“ப்பா. . ப்பா. . ஏஞ்சிருங்க”
“என்னங்க. . என்னங்க. . மணியாச்சு ஏஞ்சிருங்க”
சரியாக இரவு மணி 9க்கு வழக்கமாகி போன அதே அழைப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கும். அறையின் இருட்டில் இந்த உடல். 60 வயதான உடல். தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த அறை மணி நேரத்திற்குள் மஞ்சள் கோட்டுடன் கிளம்பி வீட்டுக்கு வெளியில் நின்று கொள்ள வேண்டும்.
“தொற அங்கிள் ஏசிகிட்டே இருக்காரு, எப்பவும் நீங்க லேட்டாம். . சீக்கிரம் ஏஞ்சி கெளம்புங்க. . ப்பா”
பகலெல்லாம் எதாவது ஒரு காரணத்திற்காக அலட்டலே பிரதானமாக திரிந்து கொண்டிருக்கும் மனிதர்கள் இருக்கும் இந்த வீட்டு வரிசையில் இரவில் எழுந்து பல் துலக்கி கொண்டிருக்கும் வெகுளி அல்லது கிழட்டு காமெடியன் அனேகமாக நானகத்தான் இருக்க முடியும். 10 நிமிடத்திற்கு மேல் குளியலறையில் இருந்து விட்டால், மீண்டும் அதே அழைப்பு. அதே வலியுறுத்தல்கள்.
“என்னாங்க, மணியாயிகிட்டே இருக்கு, இன்னும் என்னா பண்றிங்க? சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க”
எதுவும் பேசுவதற்கு முன்பதாக மனைவி, மேசையில் இரவு உணவைத் தயார்ப்படுத்துவதில் மும்முரமாகிவிடுவாள். அதையும் மீறி பேசிவிட்டால் மீண்டும் அதே வலியுறுத்தல்கள். காது கொடுத்து கேட்கவே வரம்பு மீறிய ஒரு அருவருப்பு. கண்ணாடி கிளாசில் நீர் நிரம்பும் சத்தம்கூட எதையோ அவசரமாக என் மீது சுமத்திக் கொண்டிருப்பது போல இருக்கும். வலுக்கட்டாயமான ஒரு திணிப்பு.
அன்று ரசமாக இருந்துவிட்டாலும் அதையும் கடைசிவரை உறிஞ்சி குடித்துவிட்டுதான் போக வேண்டும். என்றாவது நேரத்தையெல்லாம் சிறிது நேரத்திற்கு மறந்துவிட்டு ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வரவேற்பறையில் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கும் குலுக்கல் நடனத்தில் இதுவரை மெய்யிழந்து கொண்டிருந்த மகன் திடிர் விழிப்பில் மீண்டும் அதை ஞாபகப்படுத்தி விடுவான்.
“தொற அங்கிளு ஏசிகிட்டே இருக்காரு. . எல்லாரும் மாதிரி அவரும் லேட்டா போவ முடியுமா?. . சீக்கிரம் கெளம்பி போய் நில்லுங்க”
மறுபடியும் ஒர் அமைதி. மீண்டும் குலுக்கல் நடனத்தில் இணைந்து கொண்டிருப்பதற்கான ஆய்த்த நிலை. பிறகு மஞ்சள் கோட்டை எடுத்து மாட்டிக் கொண்டு சரிப்படுத்திக் கொள்ளும்வரை இருக்கையின் கதகதப்பில் சாவகாசமாய் வசதிகளை அனுபவித்துக் கொண்டிருப்பான். கால்களை கீழே இறக்கி நீட்டிக் கொள்வான், கைகளை தலைக்கு மேல் உயர்த்தி உடலை நெளித்துக் கொள்வான். அவனுக்கு மட்டும் இத்தனை வசதியா? அப்படியென்ன ஒரு வசதி தேவைபடுகிறது இவனுக்கு? எங்கே போய் ஒளிந்து கொண்டதோ என்னுடைய முந்தைய அதிகாரங்கள்? வீட்டைச் சுற்றிலும் பார்த்துக் கொண்ட பிறகு மீண்டும் ஒரு தோல்வி.
