Monday, August 3, 2009

ஆழ்நதியை நோக்கிய ஒரு மீன் குஞ்சின் நீந்துதல்



வணக்கம். நான் "பாட்டனுக்குத் தப்பி பிறந்த கே.பாலமுருகன்" சொல்வது என்னவென்றால்:

அறிவியல் நிபுணர்களும் உலக ஆராய்ச்சியாளர்ககளும் தோற்றுப் போகும் அளவிற்கு ஒரு விந்தையான கண்டுபிடிப்பொன்று நிகழ்ந்துள்ளது. முதலில் ஏதார்த்தமாக அதைக் கண்ணூற்ற பொழுது உண்மையில் வியந்து போனேன் அதன் விந்தையைக் கண்டு.

நவீன இலக்கியம் + பாலியல் = எச் 1 என் 1 பன்றிக்காய்ச்சல்



என்ற கண்டுபிடிப்பின் மூலம் ஒருவர் எல்லோரையும் மிஞ்சிவிட்டார். இனி பன்றிகாய்ச்சலுக்கான நோய் தடுப்பு சக்தியை உலக மருத்துவர்கள் தேடி அலைய வேண்டாம். நேராக இங்கு வந்தால் மலேசிய வலைப்பூ ஒன்றில் அதன் தீர்வு அமைக்கப்பட்டுள்ளது.
அதுவும் அந்தக் கண்டுபிடிப்பின் சூட்சமத்திற்குக் கீழே பன்றி இனத்தைக் கேலி செய்யும் வகையிலான ஒரு புகைப்படம் வேறு. பன்றிக்காய்ச்சல் பறவியதற்குக் கண்டிப்பாக பன்றி முழுக்காரணமாக இருந்திருக்க வாய்ப்பில்லாதபோது, அந்த நபர் பன்றியை நவீன இலக்கியத்தோடு இணைத்து பன்றியையும் இலக்கியத்தையும் கேலி செய்து தனது வன்முறையான பார்வையை (மேடையில் கூச்சல்போடும் கூச்சல்காரர்களுக்கு நிகரான) வெளிப்படுத்தியிருக்கிறார். மெத்த படித்தவர்கள் இப்படி ஒரு மிருக இனத்தை சூட்சமத்திற்குள் சொருகி தனது அறிவியல் அறியாமையின் மூலம் மிருகவதை செய்ய முற்படுகிறார். ஒரு மிருகத்தை அவமானப்படுத்தும் ஒருவர் மிருகத்திற்கு நிகரானவர் என்று சொல்லலாமா? திருக்குறளில் எங்காவது இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

“தின்றுகொழுத்த அந்த அறிவுகெட்டப் பன்றிகள்தான் இதனை அறியுமா?” மலேசிய வலைப்பூ ஒன்றில், ஒரு பதிவர் சொன்னது.

பன்றியும் ஒரு மிருகம்தானே. அதை இப்படியொரு உவமைக்கு ஆளாக்கி தனது வெறித்தனத்தைக் காட்டியிருக்கும் இந்த நபரை என்ன செய்யலாம்? மதத்தைக் காட்டி ஒரு மிருகத்தை அரவனைப்பதும் இன்னொரு மிருகத்தை எட்டி உதைப்பதும், என்ன மனிதன் நீ? தமிழ் தமிழ் என்று கூச்சலிடும் நீ ஒரு வாயில்லா ஜீவனுக்கு ஒரு மரியாதையைக் கொடுக்க தெரியவில்லையா? பிறகென்ன தமிழ், தமிழ் கொடுத்த அறிவு? இதுதானய்யா தீண்டாமையின் முதல் படி. இந்தச் சிந்தனையை முதலில் நீக்க வேண்டும்.

