Saturday, June 20, 2009

கைத்தட்டி ஓர் உயிரை மீட்கலாமா? ‘பசங்க’ திரைப்படம்-1

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி, சுப்ரமண்யபுரம் புகழ் இயக்குனர் சசிகுமார் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் பசங்க திரைப்படத்தின் விமர்சனங்கள் மிக வேகமாக பலரால் எழுதப்பட்டு வருகின்றன.
பசங்க படம் நல்ல படமா என்கிற கேள்விக்கு உயிர்மையில் சாரு அந்தப் படத்தையொட்டி புகழ்ந்து எழுதிவிட்டார் என்பதற்காகவோ அல்லது ஆனந்த விகடன் இதழ் திரை விமர்சன பகுதியில் அந்தப் படத்திற்கு 50 புள்ளிகள் வரை அளித்துவிட்டதாலோ “பசங்க” திரைப்படத்தை அகிரா குரோசாவின் சினிமா அளவிற்குக் கொண்டு போய்விட வேண்டாம். அது ஆளுமைகளின் வாலைப் பிடித்துக் கொண்டு ஜால்ரா போடும் குழு செய்ய வேண்டியது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திரையிலிருந்தும் பெற்றுக் கொள்ள வேண்டியது அல்லது புரிந்து கொள்ள வேண்டியது தனித்துவமான அனுபவம் சார்ந்ததாகும்.

பசங்க படத்தின் இறுதி காட்சியில் சிறுவன் அன்புக்கரசு விபத்தில் சிக்கி சுயநினைவு இழக்கப்போகும் அபாய கட்டத்தில் மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கிறான். பல சினிமாக்காளில் இப்படி முக்கியமான அல்லது துணை கதாமாந்தர்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடுவது சலித்துப் போன ஒரு சம்பவம் சார்ந்த கிளைமேக்ஸ் காட்சியமைப்பாக இருந்தாலும், கொஞ்சம் சகிப்புத்தன்மையுடன் அதைக் கடந்து வந்து, அந்த இறுதி கட்ட காட்சியில் அன்புக்கரசை மீண்டும் சுயத்திற்குக் கொண்டு வர அவனின் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் அவனுடைய எதிரி சிறுவன் ஜீவானந்தமும் மேற்கொள்ளும் வைத்தியம், “கைத்தட்டல்தான்” என்பதை ஆச்சர்யத்துடன் பார்க்க வேண்டிய சூழலைப் புரிந்து கொள்ள முடியும். இன்று நம்முடைய சக மனிதர்களின் வெற்றிக்குக்க்கூட நாம் மறுக்கும் அந்தக் கைத்தட்டல்தான், அன்புக்கரசின் உயிரை மீட்டுக் கொண்டு வருகிறது.

நீங்கள் எப்பொழுது கடைசியாக ‘உண்மையாக” கைத்தட்டினீர்கள்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உங்களுடன் இருக்கும் சக உறவுகளுக்காக எப்பொழுது நீங்கள் கைத்தட்டி வரவேற்றுள்ளீர்கள்? கைத்தட்டல் வெறும் இரு கைகள் சேர்ந்து ஒரு ஓசையை எழுப்பும் வேலையா? அந்த ஒவ்வொரு ஓசையும் ஒரு உயிரை உற்சாகப்படுத்துகிறது, பரவசம் கொள்ளச் செய்கிறது, அவனை அங்கீகரிக்கிறது. கைத்தட்டல் என்பதை அவ்வளவு சாதரணமான ஒரு செயலாக நினைத்துவிட முடியாது.

பசங்க திரைப்படத்தில் சிறுவன் அன்புக்கரசின் அம்மா அவனின் வளர்ப்புமுறையைப் பற்றி சொல்லும் இடத்தில், கைத்தட்டல் அவனுடைய ஒவ்வொரு வயதிலும் அவனை அங்கீகரித்திருக்கிறது அவன் செயல்பாடுகளைத் துரிதப்படுத்திடுக்கிறது, கைத்தட்டி அவன் எழுந்து நடந்திருக்கிறான், கைத்தட்டி அவன் ஓடியிருக்கிறான், அவனுடைய ஒவ்வொரு சாகத்திற்குப் பின்னாலும் பலரின் கைத்தட்டல் ஒலித்துக் கொண்டே இருந்திருக்கிறது. பிறகொரு வயது வந்ததும், கைத்தட்டலைக் கேட்டு வாங்கும் மனநிலைக்கு வந்துவிடுகிறான்.