உனக்கு வயசாச்சிடா கேசவா.. மறந்துட்டியா? இப்ப நீ சின்ன பப்பாடா. . ஒன்ன ஓட ஓட வெரட்டுவாங்க, பால் போத்தைல பால ஊத்தி வாயில திணிப்பாங்க, தொட்டில போட்டு முகத்துல எச்சல் தெரிக்க பாட்டு பாடி தூங்க வைப்பாங்க. . ஒனக்கு வயசாச்சிடா கேசவா. . முதுவுலாம் நோவுமே. . வயிறு எப்பவும் பெரட்டிகிட்டே இருக்குமே. . இன்னும் கொஞ்ச நாள்ல யப்பாடானு சாய போற. . அதுக்குள்ள என்ன அவசரம்? அப்பறம் வசதிலாம் கெடைக்கும், இந்த ஊர்ல இல்லாத கவுர்மெண்டு ஆஸ்பித்திரியா என்ன? ஒனக்கு பக்கத்துல மீட்டர்லாம் ஓடும்டா. . அத நீ கேட்ககூட முடியாது. இருந்தாலும் பரவாலடா கேசவா. . ஒன்னோட ஒடம்பு இப்படி ஆவுதுனு கவலபடறியா? அத மொத விட்டுத் தள்ளு. . அப்பறம் வொயர்லாம் பூட்டி ஒன் ஒடம்ப பாதுகாப்பாங்க குலுகுலு ரூம்புல. . அதுவரைக்குமாது இவுங்க ஒன்ன ஓட ஓட வெரட்டுட்டுமே. . இப்ப என்னா ஆயி போச்சி. . போடா. போடா. . தொற அங்கிள் வரப் போறாருனு அடுத்த வலியுறுத்தல் வர போது”
“மா. . என்னாமா செய்யறாரு இவுரு. . ராஜா மாமா அன்னிக்கே சொன்னாரு. . சும்மா சும்மா தூங்கிகிட்டே இருக்காறாம். . அங்க உள்ளவனுங்களாம் ஏசறானுங்களாம்”
“என்னாங்க. . என்னாங்க. . ரூம்புல இன்னும் என்னா பண்றிங்க. . வாங்க”
“ தோ வந்துட்டேன்” என்றெல்லாம் இந்த குறுகிய அவசரத்திற்கு மத்தியில் நான் அப்படிக் குரல் ஏதும் கொடுத்ததில்லைதான். தூக்கக் கலக்கத்தில் கைகள்கூட பாரமாகி போயிருக்கும். இறுக்கமான ஜீன்ஸ் கால்களைக் கெட்டியாக பிடித்துக் கொண்டு எதையோ வலியுறுத்திக் கொண்டே இருக்கும். எழுந்து நிமிரும் போது பிட்டத்திலிருந்து ஒரு பலமான குசு. அந்த ஜீன்ஸ் சிலுவாரிலிருந்து அவை வெளியேறுவதற்கு கொஞ்சம் தாமதமாகும். இரண்டு கால்களையும் அகல விரித்துக் கொண்டு மறுபடியும் மீதமிருந்த குசுவை வெளியேற்றிவிட்டு அறை கதவைத் திறக்கும் போது 5 நிமிடம்தான் இருக்கும் துறை வருவதற்கு.
“ தாங்க, சோத்த டப்பால போட்டுட்டேன். . நீங்க ஒக்காந்து சாப்டுகிட்டு போறதுக்குள்ள விடிஞ்சிரும். . அப்பறம் அவன் கத்திகிட்டே இருப்பான். . .”
அகலமான ஒரு பிளாஸ்ட்டிக்கில் அந்த சோறு டப்பாவும், பெரிய கைலாம்பும், கொசு மருந்து இரண்டு துண்டுகளும், பிறகு கடைசியாக ஒரு தலையணையும் போர்வையும், எடுத்து வலது கையில் பிடித்துக் கொண்ட போது, தோள் பட்டையில் ஒரு வலி. “யப்பாடா. . ராமகிருஷ்ண பகவானேனு அந்த கூஷன் இருக்கையில் சாய்ந்து கொண்டு மகனுடைய கையிலிருந்த தூர இயக்கியைப் பிடுங்கி தொலைக்காட்சி பார்க்க வேண்டும் போல இருந்தது.
அப்படிச் செய்துவிட்டாலும்.. வலியுறுத்தல்களின் முழு சுயரூபமும் அனல் தெறிக்க என் உடலை ஊதி வெடித்துவிடும். யம்மாடியோ. . என்று சிலிர்த்துக் கொண்டு வீட்டின் முன் வாசலுக்கு நகர்ந்து கொண்டிருக்கும் போது எவ்வளவு வசதியாக ஆடிக் கொண்டிருக்கிறது அவன் தலை தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே.