“இது பின்நவீனத்துமல்ல”
என்கிற (http://bala-balamurugan.blogspot.com/2009/07/1_28.html) பகுதியில் ஒரு சமூகம் எப்படி அடக்குமுறை அரசியலின் மூலம் சிதைந்து பின்நவீனத்துவ வெளிப்பாடுகளை அடைந்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டினேன். அவர்களின் வாழ்வுக்கு அல்லது மேலாதிக்க சிந்தனாவாதிகளின் ஒடுக்குமுறையால் நம் தோட்டத்து மக்கள் அடைந்த எல்லைக்கு அவர்கள் எந்த மேற்கத்திய பின்நவீனத்துவத்தையும் நாடவில்லை. அப்படியிருக்க அந்தத் தோட்டத்து மக்களின் வாழ்வையும் நகர மனிதர்களின் இன்றைய வாழ்வையும் படைப்புகளில் கொண்டு வரும் எழுத்தாளன் மேற்கத்திய சிதைவிலிருந்து உருவான எந்த பின்நவீனத்துவத்தையும் மேற்கோளாகக் கொண்டு எழுத வேண்டிய அவசியம் இல்லாததால் இங்கு யாரும் பின்நவீனத்துவம் எழுதவில்லை என்று சொன்னேன்.

“எதோ ஒரு இடத்தில் ஏற்பட்ட பன்றிக்காய்ச்சல், எல்லைக் கடந்து நாடு கடந்து- கண்டம் கடந்து- கடல் கடந்து- வெளி கடந்து நம் நாட்டிலுள்ள ஒரு சிற்றூரிலுள்ள தமிழ்ப்பள்ளியில் வகுப்பறையில் பயிலும் மாணவனுக்குப் பன்றிக்காய்ச்சல் ஏற்படுதைக் கண்டு என்ன ஒரு விந்தை, என்ன ஒரு வியப்பு” என்று சொல்லும் ஒருவருக்கு உலகமயமாதலின் தன்மைகள் பற்றியும் உலகம் சிறு கிராமமாக மாறிவிட்டதன் பாதிப்புகள் பற்றியும் விழிப்புணர்வே இல்லை என்பது தெரிகிறது. வகுப்பில் 4ஆம் ஆண்டு பயிலும் மாணவனிடம் கேட்டால்கூட சொல்வான் இணையத்தின் பயன்பாடுகள் பற்றியும் அது உலகை எப்படி சுருக்கி ஒரு எலி நகர்த்தலில் நுழைந்து வெளியாகிவிடலாம் என்று. அப்படியிருக்க எங்கோ பரவும் ஒரு நோய் இங்கு வந்து அடைவதற்கான காரணத்தில் எந்த வியப்பும் இல்லை. ஒருவேளை விமானங்களே உருவாகாத ஒரு காலக்கட்டத்திலோ அல்லது உலக சந்தை விரிவாக்கமடையாத ஒரு பிற்காலத்திலோ இருக்க நேரும் மனிதனுக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருக்கக்கூடும். ஐயா கொஞ்சம் வெளியில் வாருங்கள். வியந்தது போதும். உங்கள் ஒப்புவமையும் கண்டுபிடிப்பும். . . .

உங்களிடம் (மேடை கூச்சல்காரர்களிடம்) பேசியும் விவாதித்தும் எந்தப் பயனும் இல்லை – மேலும் நவீன இலக்கியத்தை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று யார் வந்து அழுதது? மக்களிடம் என்னவேண்டுமானாலும் பிரச்சாரம் செய்து கொள்ளுங்கள் புரிய வைத்துக் கொள்ளுங்கள்- எல்லாம்வித முகத்திரைக் கிழித்தலுக்கும் விவாதங்களுக்கும் கடைசியில் காலமே பதில் சொல்லும்). ஒரு தனிமனிதனின் கருத்தும் பிரச்சாரமும் ஒப்புவமைகளும் சமூகத்திற்குள் பிரச்சாரமாக வரும்போது முதலில் பெரும் கவர்ச்சியை ஏற்படுத்தும் ஆனால் பிறகு அதன் தோலை உறித்துப் போட்டுவிட்டு எங்கோ ஒரு புதருக்குள் போய் ஒளிந்துகொள்ளும் பாம்பு போல் நெளிந்துவிடும்.இதுதான் வெறும் கூச்சலுக்கும் பிரச்சாரங்களுக்கும் ஏற்படும் விளைவுகள்.

