேள்வி தோன்றக்கூடும். ஆனால் சராசரியாக ஒரு இளைஞன் அனுபவிக்கும் சில பருவத் தேவைகள் இவர்களுக்குக் கிட்டாமல் போகவே, அதை வன்மையாக நுகர்வதற்குத் தூண்டப்படுகிறார்கள்.

கரிகாடு குப்பம் என்கிற ஓர் இடம். சுனாமியால் அந்தக் கிராமம் பாதிக்கப்பட்ட பிறகு அங்குள்ள மக்கள் வேறு இடத்திற்குப் புலம் பெயர்ந்துவிட்டார்கள். ஆகவே அந்தக் கிராமம் விடப்பட்ட இடமாக இடிந்த வீடுகளுக்கும் அடர்ந்த சூன்யத்திற்கும் மத்தியில் கிடக்கிறது. இந்த நால்வரும் அங்கு வரும் காதல் ஜோடிகளை அடித்து வீழ்த்தி பெண்களை மட்டும் கொடூரமாகக் கற்பழித்து தனது பருவத் தேவையைத் தீர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் இப்படியொரு சம்பவம் படத்தின் தொடக்கத்தில் மட்டுமே நிகழ்கிறது. ஆகையால் இது தொடர்க் கொலைகளா எனத் தெரியவில்லை. இருப்பினும் அது அவர்களின் வாடிக்கையான கொலைகளாக இருந்தாலும் ஏன் அவையனைத்தும் கண்டுபிடிக்கப்படவில்லை எனக் கேள்வியும் எழுகிறது.

நண்பனையும் அவள் காதலியையும் திருமணம் செய்து வைப்பதற்காக நால்வரில் ஒருவன் அவர்களை அவனின் வீட்டிற்குக் கொண்டு வருகிறான். அங்குள்ள மற்றவர்கள் (மூவரும்) அந்த இளம் காதலர்களின் காமச் சேட்டையை அறைக்கு வெளியேயிருந்து கேட்டு, அதைத் தானும் அனுபவிக்க வேண்டும் என்கிற நிலைக்குத் தூண்டப்படுகிறார்கள். கதவைத் தட்டி உள்ளே சென்று அவளின் காதலனைக் கொன்றுவிட்டு அவளையும் ஒவ்வொருவனாகக் கற்பழித்துவிட்டு கழுத்தை அறுத்துக் கொன்றுவிடுகிறார்கள். இதுதான் இவர்களின் உக்கிரமான வன்முறைமிக்க மனதைக் காட்டுகிறது. காம இச்சையால் பாதிக்கப்பட்ட மனநிலையை அவர்கள் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் அதிக நடமாட்டமுள்ள வசிப்பிடத்தில் இந்தக் கொலையை செய்துவிட்டதால், இதை மறைப்பதற்குக் கொலை செய்யப்பட்டவர்களின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி வேறு வேறு இடங்களில் வீசிவிடுகிறார்கள். ஆனால் அந்த உடல் பாகங்கள் காவல்துறையினரால் கண்டறியப்படுகின்றன. இந்த இடத்தில்தான் கதையில் வரும் இந்த இளம் குற்றவாளிகளுக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கதைநாயகனான கார்த்திக்கும் தொடர்பு ஏற்படுகிறது. கார்த்திக்கின் அப்பா ஒரு call taxi ஓட்டுனர். கொலை செய்யப்பட்ட அந்தப் பெண்ணை அவளுடைய வசிப்பிடத்திலிருந்து அவளுடைய காதலனும் நால்வரின் ஒருவனும் இவரின் வாடகை வண்டியில்தான் கடத்திக் கொண்டு வருகிறார்கள். அந்தப் பெண் கொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்ததும் கார்த்திக்கின் அப்பா அவர்களைக் காட்டிக் கொடுக்க தீர்மானிக்கிறார். இதற்கிடையில் அந்த நால்வரும் கார்த்திக்கின் அப்பாவைத் திட்டமிட்டு கொலை செய்துவிடுகிறார்கள். இறுதியாகக் கார்த்திக் அந்த நால்வரையும் பழிவாங்குவதாகப் படம் நிறைவடைகிறது. கதைச்சுருக்கத்தைச் சொல்லிவிட்டுத்தான் கதைக்குள் ஒளிந்திருக்கும் வெவ்வேறு தரிசனங்களுக்குள் செல்ல வேண்டியிருக்கிறது.