துணு துணுக்கு துணுக்குனு முன்பு ராஜாவுடன் அவன் வீட்டில் அவனுடைய குழந்தைகள் வேடிக்கை பார்க்க தொப்பை வயிற்றுடன் ஆட்டம் போட்டது ஞாபகத்திற்கு வந்ததும், காலுறைகள் போடும் போது சின்னதாய் கால்களில் ஒரு ஆட்டம். “இப்ப என்னா அவசரம்? எவன் குடி முழுகிற போது” என்று அலட்சியமாய் சொல்லிவிட்டு ஆள்காட்டி விரல்கள் இரண்டையும் முகத்திற்கு நேராக நீட்டிக் கொண்டு, பங்கரா நடனம் ஆட வேண்டும் போல இருந்தது. துணுக் துணுக்கு துணுக் துணுக்கு தா. . தா. . தா. .” மகன் எட்டிப் பார்த்துக் கொண்டான். மனைவி வீட்டு வாசலுக்கு வந்தாள். நான் தொலைந்து போகும்வரை அங்கிருந்து நீங்கமாட்டாதவளாய் முன் வாசல் கேட்டில் கைகளை வசதியாக வைத்துக் கொண்டு நின்றிருந்தாள். அவள் வயதுக்கு இந்த வசதி நியாயமானதுதான்.
பக்கத்து வீட்டு மலாய்க்காரன் கார் கழுவிக் கொண்டிருந்தான் மிகவும் வசதியாக. இந்த நேரத்தில் இவன் கார் கழுவுவதற்குக் காரணம் இருக்கலாம்தான். அவனது வீட்டின் உட்புறத்தை எட்டிப் பார்த்துக் கொண்டேன். அந்த வரவேற்பறையிலும் யாரோ தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கலாம்தான் அல்லது தலையை ஆட்டிக் கொண்டிருந்தாலும் ஆச்சரியமில்லைதான்.
“யா. . கேசவன். . பெர்கி கெர்ஜாகா?” ஒரு நீல வாளியை எடுத்து உயரமாக பிடித்துக் கொண்டு காரின் மேற்பரப்பில் ஊற்றும் போது நான்கு பக்கமும் வழிந்து கொண்டிருந்தது எனக்கென்னமோ அவனது இயலாமைகள் போலதான் தெரிந்தன.
இந்த வீட்டுக்கு வீடு வசதி அனுபவிப்பாளர்களை அனைவரையும் கம்போங் ராஜா ஆற்றில் குவித்து இந்தப் பக்கம் அசுரர்களும் மறுபக்கம் நானும் அந்த மலாய்க்காரனும் நின்று கொண்டு ஊலகுப்பான் பாம்புகளைக் கொண்டு கடைய வேண்டும் போல இருந்தது. இவர்களெல்லாம் எனக்கென்னமோ ஆமைகளாக உருவெடுத்து சோர்ந்து போய் கிடப்பது போலதான் இருந்தது. வசதிகளுக்கு ஓர் அற்புதம் இருக்கிறது போலும். ஆமையைப் போல வசதிகளுக்காக சோம்பலைச் சுமந்து கொண்டு வீட்டின் வரவேற்பறையில் எத்தனை காலம் இப்படி ஊர்ந்து கொண்டிருப்பார்களோ? என்னுடைய மகன்தான் அதற்கும் தலைவனாக இருக்க முடியும்.
“ஐயோ கேசவா என்னா போறாம படறியா?. . ஒனக்கு கெடைக்கலனு போறாம படறியா? வேண்டாம்டா. . விறுவிறுனு வாசல் கேட்டுகிட்ட போய் நில்லுடா. . தொற வரப் போறாரு” முன் வாசல் கதவோடு இலேசாக சாய்ந்து கொள்ளலாம் என்று நினைக்கும் போதுதான் இன்னமும் உடலில் ஏறி அமர்ந்து கொள்ளாத மஞ்சள் கோட் அக்குளில் குவிந்து கிடக்கும். சடாரென அந்தக் கோட்டை உதறிவிட்டு தோளில் சாத்திக் கொண்ட பிறகு, சாய்ந்து கொள்வதற்குள் துறை வந்து கொண்டிருப்பார். அவரும் அந்த மஞ்சள் கோட்டை அணிந்து கொண்டிருப்பார். அந்த மஞ்சள் கோட்டின் பின்புறத்தில் “குன்மா செகுரிட்டி” என்று எழுதப்பட்டிருக்கும். இதுவும் ஒரு வலியுறுத்தல்தான். அந்தக் கோட்டின் நிறம் மஞ்சள் இல்லைதான். ஏறகுறைய என் கண்களுக்கு மஞ்சளாகத்தான் தெரிகிறது போல. எந்தக் கலராக இருந்தால் என்ன? இதுவும் ஒரு வலியுறுத்தல் கலர்தானே.