பசங்க படம் முழுவதும் சில துல்லியமான இடங்களில் சக மனிதர்களை அங்கீகரிப்பது எவ்வளவு நுட்பமான புரிதல் என்று கற்பிக்கப்பட்டே வருகிறது. பள்ளியில் நடக்கும் ஓட்டப்பந்தய போட்டியில் அன்புகரசின் வெற்றிக்காக அவனுடைய குடும்பமே அவனுடன் சேர்ந்து கைத்தட்டிக் கொண்டே ஓடும் போது, உடல் சிலிர்த்து சொல்ல முடியாத ஒரு அனுபவத்தைப் பெறுகிறது. நம்முடைய கைத்தட்டல் பிறரை எப்படியெல்லாம் வாழ வைத்திருக்கிறது என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ஒருவேளை நம் பட்டியலில் யாருமே இல்லாமல் இருக்கலாம். இந்தக் கைகள் ஏன் கைத்தட்ட மறுக்கிறது? அங்கீகாரத்திற்காக ஏங்கும் மனதிற்கு வயது கிடையாது. பலர் இன்று நேர்மையாகவும் குறுக்கு வழியிலும் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். டத்தோ பட்டம் என்கிற சமூக அங்கீகாரத்தை கொஞ்சம் பணம் கட்டினாலே இன்று வாங்கிவிடலாம். இன்னும் கொஞ்சம் நாட்களில் பாசார் மாலாம்( இரவு சந்தையில்) “இங்கு பட்டம் பதவிகள் விற்கப்படும்” என்கிற விளம்பரம் வந்தாலும் அதற்கும் ஒரு கூட்டம் அலைமோதும்.

அரசியல்வாதிகளை விட்டுத்தள்ளுங்கள். நம்முடனே இருந்து நம்முடனே வாழும் சக மனிதர்களைப் பாருங்கள். அவர்களின் வெற்றியில் நாம் பங்கு கொள்ளும் முதல் கட்டமே ஒர் கைத்தட்டல்தான். சினிமாவில் நமிதாவின் குலுங்களுக்குக் கைத்தட்டுகிறோம், ரஜினி அவரின் தோப்பா முடியை சீவினால் கைத்தட்டுகிறோம், விஜயகாந்தின் வசனங்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்து நகைச்சுவையாகக் காட்டினால் கைத்தட்டுகிறோம் பிறரை அவமானப்படுத்துவதிலும் கேலி செய்திலும் காட்டும் அக்கறை ஏன் பிறரை அங்கீகரிப்பதில் முடமாகி சுருங்கிக் கொள்கிறது?

தெரிந்தும் தெரியாமலும் நாம் செய்யும் புறக்கணிப்பு, அங்கீகரிக்க மறுக்கும் நம் மனம் நமது வாழ்வில் ஒரு காலி இடத்தை விட்டுவிட்டு நகர்ந்துவிடும். காலம் முழுவதும் அந்தக் காலி இடம் நம்மை நிரப்பிக் கொண்டே இருக்கும். நம்முடைய இயலாமைகளை அது உச்சரித்துக் கொண்டே இருக்கும். சக மனிதனை சிறு அளவில்கூட அங்கீகரிக்க இயலாத நமக்குள்ளே சுருங்கிப் போன நம்முடைய மனநிலையை நிரப்பிக் கொண்டே இருக்கும். அந்தக் காலி இடம் நிரம்பி வழியும் ஒரு கணத்தில் இந்தச் சமூகம் நம்முடைய சுயத்தைத் தெரிந்துகொள்ளும்.

