Tuesday, August 4, 2009

யாருக்காக எழுத்தாளன்? (புத்தக வெளியீட்டின் அரசியல்)

பிறரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவோ அல்லது பிறர் வடிக்க நினைக்கும் அடையாளமாகவோ ஓர் எழுத்தாளன் உருவாகுவது பிறரின் அரசியலை ஏற்று ஒரு பொம்மைப் போல ஆட்டிவைக்க தன்னை விற்றுவிடுவதற்கு சமம். இதற்கு முன் பிறரின் அதாவது எழுத்துலகில் முக்கியமான இடத்தை நிருவியிருந்த எழுத்தாளர்களின் வாயால் புகழப்பட்டாலே அதுதான் சிறந்த அங்கீகாரம் என்று நினைத்ததுண்டு. எழுதத் துவங்கி அங்கீகாரம் வேண்டி எதிர்ப்பார்த்து காத்திருந்த ஒரு மனநிலை அது. ஆனால் அதற்கு மாறாகவும் பல மூத்த சக எழுத்தாளர்களால் தூற்றப்பட்ட போது அதன் எதிர் தாக்கங்களையும் சந்திக்க நேர்ந்தது.

தூற்றப்படுவதும் தூக்கியெறியப்படுவதும் அரவனைத்துக் கொள்வதும் சமூக மனிதர்களின் அரசியல் அடுக்குகளிலிருந்து ஒவ்வொருமுறையும் தவறி வீழும் ஒரு சந்தர்ப்பம் போன்றவைத்தான். அதைப் பொருட்படுத்துவதால் புறக்கணிக்கப்படுவதன் பாதிப்புகளை அடையக்கூடும்.

எழுத்துலகில் யாருக்கும் தனிப்பட்ட உரிமையோ அதிகாரமோ இல்லை என்றுதான் நினைக்கிறேன். குழுவாத மனநிலையில் சிக்கிக்கொண்டவர்கள் ஒரு கூட்டமாக இருக்கக்கூடியவர்கள் சில சமயங்களில் கூட்டத்துடன் சேர்ந்து சிந்திக்க கூட்டத்துடன் சேர்ந்து கருத்துரைக்க, எப்பொழுதும் கூட்டத்தின் பால் ஈர்ப்புக் கொண்டு சுயத்தை இழக்கவும் நேரிடலாம். இதை ஒரேவகையில் சிந்திக்கக்கூடிய நண்பர்கள் என்றாலும் சில நண்மைகள் உண்டு. இலக்கியம் குறித்த கலந்துரையாடல், விவாதங்கள், பகிர்வு என்று அந்தக் கூட்டம் இலக்கியத்தை வளர்க்கவும் தன்னை மேம்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புண்டு. இதை ஆரோக்கியமாகவும் பார்க்கலாம்.

ஓர் எழுத்தாளன் தனது புத்தக வெளியீட்டிற்காக அரசியல்வாதிகளின் திகதிக்காக தேடி ஓடும்போதும் தவம் கிடக்கும்போதும் அவனைக் குறித்த சமூக பார்வையும் மதிப்பீடுகளும் மிகவும் காத்திரமாகவே விழுவதற்கு வாய்ப்புண்டு. இவன் யாருக்காக எழுதுகிறான், யாருக்காக இவன் எழுத்தாளன் என்கிற அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளான் என்ற கேள்வியும் எழுகிறது. மேலும் அவனின் இத்துனைக்கால எழுத்துகள் குறித்து சில ஐயங்களும் எழுவதுண்டு.

