Monday, July 13, 2009

பாகம் 2 - மரபொழுங்குடன் மரபைக் கற்றவன் மட்டுமே தமிழ் படைப்பாளி (மற்றவன் பைத்தியம்) – மறைமலை இலக்குவனர்

நவீன இலக்கியம் குறித்த தனது கல்வியின் தேடலில் கிடைத்த கல்வியறிவுடன் இலக்கியத்தை அணுகிவிடலாம் என்று பேராசியர் பெருந்தகை மறைமலை அவர்கள் தனது நவீனத்துவம் சார்ந்த கருத்துகளை முன்மொழிந்தார். கீழே சந்தை, அறைக்கு வெளியே தண்ணீர் தேங்கிக் கிடக்க, படிகளில் சந்தையின் சாயல், என ஒரு இறுக்கமான சூழலில் இப்படியொரு பாடத்தைக் கறக வேண்டுமா என்று தோன்றியது. இருந்தும் கல்வி சார்ந்தவர்கள், பின்நவீனத்துவம் மற்றும் பல இசங்களை இரசங்களாகவும் பாடமாகவும் கரைத்து குடித்து நவீன இலக்கியவாதிகளின் மீது வாந்தி எடுக்கும் இவர்களைப் போன்றவர்களின் கருத்துகள் எப்படி உள்ளன என்பதையும் அறிந்துகொள்ள வாய்ப்பாக இருந்தது.

1. “மரபைக் கற்றவன் மட்டுமே தமிழ் படைப்பாளியாக இருக்க முடியும், மரபு தெரியாதவன் எப்படியொரு தமிழ்ப் படைப்பாளியாக இருக்க முடியும்” என்ற முதல் கருத்தை அவர் முன்வைத்தார். இதையே நான் சிங்கப்பூர் சென்றிருந்தபோது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் மிகவும் நட்புணர்வுடன் கூறினார், “செவ்வியல் இலக்கியங்களைப் படித்துவிட்டு எழுத வருவது உங்களுக்கு தமிழ் எழுத்தை/படைப்பை மேலும் ஆழமாக விமர்சிக்கவும் படைக்கவும் முடியும்” என்று.

பேராசிரியர் கடுமையாக ஒரு வரையறையாக முன்வைத்த ஒரு கருத்தை எஸ்.ரா மிகவும் எளிமையான தொனியில் நட்புடன் முன்வைத்தார். மரபைக் கற்பது நல்ல விஷயமாகும், நமது பாரம்பரியத்தையும் தொன்ம இலக்கியங்களையும் கற்றுக் கொள்வது, சரித்திரத்தைக் கற்றறிந்து கொள்வதற்கு சமானம். ஆரம்பபள்ளி முதலே “வரலாறு” அல்லது “சரித்திரம்” பாடம் தொடங்கிவிடுகிறதே. ஆனால் மரபைக் கற்றவன் மட்டும்தான் படைக்க முடியும் என்பது மேல்தட்டுக் கல்வியாளர்கள்/விமர்சகர்களின் அழுத்தமான ஒரு கட்டளையாகத் தெரிகிறது. மெத்த படித்தவர்கள், தன் உயர்கல்விக்காக செவ்வியல் இலக்கியங்களோடு மன்றாடிவிட்டு வந்தவர்களெல்லாம் தனது கல்வியறிவை வைத்துக் கொண்டு வாழ்வின் அசல் படைப்பாளியைக் கூறு போட நினைப்பதோ அல்லது வரையறை அளித்து அவனை நிராகரிக்க நினைப்பதோ அபத்தம்.

2. மரபைக் கற்று, மரபோடு தேய்ந்து மரபோடு தொய்ந்து, மரபு ஒழுங்குடன் அளிக்கப்படும் புதிய முயற்சிகள்தான் “மோடர்னிஷம்” என்று அவர் கருத்தை முன் வைத்தார். ஆனால் மரபு கொடுக்கும் இறுக்கமான வடிவங்களைத்தான் உடைத்து எளிமையாக்கி மனிதனோடு நெருங்க வைக்கிறார்கள் நவீன படைப்பாளிகள். பாமரனும் கவிபாட வேண்டும் என்பதற்காகத்தான் புதுகவிதை வடிவம் மரபு வடிவத்திலிருந்து உடைந்து வந்தது. மரபு தவறென்று யாரும் சொல்ல கிடையாது, மரபின் வடிவம்தான், தற்காலத்து சிந்தனை வெளிப்பாடுகளுக்கு சரியான இருப்பைக் கொடுப்பதில் தோல்வி அடைகிறது என்று சொல்லப்பட்டது. அதன் மறு உருவாக்கமே நவீன படைப்புகள்.

பேராசிரியர் சொல்வதைப் பார்த்தால், மணிமேகலை, சிலப்பதிகாரம், தொல்காப்பியம், அகநாணுறு, புறநாணுறு, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சங்கப் பாடல்கள், இப்படியாக எல்லாவற்றையும் நாம் பாடமாக எடுக்க வேண்டும். வாழ்நாளில் பாதி வயதைத் தாராளமாக செலவழித்து இதையெல்லாம் படித்துக் கரைத்து குடித்துவிட்டு வெளியே வரும்போது நாம் படைப்பதற்கோ எழுதுவதற்கோ எதுவும் இல்லாமல், நடைமுறை சார்ந்த எல்லாவற்றிலிருந்தும் பல வருடங்களுக்குப் பின் துண்டிக்கப்பட்ட ஜடமாக வந்து விழ வேண்டியதுதான்.

மரபைக் கற்பதில் எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. என்னால் முடிந்த மட்டும் அகநாணுறூ / புறநாணுறு பாடல்களை விரும்பி வாசித்துக் கொண்டிருக்கிறேன். சிலப்பதிகாரத்தைக் கல்லூரி காலத்தில் பாடமாகப் படித்தேன். நம் மூதாதையர்களின் வாழ்வு அது. அதைக் கற்று தெரிந்துகொண்ட பின் அதை வேண்டாம் என்று நீக்குவதற்கும் நமக்கு உரிமை உண்டு. பேராசிரியர் சொன்னார், “பிடிக்கிறதோ இல்லையோ அது இரண்டாம் பட்சம் ஆனால் மரபைக் கற்பது ஒரு எழுத்தாளனுக்கு அடிப்படை தகுதியாகும். அப்படியென்றால் எழுத்தாளனாக ஆக வேண்டுமென்றால், நீங்கள் உங்கள் சமூகத்தில் வாழ்ந்து நடைமுறையின் அக புற கட்டமைப்புகளை உள்வாங்கிக் கொண்டு எழுத வேண்டியதில்லை, மணிமேகலையைப் படித்து அதை தாளம் தப்பாமல் ஒப்புவிக்க தெரிந்தாலே போதும், எழுத்தாளராகிவிடலாம். ஆஹா நல்ல பள்ளிப் படிப்பு.

-தொடரும்- மூன்றாம் பாகம்

கே.பாலமுருகன்
மலேசியா

2 comments:

இளைய அப்துல்லாஹ் said...

பாலமுருகன் உங்கள் எழுத்துக்கள் படிக்கிறேன் மிக நன்றாக இருக்கிறது

கே.பாலமுருகன் said...

நன்றி நண்பரே. பதிவிற்கு மிக்க நன்றி. தங்களின் வலைப்பதிவும் கவனத்திற்குரியது.
வாழ்த்துகள்