காக்கா பிடிப்பது என்ற சொல் பிரயோகம் சும்மா தன் துணிவைக் காட்டுவதற்காக சிலர் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். அப்படிச் சொல்வதால் அது அந்த மனிதரை இழிவுப்படுத்துவதாக ஆகிவிடும் என்கிற அவர்களின் நம்பிக்கையில் ஒரு பெரும் துணிச்சல் இருப்பதாக வேறு நினைத்துக் கொள்கிறார்கள். இதில் சிறிய குழப்பம் இருக்கிறது.
எது காக்கா பிடிப்பது என்று சொல்ல முடியும்?
நாம் காரியத்தைச் சாதித்துக் கொள்ள நம் தேவையை நிறைவேற்றிக் கொள்ள காக்கா பிடிக்கலாம். அந்தச் சமயத்தில் சில உத்திகளைக் கையாள வேண்டும் போல. அந்த நமது காக்கா பிடிக்கும் படலத்தில் பலியாகப் போகும் நபரிடம் இல்லாத ஒன்றையும் இருப்பது போல புகழ்ந்து தள்ளுவது அல்லது இருப்பதை மிகைப்படுத்தி சொல்வது, கூடுமான வரை அவரை உச்சத்தில் வைத்துப் புகழ்வது. (உச்சம் என்கிற அளவுகோல் மிக முக்கியம்). சும்மா சாதரண புகழ்ச்சிக்கெல்லாம் சிலர் மயங்கிவிட மாட்டார்கள்.
மேலும் அவரின் மூலம் உங்களை நீங்கள் முன்னிறுத்த வேண்டுமென்றாலும் காக்கா பிடிக்கலாம். இதன் மூலம் உங்களுக்கு மனத்திருப்தியோ அல்லது ஆதாயமோ இருப்பதற்கு வாய்ப்புண்டு.
ஒரு சிலர், அவரை அழைத்துக் கொண்டு போய் அவர் குடிகாரராக இருக்கும் பட்சத்தில் அவருக்கு மலிவான மது முதல் உயர்தர மதுவரை வாங்கிக் கொடுத்து அசத்தி பேர் போட்டுக் கொள்ளலாம்.
முடிந்தால் அவரை அழைத்துக் கொண்டு போய்(சொந்த வாகனமாக இருந்தால் நீங்கள் காக்கா பிடிப்பது அவ்வளவு வெளிப்படையாக தெரியாது) நகரத்தையோ அல்லது புராதான இடங்களுக்கோ செல்லலாம். அவர் உங்களின் நேர விரயத்தையும் தியாகத்தையும் கண்டு மனம் நெகிழும் தருணத்தில் உங்களின் காக்கா பிடிக்கும் படலம் வெற்றி அடைந்துவிட்டது என்று அர்த்தம். சிலர் இப்படித்தான் காக்கா பிடித்துக் கொண்டு அலைகிறார்கள். மிகவும் நுட்பமான முயற்சிகள் இது. யாரும் எளிதில் கண்டு கொள்ளாதவாறு.
நானும் அனுதினமும் பெரும்பாடுபட்டும் பல கோயில்கள் ஏறி இறங்கி, அங்கபிரதேசம் செய்து, இன்றைய தமிழ் கூறும் நல்லுலகின் முக்கிய படைப்பாளிகளான ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களிடம் மின்னஞ்சல் மூலமாக என்னால் முடிந்தவரை இறை அருளால் காக்கா பிடித்துக் கொண்டிருக்கிறேன். ஜெயமோகன் படைப்புகளின் 2 வருட வாசகன் என்கிற முறையில் அவரின் பெரும்பாலான படைப்புகள் என் ஆழ்மனதைப் பாதித்துள்ளன. பலமுறை எதையோ தேடி என்னையே கண்டடையும் பெரும் முயற்சிகளில் ஒரு மகா வெளிக்குள் உள்நுழைந்து பிசகி, தொலைந்து பலமுறை காணாமல் போயிருக்கிறேன் ஜெயமோகன் படைப்புகளில்.