“வாங்க கேசவன். . கெளம்பலாம் மணியாவுது”
துறையின் ஆர் சி மோடார் அவ்வளவாக எரிச்சலைக் கொடுக்கவில்லைதான். உள்ளேயே மறந்து வைத்துவிட்டிருந்த அந்தக் குறிப்பு புத்தகம், மோட்டாரில் ஏறி அமர்ந்து கொண்ட பின்தான் வலியுறுத்திக் கொண்டிருந்தது.
“தொற தோ இருப்பா. . வந்துர்றேன் புக்க மறந்துட்டேன்” எழுந்து வீட்டுக்குள் புகுந்து அந்தக் குறிப்பு புத்தகத்தை எடுத்துக் கொண்டு வெளியேறுவதற்குள் எத்தனை வலியுறுத்தல்கள். . மோட்டாரில் ஏறி அமர்ந்து கொண்ட பின் துறையிடமிருந்து அந்த முணகல். நன்றாக கேட்டது, இருந்தாலும் எந்த அலட்டலும் இல்லாத அமைதி. அந்தப் பக்கத்து வீட்டு மலாய்க்காரன் தொடர்ந்து காரைக் கழுவிக் கொண்டே இருந்தான். குளிரில் அவனுடைய கால்களிரண்டும் நடுங்கி கொண்டிருப்பதை நான் கவனிக்க விரும்பவில்லைதான். உள்ளேயிருந்த அனைத்து வசதிகளும் தற்காலிகமாய் அவன் துறந்திருக்கலாம், பறிக்கப்பட்டிருக்கலாம். எனக்கென்ன?
“இன்னிக்கு உள்ளது எழுதிட்டிங்களா, , அப்பறம் ராஜா ரவுண்டு வரும் போது கத்த போறாரு. .”
புத்தகத்தை இலேசாக திறந்து பார்த்துக் கொண்டேன். முதல் வரி, இரவு மணி 10- நான் கேசவன் குன்மா பாதுகாவலர் பண்டார் முத்தியாராவில் பதிந்து கொள்கிறேன், என்று மிகச் சரியாக தடுமாறிய எழுத்தில் குறிப்பிட்டிருந்தன. இந்தப் பேனாவைப் பிடித்து வடிவமாக எழுதும் நிதானத்தையெல்லாம் நான் கடந்துதான் இருந்தேன். ஒரு ஓலை கொடுத்திருந்தால் எங்களைப் பற்றிய மகாபாரதம் எழுதிவிட்டிருப்பேன். ஓலை உடைந்திருந்தால் சடாரென, கோரை பல்லைப் பிடுங்கி அதில் எழுதிவிட்டு கம்போங் ராஜா பேச்சு வரலாற்றில் இணைந்திருக்கலாம்தான். பிறகு வசதிகளுக்கா சொல்ல வேண்டும்?
அந்த பண்டார் முத்தியாரா வீட்டுக் குடியிருப்பு பகுதிக்குள் துறையின் மோட்டார் நுழைந்து கொண்டிருந்தது. எந்தவித சலனத்திலும் ஈடுபடித்திக் கொள்ளாமல் அந்தச் சில வீடுகள் ஆழ்ந்த இருளுக்குள் உறங்கி கொண்டிருந்தன. மூச்சிரைப்பை பல நாட்களாக கேட்டுப் பழகிதான் போயிருந்தேன். யார் யாரோ சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள் காதுக்கு சமிபத்தில்.
“ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவ கரட்டா போயிரு கேசவா. . அந்த சீனன்லாம் இல்லாத கொறலாம் சொல்றானுங்க பாத்து” இறுதியான வலியுறுத்தலுடன் நகர்ந்து அடுத்த தாமான்க்குள் மறைந்து கொண்டிருந்தார் துறை என்ற அந்த மற்றுமொரு வலியுறுத்தலின் உருவம் அல்லது வலியுறுத்தபடுவதற்கான காரணி என்றுக்கூட அடையாளப்படுத்திக் கொள்ளலாம். இன்னும் சிறிது நேரத்தில் ஒரு சுற்று போக வேண்டும். அந்தக் காலி வீட்டில் இருக்கும் பழைய கப்சாய் மோட்டாரை எடுத்துக் கொண்டுதான் போக வேண்டும். இது ராஜாவின் வலியுறுத்தல்.
