
10வயதில்
தேவாலயத்தின் வாசலில்
அடிக்கடி நின்று
மேரி மாதா சிலையை
வெறித்துவிட்டுப் போவேன்
மேரி மாதா
ஆசிர்வதிப்பாள்
எனக்கே எனக்கு மட்டும்
கேட்கும்படியாக
மாலையில்
மீண்டும் தேவாலயத்தின் பக்கமாக
போய் நின்று கொள்வேன்
மேரி மாதாவின்
முகத்தில்
வெயில் இறங்கியிருக்கும்
மரங்களைத் திட்டிக் கொண்டே
நடக்கத் துவங்குவேன் வீட்டிற்கு. . .
அருகிலிருந்தும்
சருகுகளைக் கஞ்சத்தனமாக
வைத்துக் கொண்டு
மாதாவின் முகத்தில்
வெயில் படர
இந்த மரங்கள்
என்ன செய்துக் கொண்டுருக்கின்றன?
சருகுகள்
கட்டிப் போட்டாற் போல
மரத்தில் உதிர்ப்பதற்கு
உத்தரவின்றி
காத்திருக்கின்றன!
இந்த மரங்களுக்கு
அப்படியென்ன கஞ்சத்தனம்?
மாதாவின் முகத்தில்
வெயிலை அப்படியே விட்டுவிட்டு!
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com