அன்மையில் கோலாலம்பூரில் ஒரு மூத்த எழுத்தாளரின் சிறுகதை தொகுப்பு வெளியீட்டிற்காகச் சென்றிருந்தேன். அவர் அழைத்தமைக்காகவும் நண்பர் என்கிற அடிப்படையிலும் அவருடைய அந்தச் சிறுகதை தொகுப்பு வெளியீட்டிற்காக இரண்டாவது முறையாகச் செல்ல நேர்ந்தது. ஏற்கனவே சிங்கப்பூரில் நிகழ்ந்த அதே எழுத்தாளரின் புத்தக வெளியீட்டிற்காகச் சென்றிருந்த போது பொன்னாடைகள் நிரம்பிய ஒரு சூழலில் கூட்டத்துடன் கூட்டமாக பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தபோது சில தவிர்க்க முடியாத மேடை நாடகங்களை அங்கும் காண வாய்ப்புக் கிடைத்தது. இருந்தும் அதை அவ்வளவாகப் பொருட்படுத்தும் அளவிற்கு பலமானவைக் கிடையாது. வெளி சக்திகளின் சில அரசியல் உந்துதல்களால் நிகழ்ச்சி அப்படியொரு கோனத்தில் சில சடங்குகளுடன் நடந்து முடிந்தது.

ஆனால் இங்கு மலேசியாவில் நடந்த அந்த வெளியீட்டு விழாவில் இரு பழைய நண்பர்களும் இன்னொரு அரசியல்வாதியின் பால்யமும் நினைவுக்கூறப்பட்டு, செண்டிமெண்ட்டல் போராட்டமே மிக நேர்த்தியாக நடந்து அரங்கேறியதைப் பார்க்க முடிந்தது. கொஞ்சம் செயற்கையான மேடை பேச்சுகள் நிறைந்திருந்தாலும் அன்றைய வெளியீட்டு வசூல் பல ஆயிரங்களைக் கடந்தபோது, ஆ ஆ ஒரு அரசியல்வாதியின் பேச்சும் வருகையும் விழாவிற்கு எப்படியெல்லாம் வலு சேர்க்கும் என்று அசைப்போட முடிந்தது. எனக்கருகில் இருந்த நண்பர்கள் வசூலைக் கணக்குப் பண்ணி வியந்தார்கள். அந்த மூத்த அரசியல்வாதி பேசிய பேச்சுக்காகவாது இவ்வளவு பணம் சேர்ந்திருப்பது வரவேற்கக்கூடியது. பாசக்கார நண்பர்கள் நட்பு பாராட்டிக் கொள்ள இதுவே மகா சந்தர்ப்பமென சில நூறு பேர்களை அழைத்து வந்திருந்த பிரமுகர்கள் எல்லோரையும் பேச வைத்து, நூலாய்வு அங்கம் ஒரு சிட்டுக்குருவியின் சிறு வருகைக்கு நிகராக நடந்து முடிந்ததையும் யாரும் கவனிக்காமல் விட்டிருக்கலாம்.

நண்பரும் சகோதருமான திரு.பாலுமணிமாறன் சிங்கையிலிருந்து வந்து நூலாய்வு செய்ய அவருக்குக் கொடுக்கப்பட்ட நேரம் 15 நிமிடங்கள்தான். ஒரு புத்தக வெளியீடு என்றால் அந்தப் புத்தகத்தைப் பற்றிய ஆய்வும் வாசகர்களுக்கு ஒரு சிறு புரிதலைக் கொடுக்கக்கூடிய கேள்வி பதில்களும் அல்லது எழுத்தாளரே தான் கதைகளை எழுதிய அனுபவத்தையும் பகிர்ந்துகொள்வது முக்கியமான அமசமாகும். ஆனால் அங்கு நடந்ததோ தலைவர் அவர்களின் அரசியல் பேச்சும், தி.மு.க பேச்சும்தான். இந்தியாவிலிருந்து வந்திருந்த ஒரு பேச்சாளர் அப்படித்தான் பேசினார். மேலும் பல இடங்களிலிருந்து பல எல்லைகளிருந்து முக்கியமான நன்கொடையாளர்களும் வரவழைக்கப்பட்டிருந்தார்கள்.
இது முழுக்க முழுக்க தனி ஒரு நபரின் முயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு என்பதால் அரசியல் சார்ந்தும் சாராமலும் நிகழ்வு அமைவது அந்தத் தனிநபரின் விருப்பத்தை/பார்வையைப் பொருத்தது. ஒரு பார்வையாளன் என்கிற அளவுகோலோடு மட்டுமே இதைப் பதிவு செய்ய முடிகிறது.