நான்கு வரிசைக் கொண்ட அந்த குடியிருப்பு பகுதிக்குள் அந்த மோட்டாரின் எரிச்சலைத் தூண்டும் சத்தம் அவ்வளவாக கேட்டுவிடக்கூடாது, ஆனால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை யாராவது அதே சத்தத்தைக் கண்டிப்பாக கேட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் நான் வேலை செய்கிறேன் என்ற திருப்தி ஏற்படுமாம். தூக்கத்திலும் நிம்மதியில்லாமல் இப்படியொரு நிம்மதி தேவையா? ஐயோ ஆண்டவா இந்த வலியுறுத்தல்களின் நீளம் எவ்வளவாக இருக்கும்? இன்னும் எத்தனை தளங்களில் இது விரிந்து கிழைவிட்டுக் கொண்டே போக வேண்டும்? மொத்தமாக இருளில் மறைந்துவிட்ட வீடுகளில் அதிகமான கவனம் வைக்க வேண்டுமாம். ஏன்? இருளுக்குள் எதாவது நடந்துவிட்டால்? தற்செயலாக என்னவேண்டுமானாலும் நடந்துவிடலாம்தான்.
மோட்டாரின் சத்தத்தைக் குறைத்துவிட்டு மோட்டாரின் வக்கிளில் இருக்கும் பெரிய கைலாம்பை எடுத்து எல்லாம் வீடுகளிலும் இருமுறையாவது ஒளிப்பரப்ப வேண்டும். இது அடுத்த வலியுறுத்தல். ஒவ்வொரு வரிசை வீடுகளில் நுழையும் போதும் அந்த கைலாம்பு எல்லாம் வீடுகளின் முகத்திலும் பாய வேண்டும். யாராவது திருட்டுப் பயல்கள் இருந்துவிட்டாலும்கூட அதையும் நான் தான் கவனித்து பாதுகாக்க வேண்டும். இந்த வலியுறுத்தல்தான் கொஞ்சம் அசட்டுத்தனமாக இருக்கிறது.
“டேய் கேசவா. . ஒன் கிட்ட இல்லாத சொத்துடா. . சரி சரி இனி இருக்க போறதும் இல்ல. . இருந்தாலும் அதலாம் பாதுகாக்க ஒனக்கு கெடைச்ச பாக்கியம்டா இது. . கருப்பு கண்ணாடி போட்டு எப்படி இருட்டுக்குள்ள ஒளிஞ்சிருக்கானுங்க பாரு. . நம்பிக்கையே இல்லாத பையனுங்க. . அதனாலதான் ஒன்னையும் ஒன் தூக்கத்தையும் வெல பேசிருக்கானுங்க. . போடா. . போடா. . அவனுங்கள போறுத்தவரைக்கும் நீ கோட்டான். . அவன்லாம் ராத்திரி நேரத்து ஆமைங்கடா. . ஊர்ந்துகிட்டு இருப்பானுங்க. . போடா. . போ. . போய். . கைலாம்ப பாய்ச்சி அந்த ஆமைங்களோட ஓட்டுல”
கருப்பு கண்ணாடிகளை வாசல் கதவுகளாக கொண்ட வீட்டில் அந்தக் கருப்பு கண்ணாடியில் கைலாம்பின் வெளிச்சத்தை ஒளிபரப்பக் கூடாது. இதுவும் அடுத்த வலியுறுத்தல்தான். ஒரு தடவை தவறுதலாக அந்த மாதிரி செய்துவிட்டேன். 8ஆம் நம்பர் வீட்டில்தான்.