மூத்த படைப்பாளியான அவருக்கு, இன்று மிக பரபரப்பாக அச்சு இதழ்களும், இனையத்திலும் இயங்கிக் கொண்டு ஆழமான தத்துவம் சார்ந்த விவாதங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அவருக்கு, என் மின்னஞ்சல்களெல்லாம் அவர் பதில் போடுவதே நான் செய்த அங்கபிரதேசத்தின் பலன் தான். வேண்டுமென்றால் இந்த வருடம் காவடி எடுத்து 1000 குடங்களை உடலெல்லாம் குத்திக் கொண்டு அடுத்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களைக் காக்கா பிடிக்கும் படலத்தில் வெற்றி காணப் போகிறேன். இதனால் எனக்கு ஏற்படும் நன்மைகள் என்னவென்றால், அவர்களின் தரமான படைப்புகள் பற்றி எனது மானசீகமான வாசக மனதை பகிர்ந்து கொள்ள ஒரு சிறு சந்தர்ப்பமே. மேலும் கொஞ்சம் அங்கீகாரமும் கிடைத்துவிடும் போல என்கிற சிறு நம்பிக்கையும். என்ன அங்கீகாரம், “ஆமாம் தம்பி! உங்களோட கதைகளையும் இணையத்திலும் அச்சு இதழ்களிலும் பார்த்து படித்திருக்கிறேன்..” என்கிர சொல்தான். இது கெஞ்சல் அல்ல. நான் நேசிக்கும் படைப்பாளிகளின் கவனம் நம் மீது படாத என்கிற எதிர்ப்பார்ப்பு. சில நல்லுள்ளங்கள், என்றுமே யாரையும் சாராத நல்லுள்ளங்கள் வேண்டுமென்றால் இதைக் கெஞ்சல், காக்கா பிடித்தல் என்றெல்லாம் முழங்கி கொள்ளட்டும். கவலையே இல்லை.
இது ஒரு வாசகனுக்கும் படைப்பாளனுக்கும் உள்ள உறவு, தொடர்பு. வார்த்தைகளால் பிறரின் படைப்பை பற்றி நேர்மையாக சொல்ல பகிர்ந்து கொள்ள எனக்கு வாய் வரவில்லையென்றால், பிறகென்ன படைப்பாளி?
எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்தில் மனதைப் பறிக்கொடுக்காதவர்கள் இருப்பார்களா? இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது அவர்களின் வாசக மனம் சார்ந்தது. அப்படி அவரின் எழுத்தில் வசம் கொண்டால்தான் என்ன தப்பு? குற்றசெயலா? எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை நேரடியாகச் சந்திக்கும் போது அவர் தான் ஒரு எழுத்தாளன் என்கிற கர்வத்தையும் எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு நண்பனைப் போல அவரும் கோணங்கியும் புத்தகம் திருடிய கதைவரை பகிர்ந்து கொண்டார்.
இங்கு காக்கா பிடித்தலோ, நரி பிடித்தலோ வெறும் வசை சொல்லாடலாக தேங்கி நின்றுவிடும். மனிதம் மட்டுமே. சக மனிதனிடம் நாம் கொள்ளும் அன்பு, ஒரு படைப்பாளியின் மீது நாம் கொள்ளும் நட்பு, எதிர்பார்ப்பு. . இப்படி வாசக- படைப்பாளி உலகம் தர்க்கத்திற்குள் கட்டுபடாதது.
இறுதியாக எழுத்தாளர் ஜெயமோகனிடம் நான் காக்கா பிடித்து மின்னஞ்சல் அனுப்புவதால், அவர் எனக்கு இலவசமாக ஒரு புத்தகம் போட்டோ, அல்லது தனிபட்ட முறையில் எனக்கு அவர் பணம் அனுப்பியோ, அல்லது இதன் மூலம் எங்களின் பேங்க் பேலன்ஸ் நிரம்பி வழிதலோ, ஆகிவிடாது.