மரபிலக்கியங்களில் ஆபாசம் என்று எதுவுமே இல்லை, காரணம் ஒவ்வொரு பாலுறுப்பு பயன்பாடுகளையும் கடந்து அங்கு வந்து பதிவாகுவது வெவ்வேறு நிலப்பரப்பில் மதமின்றி வாழ்ந்த ஒரு சமூகத்தின் அன்பும் வாழ்வும்தான். ஆனால் பாலியல் சொற்களைக் கண்டாலே அலறும் சிலருக்காக, சங்க இலக்கியங்களிலும் பாலியல் சொல்லாடல்கள் பயன்படுத்தியிருப்பதைச் சுட்டிக் காட்டினேன். எப்படி இளம் முலை என்கிற சொல்லைக் கடந்து போக உளவியல் அணுகுமுறை தேவைப்படுகிறதோ அதேபோல நம் நாட்டு நவீன இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சில பாலியல் சொல்லாடல்களையும் கடந்து போவதற்கு சமக்காலத்து பற்பல அச்சுறுத்தல்கள் தடையாக இருப்பதைக் காண முடிகிறது. காமக்கிளர்ச்சியை ஏற்படுத்தும் எழுத்துக்கும் யதார்த்தவாத எழுத்துக்கும் வித்தியாசம் தெரியாத பரந்துபட்ட வாசிப்பாளுமை இல்லாதவர்களுக்கு தவறான கடுமையான ஒப்புவமைகள்தான் மேற்கோளாக வந்து சேரும்.

“யதார்த்தவாதம்” என்பதும் “இயல்பியல்வாதம்” என்பதும் முரண்பாடானது கிடையாது. இலக்கியம் காலத்தையும் வாழ்வையும் பதிவு செய்யும் களம் என்பதால், அதில் சில புனைவுகளும் கற்பனைகளும் உவமைகளும் அழகியலுக்காகச் சேர்ந்தே வரும். அதனுடன் நன்னெறி கட்டமைப்புகள் பிரச்சாரத்தன்மைகள் என்றும் பிற்காலத்தில் சேர்ந்து கொண்டவை. பிரச்சாரத்தன்மைகளையும் வலிந்து வந்து புகுத்துவதும் அறம் சார்ந்த வாதங்களையும் நீக்கிவிட்டு சமூகத்தின் கண்ணாடியாக ஒரு சமூகத்தின் தோல்வியையும் வீழ்ச்சியையும்கூட பதிவாக்கும் தன்மையுடன் வெளிப்பட்டதுதான் யதார்த்தவாதம். பிறகு அதற்கு எதிராகவும் பல முரண்பாடுகள் உருவாகின. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எல்லாம்வகையான இலக்கிய வடிவங்களுக்கும் எதிர்மறையான சிந்தனைகள் எழுவதும் இயல்பு. அதையே ஒரு வன்முறையாகப் பாவித்து மொழி சார்ந்த பிரக்ஞையின் வெறி ஆட்டத்துடன் போர்க்கொடி தூக்குவதும் மரண அடியெல்லாம் கொடுப்பதும் வீண் கூச்சல்.

ஒரு நவீன எழுத்து வகைத்தான் இளைஞர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கப் போகிறது என்று பயப்படும் ஒருவரின் விவாதம் சிறுப்பிள்ளைத்தனமாக உள்ளது. ஒரு எடுத்துக்காட்டுக்காக விஜயகாந்த் சொல்வது போல ஒரு கணக்கெடுப்பு. 100 சதவீத இளைஞர்களில், படித்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் ஒரு 50 சதவீதம், அதில் தமிழ் படித்தவர்கள் ஒரு 25 சதவீதம் என்றாலும், அதில் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் ஒரு 15 சதவீதம் என்றாலும், அதிலும் தீவிர வாசிப்புடையவர்கள் ஒரு 8 சதவீதம் என்றாலும் அதிலும் நவீன இலக்கியத்தைத் தேடி வாசிப்பவர்கள் ஒரு 5 சதவீதம் என்றாலும், இந்த 5 சதவீத இளைஞர்கள் என்ன முட்டாள்களா? இவ்வளவு தூரம் தனது வாசிப்பையும் தேடலையும் அகலப்படுத்தியவர்கள் என்ன மூளை இல்லாதவர்களா? நவீன இலக்கியத்தை வாசித்துச் சீரழிந்து போவதற்கு. புறஉலகின் பாதிப்புகள் எவ்வளவோ இருக்க இது என்ன சிறுபிள்ளைத்தனமான புரிதல் மற்றும் அளவுகோல்.