கைலாம்பிலிருந்து வெளிப்பட்ட மஞ்சள் பல்பின் ஒளி அந்தக் கருப்பு கண்ணாடியில் பாய்ந்த போது, உள்ளேயிருந்த ஒரு தொலைக்காட்சி, அந்தத் தொலைகாட்சியின் வலது புறத்தில் ஆபாசமான ஒரு ஓவியம், மற்றும் திறந்திருந்த அறைக்கதவிலிருந்த ஜன்னல் துணி என்று இப்படி சிதறிய ஒளியிலிருந்து கண்டு கொண்ட காட்சிகள். இப்படி பல முறை அந்த வீட்டின் இருளில் புதைந்து கிடக்கும் இன்னும் சில பொருள்களைக் காண வேண்டும் என்ற சபலம், மறுநாள் வலியுறுத்தல்களாக மாறி, அடுத்த நாளிலிருந்து கைலாம்பின் வெளிச்சம் கருப்பு கண்ணாடியில் தவறியும் ஊடுருவிடக்கூடாது.
“ஜோர்ச் லைட்ட ஒழுங்கா யூஸ் பண்ணனும். கரண்டுலாம் என்ன சும்மாவா வருது. .அங்கட்டும் இங்கட்டும் தேவ இல்லாம அடிச்சிகிட்டு இருக்காதிங்க”
கப்சாய் மோட்டாரை மீண்டும் அந்தக் காலி வீட்டின் முகப்பில் வைக்கும் போது மணி 11 ஆகியிருக்கும். 12 அல்லது 1 மணிவரை குடியிருப்பு பகுதியின் 1ஆம் நம்பர் சாலையில்தான் கொஞ்ச நேரம் திரிந்து கொள்வதும் கொஞ்ச நேரம் அந்தச் சாலையின் விளிம்பில் அமர்ந்து கொள்வதுமாக இருக்க வேண்டும். அந்த நேரத்திலெல்லாம் இரவு வேலையை முடித்துவிட்டு வரும் சீனர்களைப் பார்த்து சிரிக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் தலையசைத்துவிட்டு கையை மேலே உயர்த்தி “உள்ளேன் ஐயா” என்று அசடு வழிய வேண்டும். இதுவும் வலியுறுத்தல்தான். நான் வேலை செய்கிறேனா அல்லது விழிப்பில் இருக்கிறேனா என்ற அடையாளத்தின் வலியுறுத்தல்தான். சிலர் மது போதையில் வந்து சிறிது நேரம் உற்றுக் கவனித்துவிட்டு போவதும் உண்டு.
“ இரவு மணி 12- நான் கேசவன் குன்மா பாதுகாவலர். . அனைத்து வீடுகளும் பாதுகாப்பான சூழ்நிலையில் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன என்று மலாய்மொழியில் வழக்கம் போலவே எழுதிவிட வேண்டும். ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் சுற்று போய்விட்டு வந்த பிறகு இப்படிதான் செய்தாக வேண்டும். சில வேலைகளில் வீட்டிலேயே எல்லாவற்றையும் எழுதிவிட்டுதான் வருவேன். டூங்கே வந்துவிட்ட பிறகு அந்தச் சாலையில் அமர்ந்து கொண்டு எழுதுவது போல் பாவனைச் செய்து கொண்டிருப்பேன். எந்த வீட்டிலிருந்து யார் வேண்டுமாணாலும் பார்த்துவிடலாம்தான்.
அடுத்த ஒரு மணி நேரத்திற்கு என்ன செய்வது? வெறும் இருளும் கைலாம்பின் மஞ்சள் பல்பின் ஒளியும் மேலும் அமைதியான ஒரு சூழ்நிலையும். டூதற்கிடையில் அந்தச் சாலையையொட்டியிருக்கும் திடலில் கட்டப்பட்டிருக்கும் சின்ன உட்காரும் இடம் என்னை அழைத்துக் கொண்டிருக்கும்.
“டேய் கேசவா. . ஒடம்பு நோவுதாடா. . முதுகுலாம் உட்காந்தே வலிக்குதாடா. . அந்த எடத்துல போய் படுத்துகிட்டு கொசு மருந்த பத்த வச்சா சொகமா இருக்கும்னு நெனைக்கிறியா?. வேண்டாம்டா. . இந்த ரோட்டுலே இப்படி ஒக்காந்துகிட்டு தூங்கு. . கொஞ்ச நேரம் தூங்குடா. . அது போதும். . அதான் ஒனக்கு நல்லது”
அப்படியே அந்தச் சாலையின் விளிம்பில் கையில் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்கும் கைலாம்புடன் விழித்திருக்க முயற்சி செய்து கொண்டிருப்பேன். முடியாதபோது தூக்கம் கண்களை இருட்டிக் கொண்டு வரும். முடியாதுதான். இலேசான தூக்கம். “யப்பா. . ராம கிருஷ்ண பகவானே. . ராத்திரி தூக்கம் எவ்ள சொகமானுது. . வீட்டு கட்டில்ல படுத்து காத்தாடி சுத்த அப்படியே சுருண்டுகிட்டு படுத்தா எவ்ள சொகமா இருக்கும். .”