குறிப்பு: சாரு அவரிடம் ஒருமுறை என் கதையை அனுப்பி வைத்தேன். இன்னும் புளோக் அல்லது வலைப்பதிவு இல்லாத காலகட்டம் என்பதால் எப்படிப் பிரரின் பார்வைக்கு மதிப்பீடுகளுக்கு நமது படைப்பைக் கொண்டு போவது என்ற வழி தெரியாததால்தான். பிறகு இப்பொழுதெல்லாம், என் கதைகள் படைப்புகள் யுகமாயினி, உயிரெழுத்து, வார்த்தை போன்ற இதழ்களின் வருவதால், மேலும் திண்ணை.காம், உயிரோசை.காம் போன்ற இணைய இதழ்களிலும் வருவதால், எனகென்று சொந்தமாக ஒரு வலைப்பதிவு இருப்பதாலும் என் கதைத் தனியாக பிரதியாக்கி யாருக்கும் அனுப்ப வேண்டும் என்கிர கட்டாயம் எனக்கில்லை. அப்படியே அனுப்பி கருத்து கேட்டால், யாருக்கு அப்படி என்ன முதுகு வலி?
வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.
கே.பாலமுருகன்
5 comments:
//சாரு அவரிடம் ஒருமுறை என் கதையை அனுப்பி வைத்தேன்.//
ஹா ஹா ஹா இது நல்ல காமிடியாக இருக்கே.... என் நண்பர் வால் சொன்ன பதிலையே இங்கேயும் கொடுங்கிறேன்.
’’அண்ணே அந்த பதிவையே கொஞ்சமா ஆல்டர் பண்ணி உங்க பதிவுல போடுங்க!
அப்புறம் சாருவுக்கு, நான் உங்கள் வாசகன் இதற்கு உங்கள் கருத்தை சொல்லுங்கள்னு ஒரு மெயில் பண்ணுங்க
அப்புறம் பாருங்க!
நீ யாரடா ஒரு எழுத்தாளனுக்கு ஆர்டர் போட! கேரளாவில் போய் பார் எல்லாம் எப்படி புட்டு சுடுறாங்கன்னு!
கொரிய படம் போல் வருமா!kim ki duk சின்ன வயசுல இல்லைபோலவே பிச்சை எடுத்து வாழ்ந்தார். ப்ரென்சு எழுத்தாளர்கள் ஆளுமை நிறைந்தவர்கள்.
இங்கே எவனுக்கும் எழுத தெரியாது, ஆனா ஒரு ஜட்டி 1100 ரூபா. நல்ல காலமா ஒரு குவாட்டர் 70 ருபாய்க்கு கிடைக்குது
அப்படின்னு தேவையற்ற வார்த்தைகளை இடையில் சேர்த்து பெருக்கி நாலு பக்கத்துக்கு ஒரு கட்டுரை வரும்
வராட்டி ஏண்டா நாயேன்னு கேளுங்க!’’
மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்
ஏனிந்த கோபம் பாலா?
எல்லா இளம் படைப்பளிகளுக்குமே, சம கால மூத்த படைப்பாளிகளிடம் ஒரு Possessiveness இருக்கும். மட்டுப் படுத்த இயலாத வசீகரம் தொடர்ந்து இழுக்கும்... அதை உங்களுடைய போக்கில் அழகாக சொல்லியுள்ளீர்கள்.
உங்கள் படைப்புகளைத் தேடிப் படித்துவிட்டு பின்னூட்டம் இடுகிறேன். நன்றி.
மிக்க நன்றி நண்பர்களே.
வாசகனுக்கும் படைப்பாளனுக்கும் உள்ள சிநேகிதத்தையும் உறவையும் தர்க்க ரீதியிலேயே பார்க்கத் துவங்கிவிட்டால் மிஞ்சுவது வெறும் வெறுப்புத்தான்.
Post a Comment