1. நடுத்தர வர்க்கத்திற்கு முரணான கதைநாயகன்

கார்த்திக்கின் கதைப்பாத்திரம் நடுத்தர வர்க்கத்தின் மனநிலைக்கு முரணாகக் காட்டப்படுகிறது. பணக்காரப் பையன்கள் வாழ்வில் எந்த நோக்கமுமின்றி நண்பர்களுடன் கலாட்டா செய்து கொண்டும் திரிந்து கொண்டும் இருப்பது வழக்கமாகும். ஆனால் கார்த்திக் அப்பா மட்டும் வேலை செய்து காப்பாற்றப்படும் வாடகை வீட்டில் குடியிருக்கும் மிக மிக நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஒரு காதலி வந்து சொல்லும் வரையா குடும்பம் குறித்த எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் இருந்திருப்பான்?

இது தமிழ் சினிமாவின் ஒட்டு மொத்த அபத்தம். எல்லாம் சினிமாக்களிலும் காதலி வந்து கற்பிக்கும்வரை குடும்பம், வாழ்க்கை என எது குறித்தும் தெளிவில்லாத முட்டாளாகத்தான் கதைநாயகர்களைக் காட்டப்பட்டிருக்கிறார்கள். அதே பாணியை தீவிரமான களத்தை நோக்கி நகர்ந்த்தக்கூடிய எல்லாம் சாத்தியங்களும் உள்ள இப்படத்திலும் காட்டப்பட்டிருப்பது உறுத்தலாக இருக்கிறது.

மேலும் படத்தில் கார்த்திக்கின் அப்பா கொல்லப்பட்ட பிறகு உருவாகும் கார்த்திக் முற்றிலும் வேறு மாதிரியானவனாக இருக்கிறான். வீட்டிற்கு வாடகைக் கட்ட வேண்டும் என்பதுகூட அவனுக்கு அப்பொழுதுதான் தெரிகிறது. அந்த அளவிற்குத் தத்தியாக இருந்திருக்கிறான். ஓரிரு நாட்களிலே எல்லாம் குற்றவாளிகளையும் துரத்திப் பிடித்து கொன்றும் விடுகிறான். ஆகவே இந்தப் படத்தின் மையக்கருவைப் பற்றி பேசுவதற்கு முன் கதையிலிருந்து இந்தத் தமிழ் சினிமா கதைநாயகனை நீக்க வேண்டியுள்ளது.

2. குற்றவாளிகளின் நகரம்

மூன்று முக்கியமான இடங்கள் குற்றவாளிகளின் நிகழ்த்து களமாகப் படத்தில் பாவிக்கப்பட்டிருக்கின்றன. முதலில் கரிகாடு குப்பம். ஆள்நடமாட்டமில்லாத சூன்மயமான பகுதியைக் குற்றவாளிகள் தேந்தெடுக்கிறார்கள். இங்குத்தான் காதலர்கள் இரகசியமாகவும் சந்தித்துக் கொள்கிறார்கள். குற்றம் நடப்பதற்கான அத்துனைச் சாத்தியங்களையும் சூழலையும் அள்ளி வீசும் மிரட்டல் எங்கும் பரவியிருக்கிறது.

மேலும் அந்த விடப்பட்ட கிராமம் தனக்குள் ஓர் அமைதியை விழுங்கிக் கொண்டு ஒரு துறவியைப் போல அமர்ந்திருக்கிறது. பெரும் சலனமாக அந்த அமைதிக்குள் சிதைந்து மேலிடுகிறது குற்றவாளிகளின் இருப்பு. இதை வலுப்படுத்துவதற்கான சரியான தேர்வுதான் அந்தக் கரிகாடு குப்பம். அடுத்ததாக அந்தக் ககதல் ஜோடிகளை தங்க வைத்துக் கொலை செய்யும் வீடும் அந்தத் தெருவும். மிகவும் பரப்பரப்பாக மக்கள் நடமாட்டம் அடர்த்தியாகக் காணப்படும் சூழலில் பண்பாட்டையும் வாழ்வையும் நெருக்குவது போன்ற தோற்றத்தில் காணப்படும் குறுகிய தெரு குற்றவாளியின் கவனிக்கப்படாத மனதைப் பிரதிபலிப்பது போல இருக்கிறது. அத்துனை இரச்சலுக்கு மத்தியிலும் கொடூரமான ஒரு கொலை சாதாரண சம்பவம் போல நடப்பதற்குரிய அமானுடத்தைத் தெறிக்கவிடுகிறது அந்தப் பரப்பரப்பும் அடர்த்தியும்.

