Saturday, July 11, 2009

அலைந்து திரிவது ஒரு மாபெரும் பயணம் – அர்த்தமற்ற பயணங்கள்
மாபெரும் போராளி சே குவாரா தனது மோட்டார் பயணத்தின் போது 3000க்கும் மேற்பட்ட மைல்கல் கடந்து பயணித்த போதுதான் தனக்கான வாழ்வின் மகத்துவங்களையும் தனது வெளியையும் அதன் அர்த்தங்களையும் கண்டைகிறார். பயணம் அவரின் வாழ்வின் தடத்தை மாற்றியமைத்தது. போலிவியா காட்டுக்குள் இருந்தபோது அவரின் நாட்குறிப்புகள் அவரின் வாழ்வின் துல்லியமான பகுதிகளையும் உணர்வுகளையும் அவர் அலைந்து திரிந்த ஒவ்வொரு சுவடுகளுக்கும் அப்பால் படிந்திருக்கும் அனுபவங்களையும் காட்டும். பயணம் செய்வது நம் வாழ்வின் ஒரு முக்கியமான பகுதியாகும். ஒவ்வொருநாளும் பல மனிதர்கள் பல இடங்களுக்குப் பல காரணங்களுடன் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இதுநாள்வரையில் நீங்கள் மேற்கொண்ட பயணங்களை நினைவுகூற முடியுமா? அந்த ஒவ்வொரு பயணங்களிலும் நீங்கள் சந்தித்த மனிதர்களையும் சம்பவங்களையும் அதன் பிறகு அவதானித்துள்ளீர்களா? அவசரமாக எல்லாவற்றையும் கடந்துபோகும் சுபாவத்தினாலேயே பல பயணங்களை தினசரி கடமையைப் போலவே பாவித்துக் கொண்டு மறந்தும் துறந்தும் விடுகிறோம். பல மேதைகள் பயணம் செய்வதை விரும்புகிறார்கள், நேசிக்கிறார்கள். பலரின் வாழ்வை அர்த்தமுள்ளாக்கியதே அர்த்தமற்ற பயண்ங்கள்தான் என்றால் நம்ப முடியுமா?

அதென்ன “அர்த்தமற்ற பயணம்”? எந்தவித நோக்கமுமில்லாமல் அலைந்து திரிவது, தேசம் விட்டு தேசம் தாண்டுவது, பேருந்து பிடித்து ஊர் ஊராகச் செல்வது, போகும் இடத்தை நிர்ணயம் செய்யாமல் பயணம் செய்வது. இப்படிப் பல வகையிலான பயணங்கள். காலையில் பேருந்து பிடித்தால் சரியாக 5 மணிநேரத்தில் போய் சேரும் இடத்தை வந்தடைந்துவிடலாம் என்று டிக்கெட் உட்பட எல்லாமும் நேர்த்தியாக அமைந்த பயணம் மிக பாதுகாப்பானவை, சலிப்பை ஏற்படுத்தக்கூடியவை. எங்கு சென்று சேர போகிறோம் என்கிற எல்லாவற்றையும் மிக ஒழுங்கமைப்புடன் தீர்மானித்துவிட்டு, பயணம் செய்வது எவ்விதத்திலும் பயனை அளிக்காது. நான் சொல்வது அம்மாதிரியான பயணங்கள் கிடையாது.

மத குருக்கள், ஞானிகள், எழுத்தாளர்கள், போராளிகள் என சமூகத்தைச் சேர்ந்த பலரும் தீர்மானிக்கப்படாத எத்தனையோ பயணங்களை மேற்கொண்டுள்ளார்கள். அவர்கள் வாழ்வைத் திட்டமிடலுக்கு அப்பாற்பட்டு வைத்து பார்க்கிறார்கள். ஹரே ராமா ஹரே கிருஷ்ண இயக்கத்தைத் தோற்றுவித்த மத குரு பிரபுபாதா அவர்கள் கிருஷ்ண நாமத்தைப் பரப்புவதற்காக தனியாக கப்பல் ஏறி கையில் சொற்ப பணத்துடன் லாஸ் ஏஞ்சலஸ் சென்றார். கடவுளின் மீதான நம்பிக்கை மட்டுமே அவரைக் கடல் தாண்டி செல்வதற்குப் பலத்தைக் கொடுத்திருந்தது. அவரது பயணத்தினால் கிருஷ்ண பக்தி உலகம் முழுவதும் சென்றடைந்தது. லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் அவர் முதலில் பக்தியைப் போதித்தது ஹிப்பிகளுக்குத்தான். ஹிப்பிகள் என்றால் போதைப் பித்தர்கள். அவர்களின் கவனங்களைப் பக்தியின்பால் திருப்பிவிட்ட மத குரு அவர்.