கைத்தட்டுவதற்காக நீங்கள் அரசியல் கூட்டங்களுக்கோ, சமயச் சொற்பொழிவுகளுக்கோ வரித்துக் கொண்டு செல்ல வேண்டாம். சுற்றிலும் பாருங்கள், உங்களின் கைத்தட்டலுக்காகப் பலர் ஏங்கித் தவிக்கிறார்கள். உங்களின் கைத்தட்டிலின் மூலம் அவர்களை மீட்டெடுங்கள். முடியும்.

ஆக்கம்
கே.பாலமுருகன்
மலேசியா
21 comments:

உண்மைத்தமிழன் said...

உங்களுக்காக நான் கை தட்டுகிறேன்..

வாழ்க பாலமுருகன்..!

சின்னப்பயல் said...

இதை நான் கைதட்டி வரவேற்கிறேன்..!

நாமக்கல் சிபி said...

என்னுடைய கிளாப்ஸ் உங்க ஆக்கப்பூர்வமான இந்த கட்டுரைக்கு!

நாமக்கல் சிபி said...

//பள்ளியில் நடக்கும் ஓட்டப்பந்தய போட்டியில் அன்புகரசின் வெற்றிக்காக அவனுடைய குடும்பமே அவனுடன் சேர்ந்து கைத்தட்டிக் கொண்டே ஓடும் போது, உடல் சிலிர்த்து சொல்ல முடியாத ஒரு அனுபவத்தைப் பெறுகிறது.//

நானும் இதை உணர்ந்தேன் படம் பார்க்கும்போது!

Muruganandan M.K. said...

உங்கள் பதிவிற்கு சாதாரண கை தட்டல் அல்ல. கரகோஷம் எழுப்புகிறோம்.

ராஜ நடராஜன் said...

படம் பார்க்கிறேன்!

Thekkikattan|தெகா said...

படத்தை நல்லா உள் வாங்கி பார்த்திருக்கீங்கன்னு தெரியுது.

எளிமையான ஒரு நல்ல படம்!

வெண்பூ said...

அற்புதமான பார்வை பாலமுருகன். உங்களுக்காகக் கைத்தட்டுகிறேன்..

thamizhparavai said...

அழகான, தேவையான கட்டுரை நண்பரே...
படம் பார்க்கையில் எனக்கெழுந்த உணர்வுகளை உங்கள் எழுத்தில் கண்டேன். நன்றி...

ஜோசப் பால்ராஜ் said...

இப்ப தான் அந்த படத்த பார்த்துட்டு வர்றேன். மிகச் சரியா எழுதியிருக்கிங்க. வாழ்த்துக்கள் .

( வாழ்த்துக்கள் = கைத் தட்டல்)

கே.பாலமுருகன் said...

உண்மை தமிழன் - சின்னப்பையல்- நாமக்கல் சிபி - முருகானந்தன் - ராஜ நடராஜன் - வெண்பூ - தென்கிட்டன் - தமிழ் பறவை - ஜோசப் அனைவரின் பதிவுக்கும் நன்றி நண்பர்களே.

தமிழ் சினிமா மாற்று முயற்சியில் இருக்கின்றது. பசங்க படத்தில் இன்னும் நிறையவே சொல்ல வேண்டிய அம்சங்கள் உண்டு.

* சக நண்பர்களை அவ்வபோது அங்கீகரியுங்கள். அவர்கள் உங்களுக்கு அருகில் அதற்காக ஏங்கலாம்.

பாலமுருகன்

நாமக்கல் சிபி said...

//சக நண்பர்களை அவ்வபோது அங்கீகரியுங்கள். அவர்கள் உங்களுக்கு அருகில் அதற்காக ஏங்கலாம்.//

நல்ல மெசேஜ்! சிந்திக்க வேண்டிய விஷயம்!

இத்தனை நாளா இது ஒரு விஷயாகவே நினைச்சிப் பாத்திருக்க மாட்டோம்!

"பசங்க" - நம்மை சிந்திக்க வெச்சிருக்கு!

சென்ஷி said...

கலக்கல் பாலமுருகன்..