காரின் மஞ்சள் ஒளி பட்டு, திடிர் விழிப்பு. மணி 2 ஆயிருந்தது. அந்தக் காரிலிருந்து அமர்ந்து கொண்டே கண்ணாடியைத் திறந்தான் அவன். தலையை வெளியே நீட்டிக் கொண்டு ஏதோ வலியுறுத்திவிட்டு போனான். ஒருவேளை திட்டியும் இருக்கலாம்தான். தூங்கி வழிவது இந்த இடத்தில் பெரிய குற்றம்தான். அதற்கான தண்டனைகளை மனு சாஸ்த்திர தொகுப்பில்தான் மேற்கொள்ள வேண்டும் போல. எழுந்து மறுபடியும் அந்தக் காலி வீட்டில் கிடக்கும் மோட்டாரை எடுத்துக் கொண்டு வலம் வர வேண்டும். நான் விழித்திருபதினாலோ என்னவோ அந்த இடத்தின் சில வீடுகளின் நாய்கள் கூட எனக்குத் துணையாக விழித்திருக்கும். முதல் சில நாட்களில் நான் ஊர்வலம் வரும் போதெல்லாம் குறைக்க தொடங்கும் நாய், பிந்தைய நாட்களில் என்னை பழகிக் கொண்டது. எவ்வளவு பெரிய சமரசம் இது? ஆச்சரியம்தான்.
மணி 2ஐ கடந்து கொண்டிருக்கும் போதுதான், அந்த 12ஆம் நம்பர் வீட்டிலிருந்து அந்த நபர் வெளியே வந்து நடந்து கொண்டிருப்பார். தூக்கத்தைத் தொலைத்த மனிதர்தான் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் ஒரு ஆன்மீகவாதி என்று பிறகுதான் அடையாளப்படுத்திக் கொண்டேன். கையில் ஒரு துணிப்பையை மாட்டிக் கொண்டு, வாயில் ஏதோ கடவுளின் நாமத்தை உச்சாடனம் செய்துக் கொண்டே அந்தச் சாலையில் நடந்து கொண்டிருப்பார். மூன்று நாட்களுக்கு ஒரு தடவை இப்படி வருவார். அவர் வரும் போதெல்லாம் அவரின் இருப்பும், அந்த ஹரே கிருஷ்ண ஹரே ராம நாமமும் மனதிற்கு ஆறுதலாக இருக்கும்.
இரண்டுமுரை என்னை நெருங்கி விசாரித்துவிட்டு போயிருக்கிறார். பிறகு பார்க்கும் போதெல்லாம் சிரித்துக் கொள்வதுண்டு. “இன்னும் மால முடிக்கல. . அதான்.” என்று குறைவான வார்த்தைகளுடன் என்னை கடந்து அவர் போகும் போதெல்லாம் அவருடைய அந்த இரவு நேர உற்சாகம் ரொம்பவே பிடித்திருந்தது.
மணி 4ஐ நெருங்கி கொண்டிருந்தது. அடுத்த நகர்விற்குத் தயாராக வேண்டும். காலி வீட்டில் நுழைந்து மோட்டாரை எடுத்துக் கொண்டிருக்கும் போது 3ஆவது வரிசை வீடுகளிலிருந்து திடிரென்று ஒரு பயங்கரச் சத்தம். யாரோ அலறிக் கொண்டிருப்பது போன்ற சத்தம். உடனே மோட்டரை அப்படியே போட்டுவிட்டு கைலாம்பின் மஞ்சள் ஒளி சிதறிக் கொண்டிருக்க வேகமாக ஓடிக் கொண்டிருந்தேன். . .
“ இரவு மணி 4- நான் கேசவன் குன்மா பாதுகாவலர். . அனைத்து வீடுகளும் பாதுகாப்பான சூழ் நிலையில் கட்டுப்பாட்டில் இருக்கின்றன” என்று ஏற்கனவே எழுதியிருந்த குறிப்புடன் புத்தகம் சாலையின் விளிம்பில் கிடந்தது.
ஆக்கம்: கே. பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, கெடா
No comments:
Post a Comment