Friday, September 5, 2008

குழந்தைகள் முளைக்கும் பேருந்து




குழந்தைகள் முளைக்கும் பேருந்து



அன்றுதான் பள்ளிப் பேருந்திற்கு
இறக்கைகள் முளைத்திருந்ததைப்
பார்த்தேன்



இறக்கைகள்
அசையத் துவங்கியதும்
பேருந்து
பறக்கிறது



பேருந்தின்
கண்ணாடிகளுக்கு
வெளியில் இறக்கைகள்
முளைத்து
போவோர் வருவோரைப்
பார்த்துக் கையசைத்து
ஆரவாரம் செய்கின்றன



பேருந்துதுப்பிய
குச்சி முட்டைகள்
வாகனமோட்டிகளின்
முகத்தில் பட்டும்
யாரும் கலவரமடையவில்லை



பேருந்தின் வயிற்றிலிருந்து
குதித்து வரும்
பாலித்தின்களை
யாரும்
குப்பைகளாக
நினைப்பதில்லை



பேருந்து எழுப்பும்
ஆர்பாட்ட ஓசைகளை
எல்லோரும் ஆனந்தமாகச்
சகித்துக் கொள்கிறார்கள்



சாப்பாட்டுக் கடைகளில்
அமர்ந்திருப்பவர்கள்
மீன் கடை சீனக் கிழவி
பழ வியாபாரிகள்
முச்சந்தி கடையின்
வெளிச்சத்தில் நின்றிருப்பவர்கள்
எல்லோரையும் பார்த்து
பேருந்து கையசைத்துக்
கத்துகிறது

பேருந்தின் உடல்முழுவதும்
விரல்கள் தோன்றி
பட்டண வீதிகளைச்
சுரண்டி அலசுகிறன்றன



அன்றைய காலைபொழுதுகளில்
பேருந்து வயிறு குழுங்கி
சிரித்துக் கொண்டே
நகர்கிறது



எல்லோரும்
பேருந்துடன்
சேர்ந்து கொண்டு
சிரித்துக் கொண்டே
கடக்கிறார்கள்



ஏனோ தெரியவில்லை
சிலநேரங்களில்
பேருந்து முகம்
கவிழ்ந்து

இறந்த உடலுடன்
காலியாக
வந்து சேர்கிறது



இறக்கைகள் காணவில்லை
சவ ஊர்வலமாய்
பேரிரைச்சிலுடன்
புகைக் கக்கி
உறுமுகிறது



சிறகைத் தொலைத்த
பறவையாய்
நகரத்தில் விழும்
பேருந்தைச்
சிலருக்குப் பிடிப்பதில்லை





ஆக்கம்: கே.பாலமுருகன் ,
சுங்கைப்பட்டாணி

1 comment:

Unknown said...

குழந்தைகளுக்கான பேரூந்துகள் எப்பொழுதுமே குதூகலத்தை அள்ளிவருகின்றன. அவர்களது உலகத்தில் எந்த வஞ்சகங்களோ, துரோகங்களோ இல்லை. அன்பும் , மகிழ்ச்சியும் அவர்கள் புன்னகைக்கும் போது அப்படியே வெளியே சிந்திவிடுகின்றன. அவைதான் போலும் பேரூந்தின் இறக்கைகளாக,பள்ளிக் கூடங்களின் வெளிச்சம் வீசும் யன்னல்களாக,, வீடுகளின் தேவதைகளாக அவர்களை மாற்றி விடுகின்றன.

கவிதை நன்றாக உள்ளது பாலமுருகன்.
வரிகளுக்கிடையிலான இடைவெளியைக் குறைத்துவிடுங்கள்.