எனக்குத் தெரிந்து பல எழுத்தாளர்கள், இன்றும் வாழ்வின் இரகசியங்களையும் அதன் தனித்துவங்களையும் தேடி ஊர் ஊராகப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். பயணம் அவர்களின் படைப்பிலக்கியத்தை விரிவாக்குகின்றது. எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி போன்றவர்கள் வாழ்நாள் முழுவதும் அர்த்தமற்ற பயணத்திலேயே பக்குவம் அடைந்தவர்கள், தனக்கான படைப்பிலக்கிய வெளியைக் கண்டடைந்தவர்கள் என்றே சொல்லலாம். எஸ்.ரா உயிர்மையில் அவரும் கோணங்கியும் மேற்கொண்ட அதிசய பயணங்கள் பற்றி மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்.

உலக புகழ் பெற்ற ஜப்பானிய சினிமா இயக்குனர் அகிரா குரோசாவா ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு இப்படித்தான் பதில் அளிக்கிறார்.

“ஒரு சிறந்த சினிமாவைத் தருவதற்கு ஒருவர் என்ன செய்ய வேண்டும்? எதைப் படிக்க வேண்டும்?”

“எதையும் படிக்கக்கூடாது. இது பள்ளிப் பாடமல்ல. வீட்டை விட்டு தூரமாகப் பயணம் செய்து அலைந்து விட்டு வர வேண்டும். மூலை முடுக்குகளில் சுற்றி அலைய வேண்டும். வீடு வந்து சேரும் போது ஒரு நல்ல சினிமாவுக்கான எல்லாமும் உன்னிடம் இருக்கும்”

இனிமேல் ஏதாவது ஒருநாளில் ஒரு நல்ல அர்த்தமற்ற பயணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். காரணங்கள் எதுவும் அற்ற வெறுமனே சுற்றி அலைந்துவிட்டு வரக்கூடிய ஒரு பயணத்திற்காக உங்களைத் தயார் செய்யுங்கள். அது உங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும். நம்முடைய பரபரப்பான தினசரி அட்டவணை வாழ்வின் எல்லாம் துரங்களையும் ஒழுங்குகளையும் அறுத்து போட்டுவிட்டு, உங்களுக்காகப் பயணம் செய்யுங்கள். பயணம் உங்களுக்கான பாதையை அடையாளப்படுத்த வாய்ப்புகள் உண்டு.

கே.பாலமுருகன்
மலேசியா

4 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

என் தம்பி சொல்லுவான் இது சேகுவாரா கதைனு.. ஹீம்ம் நாம எல்லாம் எப்போ இப்படி படம் பாத்து..

Admin said...

அசத்திட்டிங்க...... தொடருங்கள்
வாழ்த்துக்கள்...

MJ said...

hi Bala, nalla pativu. eninum, artamatra payanam enra sollaadal kuraiyaanathupol padukirathu. Nokkatra payanam, ok. appuram, Srila Prabu Prabupatha oru matha guru endra ellaikul utpaduttakkoodiyavar alla enpathu en karuthu. neril virivaagap pesalam.

MJ

கே.பாலமுருகன் said...

சரிதான் மணி. நான் சொல்ல வந்த பயணம் அர்த்தமானவை, நோக்கமற்றவை என்று சொல்வதுதான் சரியானவை. மிக்க நன்றி.

மேலும் பிரபுபாதாவை ஆன்மீகவாதி என்று சொல்வதுதான் சரி. ஆன்ம தத்துவத்தை உலகிற்குப் போதித்தவர், எந்த மதத்தையும் சாராதவர். உண்மைதான். மன்னிக்கவும்.

பாலமுருகன்