வகுப்பறையில், “கோழி குஞ்சு, மீன் குஞ்சு” என்று சொல்வதற்குக்கூட அஞ்சும் பயப்படும் அல்லது அதைச் சொல்லிவிட்டு சிரிக்கும் மாணவர்கள் இருப்பது இந்தச் சமூகம் எப்படி அவர்களை அடக்கி மதம் என்கிற பெயரின் புனித போர்வையால் போட்டு மறைத்து அச்சுறுத்தி வைத்துள்ளதைக் காண முடிகிறது. அப்படிப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து தலைநகரத்திற்குச் செல்ல நேர்ந்தபோது சினிமாத்தனமான ஆபாசங்களும் நிர்வாணப் புகைப்படங்களும் அச்சுறுத்தலாக இருந்த அதிர்வுகளை ஒரு இறுக்கமான கலாச்சார வெளிக்குள்ளிருந்து வியந்து பார்த்த ஒன்றைப் பதிவு செய்ய நேர்ந்தபோது பாலியல் சொல்லாடல்களும் அவசியமாகப்பட்டது. இதுவும் ஒரு உளவியல் பாதிப்பிலிருந்து வெளிவந்த உணர்வுகள்தான் என்று வைத்துக்கொள்ளலாம். தற்போதைய சூழலில் நம் இளைஞர்களும் மாணவர்களும் மிக சர்வசாதரணமாக இணையத்தளங்களில் நிர்வாண காட்சிகளை 3.00 வெள்ளி கட்டி பார்க்கும் அளவிற்கு வந்துவிட்ட கலாச்சார அச்சுறுத்துதலின் விளிம்பில் நின்றுகொண்டு இன்னும் இலக்கிய படைப்புகளைக் குறை கூறிக் கொண்டிருந்தால் வேலி கடந்த ஆடுகள் மேய்ந்த விளைநிலத்தின் மீதங்கள்கூட கிடைக்காது.

அடுத்ததாக “பாட்டனுக்கு தப்பிப் பிறந்த கே.பாலமுருகன்” என்று மிகவும் வன்முறையாக தனது சங்க இலக்கிய ஆளுமையைக் காட்டுவதற்காக பதிவு போட்ட “தமிழரன்” என்பவர் பெயர் தவிர வேறு எந்த அடையாளமும் இல்லாத கோழை. என் வலைப்பூவில் என்னைப் பற்றிய விவரங்கள் உண்டு, என் புகைப்படமும் உண்டு. தமிழரண் என்பவர் ஒரு ஆளா அல்லது அவரே பல பெயர்களின் அந்த வலைப்பூவிலேயே பின்னூட்டம் போட்டுக் கொண்டு கிளர்ச்சியடையும் ஒரு ஆசாமியா என்பது தெரியவில்லை. சங்க இலக்கியம் ஓர் ஆழ்நதியைப் போன்றது, அதில் இன்னமும் எனது சமக்காலத்தைத் தூக்கிக் கொண்டு நீந்தும் ஒரு மீன் குஞ்சுதான் நான். இதைச் சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்தத் தடையும் இல்லை. திமிங்கிலம் போல ஆழ்நதியின் ஆழத்தில் நீந்தும் எல்லாவற்ரையும் கரைத்துக் குடித்துவிட்ட அவரின் சங்க இலக்கிய எதிர்க்கருத்துகளுக்கு விரைவில் பதிலிடுவேன்.