உங்க விமர்சனத்தை நானும் கைத்தட்டி ஆமோதிக்கறேன்!

//* சக நண்பர்களை அவ்வபோது அங்கீகரியுங்கள். அவர்கள் உங்களுக்கு அருகில் அதற்காக ஏங்கலாம்.//

:) நல்லாயிருக்குது!

Tamilvanan said...

// நீங்கள் எப்பொழுது கடைசியாக ‘உண்மையாக” கைத்தட்டினீர்கள்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். //

சில நிமி்டங்களுக்கு என் சிந்தனையை சிலையாக்கிய வரிகள்.

நல்ல பதிவு.

அன்பேசிவம் said...

நண்பா இதை நாங்கள் ஆறுபேர் படித்துகொண்டிருக்கிறோம், நல்ல பாசிடிவ் அப்ப்ரோச் உங்கள் எழுத்துக்களில். நாங்கள் கைதட்டுகிறோம் உங்களுக்காக

cheena (சீனா) said...

அன்பின் பாலமுருகன் - நல்லதொரு இடுகை எனப் பாராட்டி - கை தட்டிப் பாராட்டி - நல்வாழ்த்துகள் கூறுகிறேன்

கே.பாலமுருகன் said...

சென்ஷி , முரளிதரன், சீனா, தமிழ்வாணன் பதிவுகளுக்கும் கைத்தட்டலுக்கும் நன்றி நண்பர்களே.

//கைத்தட்டல் ஓசைகள் எங்கும் ஒலிக்கத் துவங்கிவிட்டதே//

உங்களுக்காக நானும் கைத்தட்டி வரவேற்கிறேன்.

பதிவன் said...

நல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள்.

படத்தைப் பற்றிய உங்களுடைய அவதானிப்பு நன்று. உண்மையில், 'பசங்க' படம் (பெரியவர்கள் என்று சொல்லிக்கொள்ளும்) நமக்கானது.

மதன் said...

படம் பார்க்கவில்லையென்றாலும், உங்கள் பதிவை ரசித்தேன்! வாழ்த்துக்கள்!

கானகம் said...

உண்மையான எழுத்து எப்போதும் நல்ல வரவேற்பைப் பெறும் என்பது உங்களது பசங்க விமர்சனத்திற்கும் அதையொட்டிய நமது சக வலைப்பதிவர்களின் கைதட்டிலும் தெரிகிறதே.. நான் கைதட்டுவதை மிகவும் ரசிப்பவன்.. எனது நண்பனின் மகன் (2 வயது) காரில் சீட் பெல்ட் அவனுக்குப் போட்டதும் எல்லோரும் கைதட்டினால் அழாமல் இருப்பான்.. இல்லையெனில் அதை எடுத்துவிட வேண்டும் என அடம்பிடிப்பான்.. ஏதோ பெரிய சாதனையை அவன் செய்து விட்டது மாதிரியும் அதை நாங்களெல்லாம் பாராட்டுவதுபோலவும் நினைத்துக்கொள்வான்.. யாரவது கைதட்டவில்லையெனில் மாமா..மாமி..அப்பா..அம்மா என கைகாட்டீக்கொண்டே இருப்பான் எல்லோரும் ஒரே சமயத்தில் தட்டினால் புண்ணகை மாறாமல் உட்கார்ந்து வருவான்.. நல்ல பதிவு.. உங்களது மற்ற பதிவுகளும் வித்தியாசமாக இருக்கின்றன..கூட்டத்தில் கோவிந்தாவாக இல்லாமல்.. பாராட்டாய்த்தான் சொல்கிறேன்...

கே.பாலமுருகன் said...

பதிவன், மதன், கானகம் உங்கள் பதிவிற்கு நன்றி.

@கானகம், குழந்தைகளை எப்பொழுதும் நாம் அங்கீகரித்து கொண்டே இருக்க வேண்டும். இது அவர்களின் அடுத்தகட்ட செயல்பாடுகளைச் செம்மைப்படுத்தும். உளவியலின் படி பாராட்டுதல், கைத்தட்டுதல் மிகச் சிறந்த செயலாகும்.