இதெல்லாம் எனக்குள் முரண்பாடாக இருந்தாலும், புத்தகம் எழுதி வெளியீடு செய்தவரை அவ்வளவு எளிதாக நிராகரிக்கவும் முடியவில்லை. பொதுநலம் சார்ந்தும் மலேசிய இலக்கியம் குறித்து பல முயற்சிகளை மேற்கொண்டவர் என்கிற வகையில் அவரைப் பாராட்டவும் செய்ய வேண்டும். இன்றும் இளம் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்துவதிலும் அவர்களுடன் இலக்கியம் குறித்த உரையாடலில் ஈடுபடவும் தனது நேரங்களை ஒதுக்கவும் செய்கிறார். எழுத்தாளர் சண்முகசிவா சொல்வது போல:

“எழுத்தாளன் சுய மரியாதையுடன் தன்மானத்துடன் தன் எழுத்தின் வளமையில் நிற்க கற்றுக் கொள்ள வேண்டும், அரசியல் தலைவர்களின் வருகைக்காக தவம் கிடப்பது, அவர்கள் கொடுக்கும் பண முடிப்பைக் கூனிகுறுகி பெற்றுக் கொள்வது, அரசியல்வாதிகளைச் சார்ந்தே வாழ நினைப்பது, ஓர் எழுத்தாளனின் இருப்பை சாகடித்துவிடும்” சண்முகசிவா.

கே.பாலமுருகன்

5 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

//சில தவிர்க்க முடியாத மேடை நாடகங்களை அங்கும் காண வாய்ப்புக் கிடைத்தது. //

:) ஆமாம் ஆமாம்... சூப்பராக இருந்துச்சு....

தயாஜி said...

மாற்றத்திற்கு காலம் தூரமில்லை...
காத்திருப்போம்...
காரியம் செய்வோம்...

கே.பாலமுருகன் said...

வாங்க விக்கி. //இரசித்துப் பார்த்திருக்கீங்க போல?//
சில கூத்துகளும் கும்மாளங்களும் கூச்சலும் ஒவ்வொருகாலக்கட்டத்திலும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
தூர எறிவோம் சிலரின் கூச்சலை.
பதிவுக்கு நன்றி விக்கி.

@வாங்க தயாஜி. தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
காலம் மாரும். காத்திருப்போம்.

Tamilvanan said...

//அந்த மூத்த அரசியல்வாதி பேசிய பேச்சுக்காகவாது இவ்வளவு பணம் சேர்ந்திருப்பது வரவேற்கக்கூடியது.//

அன்று அரசர்கள் இன்று அரசியல்வாதிகள்.

//எழுதத் துவங்கி அங்கீகாரம் வேண்டி எதிர்ப்பார்த்து காத்திருந்த ஒரு மனநிலை அது//

இந்த நாடக மேடை உலகில் யார்தான் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள்?
பணம் பதவி பட்டம் அங்கீகாரம் மட்டுமி்ன்றி தூய்மையான அன்பு நட்பு பாசம் போன்றவைக்கும் எதிர்பார்த்து வாழும் நிலையில் அல்லவா உள்ளது வாழ்க்கை.

இதில் எழுத்தாளர்கள் மட்டும் விதி விலக்கா என்ன?

அனைவரையும் அரவணைத்து செல்வோம். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
குறைந்த பட்சம் நமது தாயின் மொழிக்காக ஒன்றினைவோம்.

கே.பாலமுருகன் said...

பதிவுக்கும் கருத்துகளுக்கும் நன்றி தமிழ்வாணன். எல்லோரையும் அரவனைக்க வேண்டும் என்பது நல்ல எண்ணம்தான் ஆனால் சிலர் மொழி அளவுக்குக்கூட மனிதர்களை முதண்மைப்படுத்துவது கிடையாது. எட்டி நின்று தூற்றுவதற்கும் புறக்கணிப்பதற்கும் மட்டுமே சமூக மனிதர்கள் பெரும்பாலோர் கற்று வைத்திருக்கிறார்கள்.
//இருந்தும் மொழிக்காக நாம் ஒன்றிணைவது வரவேற்க்கத்தக்க எதிர்பார்ப்பு//