Monday, June 29, 2009

புடுராயாவில் உறங்கிக் கொண்டிருப்பவர்கள்

மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூர். அங்கிருக்கும் ஒரு மிகப் பெரிய மையப் பேருந்து நிறுத்தம்தான் புடுராயா. எப்பொழுதும் பயணிகளால் நிரம்பி வழியும் இரண்டுமாடி கடட்டம். கீழ் தளத்தில் பேருந்துகள் வந்து நிற்க, மேலே பிளாட்பாராத்தில் பயணிகள் காத்திருப்பார்கள். அறிவிப்பு வந்ததும் கீழே இறங்கி ஓட வேண்டும். இரைச்சலுடன் ஒருவரை ஒருவர் முந்தி கொண்டும் இடித்துக் கொண்டும் எப்பொழுதும் நகர்ந்து கொண்டே இருப்பார்கள்.

மேலும் நாம் உள்ளே நுழைந்தவுடன் பேருந்து டிக்கெட் விற்கும் ஆசாமிகள் நம்மை மொய்க்க தொடங்கிடுவார்கள். நாம் போக விரும்பாத ஊரின் பெயரெல்லாம் சொல்லி “அங்க போக போறிங்களா? பஸ் 11மணிக்கு” என்று இம்சிப்பார்கள். கையைப் பிடித்து வழுக்கட்டாயமாக இழுக்காத குறைதான்.

புடுராயாவின் பிளாட்பாரத்தில் நான்கு சதுர வடிவத்தில் இருக்கைகள் பல்லிங்கு கற்களால் போடப்பட்டிருக்கும். நேற்று கோலாலம்பூரிலிருந்து இல்லம் திரும்பும் வழியில் புடுராயாவில் இரண்டு மணி நேரம் இருக்க வாய்ப்புக் கிடைத்தது. வழக்கமாக அந்த மாதிரி தருணங்களில் கோலாலம்பூர் நண்பர்களை அழைத்து இலக்கியம் அரட்ட்டையடிப்பது உண்டு. இந்த முறை யாரும் சிக்கவில்லை. ஒருவர் கடைசிவரை தொலைபேசி அழைப்பை எடுக்கவே இல்லை, மற்றொரு நண்பர் இரவு 11வரை நகர முடியாது என்று சொல்லிவிட்டார், மற்றொருவர் வாய்ப்பே இல்லை என்று சொல்லிவிட்டதால் இரண்டு மணி நேரம் புடுராயாவில் அமர்ந்து கொண்டு ஏ1எச்1 காய்ச்சல் பரவிவிடுமோ என்கிற சந்தேகத்துடன் பெரும் கூட்டத்தில் ஒருவனாக அமர்ந்திருக்க வேண்டியிருந்தது.

பயணிகள் கூட்டம் குறைய துவங்கியதும் எங்கிருந்தோ சில மலாய்க்கார கிழவர்கள் கையில் அட்டை பெட்டியுடன் அங்கு வரத் துவங்கினார்கள். எற்கனவே பழகி போன ஒரு நடவடிக்கையைப் போல, இருக்கைகளில் அட்டை பெட்டிகளை விரித்து படுத்துக் கொள்ளத் துவங்கினார்கள். அவர்களுக்குள் எப்பொழுதோ யார் எங்கு படுக்க வேண்டும் என்கிற ஒப்பந்தம் எடுக்கப்பட்டிருக்கும் போல, மிக நேர்த்தியாக அவர்களுக்கான இருக்கைகளில் சாவகாசமாக படுத்துக் கொண்டு உறங்கத் துவங்கினார்கள்.

அருகில் நின்று கொண்டிருக்கும் அல்லது நடந்து கொண்டிருக்கும் பயணிகளை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. புற உலகைப் பற்றி கொஞ்சமும் அக்கறையில்லாமல் உறங்கிக் கொண்டிருக்கும் இவர்கள் யார் அல்லது எங்கிருந்து வந்திருப்பார்கள்? இப்படிக் கேள்விகள் எனக்குள் நெளியத் துவங்கின.

சில மனிதர்கள் அவர்களை வெளிப்படுத்திக் கொள்ளாதவரை அவர்கள் குறித்த இரகசியங்களும் அதிசயங்களும் நம்மை அல்லது நமக்குள் ஒரு பிரமிப்பாக நெளிந்து கொண்டே இருக்கும் போல.


அன்புடன்
கே.பாலமுருகன்
மலேசியா

1 comment:

Joe said...

யோசிக்க வைத்த இடுகை.

பளிங்கு என்பதை பல்லிங்கு என்று தவறாக எழுதியுள்ளீர்கள்.