(பின்குறிப்பு: கமலின் தசாவதாரம் படம் பாகிஸ்த்தானிய இஸ்லாமியர்களின் வாழ்வையும் தெலுங்கு இனத்தவரின் மொழி உணர்வையும் கேலி செய்த ஒரு சினிமாவும்கூட, மேலும் பெரியாரிசத்தை முன்னெடுக்க வேண்டும் என்கிற சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்தும் பழைய விவாதங்களைக் கொண்டு வந்தது. படம் முழுக்க துரத்துதலும் தப்பித்தலும் என (butterfly effect) என்கிற தியோரியைத் தவறாகப் பயன்படுத்திய சினிமா என்று பல திரை விமர்சகர்கள் விமர்சித்து பழைய கதையாகிவிட்ட ஒன்றை மலேசியாவின் ஒரு வலைப்பதிவாளர் மிகவும் புகழ்ந்து தனது விவாதங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும் கூத்து சிரிக்க வைக்கிறது.)

கே.பாலமுருகன்

6 comments:

Unknown said...

//நவீன இலக்கியம் + பாலியல் = எச் 1 என் 1 பன்றிக்காய்ச்சல்//

வேடிக்கைக்கு அளவே இல்லாமல் எதையெல்லாம் ஒப்பீடு காட்ட வேண்டும் என்ற சிற்றறிவு இல்லாம்ல் போய்விட்டதே.
தன்னை நியாயப்படுத்த "அறிவுகெட்ட பன்றிகள்// என்று சொலவது அவமானம்.

Unknown said...

//பன்றியும் ஒரு மிருகம்தானே. அதை இப்படியொரு உவமைக்கு ஆளாக்கி தனது வெறித்தனத்தைக் காட்டியிருக்கும் இந்த நபரை என்ன செய்யலாம்?//

இவர் தமிழ் போராளி என்று வேடமிட்டு, மனிதநாயத்தை இழந்தவர். எச் 1 ஏ 1க்கு பயந்து பன்றியைத் திட்டும் கோமாளி போல் பேசுபவரிடம் என்ன சொல்ல?
இதெல்லாம் சாததரண வேடிக்கைத்தான். இருந்தும் கண்டிக்க வேண்டும்.

கே.பாலமுருகன் said...

வணக்கம் கணேசன். உங்களைப் பற்றிய விவரத்தைப் பதிவிடுங்கள். வருகைக்கு நன்றி.
கூச்சலிடும் குரலுக்குப் பின்னே அமைந்துள்ள பின்அரசியல் பற்றி தெரிந்தால் போதும்.
அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.

குமாரின் சிதறல்கள் said...

//நவீன இலக்கியம்+ பாலியல் = பன்றிக்காய்ச்சல்//
அபாரமான கண்டுபிடிப்புத்தான். மேலும் ரொம்பவே பிரமித்து போன அவருக்கு "பன்றி" சின்னம் வைத்த ஒரு விருதை கொடுத்துட்டா எல்லாம் சரியாயிரும்.
பார்மூலா உருவாக்கியவர்கள் இதைப் பார்த்தாங்கனா செத்தே போயிருவாங்கப்பா.

Tamilvanan said...

//தற்போதைய சூழலில் நம் இளைஞர்களும் மாணவர்களும் மிக சர்வசாதரணமாக இணையத்தளங்களில் நிர்வாண காட்சிகளை 3.00 வெள்ளி கட்டி பார்க்கும் அளவிற்கு வந்துவிட்ட கலாச்சார அச்சுறுத்துதலின் விளிம்பில் நின்றுகொண்டு இன்னும் இலக்கிய படைப்புகளைக் குறை கூறிக் கொண்டிருந்தால் வேலி கடந்த ஆடுகள் மேய்ந்த விளைநிலத்தின் மீதங்கள்கூட கிடைக்காது.//

நடப்பினை இதை விட தெளிவாக சொல்ல முடியாது.

கே.பாலமுருகன் said...

@வாங்க குமார், யாருக்கு விருது கிடைத்தால் என்ன. . பதிவுக்கு நன்றி, நாகரிகமான முறையில் கருத்திடவும்.

@தமிழ்வாணன், தொடர் வருகைக்கு நன்றி நண்பரே.
நாம் யாருக்கும் எதிரியல்ல அல்லது அணி திரண்டு போராடவும் போவதில்லை. மாற்ரத்தைக் கண்டு பதறும் ஒழுக்கியல்வாதிகளின் புலம்பலுக்கு வரையறையே இல்லாமல் போகட்டும் நமக்கென்ன.