கடந்த சனிக்கிழமை 16.05.2009 கோலாலம்பூர் முத்தமிழ் படிப்பகத்தில் மூத்த எழுத்தாளர் சை.பீர்முகமதுவுடன் 5 மணி நேரம் கலந்துரையாடவும் நட்பு வட்டத்தில் பேசுவதற்கும் வாய்ப்புக் கிடைத்தது.
அநங்கம் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த நண்பர்களால் ஒரு கோப்பை தேநீர் முதல் தடவையாக தொடங்கப்பட்டது. அந்தக் கலந்துரையாடலில் இளம் எழுத்தாளர்கள், வாசகர்களான முனிஸ்வரன் குமார், சல்மா(தினேஷ்வரி), காமினி, மேலும் ஓவியர் சந்துரு, கவிஞர் யோகி, சிதனா அவர்களும் எங்களுடன் இணைந்து கொண்டார்கள்.
சை.பீர் அவர்கள் அவரின் ஆரம்பகால இலக்கிய அனுபவங்களையும் இலக்கிய நண்பர்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டார். மேலும் நான் அவரை அறிமுகப்படுத்தும்போதே பொதுமேடையில் பலதடவை விமர்சனத்திற்குட்பட்ட எழுத்தாளர், பலமுறை சர்ச்சையில் சிக்கிய எழுத்தாளர் என்று சொல்லி வைத்தேன். ஆனால் கடைசிவர சை.பீர் அவர் சர்ச்சைக்குள்ளான விஷயங்கள் பற்றி கேள்வி எழும்பவில்லை. (படைப்பாளன் அவனது படைப்புகளினாலே நினைவுப்படுத்தப்படுவான் என்பது போல)
யோகி அவரது தேவத்தேர் சிறுகதை வெறும் புனைவு மட்டுமே என்று வாதிட்டார். ஜனவரி மாதத்தில் உயிரெழுத்து இதழில் வெளிவந்த அவரின் சிறுகதை அது. சொர்க்கத்திற்குச் செல்ல தேவத்தேர் காத்திருக்கிறது. பஞ்ச பாண்டவர்களும் ஒரு கறுப்பு நாயும் அந்தத் தேரை நோக்கி நடந்து போக வேண்டும். எந்தக் காரணத்திற்காகவும் யாரும் திரும்பிப் பார்த்தல் கூடாது, அப்படி திரும்பிப் பார்க்க நேர்ந்தால் அவர்கள் தேவத்தேரில் ஏறுவதற்கான தகுதியை இழக்க நேரிடும் என்று தர்மன் கூறிவிட்டு நடக்கத் துவங்குகிறான். அதற்கு பிறகு ஒவ்வொரிவராக ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் அன்பால், ஆசையால் தேவத்தேர் ஏறும் வாய்ப்பை இழக்கிறார்கள். கடைசியில் தர்மனும் அந்தக் கறுப்பு நாயும் மட்டுமே தேவத்தேரில் ஏறி செல்வதாக கதை முடியும்.
இந்தக் கதை மகாபாரதத்தில் விடுப்பட்ட பகுதியை நான் என் புனைவின் மூலம் சில ஐயங்களுக்குப் பதில் அளிப்பதாக படைத்திருக்கிறேன் என்றார் சைபீர் முகமது. இது போன்ற பல சர்ச்சைக்கும் விவாததற்குள்ளான படைப்புகளைத் தந்தவர் அவர்.
அந்தத் தேநீர் கோப்பை நிகழ்வு குறித்தும் கலந்துரையாடப்பட்ட விஷயங்கள் குறித்தும் விரைவில் அடுத்த அநங்கத்தில் இடம்பெறும்.
கே.பாலமுருகன்
அநங்கம் இதழாசிரியர்
No comments:
Post a Comment