3. இரு முரண்களின் தோன்றலும் அழிவும்

கரிகாடு குப்பத்திற்குக் காதல் செய்ய வரும் காதலர்களுக்கும் காமத்தால் தூண்டப்பட்ட இளைஞர்களுக்கும் மத்தியில் நிகழ்வது என்ன? இரு முரண்களுக்குள் நிகழும் ஆக்கி அழித்தல் என்கிற பண்பாட்டு கொலைகளாக இந்த விசயத்தைப் பார்க்கக்கூடும். ஒன்று காமத்ததல் மனச்சிதைவுக்குள் ஆளான இளைஞர்கள், மற்றொன்று அதே காமத்தால் அங்கு இரகசியமாகக் காதலிக்க வரும் காதலர்கள். தனக்குள் முளைத்திருக்கும் பருவத் தடயங்களில் ஒன்றான பால் ஈர்ப்பு காரணமாக உருவாகும் காமத்தை இப்படிக் கண்ட இடங்களில் தீர்த்துக் கொள்ள முயலும் இந்தக் காதலர்களின் இருப்பும் அவர்களைப் பிடித்து, அந்தப் பெண்ணின் உடலை மட்டும் மிக மோசமாக நுகரும் காமுகர்களின் இருப்பும் ஒன்றையொன்று பாதித்துக் கொண்டு ஆக்கி அழித்து தன் இருப்பைத் தானே முடித்துக் கொள்கிறது.

இந்த அழித்தல் தொழிலைக் கடைசியாக முடித்து வைக்கப் பயன்படுத்தப்படும் பிம்பம்தான் கார்த்தி. அதாவது தமிழ் சினிமாவிற்கே உரிய கதைநாயகனின் தொழில். ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞன் தன் அப்பாவை இழக்க நேர்ந்தால் தன் கோபத்தை நியாயமான முறையில்தான் காட்டுவான் எனச் சொல்வதற்கில்லை. அந்தக் கோபம் கெட்ட சக்தியை அழிக்கவும் பாவிக்கப்படும் எனும் பழங்காலத்து போர்மூலாவை அப்படியே கொஞ்சம் வேறு மாதிரி தந்திருக்கிறார்கள். பழிவாங்கும் படல்ம்தான் ஆனால் இதில் இரண்டு நாட்களிலே எல்லாவற்றையும் சமன்படுத்திவிடுகிறான் கதைநாயகன்.

கொலைகளை மிகக் கொடூரமாகவும் தந்திரமாகவும் செய்து முடிக்கும் அந்த நால்வரும் கார்த்தி ஒருவனிடம் அடி வாங்கி சாகிறார்கள். இதுவும்கூட முரண்தான். கார்த்தி படத்தில் கராத்தே கற்றவன் என்பதால் இதைச் சகித்துக் கொள்ளலாம். மற்றப்படி “நான் மகான் அல்ல” இன்னும் ஆழமாகக் குற்றவாளிகளின் அகத்தை ஆராய்ந்திருக்கலாம். கதையில் வரும் அந்த நால்வரும் மனநோய்க்கு ஆளானவர்கள். அந்த மனநோயின் வேர்கள் எங்கு இருக்கின்றன என்கிற தேடல் படத்தில் எங்கேயும் தேடப்படவில்லை. கதையில் அந்த நான்கு இளைஞர்களுக்கும் வாழ்வின் மீதான பயங்கரமான வெறுப்பு இருக்கிறது. குறிப்பாக காமத்தின் மீது அதீதமான வெறியைக் கொண்டிருக்கிறார்கள். இங்கிருந்துதான் அவர்களின் வன்முறைக்கான வேர்கள் சமூகத்தின் அடித்தட்டு தளத்தை எட்டியிருக்கக்கூடும். ஆனால் அவர்கள் சாதாரண வில்லன்களாக மட்டுமே காட்டப்பட்டு ஒரு தட்டையான பிம்பங்களாக கரைந்துவிடுகிறார்கள்.

நன்றி: வல்லினம் இணைய இதழ்(அக்டோபர்)

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா